உலகைக வனித்தல்
“சீனாவின் முதியோர் எண்ணிக்கை”
“சீனாவின் முதியோர் எண்ணிக்கை சீரான வீதத்தில் அதிகரித்துவருகிறது,” என்பதாக சைனா டுடே என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. “1994-ம் வருடத்தின் முடிவில் சீனாவில் 60 வயதைத் தாண்டிய முதியோர் 11,69,70,000 பேர் இருந்தனர்; இது 1990-ஐவிட 14.16 சதவீத அதிகரிப்பாகும்.” இப்போது, அந்நாட்டு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தினர் 60 வயதைத் தாண்டியிருக்கின்றனர்; வயதானோரின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகை அதிகரிப்பின் வீதத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு அதிகமாய் உயர்ந்துவந்திருக்கிறது. அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள்? வேலையில் கிடைக்கும் வருமானம், ஓய்வூதியம், சமூக இன்ஷூரன்ஸ், உதவித்தொகை போன்றவை அநேகரது தேவைகளைக் கவனித்துக்கொண்டாலும், சீனாவின் முதியோர் சமுதாயத்தில் 57 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது பிள்ளைகளாலோ மற்ற உறவினர்களாலோ ஆதரிக்கப்படுகின்றனர். “சீனாவிலுள்ள குடும்ப உறவுகள் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாலும், வயதானவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களை பராமரிக்கும் நல்ல பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதாலும், பெரும்பாலான முதியோர் தங்களது உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர்; அவர்களும் இவர்களை நன்கு கவனித்துக்கொள்கின்றனர்,” என்பதாக சைனா டுடே சொல்கிறது. “சீனாவிலுள்ள முதியோரில் வெறுமனே 7 சதவீதத்தினர்தான் தனியாகவே வாழ்கின்றனர்.”
குழந்தைத் தொழிலாளிகள்—வளர்ந்துவரும் ஒரு பிரச்சினை
சர்வதேச தொழிலாளிகள் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, உலகில் 10-க்கும் 14-க்கும் இடைப்பட்ட வயதுள்ள பிள்ளைகளில் 13 சதவீதத்தினர்—கிட்டத்தட்ட 7.3 கோடி பிள்ளைகள்—வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். பத்து வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையும் முழுநேர வீட்டுவேலை செய்யும் சிறுமிகளின் எண்ணிக்கையும் கிடைக்குமானால், உலகிலுள்ள குழந்தைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் செல்லும் என்பதாக அந்த அறிக்கை கூடுதலாக சொன்னது. ஜெனீவாவிலுள்ள இந்த அமைப்பு குழந்தைத் தொழிலாளிகள் விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 80 வருடங்களாக போராடியிருக்கிறபோதிலும், முக்கியமாக ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயும் விரிவாகிக்கொண்டேயும் இருக்கிறது. அடிமைகளாக வேலைசெய்வதும் ஆபத்தான நிலைமைகளில் வேலைபார்ப்பதும் கோடிக்கணக்கான பிள்ளைகளின் கதியாக இருக்கும் அதே சமயத்தில், விபச்சாரம் ஒரு முக்கிய பிரச்சினையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில நாடுகளில், “பாலியல் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக பிள்ளைகளை உபயோகிப்பது [HIV] நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி என்பதாக வயதுவந்தோர் கருதுகின்றனர்” என அந்த அறிக்கை சொல்கிறது. அந்த அமைப்பு “அரசாங்க அதிகாரிகளை குற்றஞ்சாட்டியது, அவர்கள் . . . பிரச்சினையை கவனிக்காமல் விட்டுவிட்டனர்,” என பாரிஸின் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் சொன்னது.
பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
UNICEF (ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு) வெளியிட்ட ஒரு அறிக்கையான உலகப் பிள்ளைகளின் நிலை 1995, (ஆங்கிலம்) உலகத்தால் அதன் பிள்ளைகளின் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என நினைப்பது அபத்தமானது என்பதாக சொல்கிறது. சொல்லும் குறிப்பைத் தெளிவாக்க, UNICEF கீழ்க்காணும் புள்ளிவிவரங்களை அளிக்கிறது: போதுமானளவு ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை உடல்நல பாதுகாப்பிற்கு உலகம் முழுவதுமிருக்கும் தேவையை பூர்த்திசெய்ய கணக்கிடப்பட்டிருக்கும் தொகை வருடத்திற்கு 1,300 கோடி டாலர்; ஆரம்பக் கல்விக்கு, 600 கோடி டாலர்; சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு, 900 கோடி டாலர்; குடும்பக் கட்டுப்பாட்டிற்கு, 600 கோடி டாலர்—ஆக, வருடத்திற்கு மொத்தம் 3,400 கோடி டாலர். அதை, பின்வருபவற்றிற்காக ஒவ்வொரு வருடமும் ஏற்கெனவே செலவிடப்பட்டுவரும் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி அவர்கள் சொல்கிறார்கள்: கோல்ஃப், 4,000 கோடி டாலர்; பீர் மற்றும் வைன், 24,500 கோடி டாலர்; சிகரெட்டுகள், 40,000 கோடி டாலர்; இராணுவம், 80,000 கோடி டாலர். நிச்சயமாகவே, பொருத்தமான முன்னுரிமைகள் சரியாக தீர்மானிக்கப்பட்டால் உலகிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் போதுமானளவு பராமரிக்க முடியுமென்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
“புது விதமான அபின் போர்”
இப்படித்தான், ஐ.மா. புகையிலைக் கம்பெனிகள் அவற்றின் உற்பத்திப் பொருட்களை ஆசியாவில் தீவிரமாக விற்பனை செய்ய முழுமூச்சோடு எடுத்திருக்கும் முயற்சிகளைப் பற்றி தி டைம்ஸ் ஆஃப் இண்டியா விவரித்தது. புகையிலை காரணமான நோய்களால் இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் பத்து லட்சம் நபர்களாவது இறந்துவருகிறபோதிலும், இந்திய அரசாங்கம் புகையிலைக்கு எதிராக எந்த விதமான சட்டத்தையும் இன்னும் கொண்டுவரவில்லை. டைம்ஸ் அறிக்கையின்படி, இது, தேசிய மற்றும் சர்வதேசிய புகையிலை கம்பெனிகள் சட்டமன்ற உறுப்பினர்கள்மீது செல்வாக்கு செலுத்துவதன் காரணமாகவும், “ஐ.மா. புகையிலைப் பொருட்களின் விற்பனையை அனுமதிக்காத தேசங்களுக்கு வணிக இழப்பு ஏற்படுமென அச்சுறுத்தும் ஐ.மா. கூட்டிணைவரசு சட்டங்களின்” காரணமாகவும் இவ்வாறு இருக்கிறது. இந்திய கிராமப் பகுதிகளில் வாழும் மக்களில் 99 சதவீதத்தினர் புகையிலை உபயோகிப்பதால் உண்டாகும் எந்தவிதமான தீங்கைப் பற்றியும் அறியாதவர்களாய் இருக்கின்றனர். மக்கள் தொடர்பு சாதனங்கள், புகைபிடிப்பவர்களை நம்பிக்கையுள்ளவர்களாகவும் வசீகரிப்பவர்களாகவும் உறுதிவாய்ந்தவர்களாகவும் பொதுவாக சித்தரிக்கின்றன. கிரிக்கெட் போன்ற பெரியளவிலான பிரபல விளையாட்டுப் போட்டிகள் புகையிலைக் கம்பெனிகளால் ஸ்பான்ஸர் செய்யப்படுகின்றன. சிகரெட்டுகளும்கூட அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வருமானமாக இருக்கின்றன; அந்த அரசு, நான்கு சிகரெட் கம்பெனிகளுக்கு முதலீடு செய்திருக்கிறது.
நரகத்தின்பேரிலான நம்பிக்கை உதறிவிடப்பட்டது
நரகம் நெருப்பும் நித்திய சித்திரவதையும் உள்ள ஓர் இடம் என்ற பாரம்பரிய கருத்தை சர்ச் ஆஃப் இங்லாண்டின் அறிக்கை நிராகரித்திருக்கிறது. சர்ச்சின் கோட்பாட்டு ஆணையத்தின் அறிக்கையின்படி, “கிறிஸ்தவர்கள் கொடூரமான மத சாஸ்திரங்களை வெளிப்படையாக தெரிவித்தனர்; அவை கடவுளை ஒரு கொடுமைக்கார அரக்கராக காட்டி, அநேகரது உள்ளத்தில் வேதனைமிக்க காயங்களை உண்டாக்கியிருக்கின்றன.” அது இவ்வாறு கூடுதலாக சொன்னது: “கோட்பாட்டு மாற்றத்திற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில காரணங்கள், பயமூட்டும் ஒரு மதத்திற்கெதிராக கிறிஸ்தவ விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் தெரிவித்த எதிர்ப்பும், கோடிக்கணக்கானோருக்கு கடவுள் நித்திய சித்திரவதை அளித்திருக்கிறார் என்ற கருத்தானது கிறிஸ்துவில் வெளிப்பட்ட கடவுளுடைய அன்பிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்ததை அதிகமதிகமாக மக்கள் உணர ஆரம்பித்ததுமாகும்.” ஆனாலும், ஒவ்வொரு நபரும் இன்னும் நியாயத்தீர்ப்பு நாளை எதிர்ப்பட வேண்டியுள்ளது என்றும் சோதனையில் தோற்றுப்போகும் அனைவரும் பூண்டோடொழிக்கப்படுவார்கள் அல்லது முற்றிலும் இல்லாமல்போவார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். நியூ யார்க்கின் ஹெரால்ட் ட்ரிப்யூன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “வெவ்வேறு நம்பிக்கைகளுள்ள ஆட்கள் அனைவரும் இயல்பாகவே காப்பாற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை அந்த அறிக்கை தெளிவாக காட்டியது.”
