சரியான சமநிலை உங்கள் வாழ்வை மதிப்புள்ளதாக்கலாம்
சகிப்புத்தன்மை என்பது ஒரு கப் காபியில் இருக்கும் சர்க்கரையைப் போன்றது. சரியான அளவு சகிப்புத்தன்மை, வாழ்க்கையில் ஓரளவு இனிமையைக் கூட்டக்கூடும். ஆனால் நாம் சர்க்கரையை அதிகம் சேர்ப்பவர்களாய் இருக்கும் அதே சமயத்தில், சகிப்புத்தன்மையில் பெரும்பாலும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருக்கிறோம். ஏன்?
“மனிதர் சகிப்புத்தன்மை உள்ளவர்களாய் இருக்க விரும்புவதில்லை” என்பதாக மிச்சிகன் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் இணைப் பேராசிரியர் ஆர்தர் எம். மெல்ஸர் எழுதினார். “இயல்பாய் வருவது என்னவென்றால், . . . தப்பெண்ணம்.” ஆகவே சகிப்புத்தன்மையின்மை என்பது வெறுமனே சிறுபான்மையோரைப் பாதிக்கும் குறைபாடுடைய பண்பாக மட்டுமே அல்ல; மனிதகுலம் அனைத்துமே அபூரணமாய் இருப்பதால் குறுகிய மனப்பான்மை இயல்பாகவே அனைவருக்கும் வருகிறது.—ரோமர் 5:12-ஐ ஒப்பிடுக.
அனாவசியமாக தலையிடுபவர்களாவதன் சாத்தியம்
1991-ல், ஐக்கிய மாகாணங்களில் குறுகிய மனப்பான்மை வளர்ந்துவருவதைப் பற்றி டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. ஒவ்வொருவரின் நடத்தையின் மீதும் தங்கள் சொந்த தராதரங்களைத் திணிக்க முயலுபவர்களாகிய “அனாவசியமாக பிறர் வேலையில் தலையிடும் வாழ்க்கைப்பாணி உடையவர்களைப்” பற்றி அந்தக் கட்டுரை விளக்கியது. இணங்காதவர்கள் பலியாட்களாகியிருக்கின்றனர். உதாரணமாக, பாஸ்டனில், ஒரு பெண் மேக்-அப் செய்ய மறுத்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டார். லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள ஒருவர் அதிக எடையுள்ளவராய் இருந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்களை இணங்கச் செய்வதற்கு ஏன் இவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும்?
குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் நியாயமற்றவர்களாய், தன்னலமுள்ளவர்களாய், பிடிவாதமுள்ளவர்களாய், ஆணவமுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் ஓரளவு நியாயமற்றவர்களாய், தன்னலமுள்ளவர்களாய், பிடிவாதமுள்ளவர்களாய், ஆணவமுள்ளவர்களாய் இருப்பதில்லையா? இந்தக் குணங்கள் நம் ஆளுமைகளில் அடிப்படைக் குணங்களாய் இருந்தால், நாம் குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாய் இருப்போம்.
உங்களைப் பற்றியென்ன? உணவில் மற்றொருவருடைய விருப்பத்தைப் பார்த்து ஒப்புக்கொள்ளாதிருக்கிறீர்களா? உரையாடலில், நீங்கள் எடுக்கும் முடிவே முடிவாக இருக்க வேண்டும் என்று பொதுவாக நீங்கள் விரும்புகிறீர்களா? ஒரு தொகுதியுடன் சேர்ந்து வேலை செய்கையில், நீங்கள் நினைப்பது போலவே அவர்களும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், உங்கள் காபியில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்வது கொஞ்சம் நன்மை பயக்கலாம்!
ஆனால், முந்தின கட்டுரையில் கூறப்பட்டதைப் போன்று, சகிப்புத்தன்மையின்மை பகைமையுடன்கூடிய தப்பெண்ணத்தின் வடிவில் வரலாம். சகிப்புத்தன்மையின்மை வளருவதற்கு ஒரு காரணம் தீவிர கவலை.
