கண்ணீரோடு விதைத்து, மகிழ்ச்சியோடு அறுவடை செய்தல்
“ஓய்வுபெற்ற உங்களது வாழ்க்கையை கதகதப்பான வெப்பமுள்ள ஸ்பெய்னில் அனுபவித்து மகிழுங்கள்!” மனதை கொள்ளை கொள்ளும் இந்த அழைப்பை லட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டு, குடிபெயர்ந்துள்ளனர். எனக்கு 59 வயதானபோது, எல்லாவற்றையும் விற்றுவிட்டு, இங்கிலாந்திலிருந்து ஸ்பெய்னில் குடிபுக நானும் முடிவுசெய்தேன்; ஆனால் கதகதப்பான வெப்பத்தையும் ஓய்வையும் காட்டிலும் உயர்வான ஒன்றை நான் எதிர்பார்த்திருந்தேன்.
ஸ்பெய்னில் அதிக மழை பெய்யும் நகரங்களில் ஒன்றான சான்டியாகோ டி காம்பாஸ்டில்லா என்ற நகரத்திற்கு செல்ல முடிவுசெய்தேன்; ஏனென்றால் ஒரு முழுநேர ஊழியக்காரனாக சேவைசெய்ய வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது, வெறுமனே சூரிய ஒளியில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதல்ல. இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் ஸ்பெய்னில் நான் செய்துவந்த சுவிசேஷ சேவையை கைவிடும்படி சூழ்நிலைமைகள் என்னைக் கட்டாயப்படுத்தின. அங்கே சுவிசேஷ சேவைக்கான தேவை அதிகம் இருந்ததால் நான் போயிருந்தேன். மறுபடியும் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்தது, இப்போது ஒருவழியாக அதில் வெற்றியடைந்தேன்.
ஆனால், நான் நினைத்ததுபோல், மாற்றத்தைச் செய்வது அவ்வளவு ஒன்றும் சுலபமாக இல்லை. முதல் மாதமே பெரும் திகிலும் வேதனையும் நிறைந்த ஒரு மாதமாக இருந்தது! என் வாழ்க்கையிலேயே அவ்வளவு சோர்வாக நான் இருந்ததே கிடையாது. நான் ஐந்தாவது மாடியில் குடியிருந்தேன், அதில் எலிவேட்டர் இல்லை. அந்தச் சான்டியாகோவின் மலைப் பாதைகளில் படு கஷ்டத்தோடு நான் ஏறி இறங்கினேன்; எத்தனை ஆட்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியுமோ அத்தனை ஆட்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்று நான் முயலும்போது கணக்குவழக்கின்றி மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன். அதிக சோர்வூட்டிய அந்த மாதத்திற்குப்பின், என்னுள் மெல்ல சந்தேகங்கள் தலைதூக்க ஆரம்பித்தன. நான் எடுத்த தீர்மானம் சரியானதுதானா? ஒருவேளை இப்படிப்பட்ட ஒரு செயலை செய்ய எனக்கு ரொம்ப வயதாகிவிட்டதா என்ன?
இருப்பினும், இரண்டாம் மாதத்தில் எனக்குப் மெல்ல பலம் திரும்புவதை நான் உணர்ந்தேன். இது நீண்ட தூரம் ஓடும் பந்தைய வீரருக்கு மெல்ல புது தெம்பு திரும்புவதுபோல் இருந்தது. சொல்லப்போனால், என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு காலகட்டத்தில் அடியெடுத்து வைத்தேன். பல வருடங்களாக கண்ணீரோடே விதைத்தப்பின், மகிழ்ச்சியோடு அறுவடைசெய்ய ஆரம்பித்தேன். (சங்கீதங்கள் 125:5, தமிழ் கத்தோலிக்க பைபிள்) அதை விவரமாக சொல்கிறேன்.
மகிழ்ச்சியான காலம்
1961-ல் என் மனைவி ப்பேட்டும் (pat) நானும் ஸ்பெய்னில் குடியேறினோம். அப்போது அங்கு, யெகோவாவின் சாட்சிகளின் சுவிசேஷ ஊழியம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதிருந்தது. என்றபோதிலும், வெப்பம் நிலவிய நகரமாகிய செவைலில் எங்களுக்குப் பிரசங்கிப்பதற்கான நியமிப்பு கிடைத்தது; அங்கே சுமார் 25 பேர் மாத்திரம் பிரசங்க வேலையில் பங்குகொண்டிருந்தனர்.
