‘நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவளாய் இருக்கிறேன்’
கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கேயுள்ள பெட்டலூமா என்ற ஒரு சிறிய பட்டணத்தில் நான் வளர்ந்தேன். என் அம்மாவிற்கு மதத்தின்மீது கொஞ்சம் பற்று இருந்தது, ஆனால் என் அப்பாவிற்கு மதம் என்றாலே வெறுப்பு. படைப்பாளரென்று ஒருவர் இருக்கிறார் என நான் எப்போதுமே நம்பியது உண்டு, ஆனால் அவர் யார் என்பதுதான் தெரியவில்லை.
நான் வளர்ந்துவருகையில் சந்தோஷமாக இருந்தேன். கவலையில்லா ஜீவனாக ஆடித்திரிந்த அந்த நாட்களை நினைத்துப்பார்ப்பதில் எனக்கு அலாதி பிரியம்! எனக்கிருந்த சுதந்திரத்தையெல்லாம் பறித்துவிடக்கூடிய மாற்றங்கள் என் உடலுக்குள் நடந்துகொண்டிருந்தன என்பது எனக்குக் கொஞ்சம்கூட தெரியாமல்போய்விட்டது. அது 1960-ம் வருடம்; மேனிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயம்; எனக்கு நிறைய விரல்களில் வலி இருந்ததைப் பற்றி என்னுடைய நெருங்கிய தோழியிடம் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.
என் பாதங்களில் அந்தளவுக்கு வலி எடுக்க ஆரம்பித்ததால், சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு என் அம்மா என்னை அழைத்துச் சென்றார்கள்; அங்கே கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்கு இருந்தேன். அப்போது எனக்கு 18 வயது; எனக்கு சரவாங்கி நோய் (rheumatoid arthritis) இருப்பதாக பரிசோதனைகள் காட்டின. கோல்ட் சோடியம் தையோசல்ஃபேட், பின் ப்ரெட்னிசோன், அதன்பின் இன்னொரு வகை கார்டிசோன் என்ற ஊசிமருந்துகளை போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். மொத்தத்தில், அந்த மருந்துகளை நான் 18 வருடங்களாக போட்டுக்கொண்டேன்; ஒவ்வொரு மருந்தும் ஒருசில வருடங்களுக்கு வலியைக் குறைத்தது ஆனால் மெதுவாக செயலிழந்துபோனது, பின் அடுத்த மருந்தை எடுக்க ஆரம்பித்தேன். தீராத வலியை அசட்டை செய்யமுடியவில்லை; வேறு வகையான மருத்துவ உதவியை மும்முரமாக நான் தேடினேன். ஏதோ கொஞ்சம் உதவியளிக்கும் மாற்று சிகிச்சைகள் சிலவற்றை நான் கண்டடைந்திருக்கிறேன். நல்ல வேளையாக, வியாதி மிகத் தீவிரமாக என் உடல் முழுவதும் பரவியபோது நான் அனுபவித்த அளவுக்கு வலி இப்போது இல்லை.
1975-ல் ஒரு நாள், குழந்தைப் பருவத்தில் எனக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் என் அம்மா எழுதி வைத்திருந்த ஒரு புத்தகத்தை என் மகன் தற்செயலாக கண்டெடுத்தான். நான் ஆறு மாதக் குழந்தையாயிருந்தபோது, நிணநீர் சுரப்பி (thymus) வீங்கியிருந்ததால் ஒரு டாக்டர் எனக்கு எக்ஸ்ரே சிகிச்சைகளை அளிக்க ஆரம்பித்திருந்தார் என்பது அதிலிருந்து தெரியவந்தது. குழந்தையாயிருந்தபோது எனக்கு அளிக்கப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சைகள்தான் நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது உண்மையாய் இருந்தால், என்னே ஒரு தப்பைச் செய்துவிட்டார்கள்!