“ஆழ்ந்த சந்தேக உணர்வு”
இன தப்பெண்ணம் எப்போது மற்றும் எங்குத் தெளிவாய்த் காணப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க மனிதகுலத்தின் கடந்தகாலத்தைப் பற்றி மனிதவின வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த வகை சகிப்புத்தன்மையின்மை எல்லாக் காலத்திலும் தெளிவாய் இருந்ததில்லை, எல்லா தேசத்திலும் ஒரே அளவுக்கு வெளித்தோன்றவும் இல்லை. இன பூசல், நெருக்கடிக் காலங்களின்போது “மக்கள் ஆழ்ந்த சந்தேக உணர்வில் இருக்கும்போதும், தங்களுடைய தனித்தன்மை பயமுறுத்தப்படும்போதும்” வெளித்தெரிகிறது என்று ஜெர்மானிய இயற்கை விஞ்ஞான பத்திரிகையான கேயோ அறிக்கை செய்கிறது.
அப்படிப்பட்ட “ஆழ்ந்த சந்தேக உணர்வு” இன்று எங்கும் பரவியுள்ளதா? நிச்சயமாகவே. முன்னொருபோதும் இல்லாதபடி, மனிதகுலம் அடுத்தடுத்து வரும் நெருக்கடியால் துன்பத்திற்குள்ளாகிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்ந்துகொண்டு போதல், ஜனத்தொகை மிகுதி, ஓஸோன் அடுக்கு அழிக்கப்படுதல், நகரங்களில் குற்றச்செயல், குடிநீர் மாசுபடுதல், உலகளாவிய வெப்பம்—இவற்றைப் பற்றிய நச்சரிக்கும் பயம் கவலையை அதிகரிக்கிறது. நெருக்கடிகள் கவலையை உண்டாக்குகின்றன. தேவையில்லாத கவலை சகிப்புத்தன்மையின்மைக்கு வழிநடத்துகிறது.
அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையின்மை தலைதூக்குகிறது. உதாரணமாக, சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்று, வேறுபட்ட இன மற்றும் பண்பாட்டுத் தொகுதியினர் ஒன்றுசேரும்போது வெளித்தெரிகிறது. 1993-ல் நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகையால் கொடுக்கப்பட்டிருந்த ஓர் அறிக்கையின்படி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்போது 2.2 கோடிக்கும் மேற்பட்ட குடியேற்றக்காரர்கள் இருந்தனர். ஐரோப்பியர் பலர் வேற்று மொழி, பண்பாடு அல்லது மதத்தைச் சேர்ந்த “புதியவர்களின் வருகையால் திணறடிக்கப்பட்டவர்களாய் உணர்ந்தனர்.” ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெய்ன், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அந்நியரை எதிர்க்கும் மனோபாவத்தில் ஓர் அதிகரிப்பு இருந்திருக்கிறது.
உலகத் தலைவர்களைப் பற்றியென்ன? 1930-களின்போதும், 1940-களின்போதும், சகிப்புத்தன்மையின்மையை ஹிட்லர் ஓர் அரசாங்க லட்சியமாக ஆக்கினார். விசனகரமாக, சில அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் இன்று தங்கள் லட்சியங்களை அடைய சகிப்புத்தன்மையின்மையைப் பயன்படுத்துகின்றனர். இதுவே ஆஸ்திரியா, பிரான்ஸ், அயர்லாந்து, ரஷ்யா, ருவாண்டா, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய நாடுகளில் நடந்திருக்கிறது.
அசட்டையாகிய கண்ணியைத் தவிர்ப்பீர்
நம் காபியில் சர்க்கரை மிகக் குறைவாய் இருக்கையில் ஏதோ குறைவுபடுவதை நாம் உணருகிறோம்; சர்க்கரை மிக அதிகமாய் இருக்கையில் அதிக இனிப்பாய் இருப்பதால் நம் வாய்க்கு அது நன்றாய் இருப்பதில்லை. அதுவே சகிப்புத்தன்மை பற்றிய விஷயத்திலும். ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு கல்லூரியில் கற்பிக்கும் ஒருவருடைய அனுபவத்தை எண்ணிப்பாருங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜூனியர் டேவிட் ஆர். கார்லன் ஒரு வகுப்பு கலந்தாலோசிப்பைத் தூண்டுவிக்கும் எளிய மற்றும் பலனுள்ள முறையைக் கண்டுபிடித்தார். மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை நன்கு அறிந்தவராய், அவருடைய மாணவர்களின் நோக்குநிலையை எதிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு கூற்றைக் கூறுவார். அதன் விளைவு ஓர் உயிர்ப்பூட்டும் கலந்தாலோசிப்பு. என்றபோதிலும், 1989-ல், அதே முறை இனிமேலும் பலனுள்ளதாயில்லை என்று கார்லன் எழுதினார். ஏன் பலனுள்ளதாயில்லை? அவர் கூறினதை மாணவர்கள் இன்னும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு அதைப் பற்றி விவாதிக்கும் அளவுக்குக் கவலையில்லை. “சந்தேகவாதிகள் கையாளும் எளிய சகிப்புத்தன்மை”யை—கவலையற்ற, முற்றிலும் அசட்டையான மனப்பான்மையை—அவர்கள் கைக்கொண்டிருந்தனர் என்று கார்லன் விளக்கினார்.