எங்கள் ஊழியத்தில் ஒருநாள், நான் ஒரு பிரெஞ்சு நபரிடத்தில் பேசினேன், அவர் ஒரு வீட்டை பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தார். அடுத்தநாள் என்னையும் என் மனைவியையும் ஒரு பெண்மணி அணுகி, முந்தின நாள் ஒரு பெயின்டரிடத்தில் நாங்கள் பேசினோமா என்று கேட்டார். அது வேறுயாருமில்லை தன்னுடைய கணவர் பிரான்ஸிஸ்கோதான் என்று அவர் கூறினார். அவர் எங்களைப்பற்றிய அடையாளங்களை மிக சரியாக விவரித்திருந்ததால், அந்தப் பெண்மணி எங்களை உடனே அடையாளம் கண்டுகொண்டார். “நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால், இப்போது அவர் வீட்டில்தான் இருக்கிறார்” என்று அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.
அந்த அழைப்பை உடனே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வெகுவிரைவில் முழு குடும்பத்தினரும் எங்களிடம் பைபிளை படித்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலத்திற்குப்பின், பிரான்ஸிஸ்கோ பொருளாதார காரணங்களுக்காக பிரான்ஸுக்குத் திரும்பிப்போய்விட்டார். எங்களுக்கு ஒரே கவலையாக இருந்தது. அவர் சாட்சிகளோடு இருக்கும் தொடர்பை இழந்துவிடுவாரோ? ஆனால், அவர் சென்றப்பின் வெகுவிரைவில் அவரிடமிருந்து ஒரு கடிதம் எங்களுக்கு கிடைத்தது; அது எங்களுக்கு மன அமைதியைத் தந்தது. ஸ்பெய்னில் எத்தனை மதங்கள் உள்ளன என்று அவருடைய புதிய பாஸ் அவரிடம் கேள்வி கேட்டதாக அவர் சொன்னார்.
“இரண்டு மதங்கள் இருக்கின்றன, ஒன்று கத்தோலிக்க மதம், மற்றொன்று புராட்டஸ்டண்ட் மதம்” என்று பிரான்ஸிஸ்கோ கவனமாக விளக்கம் கொடுத்திருந்திருக்கிறார். எங்களுடைய வேலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால், அதைப்பற்றி அதிகம் சொல்வது புத்தியுள்ள காரியமாக இருக்காது என்று அவர் நினைத்தார்.
“உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?” என்று அவருடைய பாஸ் கேட்டிருக்கிறார்.
“வந்து . . . வந்து, உண்மையில் மூன்று மதங்கள் இருக்கின்றன. நான் மூன்றாவது மதத்தை, அதாவது யெகோவாவின் சாட்சிகள் மதத்தை சேர்ந்தவன்” என்பதாக பிரான்ஸிஸ்கோ பதிலளித்தார்.
“ரொம்ப நல்லாதா போயிற்று, நான் உங்களுடைய சபையில் ஒரு ஊழியக்காரன்!” என்று அவருடைய பாஸ் கூறினார். அன்று மாலையே பிரான்ஸிஸ்கோ யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டத்தில் ஆஜராகி இருந்தார்.
1963-ல் நாங்கள் செவைலிருந்து வாலென்சியாவுக்கு மாற்றலானோம், அதற்குப்பின் விரைவில், பார்சிலோனாவுக்கு மாற்றலானோம். அங்கே ஒரு பயணக் கண்காணியாக சேவிப்பதற்கான பயிற்சியை நான் பெற்றேன். பிறகு, மறுபடியும் வாலென்சியாவுக்கு அனுப்பப்பட்டோம், அந்தப் பகுதியில் பயணக் கண்காணியின் வேலையைச் செய்வதற்காக. ஆனால், இந்த மகிழ்ச்சியான ஊழிய வேலையில் இரண்டொரு வருடங்கள் சென்றபின், ப்பேட் நிற்பதற்கு கஷ்டப்பட்டாள். விரைவில் அவளுக்கு நடப்பதில் சிரமம் இருந்தது. இவ்வாறாக நாங்கள் ‘கண்ணீரோடே விதைப்பதற்கான’ காலம் ஆரம்பமானது.—சங்கீதம் 126:5.