குரங்குக் கதாநாயகி
மூன்று வயது பையன் ஒருவன், சிகாகோ புறநகரிலுள்ள ப்ருக்ஃபில்ட் மிருகக்காட்சி சாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஏழு ஆப்பிரிக்க கொரில்லாக்களின் வேலிக்குள் விழுந்துவிட்டான், அங்கிருந்த பெண் கொரில்லா ஒன்றினால் அவன் காப்பாற்றப்பட்டான். அம்மாவை விட்டு வழிதவறி சென்ற இந்தப் பையன் 1.2 மீட்டர் உயரமுள்ள கம்பி வேலியின்மீது ஏறி கிட்டத்தட்ட 6 மீட்டருக்கு கீழே கான்க்ரீட் தரையில் டமாலென்று விழுந்து தலையைக் காயப்படுத்திக்கொண்டான். எட்டு வயது கொரில்லாவான பின்டி ஜுவா—ஸ்வாஹிலி பாஷையில், “சூரிய பிரகாசத்தின் மகள்” என்று அர்த்தம்—நிதானமாக நடந்துசென்று, காயமடைந்த பிள்ளையை மென்மையாக தூக்கிக்கொண்டாள். பின்டி தன்னுடைய சொந்த குட்டியை முதுகில் வைத்துக்கொண்டு, அடிபட்ட பையனை இரு கைகளிலும் ஏந்தியவாறு மிருகக்காட்சிச்சாலை காவலாளிகள் பயன்படுத்தும் கதவருகே தூக்கிச் சென்று காவலாளிகள் அவனுக்கு சிகிச்சையளிக்கும்படி தரையில் ஜாக்கிரதையாக இறக்கிவிட்டாள். தன் சொந்தத் தாயினாலேயே கைவிடப்பட்ட பின்டிக்கு, அவள் குட்டி போடுவதற்கு முன் “காவலாளிகள், பராமரிப்பதற்கும் பேணிக்காப்பதற்கும் மனித பொம்மைகளைக் கொடுத்து இவ்வாறு தாய்மைக்குரிய செயல்களை அவளுக்குக் கற்றுக்கொடுத்தனர்,” என்பதாக நியூ யார்க்கின் டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. அது முதற்கொண்டு ஆயிரக்கணக்கானோர் அவளை வந்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர், பழங்களை அவளுக்கு பரிசாக அளித்திருக்கின்றனர். காயங்களும் கீறல்களும் அடைந்த அந்தப் பையன் சுகமடைந்துவிட்டான்.
நீங்களே தேர்ந்தெடுங்கள்
“உங்கள் புதிய வருடம் நல்லபடியாகத் துவங்கவில்லையா?” என நியூ சைன்டிஸ்ட் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை கேட்டது. “கவலைப்பட வேண்டாம், நீங்கள் தெரிந்தெடுப்பதற்கு குறைந்தபட்சம் 14 புத்தாண்டு தினங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.” உண்மையில், க்ரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் மாத்திரம்தான் ஜனவரி 1-ஐ வருடத்தின் முதல் நாளாக கருதுகின்றன. பொ.ச.மு. 46-ல் காலண்டர் வருடம் ஜனவரி 1-ல் ஆரம்பமாகும் என ஜூலியஸ் சீஸர் தீர்மானித்தார்; போப் க்ரகரி 1582-ல் காலண்டரை திருத்தம் செய்தபோது அதை அவ்வாறே விட்டுவிட்டார். வித்தியாசமான கலாச்சாரங்கள் அதனதன் சொந்த காலண்டர்களை தயாரித்தபோது, குறைந்தபட்சம் 26 புத்தாண்டு தினங்கள் தோன்றின. இன்று இருப்பவற்றில், சீன காலண்டர்தான் மிகப் பழமையானது. அவர்களுக்கு இந்தப் புத்தாண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. யூத புத்தாண்டு அக்டோபர் 2-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. சந்திர நாட்காட்டியான முஸ்லிம்களின் காலண்டர், அதனுடைய சொந்த புத்தாண்டு தினத்தை—மே 8-ம் தேதி—கொண்டிருக்கும்.
