ஜெபத்தைக் கேட்பவரோடு நண்பராகுங்கள்
கடவுளை நம்புவதாகச் சொல்லிக்கொள்கிறவர்களிடம், எதை வைத்து நம்புகிறீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரிவதில்லை. மதங்கள் தீமைக்குக் காரணமாக இருப்பது ஏன்? கஷ்டங்களைக் கடவுள் ஏன் விட்டுவைத்திருக்கிறார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதில் இல்லை. ஆனால், யாரென்றே தெரியாத ஒருவரிடம் ஜெபம் மட்டும் செய்கிறார்கள்.
உங்களால் நிச்சயம் ஜெபத்தைக் கேட்பவருடன் நண்பராக முடியும். அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்க முடியும். அவரை நேசிக்கவும் மதிக்கவும் அது உங்களுக்கு உதவும். ஆம், ஆதாரங்களின் அடிப்படையில் நம்புவதுதான் உண்மையான விசுவாசம். (எபிரெயர் 11:1) கடவுளைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொண்டால், அவரைத் தெரிந்துகொள்ளவும், நண்பரைப் போல அவரிடம் பேசவும் முடியும். கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் இருந்தும் தவறாமல் ஜெபம் செய்தவர்களின் அனுபவங்களை இப்போது பார்க்கலாம்.
◼ முதல் கட்டுரையில் பார்த்த பெட்ரிஷியா: “ஒருநாள், ஃப்ரெண்ட்ஸ் பத்து பேர் சேர்ந்து மதத்தை பற்றி பேசிட்டிருந்தோம். கடவுள் நம்பிக்கையில்லாத என் அப்பாவும் யெகோவாவின் சாட்சிகளும் எங்க வீட்ல பேசிட்டு இருந்தத பற்றி அவங்க கிட்ட சொன்னேன். அதுல இருந்து தப்பிச்சி இங்க வந்துட்டேனு சொன்னேன். ‘யெகோவாவின் சாட்சிகள் பேசுறதுல ஏதாவது விஷயம் இருக்கும்’னு ஒரு ஃப்ரெண்ட் சொன்னான்.
“ ‘அவங்க கூட்டங்களுக்கு போய் பார்க்கலாமே’னு ஒருத்தி சொன்னா. சரின்னு போனோம். அங்க சொன்ன விஷயங்கள் சந்தேகமாவே இருந்தாலும், சாட்சிகள் ரொம்ப அன்பா நடந்துகிட்டதுனால, நாங்க சில பேர் ஒழுங்கா கூட்டங்களுக்கு போனோம்.
“ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் கேட்ட விஷயம் என்னை மாத்திடுச்சி. மக்கள் ஏன் கஷ்டப்படுறாங்கனு பேச்சு கொடுத்தவர் விளக்கினார். மனுஷன எந்த குறையுமில்லாமதான் கடவுள் உண்டாக்கினார். ஆனா ஒரு மனுஷனால எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்ததுங்கற விஷயம் முன்னாடி எனக்கு தெரியாது. மனுஷன் இழந்தத திரும்ப பெற இயேசு சாக வேண்டியிருந்ததுனு பேச்சு கொடுத்தவர் சொன்னார்.a (ரோமர் 5:12, 18, 19) அப்போதான் எனக்கு எல்லாமே புரிஞ்சிது. ‘நம்ம மேல அக்கறையுள்ள கடவுள் உண்மையிலேயே இருக்கிறார்’னு நம்பினேன். பைபிளை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். வாழ்க்கையில முதல் தடவையா நிஜமான ஒருத்தர்கிட்ட ஜெபம் செய்ற மாதிரி இருந்திச்சி.”
◼ முதல் கட்டுரையில் பார்த்த ஆலன்: “ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் எங்க வீட்டுக்கு வந்தாங்க. இந்த பூமியில சாகாம வாழ்வோம்னு அவங்க சொன்னது என் மனைவிக்கு பிடிச்சிது. அதனால அவங்கள வீட்டுக்குள்ள கூப்பிட்டா. எனக்கு வந்திச்சே கோபம், அவங்கள உட்கார வச்சிட்டு, என் மனைவியை சமையற்கட்டுக்கு கூட்டிட்டுபோய், ‘முட்டாள் மாதிரி அவங்க சொல்றதெல்லாம் நம்பிட்டு இருக்காத’னு திட்டினேன்.