கண்ணீர் சிந்தும் காலம்
இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாங்கள், விட்டு வருவதற்கே மனமில்லாமல் ஸ்பெய்னை விட்டு வந்தோம். ப்பேட்டுக்கு ஏற்பட்ட அறிகுறிகளுக்கான நோய்தான் என்ன? மூளை, தண்டுவடம் என பல்வேறு இடங்களில் திசுக்கள் கெட்டியாகும் நோய் (Multiple sclerosis), மெல்ல மெல்ல சீரழிக்கும் ஒருவகை நோய்; அது ஒருவரை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைத்துவிடும். காலப்போக்கில், பக்கவிளைவுகளாலும், அதனோடு தொடர்புடைய பிரச்சினைகளாலும், அநேகமாக சாகவும் நேரலாம்.
எங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை செய்து கொள்வதும், இந்த வியாதியை சமாளிப்பதும் எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், இவை எல்லாவற்றின் மத்தியிலும், “படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் [எளிமையானவரிடத்தில் கரிசனையோடு நடந்துகொள்ளும் எவனையும்] கர்த்தர் தாங்குவார்” என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளில் அடங்கியிருந்த உண்மையை நாங்கள் கற்றுக்கொண்டோம்.—சங்கீதம் 41:3.
சுமார் பத்து வருடங்களாக, ஒரு வீட்டிலிருந்து மற்றொன்றிற்கு நாங்கள் மாறிக்கொண்டே இருந்தோம். ப்பேட்டால் சிறு சத்தத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை, எனவே அவள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்தை நாங்கள் தேட முயன்றோம். கடைசியில் அப்படிப்பட்ட ஒரு இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்துகொண்டோம். சக்கரநாற்காலியை எப்படி உபயோகிப்பது என்று ப்பேட் பழகிக்கொள்ள வேண்டியிருந்தது. அவளால், சமைக்கவும், மற்ற அநேக வேலைகளை செய்யவும் முடிந்தபோதிலும், தன்னால் நடமாட முடியவில்லையே என்று மனவேதனை அடைந்தாள். அவள் எப்போதும் மிகவும் துருதுருவென்று இருந்ததன் காரணமாக, இந்த உடல் ஊனம் அவளுக்கு தொடர்ந்து மன உளைச்சல் தந்ததை அவள் உணர்ந்தாள்.
கண்ணீரின் இடையே தெம்பு
எழுந்திருக்க, உட்கார, உடை மாற்ற, தானாகவே குளிக்க, படுக்கையில் ஏறி இறங்க ப்பேட்டுக்கு உதவிசெய்வது எப்படி என்று நான் கற்றுக்கொண்டேன். கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் போவது உண்மையில் ஒரு சவாலாகவே ஆனது. நாங்கள் தயாராகி புறப்படுவது பெரும்பாடாக இருந்தது. ஆனால், நம் கிறிஸ்தவ சகோதரர்களோடு கலந்து உறவாடுவதுதான் எங்களை ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைப்பதற்கு இருந்த ஒரேவழி என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
பகல் வேளைகளில் ஒரு டிராப்ட்ஸ்மனாக (draftsman) வேலை செய்துகொண்டு, ப்பேட்டை வீட்டில் வைத்தே 11 வருடங்களுக்குப் பராமரித்தேன், கடைசியில், அவளுடைய உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போனதால், அவளுக்கு விசேஷ பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டோம்; என்னால் அதை அளிக்க முடியவில்லை. ஆகவே, வாரத்தின் மற்ற நாட்களில் அவள் மருத்துவமனையில் தங்கினாள், வார கடைசி நாட்களில் நான் அவளை வீட்டில் வைத்து பராமரித்தேன்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மதிய சாப்பாடு முடிந்ததும், நான் ப்பேட்டை பொது கூட்டத்திற்கும், காவற்கோபுர படிப்புக்கும் கூட்டிக்கொண்டு போனேன். இதற்குள்ளாக, இந்தக் கூட்டங்களுக்கு மாத்திரம் அவளால் வர முடிந்தது. அதன்பின்பு நான் அவளை மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். இவ்வாறு தொடர்ந்து செய்வது எனக்கு அதிக சோர்வை தந்தது; ஆனால் அது பயனுள்ளதாக இருந்தது, ஏனென்றால், ப்பேட்டை ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைத்தது. இப்படியே எவ்வளவு நாட்களுக்குத்தான் என்னால் செய்யமுடியும் என்று சிலசமயங்களில் நான் யோசிப்பேன், ஆனால் அதைத் தொடர்ந்து செய்ய யெகோவா எனக்கு தெம்பை அளித்தார். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் ப்பேட்டை மருத்துவமனையிலிருந்து கூட்டிக்கொண்டு போவதற்குமுன், பிரசங்க வேலைக்கு ஒரு தொகுதியை வழிநடத்திக்கொண்டு போவேன். இந்த வேதனைநிறைந்த காலகட்டத்தில், கிறிஸ்தவ நடவடிக்கையைத் தொடர்ந்து செய்ததுதான் என்னுடைய வாழ்க்கை என்னும் சக்கரத்தைச் சுழன்றோடச்செய்தது என்பதை நான் கண்டுகொண்டேன்.