1962-ல் எனக்கு திருமணமானது. 1968-ல், நோயின் ஆரம்ப கட்டங்களில், என் கணவர் லின்னும் நானும் எங்களுக்கு சொந்தமான பேக்கரியில் ஒன்றாக வேலைபார்த்துவந்தோம். காலை 4:00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவோம்; என் கணவர் மாவைப் பிசைந்துவைத்துவிட்டு, ப்ரெட் வேகும்வரை சிலசமயங்களில் மாவு மூட்டைகளின்மீது படுத்து ஒரு குட்டித்தூக்கம் போடுவார். பின் நாங்கள் ப்ரெட்டை துண்டுகளாக வெட்டி பேக் செய்வோம்; லின் அவற்றை டெலிவரி செய்துவிடுவார். ஒருமுறை ஒரு இன்ஷூரன்ஸ் பணியாளர் பேக்கரிக்கு வந்து கடவுள் வாக்களித்திருக்கும் அரசாங்கத்தைப் பற்றி எங்களுக்குச் சொன்னார். எங்களுக்கு அவர் சொன்னது பிடித்திருந்தது, ஆனால் நாங்கள் ரொம்ப பிஸியா இருந்தோம். எங்களது ப்ரெட் விநியோகம் விரிவாகிக்கொண்டே சென்றது; வேலை தலைக்குமேல் குவிந்துகொண்டே சென்றது. எங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில், இன்னொரு பேக்கரி எங்கள் பேக்கரியை வாங்கிக்கொண்டது! அவர்களிடம் வேலைசெய்ய லின் சென்றார், நான் அழகு நிலையம் ஒன்றில் வேலைசெய்ய சென்றேன். எனினும், ஆர்த்திரைடிஸ் மோசமாகிக்கொண்டே செல்லச்செல்ல, வாரத்திற்கு மூன்று நாட்கள் மாத்திரமே என்னால் வேலைபார்க்கமுடிந்தது. இறுதியில் முழுமையாகவே வேலையிலிருந்து நின்றுவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை எனக்கு அளித்தார். நான் எப்போதுமே அவருக்கு நன்கொடை அளித்து பத்திரிகைகளை வாங்கிக்கொண்டேன்; அவருக்கு தயவு காட்டுவதாக நினைத்தேன். அவர் சென்றபின் பத்திரிகைகள் அலமாரியில் ஒருசில நாட்களுக்கு தொட்டுக்கூட பார்க்காமல் கிடக்கும், பின் எங்களில் எவராவது ஒருவர் எப்போதுமே அவற்றை தூக்கியெறிந்துவிடுவோம். அது எவ்வளவு விசனகரமானது, இப்போதுதான் அவற்றின் ஆன்மீக மதிப்பு எங்களுக்கு முழுமையாக புரிகிறது. எனினும், அந்தச் சமயத்தில் மத சம்பந்தமான விஷயங்கள் அவ்வளவு முக்கியமானவையாக தோன்றவேயில்லை.
எங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருந்தோம்
எப்போதுமே சாப்பிடுவதும் தூங்குவதும் கடினமாக வேலைசெய்வதும்தானா வாழ்க்கை, அவற்றைக் காட்டிலும் அதிகம் இருக்க வேண்டுமென்று நானும் எனது கணவரும் ஒருநாள் சாயங்காலம் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் வாழ்க்கையில் இல்லாதிருந்த ஆன்மீகத்தை நாங்கள் தேட ஆரம்பித்தோம். தெருமுனையில் இருந்த ஒரு சிறிய சர்ச்சிற்கு எங்கள் கவனம் திரும்பியது, ஆனால் கிடைக்குமென்று நாங்கள் எதிர்பார்த்த ஆவிக்குரிய உற்சாகம் அங்கு கிடைக்கவில்லை. சர்ச் அங்கத்தினர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த பிரச்சினைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
பத்திரிகைகளை எங்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்த அந்தச் சாட்சி சுமார் ஒரு வருடமாக வந்துகொண்டிருந்தார், ஆனால் 1968-ம் ஆண்டின் அக்டோபர் 8 விழித்தெழு!-வின் ஆங்கில பிரதியில் “நீங்கள் நினைப்பதைவிட காலம் பிந்திவிட்டதா?” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வாசித்த பிறகுதான் பத்திரிகைகளை தூக்கிப்போடும் பழக்கம் நின்றது. நான் வாசித்தது எனக்கு பிடித்திருந்தது; சந்தோஷமளிக்கும் விதத்தில் என் கணவருக்கும் அதேபோல் பிடித்துப்போய்விட்டது. நாங்கள் சத்தியத்தை மிக விரைவில் படித்து உட்கிரகிக்க ஆரம்பித்தோம். நாங்கள் கற்றுக்கொண்ட எல்லா அருமையான காரியங்களையும் நாங்கள் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டோம். 1969-ல் நாங்கள் முழுக்காட்டப்பட்டோம்.