முற்றிலும் அசட்டையான மனப்பான்மை என்பதும் சகிப்புத்தன்மையும் ஒன்றேதானா? எவராவது எதைச் சிந்திக்கிறார் அல்லது செய்கிறார் என்பதைப் பற்றி எவரும் கவலைப்படவில்லையெனில், வரைமுறைகளே இல்லை. வரைமுறைகள் இல்லாமையே அசட்டை மனப்பான்மை—முற்றிலும் அக்கறையின்மை. அப்படிப்பட்ட ஒரு நிலை எப்படி வரலாம்?
பேராசிரியர் மெல்ஸர் கூறுவதன்படி, நடத்தை சம்பந்தப்பட்ட அநேக வேறுபட்ட தராதரங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயத்தில் அசட்டை மனப்பான்மை பரவலாம். எல்லா விதமான நடத்தையும் ஏற்கத்தகுந்தது என்றும் எல்லாமே வெறுமனே தனிப்பட்ட தெரிவுக்குரிய விஷயம் என்றும் மக்கள் நம்புகின்றனர். ஏற்கத்தகுந்தது எது, ஏற்கத்தகாதது எது என்று சிந்தித்து, கேள்வி கேட்கும்படி கற்றுக்கொள்வதற்குப் பதிலாக மக்கள் “பெரும்பாலும் ஒருபோதும் சிந்திக்காதிருக்கவே கற்றுக்கொள்கின்றனர்.” அவர்களுக்கு, ஒருவருடைய சகிப்புத்தன்மையின்மையை தைரியத்துடன் எதிர்க்க உந்துவிக்கும் ஒழுக்க பலம் இல்லை.
உங்களைப் பற்றியென்ன? உங்களுக்கு முற்றிலும் அசட்டையான மனப்பான்மை வந்துவிட்டது என்று எப்போதாவது தெரியவருகிறதா? பொல்லாததாய் இருக்கும், அல்லது பிற இனத்தவர்களைக் கீழானவர்களாய் உணரவைக்கும் கேலிப்பேச்சுகளைக் கேட்டு நீங்கள் சிரிக்கிறீர்களா? உங்கள் பருவவயது பையனோ பெண்பிள்ளையோ பேராசை அல்லது ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கும் வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் வன்முறையான கம்ப்யூட்டர் விளையாட்டுகளை விளையாடினால் பரவாயில்லை என்று நீங்கள் உணருகிறீர்களா?
மிதமிஞ்சி சகிப்புத்தன்மையைக் காட்டுகையில், ஒரு குடும்பமோ, சமுதாயமோ வருத்தத்தையே அறுக்கும். ஏனெனில் எவருக்குமே எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய அறிவோ—அக்கறையோ—இல்லை. ஐ.மா. சட்ட மாமன்ற உறுப்பினரான டாண் கோட்ஸ், “அசட்டைத்தன்மை சகிப்புத்தன்மையின் கண்ணியாக” இருப்பதாய் எச்சரித்தார். சகிப்புத்தன்மை திறந்த மனமுள்ளவராய் இருப்பதற்கு வழிநடத்தலாம்; மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை—அசட்டை மனப்பான்மை—முட்டாள்தனமுள்ளவராய் இருப்பதற்கு வழிநடத்தலாம்.
ஆகவே, நாம் எதை சகித்துக்கொள்ள வேண்டும் எதை மறுக்க வேண்டும்? சரியான சமநிலையை அடைவதற்கான இரகசியம் என்ன? இதுவே பின்வரும் கட்டுரையின் பொருளாய் இருக்கும்.
[பக்கம் 5-ன் படம்]
சூழ்நிலைகளுக்கேற்றாற்போல் சமநிலையுள்ளவர்களாய் இருக்க கடினமாய் முயலுவீர்