இதற்கிடையில், ப்பேட் தன்னால் முடிந்தளவுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தாள். மருத்துவமனையில் அவளை பராமரித்துக்கொண்டிருந்த நர்ஸுகளோடு அவளால் இரண்டு பைபிள் படிப்புகளைத் துவங்க முடிந்தது. அவர்களில் ஒருவர் ஹேசல், யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு முன்னேறினார். துக்ககரமாக, ஹேசலின் முழுக்காட்டுதலை ப்பேட்டால் பார்க்க முடியாமல் போனது, அவள் ஜூலை 8, 1987-க்கு சற்று முன்புதான் இறந்துவிட்டாள்.
ப்பேட்டின் இறப்பு, நிம்மதியையும் அதேசமயத்தில் மன வேதனையையும் அளித்தது. அவள் பட்ட வேதனைக்கு ஒரு முடிவு என்றபோது நிம்மதியை அளித்தது, ஆனால் என் வாழ்க்கைத் துணையை இழந்ததை நினைக்கையில் என் உள்ளத்தில் ஆழமான வேதனையை அடைந்தேன். அவளது இறப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை என்னில் விட்டுச்சென்றது.
இன்னொரு வகையில் மகிழ்ச்சி
இது ஒருவேளை விநோதமாகத் தோன்றலாம், அடுத்தபடியாக என்ன செய்யவேண்டும் என்பதை ப்பேட்டும் நானும் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருந்தோம். அவள் மரண தருவாயை நெருங்கிக்கொண்டிருப்பதை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததால், அவளது இறப்புக்குப்பின், நான் எவ்வாறு யெகோவாவுக்கு சிறந்த முறையில் சேவை செய்யலாம் என்பதைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நான் மறுபடியும் ஸ்பெய்னுக்குப்போய், வலுக்கட்டாயமாக நாங்கள் கைவிட நேர்ந்த அதே நியமிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இருவருமாக சேர்ந்து எடுத்த தீர்மானம்.
ப்பேட் இறந்து மூன்று மாதங்களுக்குப்பின், நான் எங்கே சேவை செய்வது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவதற்காக, நான் ஸ்பெய்னில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு போனேன். ஒரு விசேஷ பயனியராக நியமிப்பை நான் பெற்றுக்கொண்டேன்; அதிக மழை பெய்யும் பழம்பெரும் நகரமாகிய சான்டியாகோ டி காம்பாஸ்டில்லாவுக்கு நியமிக்கப்பட்டேன்.
வெகுவிரைவில், கிளை அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதில் மாக்ஸிமினியோ என்னும் பெயரையுடைய அக்கறை காட்டும் ஒரு நபரின் விலாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரை வீட்டில் சந்திப்பதற்காக மூன்று வாரங்களாக முயன்று, ஒருவழியாக அவரை சந்தித்தேன். மாக்ஸிமினியோ உள்ளூர் மருத்துவமனையில் ஒரு சிப்பந்தியாக வேலை செய்பவர். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியைப் பெற்றிருந்தார்; அதன்பிறகு, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைக் கேட்டு வாங்கினார்.a நான் அவரை சந்தித்தபோது ஏற்கெனவே மூன்று தடவை அந்தப் புத்தகத்தை படித்து முடித்துவிட்டிருந்தார். பைபிளின் ‘பழைய பகுதியை’ ஒரேயொரு தடவையும் ‘புதிய பகுதியை’ இரண்டு தடவையும் படித்திருப்பதாக கூறி, தான் பைபிளை அவ்வளவாக படிக்கவில்லை என்பதற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுகொண்டார். தன்னை சந்திப்பதற்கு ஒருவர் வர காத்திருக்கும் நேரத்தில் இவை அனைத்தையும் அவர் செய்து முடித்திருந்தார்.