நாட்கள் செல்லச்செல்ல, எழுந்திருக்கவும் உட்காரவும் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்; நடப்பதற்கோ அதைவிட கஷ்டப்பட்டேன். காருக்குள் உட்காரவும் காரிலிருந்து இறங்கவும் என் முழங்கால்களை அதிக சிரமமெடுத்து மடக்க வேண்டியிருந்தது. என்னை முக்கால்வாசி நேரம் அழ வைத்த குறைபாடுகளையும் வலியையும் சகித்துக்கொண்டு வாழ கற்றுக்கொண்டேன். அழுதுமுடித்தபின் என் மேக்கப்பை சரிசெய்துகொண்டு கூட்டங்களுக்கோ வெளி ஊழியத்திற்கோ நாங்கள் சென்றுவிடுவோம். என்னால் முடிந்தவரை வீடுவீடாக நடந்து சென்றேன். வாரத்திற்கு ஓரிரு நாட்கள் வெளி ஊழியத்திற்கு செல்ல நான் முயற்சி செய்தேன்; அதன்பின் என் முழங்கால்களிலும் பாதங்களிலும் இருந்த விறைப்பினாலும் வலியினாலும் என்னால் அந்தளவுக்குக்கூட போக முடியவில்லை. கீழே விழுந்துவிட்டு பின் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் குறித்து நான் அடிக்கடி கவலைப்பட்டேன். யெகோவாவிடம் பேசுவது எனக்கு உதவுகிறது. சிலசமயங்களில் நான் அவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி அழுவேன்.
ஆனாலும், எந்நாளும் கண்ணீரே கதியென்று கிடப்பது முடியாத காரியமாயிருந்தது. சரவாங்கி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு கண்களில் வறட்சியும் ஏற்படலாம். சிலசமயங்களில் வறட்சி அந்தளவுக்கு அதிகமாயிருந்ததால் வாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட நாட்களும் இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சமயங்களில், நான் பைபிள் டேப்புகளைப் போட்டுக் கேட்டேன். கண் இமைகளை அசைப்பது என் கண்களைக் கீறியதால் நான் கண்களை மூடிக்கொண்டே இங்குமங்கும் நடமாடினேன். இதற்குப் பேசாமல் ஒரு குருடியாகவே இருந்திருக்கலாம். சிலசமயங்களில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் என் கண்களில் சொட்டு மருந்தை ஊற்றிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இதைவிடக் கொடுமை, கண்களில் ஆயின்மன்ட் தடவிக்கொண்டு சரியாகும்வரை ஐந்து ஆறு நாட்களுக்கு கட்டுப்போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஒழுங்குமுறையில் குணப்படுத்த முடியாத நாள்பட்ட வியாதியால் திணறிக்கொண்டிருக்கையில் ஒருவர் தொடர்ந்து சந்தோஷமாக வாழ்வது சுலபமல்ல.
1978-ல், சக்கர நாற்காலியே கதியென்று ஆகவேண்டியதாயிற்று. அந்தத் தீர்மானமெடுப்பது கஷ்டமாக இருந்தது. எவ்வளவு நாள் தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு நாள் தள்ளிப்போட்டுக்கொண்டே போனேன்; ஆனால் கடைசியில் வேறு வழியேயில்லாமல் போய்விட்டது. சக்கர நாற்காலி தேவைப்படுகிற ஒருநாள் வருமென்று எனக்கு தெரியும்; ஆனால் அதற்குமுன் கடவுளுடைய புதிய உலகம் வந்துவிடும் என்று நம்பியிருந்தேன். படம் வரைபவர்களால் பயன்படுத்தப்படும் உயரமான சுழலும் நாற்காலியை லின் வாங்கிவந்தார்; அதன் அடிபாகம் அகலமாகவும் ஐந்து சக்கரங்களைக் கொண்டதாகவும் இருந்தது. அதன் உதவியால் என்னால் வீட்டிற்குள் அங்குமிங்கும் செல்ல முடிந்தது.
