உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 23-25
  • நீங்களே முளைகட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்களே முளைகட்டுங்கள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தயாரித்தல்
  • நீங்களே முளைகட்டுவது
  • முளைகட்டியவற்றை எப்படி பரிமாறுவது
  • விதைகள் வளர தண்ணீர் ஊற்ற வேண்டும்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • மாரிக்கால மழை பாலைவன பூக்களை வருவிக்கிறது—தாவர நீர் தேக்கத் தொட்டிகளை மீண்டும் நிரப்புகிறது
    விழித்தெழு!—1988
  • உயிரினங்களின் வியப்பூட்டும் வடிவமைப்பு
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • ராஜ்ய சத்தியத்தின் விதைகளை விதைத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 23-25

நீங்களே முளைகட்டுங்கள்

ஹவாயிலிருந்து விழித்தெழு! நிருபர்

புதிய, நறுக்நறுக்கென்ற, ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளுக்காக உள்ளூர் சந்தையில் தேடியலைந்து சிலசமயங்களில் கிடைக்காமல் இருந்திருக்கிறதா? அப்படியானால், இனிமேல் தேடாதீர்கள்! குறைந்த நேரத்திலும் முயற்சியிலும், உங்கள் வீட்டிலோ அடுக்குமாடியிலோகூட, நீங்கள் உண்மையிலேயே காய்கறிளை விளைவிக்கலாம். எப்படி? முளைகட்டுவதன் மூலமாக!

ஒரு சிறுபிள்ளைகூட செய்துவிடும் அளவுக்கு எளிதில் முளை கட்டப்படலாம். அவற்றிற்கு குறைந்த இடவசதியே போதும். குழிதோண்ட வேண்டிய அவசியமில்லை, களை பிடுங்க வேண்டிய அவசியமில்லை, சிக்கலான வேதிப்பொருட்களை வைத்து அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும்விட, உங்கள் விளைபொருள் முளைக்க ஆரம்பித்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு அதைச் சாப்பிட்டுவிடலாம்! ஆனால் அதனால் வரும் நன்மையோ, வசதியைக் காட்டிலும் மிக அதிகம்.

ஒரு விஷயம், முளைகட்டியவை ஊட்டச்சத்து மிக்கவை—ஒருவேளை சாதாரண பயறுவகைகள் அல்லது விதைகளைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிக்கவையாக இருக்கலாம். “விதைகள் முளைக்க ஆரம்பிக்கையில், அவற்றிலுள்ள வைட்டமின் சத்தும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சோயா மொச்சைகளின் ஆரம்ப முளைகளில் (100 கிராம் [சுமார் 4 அவுன்சு] விதையில்) 108 மில்லிகிராம் வைட்டமின்-சி மட்டுமே இருந்தது. ஆனால் 72 மணிநேரத்தில் வைட்டமின்-சி 706 மில்லிகிராமாக அதிகரித்திருந்தது!” என்று கே கோர்ட்டரால் எழுதப்பட்ட முளைகட்டிய பயறு புத்தகம் (ஆங்கிலம்) கூறுகிறது.

முளைகட்டிய பயறுகள் சிக்கனமானவையும்கூட. உண்மையில், உங்களுக்குத் தேவைப்படும் எல்லா சாதனங்களும் ஏற்கெனவே உங்களிடம் இருக்கலாம்.