நம்முடைய கூட்டங்களில் ஒன்றிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் ராஜ்ய மன்றத்திற்கு போனதாகவும் என்னிடம் கூறினார். ஆனால், அவர் மிகவும் கூச்சப்பட்டதால், கூட்டம் நடைபெற்ற இடத்திற்குள் நுழையவேயில்லை. அவரிடத்தில் ஒரு பைபிள் படிப்பை நான் ஆரம்பித்தேன், அதே வாரம் அவர் கூட்டங்களுக்கும் வந்தார். அவர் சத்தியத்தை அவ்வளவு ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டார்; ஆனால் புகையிலைக்கு அடிமையாகியிருந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அவர் உண்மையிலேயே போராட வேண்டியிருந்தது. யெகோவாவின் உதவியோடு, ஒருவழியாக, தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார், இப்போது அவர் ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறார்.
அதிக கண்ணீருக்குப்பின் பெரும் மகிழ்ச்சி
ஸ்பெய்னுக்குத் திரும்பி வந்து ஒரேவருடத்திற்குள், மீண்டும் பயணக் கண்காணியாக சேவிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், அந்த நியமிப்பை நான் ஏற்பதற்கு முன், என் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. பாகிடா என்னும் பெயரையுடைய ஒரு பயனியரை சந்தித்தேன், அவள் சான்டியாகோவுக்கு அருகாமையில் ஊழியம் செய்துகொண்டிருந்தாள். அவள் ஒரு விதவை, பல வருடங்களாக முழுநேர ஊழியத்தை செய்துகொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் இடையே நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருந்ததை நாங்கள் விரைவிலேயே கண்டுகொண்டோம். நான் பயணக் கண்காணி வேலையை ஆரம்பித்து சரியாக ஆறு மாதங்கள் சென்றபின்பு, 1990-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்—மறுபடியும் மகிழ்ச்சி.
என்னைப்போலவே, பாகிடா ‘கண்ணீரோடே விதைத்துக்கொண்டிருந்தாள்.’ ஒரு விசேஷ பயனியராக முதன்முதலில் அவள் பெற்ற நியமிப்புக்கு ஒரு விபரீதத்தால் தடைவந்தது. ஆரன்சே என்ற இடத்திலிருந்த அவர்களுடைய புதிய வீட்டிற்கு பர்னிச்சர்களை வண்டியில் போட்டுக்கொண்டு வரும்போது, அவளுடைய கணவர் கார் விபத்தில் இறந்துவிட்டார்—எதிரே வந்த ஒரு வண்டி அவருடைய கார் போகும் பாதையின் குறுக்கே வந்து மோதிவிட்டது. அவளுடைய கணவர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தபோது, பாகிடாவும், அவளுடைய பத்து வயது மகளும் ஏற்கெனவே ஆரன்சேவில் இருந்தார்கள். இந்தப் பேரிழப்பின் மத்தியிலும், சவ அடக்கம் முடிந்து இரண்டு நாட்களுக்குப்பின், பாகிடா தான் திட்டமிட்டப்படி, தன் நியமிப்பை துவங்கினாள்.
பல வருடங்களாக, முழுநேர சேவையை பாகிடா தொடர்ந்து செய்தாள். பிறகு மறுபடியும் விபரீதம் நேர்ந்தது. மற்றொரு கார் விபத்து அவளுடைய 23 வயது மகளின் உயிரைப் பறித்துக்கொண்டு போனது. அது பெரும் வேதனையாக இருந்தது, துக்கம் நெடுநாள் தொடர்ந்திருந்தது. முன்புபோலவே, கிறிஸ்தவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்ததும், உடன் கிறிஸ்தவர்களிடமிருந்து பெற்ற ஆதரவும் ஏற்பட்ட இழப்பிலிருந்து மெல்ல வெளிவர மிக முக்கியமாக உதவின. 1989-ல் பாகிடாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது, அப்போது அவளுடைய மகள் இறந்து இரண்டு வருடங்களே ஆகியிருந்தன.
1990-ல் நாங்கள் கல்யாணம் முடித்த நாளிலிருந்து, ஸ்பெய்னில் பயணக் கண்காணி சேவையில் இருந்து வருகிறோம். இந்த ஒருசில வருடங்கள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் திருப்தி அளித்த ஒரு காலப்பகுதியாக இருந்தாலும், நாங்கள் கடந்து வந்த சோதனைகளை நினைத்து மனம் வருந்தவில்லை. அவையெல்லாம் நல்லவிதமாகவே எங்களை உருமாற்றின என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.—யாக்கோபு 1:2-4.
