சகிப்புத்தன்மை மிதமிஞ்சுதல்கள்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் இயற்கை எழிலால் கவரப்பட்ட 16-வது நூற்றாண்டு தத்துவமேதை ஒருவர், “எங்காவது பரதீஸ் இருக்குமென்றால், அது இங்குதான் இருக்கிறது!” என்று வியந்துரைக்கும்படி உந்துவிக்கப்பட்டார். உலகின் அந்தப் பகுதியில் பின்பு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அவர் ஒன்றும் அறியாதிருந்தார் என்பது தெளிவாய் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய ராணுவத்துக்கும் சுயாதீனப்போக்குடையோருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 20,000 மக்களாவது கொல்லப்பட்டிருப்பர். இப்போது, அந்தப் பகுதியை “கண்ணீர்ப் பள்ளத்தாக்கு” என்று ஜெர்மானிய செய்தித்தாள் ஸூயெடாய்ச்ச ட்ஸைடுங் விளக்குகிறது. சகிப்புத்தன்மையின்மை, பரதீஸாய் இருக்கத்தக்கதையும் அழித்துப்போடலாம் என்ற எளிய, ஆனாலும் மதிப்புவாய்ந்த பாடத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு போதிக்கிறது.
சகித்துப்போதல் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? காலின்ஸ் கோபில்ட் இங்லிஷ் லேங்வேஜ் டிக்ஷ்னரியின்படி, “நீங்கள் சகிப்பவர்களாய் இருந்தால், நீங்கள் ஒத்துக்கொள்ளாதவையும், அங்கீகரிக்காதவையுமாய் இருந்தாலும்கூட, மற்றவர்கள் தங்கள் சொந்த மனோபாவங்களையோ நம்பிக்கைகளையோ உடையவர்களாய் இருப்பதை அனுமதிக்கிறீர்கள்; அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வதை அனுமதிக்கிறீர்கள்.” வெளிக்காட்டப்படுவதற்கு என்னே நேர்த்தியான ஒரு குணம்! நிச்சயமாகவே, நம் நம்பிக்கைகளும் மனோபாவங்களும் அவர்களுடையதிலிருந்து வேறுபட்டாலும், அவற்றை மதிக்கும் மக்களுடன் இருப்பதை நாம் விரும்புகிறோம்.
சகிப்புத்தன்மையிலிருந்து வெறி வரை
சகிப்புத்தன்மைக்கு எதிர்ப்பதம் சகிப்புத்தன்மையின்மை. இது பல்வேறு அளவுகளில் வெளிக்காட்டப்படுகிறது. சகிப்புத்தன்மையின்மை என்பது, குறுகிய மனப்பான்மையுடன், மற்றவருடைய நடத்தையையோ, காரியங்களை அவர் செய்யும் விதத்தையோ அங்கீகரிக்காதிருப்பதில் ஆரம்பிக்கலாம். குறுகிய மனப்பான்மை, வாழ்க்கையிலிருந்து பெறப்படும் இன்பத்தை நெருக்கிப்போடுகிறது. புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதிருக்கச் செய்கிறது.
உதாரணமாக, கண்டிப்பாய் இருக்கும் ஒருவர், ஒரு பிள்ளைக்கு இருக்கும் பொங்கிவரும் உற்சாகத்திலிருந்து தன்னை அடக்கிக்கொள்ளலாம். ஓர் இளைஞர், தன்னைவிட வயதில் மூத்தவராய் இருப்பவரின் சிந்தித்துச் செயலாற்றும் விதங்களைக் கண்டு சலிப்படையலாம். சிந்தித்துச் செயலாற்றும் ஒருவரை, துணிச்சலுடன் செயல்படும் எவருடனாவது சேர்ந்து செயல்படும்படி கேட்டுக்கொண்டால், இருவருமே எரிச்சலடையலாம். அடக்கிக்கொள்வது, சலிப்படைவது, எரிச்சலடைவது இவையெல்லாம் ஏன் சம்பவிக்கின்றன? ஏனெனில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர், மற்றவருடைய மனோபாவங்களையோ, நடத்தையையோ சகித்துக்கொள்வதைக் கடினமாய்க் காண்கிறார்.
சகிப்புத்தன்மையின்மை எங்கிருக்கிறதோ, அங்கு குறுகிய மனப்பான்மை தப்பெண்ணமாக அதிகரிக்கலாம். தப்பெண்ணம் என்பது, ஒரு தொகுதி, இனம் அல்லது மதத்தின்மீது வெறுப்பு கொள்வது. தப்பெண்ணத்தைக் காட்டிலும் அதிக கடுமையானது, வெறி என்பதாகும். அது, கடும் பகைமையாக வெளிப்படுகிறது. அதன் விளைவாக, துன்பமும் இரத்தஞ்சிந்துதலும் ஏற்படுகிறது. சிலுவைப்போர்களின்போது சகிப்புத்தன்மையின்மை எதற்கு வழிநடத்தினது என்பதை நினைத்துப் பாருங்கள்! இன்றும்கூட, சகிப்புத்தன்மையின்மையே, போஸ்னியா, ருவாண்டா மற்றும் மத்தியக்கிழக்கில் நடைபெறும் சண்டைகளுக்கு முக்கியக் காரணமாய் இருக்கிறது.