“ ‘அப்போ நீங்களே அவங்ககிட்ட பேசி அவங்க சொல்றது பொய்னு நிரூபிங்க’னு சொன்னா.
“போய் பேசினேன், என்னால முடியல. ஆனா, அவங்க ரொம்ப அன்பா நடந்துகிட்டாங்க. உயிர் எப்படி வந்திச்சி படைப்பினாலா பரிணாமத்தினாலா-ன்ற ஒரு புத்தகத்தையும் கொடுத்தாங்க. அதுல இருந்த விஷயங்கள் எல்லாமே நியாயமா இருந்தது, கடவுளப் பற்றி நான் இன்னும் தெரிஞ்சிக்கணும்னு முடிவெடுத்தேன். சாட்சிகளோட பைபிள் படிக்க ஆரம்பிச்சேன். மதத்தை பற்றி நான் நெனச்சதுக்கும் பைபிள் சொல்றதுக்கும் இருந்த வித்தியாசத்தை புரிஞ்சிகிட்டேன். யெகோவாவைப் பற்றி தெரிஞ்சிகிட்டதுமே அவர் பெயரை சொல்லி ஜெபம் செஞ்சேன். எனக்கு சில கெட்ட குணங்கள் இருந்தது. அதை மாற்ற உதவி கேட்டு ஜெபம் செஞ்சேன். யெகோவா என் ஜெபத்துக்கு பதில் கொடுத்தாங்க.”
◼ இங்கிலாந்தில் வசிக்கும் ஆண்ட்ரூ: “அறிவியலை நான் முழுசா நம்பினேன். அதுல எனக்கு ஆர்வமும் ஜாஸ்தி. மற்றவங்க சொன்னதுனால பரிணாமம் உண்மைனு நம்பினேன். உலகத்தில நிறைய கெட்ட காரியங்கள் நடக்கிறதுனால கடவுளை அறவே நம்பல.
“சில நேரம், இப்படி யோசிப்பேன்: ‘ஏன் இவ்வளவு கொலை, கொள்ளை, போர் எல்லாம் நடக்குது? கடவுள் ஒருத்தர் பார்த்துட்டு இருந்தா, ஏன் இதையெல்லாம் தடுக்கல?’ கஷ்டம் வரும்போது சில சமயம் உதவி கேட்டு ஜெபம் செஞ்சிருக்கேன். ஆனா யார்கிட்ட பேசுறேன்னே தெரியாது.
“யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை யாரோ என் மனைவிக்குக் கொடுத்திருக்காங்க. அதே கேள்வி அடிக்கடி என் மனசுலையும் வந்திருக்கு. அந்த துண்டுப்பிரதிய படிச்சதும், ‘பைபிள் சொல்ற விஷயங்கள் சரியாதான் இருக்குமோ?’னு யோசிச்சேன். அப்பறம் ஒருநாள் விடுமுறையில இருந்தப்போ, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை ஒருத்தர் கொடுத்தார். உண்மையான அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகுதுனு புரிஞ்சதும் பைபிள இன்னும் படிக்கணும்னு மனசு சொல்லிச்சி. ஒரு யெகோவாவின் சாட்சி பைபிள் படிப்பைப் பற்றி சொன்னதும், உடனே ஒத்துக்கிட்டேன். யெகோவாவுடைய நோக்கத்தையெல்லாம் புரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம், மனசுவிட்டு ஜெபம் செய்றதுக்கு ஒரு நிஜ நபர் இருக்கிறார்னு சந்தோஷப்பட்டேன்.”
◼ லண்டனில் புராட்டஸ்டன்டாக வளர்க்கப்பட்ட, ஜேன்: “மதங்கள்ல நடக்கிற மாய்மாலங்களும், மக்கள் படும் கஷ்டங்களையும் பார்த்து மதத்தை விட்டு வெளிய வந்துட்டேன். கல்லூரி படிப்பையும் விட்டுட்டு பணத்துக்காக பாட்டு பாடவும் கிட்டார் வாசிக்கவும் ஆரம்பிச்சேன். அப்போதான் பேட் என்பவரை சந்திச்சேன். அவர் கத்தோலிக்கர், என்ன மாதிரியே மதத்தைவிட்டு வெளியே வந்தவர்.