நான் கற்றுக்கொண்ட பாடங்கள்
மிக கொடிய சோதனைகள்கூட நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவை நமக்கு பாடங்களைக் கற்றுத்தருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை பிறரிடத்தில் வைத்துப்பார்க்கும் குணத்தின் முக்கியத்துவத்தை சோதனைகள் எனக்குக் கற்றுத்தந்தன. அது ஒரு கிறிஸ்தவ கண்காணிக்கு மிகவும் அவசியமான குணமாகும். உதாரணத்திற்கு, கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் ஒரு கிறிஸ்தவ சகோதரரிடத்தில் பேசினேன், அவருக்கு ஊனமான ஒரு மகன் இருந்தான். அவருடைய மகனை எல்லா கூட்டங்களுக்கும் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு வாரமும் அவர் எவ்வளவு பெரிய முயற்சி எடுக்கவேண்டியிருந்தது என்பதை நான் மிக சரியாக புரிந்துகொண்டேன். எங்களுடைய சம்பாஷணைக்குப்பின், அவர் எனக்கு நன்றி கூறினார். தானும் தன் மனைவியும் எதிர்ப்படும் பிரச்சினைகளை உண்மையிலேயே ஒருவர் புரிந்துகொண்டது அதுவே முதல் தடவை என்று அவர் என்னிடம் சொன்னார்.
நான் கற்ற மற்றொரு முக்கியப் பாடம், யெகோவாவில் சார்ந்திருப்பது. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தால், நாம் நமது பலத்திலும் திறமையிலும் சார்ந்திருக்கும் ஒரு மனப்போக்கை ஒருவேளை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், சோதனைகள் பல வருடங்களுக்குத் தொடர்ந்து இருந்தால், உங்களுடைய சொந்த பலத்தால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து, யெகோவாமீது சார்ந்திருக்க கற்றுக்கொள்வீர்கள். (சங்கீதம் 55:22) கடவுளுடைய உதவும் கரம்தான் என்னை தள்ளிக்கொண்டு போனது.
நிச்சயமாகவே, எந்தவித கஷ்டமுமின்றி எப்போதும் எல்லாம் நல்லபடியாக நடந்தது என்பதல்ல இதன் அர்த்தம். நான் இதை ஒத்துக்கொள்ள வேண்டும்; அதாவது என் முதல் மனைவி வியாதியாக இருந்தபோது, என் நிலைமையை நினைத்து சில நேரங்களில் எனக்கு கோபமும் எரிச்சலும் வந்ததுண்டு, விசேஷமாக நான் மிகவும் களைப்பாக இருந்தபோது. பிறகு, அவ்வாறு உணர்ந்ததற்காக என் மனசாட்சி என்னை உறுத்தும். அவற்றைப் பற்றி கரிசனையுள்ள ஒரு மூப்பரை அணுகி அவரிடத்தில் சொல்லிவிட்டேன்; தீராத வியாதிகளை உடைய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் அவர் ஒரு நிபுணராக அனுபவம் பெற்றிருந்தார். நான் என் நிலைமையில் நன்றாகவே செய்கிறேன் என்ற உத்திரவாதத்தை எனக்கு அளித்தார். நீண்ட காலத்திற்கு உணர்ச்சி சம்பந்தமான அழுத்தத்தை எதிர்ப்படும்போது, அபூரண மனிதர்களாக இவ்வாறு தவறுவது இயல்புதான் என்று அவர் கூறினார்.
பாகிடாவும் நானும் எங்களுடைய முழுநேர சேவையை மிக அதிக அளவில் அனுபவித்து மகிழ்ந்தாலும், எங்கள் ஆசீர்வாதங்களை ஒருபோதும் துச்சமாக மதிக்க மாட்டோம். யெகோவா எங்களுக்குப் பல வழிகளில் பலன்களை தந்துள்ளார்; இருவருமாக ஒன்றுசேர்ந்து செய்யக்கூடிய ஒரு திருப்திகரமான ஒரு வேலையை எங்களுக்குத் தந்துள்ளார். கடந்துசென்ற வருடங்களில் நாங்கள் இருவரும் கண்ணீரோடே விதைத்தோம், இப்போது மகிழ்ச்சியான ஆர்ப்பரிப்போடு அறுவடைசெய்கிறோம், அதற்காக யெகோவாவுக்கு நன்றி.—ரேமன்டு கர்கப் என்பவர் கூறியது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 21-ன் படம்]
பாகிடாவும் நானும் எங்கள் ஊழியத்தை சேர்ந்தே அனுபவிக்கிறோம்