சகிப்புத்தன்மையுடன் இருப்பதற்கு சமநிலை தேவை. சரியான சமநிலையைக் காத்துக்கொள்வது எளிதல்ல. ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அசைந்தாடும் கடிகாரத்தின் ஊசற்குண்டைப் போல் நாம் இருக்கிறோம். சில சமயங்களில், மிகக் குறைந்த சகிப்புத்தன்மையைக் காட்டுகிறோம்; சில சமயங்களில் மிக அதிகத்தைக் காட்டுகிறோம்.
சகிப்புத்தன்மையிலிருந்து ஒழுக்கக்கேட்டிற்கு
மிதமிஞ்சி சகிப்புத்தன்மையுடன் இருக்க முடியுமா? ஐ.மா. சட்ட மாமன்ற உறுப்பினரான டாண் கோட்ஸ், 1993-ல் பேசுகையில், “சகிப்புத்தன்மையின் அர்த்தத்திற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் இடையே போராட்டம்” என்பதாக விளக்கினார். அவர் எதை அர்த்தப்படுத்தினார்? சகிப்புத்தன்மை என்ற பெயரில், சிலர் “ஒழுக்க சம்பந்தமான உண்மையில்—நல்லது, கெட்டது ஆகியவற்றிலும், சரி, தவறு ஆகியவற்றிலும்—கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்” என்று இந்தச் சட்ட மாமன்ற உறுப்பினர் புலம்பினார். அப்படிப்பட்டவர்கள், நன்னடத்தை எது என்பதையும் தீய நடத்தை எது என்பதையும் முடிவுசெய்ய சமுதாயத்திற்கு உரிமை இல்லை என்று உணருகின்றனர்.
1990-ல், ஆங்கிலேய அரசியல்வாதி ஹேல்ஷம் பிரபு, “ஒழுக்க நெறியின் மிக மோசமான விரோதி, நாத்திகமோ அறியொணாமைக் கொள்கையோ (agnosticism), பொருள்முதல்வாதமோ (materialism), பேராசையோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் வேறெந்தக் காரணமுமோ இல்லை. ஒழுக்க நெறியின் உண்மையான விரோதி, இன்மைக் கொள்கை (nihilism) அதாவது சொல்லர்த்தமாக, எதிலுமே நம்பிக்கையின்மை” என்று எழுதினார். எதிலுமே நம்பிக்கையின்மையை நாம் நம்பினால், சரியான நடத்தை எது என்பதைப் பற்றிய தராதரம் நமக்கில்லை என்றும், எதையுமே சகித்துக்கொள்ளலாம் என்றும் பொருள்படுவது தெளிவாயுள்ளது. ஆனால் எல்லாவித நடத்தையையும் சகித்துக்கொள்வது சரியானதா?
சரியல்ல என்று ஒரு டேனிஷ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நினைத்தார். ஆரம்ப 1970-களில், அவர் ஒரு செய்தித்தாளில் கட்டுரை எழுதினார். அதில், ஆபாச பொழுதுபோக்குக் காட்சிகளுக்கான விளம்பரங்கள் செய்தித்தாளில் வருவதைப் பற்றி புகார் செய்திருந்தார். அந்தப் பொழுதுபோக்குக் காட்சிகள், மனிதருக்கும் விலங்குகளுக்கும் இடையே பாலுறவு கொள்வதைச் சித்தரித்துக் காட்டியிருந்தன. டென்மார்க் நாட்டின் “சகிப்புத்தன்மை”யினாலேயே இந்த விளம்பரங்கள் அனுமதிக்கப்பட்டன.
தெளிவாகவே, மிகக் குறைந்த சகிப்புத்தன்மை காட்டுவதனாலும் பிரச்சினைகள் உருவாகின்றன. மிக அதிக சகிப்புத்தன்மை காட்டுவதனாலும் பிரச்சினைகள் உருவாகின்றன. மிதமிஞ்சுதல்களைத் தவிர்த்து, சரியான சமநிலையைக் காத்துக்கொள்வது ஏன் கடினமாய் இருக்கிறது? தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசியுங்கள்.
[பக்கம் 3-ன் படம்]
பிள்ளைகளின் தவறுகளுக்காக அளவுக்கு அதிகமாய் நிலைகுலைவது அவர்களுக்குத் தீங்கை விளைவிக்கலாம்
[பக்கம் 4-ன் படம்]
பிள்ளைகள் செய்யும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வது வாழ்க்கையின் பொறுப்புகளை ஏற்கும்படி அவர்களைத் தயார்ப்படுத்தாது