என் கைகளை முழுவதும் நீட்டமுடியாததாலும், வளைந்து நெளிந்திருந்த என் விரல்களால் பொருட்களை இறுக்கமாக பிடிக்க முடியாததாலும் எதையாவது எடுக்க முயன்றபோது பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஆகவே, அந்தச் சமயத்தில் “பிடிப்புக்” கைத்தடியை பயன்படுத்துவேன். அதை வைத்துக்கொண்டு என்னால் தரையிலுள்ள பொருட்களை எடுக்க முடியும், அலமாரியைத் திறந்து பாத்திரத்தை எடுக்க முடியும், அல்லது ஃப்ரிஜ்ஜிலிருந்து எதையாவது எடுக்க முடியும். அந்தப் “பிடிப்புக்” கைத்தடியை வைத்துக்கொண்டு புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளுவதால் சில வீட்டு வேலைகளை என்னால் கவனித்துக்கொள்ள முடிகிறது. என்னால் சமைக்க முடியும், பாத்திரங்களை கழுவியெடுத்து துடைக்க முடியும், துணிமணிகளுக்கு இஸ்திரி போட்டு மடித்து வைக்க முடியும், தரையைத் துடைக்க முடியும். என் ஆற்றல் முன்னேற முன்னேற கொஞ்சம் பெருமையாயிருக்கிறது; இப்போதும்கூட வீட்டுத் தேவைகள் சிலவற்றை என்னால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். எனினும், முன்பு ஒருசில நிமிடங்களில் நான் செய்து முடித்த அதே வேலைகள் இப்போது பல மணிநேரங்கள் எடுக்கின்றன.
தொலைபேசியில் சாட்சி கொடுத்தல்
தொலைபேசியில் சாட்சிகொடுக்க முயற்சிப்பதற்கு சிறிது காலம் பிடித்தது, ஆனால் இறுதியில் நான் தைரியத்தைத் திரட்டிக்கொண்டேன். என்னால் அதைச் செய்ய முடியுமென்று நான் நினைக்கவில்லை, ஆனால் இப்போது அதை உண்மையிலேயே மகிழ்ந்து அனுபவிக்கிறேன்; நல்ல விளைவுகளையும் கண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமளிக்கும் விதத்தில், யெகோவாவைப் பற்றியும் அவரது நோக்கங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் என்னால் பேச முடிவதால் அது வீட்டுக்குவீடு ஊழியத்தைப் போன்றே இருக்கிறது.
சிலசமயங்களில் நான் இப்படிச் சொல்லி ஆரம்பிப்பேன்: “வணக்கம், நீங்கள் திரு.——தானா? நான் திருமதி மாஸ். நான் மற்றவர்களோடு சுருக்கமாக ஒரு செய்தியைச் சொல்கிறேன்; உங்களுக்கு நேரமிருந்தால், நான் உங்களோடு பேசலாமா? (சாதாரணமாக கிடைக்கும் பதில்: “எதைப் பற்றி?”) இன்று உலகில் நடந்துகொண்டிருப்பதை அறிந்துகொள்வது பயங்கரமாக இருக்கிறது அல்லவா? (அவர்களது பதிலுக்காக காத்திருப்பேன்.) எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை அளிக்கும் இந்த பைபிள் கருத்தை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன்.” அதன்பின் நான் கர்த்தரின் ஜெபத்தையும் பெரும்பாலும் 2 பேதுரு 3:13 வசனத்தையும் வாசிப்பேன். நான் இவ்வாறு தொடர்புகொண்டவர்களை சென்று சந்திக்கும்படி மற்ற கிறிஸ்தவ சகோதரிகளையும் லின்னையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
கடந்த பல வருடங்களாக, அநேகரிடம் நல்ல விதத்தில் பேசி, அக்கறை காண்பித்தோருக்கு சிற்றேடுகளையும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் அனுப்பியுள்ளேன். சிலர் ஃபோனில் பைபிளை படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். நான் பேசிய ஒரு பெண், தானாகவே படித்துக்கொள்வதே போதுமானதென்பதாக என்னிடம் சொன்னார். ஆனால் பலமுறை என்னிடம் பேசிய பிறகு, பைபிளைப் படிப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டார்; ஏனெனில் என் சூழ்நிலையை நான் அவரிடம் சொல்லியிருந்தேன்.