புகைத்தல் க்ரிப் டெத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது
குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எவ்வித சிகரெட் புகைக்கும் ஆளாகக்கூடாது என்பதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ப்ரிஸ்டலில் சுகவீனமுற்ற பிள்ளைகளுக்கான ராயல் ஹாஸ்பிட்டல் நடத்திய இருவருட ஆராய்ச்சி, இங்கிலாந்தின் மூன்று பகுதிகளில் திடீரென தோன்றி சிறு குழந்தைகளை சாகடிக்கும் நோயை (SIDS) ஆராய்ந்தது; அது க்ரிப் டெத் (crib death) என்பதாகவும் அழைக்கப்படுகிறது. இறந்துவிட்ட 195 குழந்தைகளது பெற்றோரையும் உயிருடனிருந்த மற்ற 780 குழந்தைகளது பெற்றோரையும் பேட்டி கண்டதன் மூலம், இறந்த குழந்தைகளின் தாய்மாரில் 62 சதவீதத்தினர் புகைபிடித்தனர், ஆனால் உயிருடனிருந்த குழந்தைகளின் தாய்மாரில் வெறுமனே 25 சதவீதத்தினர்தான் புகைபிடித்தனர் என்பதைக் கண்டிருக்கின்றனர். “தகப்பன்மார் புகைபிடித்தாலும் பிரச்சினை உண்டாகிறது என்பதை சமீபத்திய ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது,” என்பதாக குழந்தைகள் இறப்பின்பேரிலான ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் எப்ஸ்டீன் சொல்கிறார். “குழந்தையின் சுற்றுப்புறத்தில் எவரும் புகைபிடிக்காதவாறு நாம் பார்த்துக்கொண்டால், தொட்டில் மரணங்கள் [SIDS மரணங்கள்] 61% குறையும் என்பதாக நாங்கள் கணக்கிடுகிறோம்.”
இரத்த ஆராய்ச்சி இரகசியத்தை அம்பலப்படுத்துகிறது
ஹீமோக்ளோபின் (hemoglobin) 60 வருடங்களுக்கும் மேலாக நுணுக்கமாக ஆராயப்பட்டுவருகிறது; உயிரியலில் மிக அதிகமாக ஆராயப்பட்டிருக்கும் ஒரு புரதம் என்பதாக சொல்லப்படுகிறது. நுரையீரல்களிலிருந்து ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கொண்டுசென்று, கார்பன்டையாக்ஸைடையும் நைட்ரிக் ஆக்ஸைடையும் அங்கிருந்து எடுத்துவருவதாக அது வெகு காலமாக அறியப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஹீமோக்ளோபின் மற்றொரு வேலையையும் செய்வதாக காட்டும் சமீபத்திய கண்டுபிடிப்புகளால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஆச்சரியமடைந்தனர்; வேறு விதமான நைட்ரிக் ஆக்ஸைடான சூப்பர் நைட்ரிக் ஆக்ஸைடை உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஹீமோக்ளோபின் எடுத்துச் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சூப்பர் நைட்ரிக் ஆக்ஸைடு, ஞாபகசக்தி மற்றும் கல்வி அறிவு, உடலுறவின்போது ஆண் உறுப்பு விறைத்தல், இரத்த அழுத்தம் ஆகியவற்றை கவனித்துக்கொள்வது உட்பட, உடலாரோக்கியத்திலும், உயிரணுக்களையும் திசுக்களையும் உயிருடன் வைப்பதிலும் உண்மையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உடலிலுள்ள இரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹீமோக்ளோபினால் இரத்தக் குழாய்களை விரியச் செய்யவோ சுருங்கச்செய்யவோ முடியும். “இந்தக் கண்டுபிடிப்பு, இரத்த அழுத்த சிகிச்சையிலும் செயற்கை இரத்த தயாரிப்பிலும் முக்கிய பங்கை ஒருவேளை வகிக்கலாம்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. தற்போதுள்ள பெரும்பாலான இரத்தத்திற்கான மாற்று மருந்துகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மையுள்ளவை. சூப்பர் நைட்ரிக் ஆக்ஸைடு அவற்றில் இல்லாததால் இது ஒருவேளை இவ்வாறு இருக்கலாம் என்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.