தயாரித்தல்

முதலில், உங்களுக்கு ஒரு பாத்திரம் தேவை. ஒரு பெரிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜாடி, உலோகத்தால் செய்யப்படாத ஒரு சட்டி, கண்ணாடியாலான அல்லது மட்பாண்டத்தால் செய்யப்பட்ட கும்பா, அல்லது ஒரு குழிவான பாத்திரம் போதும். காய்ந்துவிடாதபடி இருக்க, இரண்டு அடுக்கு ஈரமான சல்லடைத்துணி அல்லது பேப்பர் டவல்களுக்கு இடையில், ஓர் அடுக்கு தானியத்தைப் பரப்புவதற்கு, குழிவற்ற ஒரு தட்டைப் பயன்படுத்தியும்கூட செய்ய முடியும். நீங்கள் எப்படிப்பட்ட பாத்திரத்தைத் தெரிவுசெய்தாலும், அந்தத் தானியங்கள் முளைப்பதை அனுமதிக்குமாறும், சுற்றிலும் கொஞ்சம் காற்றோட்டம் இருக்குமாறும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். மணப்புல்வகை (alfalfa) போன்ற மிகச்சிறிய தானியங்களுக்கு ஒரு கண்ணாடி ஜாடியே போதுமானதாக நான் கண்டிருக்கிறேன். பாசிப்பயறு போன்ற பெரிய தானியங்களுக்கு குழிவான தட்டு அல்லது சட்டி நல்லதாய் இருக்கலாம். இது, அவற்றுக்கு வேண்டிய அதிகப்படியான இடவசதியை அளிக்கிறது. முளைகள் அழுகிவிடாமலோ அல்லது புளிப்பேறிவிடாமலோ காக்கவும் செய்கிறது.

உங்கள் பாத்திரத்திற்கு ஒரு மூடியும் தேவை. துளையிடப்பட்ட ஒரு பிளாஸ்டிக் தட்டு, ஒரு துண்டு சல்லடைத் துணி, அல்லது பழைய நைலான் சாக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று போதும். இனி தேவைப்படுவது, அந்தப் பாத்திரத்தின் வாய்பாகத்தில் இந்த மூடியை வைத்து மூடுவதற்காக ஓர் உறுதியான ரப்பர் பேண்ட், அல்லது ஒரு நூல் மட்டுமே. அத் தானியங்களை ஒரு நாளுக்கு இரண்டு தடவையாவது கழுவ வேண்டும் என்பதால், தண்ணீரும் தேவை. அதோடு, பாத்திரத்திலுள்ளவற்றை வடிக்க வேண்டியதிருப்பதால் ஒரு வடிபாத்திரமும் தேவை.

முடிவாக, உங்களுக்குத் தானியங்கள் தேவை. கிட்டத்தட்ட உணவுக்குப் பயன்படுத்தப்படும் எல்லா வகை தானியமுமே முளைகட்டப்படலாம். (என்றாலும், வேதிப்பொருட்களால் வேதிமாற்றம் செய்யப்பட்ட தானியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நான் கவனமாய் இருக்கிறேன்.) முதன்முதலாக செய்துபார்க்க விரும்புவோருக்கு, பாசிப்பயறு அல்லது மணப்புல்வகை தானியங்கள் மிகச் சிறந்தவை. அவற்றை முளைகட்டுவது எளிது, மேலும் அவை ருசிமிக்கவை! இப்போது, இது எப்படி செய்யப்படுகிறது என்று நான் சொல்கிறேன்.

நீங்களே முளைகட்டுவது

முதல் நாள்: முதலில், தானியங்களைக் கவனமாக அலசுங்கள். பிறகு, உங்கள் பாத்திரத்தில் தானியங்களையோ பயறு வகைகளையோ இட்டு, அதற்கு மேல் சுமார் ஐந்து சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிற்கும்படி நிரப்புங்கள். எட்டு முதல் பத்து மணிநேரமாவது தானியங்களை ஊறவையுங்கள். நீங்கள் படுக்கச் செல்லும் முன்பு தானியங்களை ஊறவைக்கலாம். எட்டு முதல் பத்து மணிநேரத்துக்குப் பிறகு, தானியங்கள் புடைக்கும், அதோடு அவற்றின் தோல்களும் லேசாக உறிந்துவரும். அவை முளைவிடுவதற்குத் தயார்.