மற்றொரு சமயம் நான் ஒரு தொலைபேசி எண்ணை சுழற்றியபோது, பதில் சொல்லும் கருவி ஒரு புதிய எண்ணை அளித்தது. நான் எப்போதுமே உள்ளூருக்குள்தான் ஃபோன் செய்வேன், ஆனால் இந்த நம்பர் உள்ளூருக்குள் இல்லாதபோதிலும் எப்படியானாலும் ஃபோன் செய்யும்படி ஏதோ என்னை உந்துவித்தது. ஃபோனை எடுத்த ஒரு பெண் என்னோடு கொஞ்ச நேரம் பேசிய பிறகு, அவரும் அவரது கணவரும் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களை சந்திக்க விரும்பியதாக சொன்னார். ஆகவே அவர்களோடு படிப்பதற்கு நானும் லின்னும் சுமார் ஒரு மணிநேரம் பயணம்செய்து அவர்களது வீட்டிற்குச் சென்றோம்.
யெகோவாவைப் பற்றியும் அவரால் வாக்களிக்கப்பட்டிருக்கும் நீதியுள்ள புதிய வானம் மற்றும் புதிய பூமியைப் பற்றியும் பேசுவதில் இன்னும் எனக்கு சந்தோஷமும் ஆனந்தமும் கிடைக்கிறது. சமீபத்தில், பல வருடங்களாக என்னோடு பேசிவந்த ஒரு பெண் என்னிடம் இவ்வாறு சொன்னார்: “உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், நான் இன்னுமதிக அறிவை பெற்றுக்கொள்வதாக உணருகிறேன்.” நான் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் என்பதையும் இந்த நொண்டியையும்கூட ஆனந்தத்தில் ஜொலிக்க வைக்கும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். சிலசமயங்களில் என்னால் ஊழியத்தில் மற்ற சமயங்களைவிட அதிகத்தை செய்ய முடிகிறது, ஆனால் இன்னும்கூட அதிக அதிகமாக எல்லா சமயத்திலும் செய்ய வேண்டுமென்று எனக்கு கொள்ளை ஆசை! யெகோவா அனைவரது சூழ்நிலைகளையும் அறிந்திருக்கிறார் என்பதும் நம்மால் செய்ய முடிவது எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும் அவர் அதை போற்றுகிறார் என்பதும் எனக்கு தெரியும். “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து,” என்று சொல்லும் நீதிமொழிகள் 27:11-ஐ நான் அடிக்கடி நினைத்துப்பார்த்ததுண்டு; சாத்தானை பொய்யனாக நிரூபிப்பவர்களில் ஒருத்தியாக இருக்க எனக்கு நிச்சயமாகவே விருப்பம்.
கூட்டங்களுக்கு செல்வது எனக்கு கடினமாக இருந்தாலும் அங்கிருப்பது எப்போதுமே உற்சாகமளித்திருக்கிறது. நம்மை ஆவிக்குரிய விதத்தில் நன்கு போஷிப்பதற்கு யெகோவா அவ்வளவு அநேக அருமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்; அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எங்களது இரு பிள்ளைகள் சத்தியத்தை தங்களுடையதாக்கியிருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு என்னே மகிழ்ச்சி! எங்கள் மகள் டெரி, நல்ல கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறாள்; அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்; அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். எங்கள் பேரப்பிள்ளைகள்கூட யெகோவாவை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது எங்கள் இருதயங்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியால் நிரப்புகிறது! எங்கள் மகன் ஜேம்ஸும் அவனது மனைவி ட்யூஸ்டேவும் நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது உலக தலைமை அலுவலகமாகிய புரூக்ளின் பெத்தேலில் யெகோவாவை சேவிப்பதென்ற தெரிவை செய்திருக்கிறார்கள்.