“பாழடைந்த ஒரு வீட்டுல எங்கள மாதிரி படிப்பை பாதியில விட்ட சிலரோட தங்கியிருந்தோம். அவங்க எல்லாருக்கும் கிழக்கத்திய மதங்கள்ல ஆர்வம் இருந்தது. நாம எதுக்காக வாழ்றோங்கறத பற்றி விடிய விடிய பேசுவோம். எனக்கும் பேட்டுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா ஏதோ ஒரு ‘சக்தி’ இருக்கும்னு நம்பினோம்.
“பாடகர் ஆகலாம்னு வட இங்கிலாந்துக்கு போனோம். அப்போதான் எங்களுக்கு பையன் பிறந்தான். ஒருநாள் ராத்திரி அவனுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சி, கடவுளையே நம்பாத நான் ஜெபம் செஞ்சேன். கொஞ்ச நாள்ல எனக்கும் பேட்டும் தகராறு வந்து பிரிஞ்சிட்டோம். நான் குழந்தைய தூக்கிட்டு தனியா போயிட்டேன். அப்பவும், யாராவது என் ஜெபத்தை கேட்கமாட்டாங்களாங்ற நம்பிக்கையில ஜெபம் செஞ்சேன். பேட்டும் அததான் செஞ்சிட்டு இருந்திருக்காரு, எனக்கு அது தெரியாது.
“அதே நாள் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் பேட் இருந்த வீட்டு கதவை தட்டிருக்காங்க. பைபிள்ல இருந்து சில நல்ல விஷயங்கள சொல்லிருக்காங்க. பேட் எனக்கு ஃபோன் செய்து, ‘இரண்டுபேரும் சேர்ந்து யெகோவாவின் சாட்சிகள்கிட்ட பைபிள் படிக்கலாமா’னு கேட்டார். படிக்க ஆரம்பிச்சதும், கடவுளுக்கு பிடிச்ச மாதிரி வாழ எங்க கல்யாணத்தை சட்டப்படி பதிவு செய்யணும்னு தெரிஞ்சிகிட்டோம். நாங்க இருந்த சூழ்நிலைல இதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு நினைச்சோம்.
“பைபிள் தீர்க்கதரிசனங்களோட நிறைவேற்றத்தை பற்றி, துன்பத்துக்கான காரணத்தை பற்றி, கடவுளோட அரசாங்கத்தை பற்றி எல்லாம் தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தோம். கடவுள் நம்ம மேல அக்கறையா இருக்கிறார்னு எப்போ தெரிஞ்சிகிட்டோமோ, அப்பவே அவருக்கு பிடிச்ச மாதிரி நடக்க தீர்மானிச்சோம். சட்டப்படி கல்யாணம் செஞ்சிகிட்டோம். எங்க மூன்று பிள்ளைகளையும் நல்லபடியா வளர்க்க கடவுளுடைய வார்த்தை கைகொடுத்திச்சி. யெகோவா எங்க ஜெபத்தையெல்லாம் கேட்டார்னு எங்களால அடிச்சி சொல்ல முடியும்.”
நீங்களும் ஆராய்ந்து பாருங்கள்
இவர்களைப் போல லட்சக்கணக்கானோர், மதங்கள் செய்யும் பித்தலாட்டத்தை கண்ணாரக் கண்டிருக்கிறார்கள்... கடவுள் ஏன் கஷ்டத்தை விட்டு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். இந்த அனுபவங்களில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? பைபிளை ஆராய்ந்து படித்ததால்தான் யெகோவா ஜெபத்தைக் கேட்கிறார் என்பதை தெரிந்துகொண்டார்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்க்க நீங்களும் விரும்புகிறீர்களா? ‘ஜெபத்தைக் கேட்பவரான’ யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவருடைய நண்பராகவும் உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் தயாராயிருக்கிறார்கள்.—சங்கீதம் 65:2. (w12-E 07/01)
[அடிக்குறிப்பு]
a இயேசுவின் மீட்கும் பலியின் மதிப்பைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது புத்தகம் அதிகாரம் 5-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
“யெகோவாவுடைய நோக்கத்தையெல்லாம் புரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம், மனம்விட்டு ஜெபம் செய்றதுக்கு ஒரு நிஜ நபர் இருக்கிறார்னு சந்தோஷப்பட்டேன்”
[பக்கம் 9-ன் படம்]
ஆதாரங்களை வைத்து நம்புவதும் கடவுளைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வதும்தான் உண்மையான விசுவாசம்