ஜெபத்தைக் கேட்பவர் யார்?
ஜெபத்தைக் கேட்பவர் இருக்கிறார் என்றால் அவர் படைப்பாளராகத்தான் இருக்க வேண்டும். நம் மூளையை உண்டாக்கியவரைத் தவிர வேறு யாரால் நம் எண்ணங்களைத் தெரிந்துகொள்ள முடியும்? மனிதர் செய்யும் ஜெபங்களைக் கேட்கவும் அவர்களுக்கு உதவவும் வேறு யாரால் முடியும்? இருந்தாலும் நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘படைப்பாளர் இருக்கிறார் என நம்புவது நியாயமானதா?’
நவீன விஞ்ஞானம் சாதித்தவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்தால்தான் படைப்பாளர் இருப்பதை நம்ப முடியும் என பலர் நினைக்கிறார்கள். அறிவியலும் கடவுள் நம்பிக்கையும் இரு துருவங்கள் என்று நினைப்பது தவறு. பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்.
◼ அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற 21 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1,646 அறிவியல் பேராசிரியர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. மூன்றில் ஒருவர்தான் “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” என்று சொன்னார்.
விஞ்ஞானிகள் நிறைய பேர் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள் என்று இது காட்டுகிறது.
படைப்பாளர் இருப்பதற்கு அத்தாட்சி
ஜெபத்தைக் கேட்கிறவர் இருக்கிறார் என கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா? இல்லவே இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் நம்புவதுதான் விசுவாசம் என சொல்வது முட்டாள்தனம். விசுவாசம் என்பது, “பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்” என்று பைபிள் விளக்குகிறது. (எபிரெயர் 11:1) உதாரணமாக, செல் ஃபோன் மூலம் நாம் சொல்லும் செய்தியை ஒலி அலைகள் மற்றொருவருக்கு கொண்டு சேர்க்கிறது. அந்த அலைகளை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் அவை இருப்பதை நம்புகிறோம். அதைப்போல், ஜெபத்தைக் கேட்பவரைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர் இருப்பதை நம்புவதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன.
கடவுள் இருப்பதற்கான அத்தாட்சிகளை எங்கே பார்க்கலாம்? நம்மை சுற்றித்தான். பைபிள் இப்படி விளக்குகிறது: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபிரெயர் 3:4) இதன் கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கு... உயிரின் தொடக்கம்... பூமியிலேயே மிக சிக்கலான வடிவமைப்பான மனித மூளை... இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது மனிதர்களைவிட மேலான ஒருவர் நிச்சயம் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்! a
இயற்கையிலிருந்து கடவுளைப் பற்றி ஓரளவுக்குத்தான் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, பூட்டியிருக்கும் கதவை நோக்கி யாரோ ஒருவர் நடந்து வரும்போது அவருடைய காலடி சத்தம் மட்டும்தான் கேட்கும். அவர் யாரென தெரிந்துகொள்ள கதவைத் திறக்க வேண்டும். அதேபோல், கடவுள் இருப்பதற்கான அத்தாட்சிகளைப் படைப்பில் பார்த்தால் மட்டும் போதாது அவர் யாரென்று தெரிந்துகொள்ள ஒரு கதவைத் திறக்க வேண்டும்.
அந்தக் கதவுதான் பைபிள். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அது உதவும். பைபிளைத் திறந்து அதிலுள்ள நுணுக்கமான தீர்க்கதரிசனங்களையும் அதன் நிறைவேற்றங்களையும் படித்தால் கடவுள் இருப்பதற்கான அத்தாட்சி தெளிவாகத் தெரியும்.b அதோடு, மக்களிடம் அவர் நடந்துகொண்ட விதத்தைக் கவனித்தால் ஜெபத்தைக் கேட்பவரின் சுபாவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
ஜெபத்தைக் கேட்பவர் எப்படிப்பட்டவர்?
நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அவரை நிஜ நபராக பைபிள் அடையாளம் காட்டுகிறது. ஆம், ஒரு நபரால்தான் கவனித்துக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். “ஜெபத்தைக் கேட்கிறவரே, . . . யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” என்ற வார்த்தைகள் எவ்வளவு நம்பிக்கையளிக்கின்றன! (சங்கீதம் 65:2) விசுவாசத்தோடு செய்யும் ஜெபங்களை அவர் கேட்கிறார். அவருக்கு ஒரு பெயர் இருக்கிறது.c நீதிமான்கள் செய்கிற ஜெபத்தை யெகோவா ‘கேட்கிறார், ஆனால் துன்மார்க்கருக்கு அவர் தூரமாயிருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 15:29.