யெகோவாவின் வல்லமையின் மூலம் பூமிக்குரிய ஒரு பரதீஸ்
பரதீஸிய பூமியைக் குறித்த யெகோவாவின் அருமையான வாக்குறுதியை மனதில் வைக்க நான் முயற்சி செய்கிறேன். இப்போதும்கூட, அவர் படைத்திருக்கும் ஏராளமானவற்றில் நாம் மகிழ்ச்சியைக் கண்டடையலாம். சூரியன் அழகாக அஸ்தமனமாவதைப் பார்க்க எனக்கு பிடிக்கும். விதவிதமான மலர்களும் அவற்றின் மணமும் எனக்கு விருப்பம். ரோஜாப்பூக்கள் என்றால் எனக்கு உயிர்! என்னால் மிக அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிவதில்லை; ஆனால் அவ்வாறு செல்லும்போது இதமான சூரியவொளியை நான் முற்றிலும் அனுபவிக்கிறேன். நான் என் கண்களை மூடிக்கொண்டு, மலைகளில் காட்டுப்பூக்களால் நிறைந்த திறந்த புல்வெளியில் என் குடும்பத்தாரோடு இன்பமாயிருக்கும் அழகான காட்சியை மனக்கண்கள் முன் கொண்டுவருவேன். அதோ, சலசலக்கும் ஓடையும், நீர்நிறைந்த தித்திக்கும் தர்ப்பூசணியும் எல்லாருக்கும் ஏராளமாக அங்கிருக்கிறது! என்னால் முடியும்போது, வரவிருக்கும் வாக்களிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸை எனக்கு ஞாபகப்படுத்தும் படங்களை நான் ஓவியம் தீட்டுவேன். அவ்வாறு ஓவியம் தீட்டும்போது, நான் அங்கு இருப்பதாக கற்பனை செய்துகொள்வேன். இப்போது நான் அருமையாக கருதும் விலைமதிக்க முடியாத இந்த மனக்காட்சிகளை யெகோவா நிஜமாக்குவார் என்பது எனக்கு தெரியும்.
யாக்கோபு 1:12-ல் உள்ள வசனத்தை நினைவில் வைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். அது சொல்வதாவது: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” பவுல் தனக்கிருந்த உடற்கோளாறை ‘தன்னைக் குட்டும் சாத்தானுடைய தூதன்’ எனச் சொல்லி ஒப்பிட்டார். அவருக்கிருந்த கோளாறை நீக்கும்படி அவர் யெகோவாவிடம் ஜெபித்தார்; ஆனால் அவரது பலவீனத்திலே கடவுளுடைய பலம் பூரணமாய் விளங்கும் என அவர் சொல்லப்பட்டார். ஆகவே பலவீனத்தின் மத்தியிலும் பவுல் கண்ட வெற்றி, கடவுளுடைய வல்லமை அவர்மீது இருந்தது என்பதை வெளிப்படுத்தியது. பவுல் இவ்வாறு சொன்னார்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:7-10) என் குறைபாடுகளின் மத்தியிலும் என்னால் செய்ய முடிகிற கொஞ்சநஞ்ச சேவைக்கும் கடவுளுடைய சக்திதான் காரணம் என நான் உணருகிறேன்.
என்னை உண்மையிலேயே உற்சாகப்படுத்தும் ஒரு பதிவை அப்போஸ்தலனாகிய யோவான் பதிவுசெய்திருக்கிறார். இது, 38 வருடங்களாக படுத்த படுக்கையாக கிடந்த ஒரு ஆளைப் பற்றியது. மற்ற வியாதியஸ்தர்களோடுகூட அவரும் ஒரு குளத்தின் அருகே நம்பிக்கையோடு படுத்துக்கொண்டு சுகமடைய மிகவும் விரும்பினார். சுகப்படுத்தும் என்று நினைத்த அந்தத் தண்ணீரை அவரால் எட்ட முடியவில்லை. ஒரு நாள் இயேசு அவரைப் பார்த்து “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” எனக் கேட்டார். எந்தளவுக்கு ஆனந்தக் கண்ணீரோடு நான் அந்தக் கேள்விக்கு பதிலளித்திருப்பேன்! “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.” (யோவான் 5:2-9) அப்படிப்பட்ட ஒன்றைக் கேட்பதற்காக நம்மில் அநேகர் ஆவலோடு காத்திருக்கிறோம்!—லூரடா மாஸ் என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 24-ன் படம்]
மக்களை நேசித்த ஒரு பிள்ளையை நான் நினைத்துப்பார்த்தேன், இதோ, அவள் சந்தோஷமாய் ஒரு புல்வெளியை கடந்துசொல்கிறாள்
[பக்கம் 25-ன் படம்]
உற்சாகமாக இருக்கும்போது, பொய்க்கால்களில் ஒரு பையன் நிற்பதாகவும் அவன் பாதங்களுக்குக்கீழ் அவனது நாய் இருப்பதாகவும் கற்பனைசெய்துபார்த்தேன்
[பக்கம் 26-ன் படம்]
வெளி ஊழியத்திற்காக தொலைபேசி எண்களை சேர்ந்து பெற்றுக் கொள்வது
போனை டையல் செய்வது