யெகோவா உணர்ச்சிகள் உள்ளவர். அவர் ‘அன்புள்ள கடவுள்,’ “சந்தோஷமுள்ள கடவுள்.” (2 கொரிந்தியர் 13:11; 1 தீமோத்தேயு 1:11) இந்த உலகில் அக்கிரமம் தலைவிரித்தாடிய சமயத்தில் அது “அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:5, 6) மக்களைச் சோதிப்பதற்காகத்தான் கடவுள் துன்பத்தைக் கொடுக்கிறார் என்ற கருத்து முற்றிலும் பொய். ‘அக்கிரமம் தேவனுக்கு தூரமாயிருக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது. (யோபு 34:10) சரி, ‘கடவுள் எல்லாவற்றையும் படைத்த சர்வவல்லவர் என்றால் ஏன் துன்பத்தை இன்னும் விட்டுவைத்திருக்கிறார்?’
சுயமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். அதை மனிதர்களுக்குக் கொடுத்திருப்பதே அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்பதற்குக் கடவுள் கொடுத்திருக்கும் இந்தச் சுதந்திரத்தை நாம் எவ்வளவு பெரிய பொக்கிஷமாக நினைக்க வேண்டும்? வருத்தகரமாக நிறைய பேர் இந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தை உண்டாக்குகிறார்கள். இப்போது கேள்வி என்னவென்றால்: மனிதர்களின் சுதந்திரத்தைப் பறிக்காமலே கடவுள் எப்படித் துன்பத்தைத் துடைத்தழிப்பார்? இதற்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (w12-E 07/01)
[அடிக்குறிப்புகள்]
a கடவுள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b பைபிள் கடவுள் கொடுத்த புத்தகம் என்பதற்கான ஆதாரங்களுக்கு, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
c பைபிளில் கடவுளின் பெயர் யெகோவா. சங்கீதம் 68:4-ல் இதைக் காணலாம்.
[பக்கம் 5-ன் பெட்டி]
சந்தேகத்திற்குக் காரணம் மதமா?
ஜெபத்தைக் கேட்க கரிசனையுள்ள ஒருவர் இருக்கிறாரா என்று பலர் சந்தேகிப்பதற்கு மதங்கள் காரணமாக இருப்பதுதான் வருத்தமான விஷயம். போருக்கும் தீவிரவாதத்திற்கும் மதங்கள் துணைபோவதையும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தட்டி கேட்காமல் இருப்பதையும் பார்த்து, ஜெபம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள்கூட “எனக்கு கடவுள்மேல் நம்பிக்கை இல்லை” என்று சொல்கிறார்கள்.
மதங்கள் தீமைக்குத் தூபம்போடுவது ஏன்? உண்மையில் கெட்டவர்கள்தான் மதத்தின் பெயரில் கெட்ட காரியங்களைச் செய்துவருகிறார்கள். கிறிஸ்தவத்திற்குள்ளேயே பைபிளுக்கு முரணான காரியங்கள் நடக்கும் என முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ கண்காணிகளுக்கு இப்படிச் சொன்னார்: “உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்.”—அப்போஸ்தலர் 20:29, 30.
பொய் மதங்களைக் கடவுள் அறவே வெறுக்கிறார். ‘பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தத்திற்கும்’ பொய் மதம் காரணமாயிருக்கிறதென பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 18:24) அன்பே உருவான உண்மைக் கடவுளைப் பற்றி மக்களுக்குச் சொல்லிக்கொடுக்காததால், பொய் மதங்கள் கடவுளுக்கு முன் இரத்தப்பழியுடன் நிற்கின்றன.—1 யோவான் 4:8.
கொடுங்கோன்மையான இந்த மதங்களின் பிடியில் சிக்கியவர்களை நினைத்து, ஜெபத்தைக் கேட்பவர் வருத்தப்படுகிறார். மனிதர்கள்மேல் அவருக்கு அன்பு இருப்பதால், சீக்கிரத்தில் மத பாசாங்குக்காரர்களை இயேசுவின் மூலம் நியாயந்தீர்ப்பார். இயேசு சொன்னார்: “அந்நாளில் பலர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா, . . . என்பார்கள்; ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.”—மத்தேயு 7:22, 23.