இரண்டாம் நாள்: காலையில், மூடியைத் திறந்து, பாத்திரத்திலிருந்து தண்ணீரை வடித்துவிடுங்கள். (அந்தத் தண்ணீரில் வைட்டமின்கள் இருப்பதால், நான் பொதுவாக என் செடிகளுக்கு அதை ஊற்றிக்கொள்கிறேன்.) இப்போது, மறுபடியும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். ஒருசில தடவை குலுக்குங்கள். பிறகு தலைகீழாக வைத்து, அதிகப்படியான தண்ணீர் வடியும்படி செய்யுங்கள். மீண்டும்மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கழுவுவதும் தண்ணீரை வடிப்பதுமாக மொத்தம் மூன்று தடவை அவ்வாறு செய்யுங்கள். ஊறிய தானியங்களைக் குழிவற்ற ஒரு பாத்திரத்தில் நீங்கள் மாற்றியிருந்தால், சல்லடைத்துணிக்கு மேல், மெதுவாக தண்ணீரை ஊற்றி, பிறகு அந்தப் பாத்திரத்தைச் சரித்து வைத்து தண்ணீரை வடியுங்கள். பிறகு, ஒரு நாளுக்கு இரண்டு தடவையாவது தானியத்தைக் கழுவுவதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

மூன்றாம் நாள்: இப்போதைக்குள், உங்கள் தானியத்திலிருந்து முளை வருவதை உங்களால் பார்க்க முடிய வேண்டும். தொடர்ந்து ஒரு நாளுக்கு இரண்டு தடவை கழுவுங்கள்.

நான்காம் நாள்: முளைகட்டிய தானியத்தை நீங்கள் உண்ண ஆரம்பிக்கலாம்! பாசிப்பயற்றின் முளையை பெரிதாக வரும்வரையிலும் வளரவிடலாம். அதில் கசப்புச்சுவை ஏறாது. ஒரு நாளுக்கு இரண்டு தடவை தொடர்ந்து அதைக் கழுவிவருகிறீர்களா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். முளைவந்த பயற்றை வெயிலில் சுமார் ஒரு மணிநேரம் வைத்து அதன் பிறகு பிரிஜ்ஜில் வைக்கலாம். அப்போது அதன் சிறிய இலைகள் ஓர் அழகிய பச்சை நிறத்தில் மாறும்—தின்னத் தூண்டுபவையாய் இருக்கும்!

இதைச் செய்துபார்த்துப் பழகிய பிறகு, வேறு தானியங்கள் அல்லது பயறுவகைகளை வைத்துச் செய்துபார்க்கலாம். சுவையிலும் முளைவிடுவதற்குத் தேவையான சமயத்திலும் ஒவ்வொன்றுக்கும் இடையில் கொஞ்சமே வித்தியாசம் இருக்கும். உதாரணமாக, தோல் நீக்கிய சூரியகாந்தி விதைகளை நீங்கள் முளைகட்டிப் பார்க்கலாம். இதில் அரை அங்குல நீளம் அளவுக்கு முளைகள் வந்தவுடனே, அதாவது இரண்டே நாட்களில் உண்டுவிட வேண்டும். அவை அதற்கு மேல் வளர்ந்தால் அவற்றில் ஒருவித கசப்புச் சுவை ஏறலாம்.

முளைகட்டியவற்றை எப்படி பரிமாறுவது

பெரும்பாலான முளைகள் பச்சையாக சாலடுகளில், சாண்ட்விச்சுகளில் உண்ணப்படலாம். அல்லது பயறுகளோ தானியங்களோ பயன்படுத்தப்படும் மற்ற பதார்த்தங்களாகத் தயாரித்து உண்ணப்படலாம். என்றாலும் முளைவந்த அவரையை 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து அதற்குப் பிறகு உண்ணலாம். அல்லது சிறிது எண்ணெய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்துக் கிளறலாம். இது மிக ருசியான பதார்த்தம்! முளை கட்டிய கோதுமை மற்றும் ரை மிகவும் இனிப்பாய் இருப்பதால் அவற்றை ரொட்டிகள், சூட்டடுப்பில் செய்த பணியாரங்கள் (muffins) ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இவ்வாறு முளைகட்டுவது ஆரோக்கியமானதும் சிக்கனமானதுமான ஒரு பழக்கம். அவ்வாறு செய்வதைக் கிளர்ச்சியூட்டுவதாயும் பலனுள்ளதாயும் நீங்கள் நன்றாகவே காண்பீர்கள். மொத்தத்தில் வெற்றிவீதம் அதிகம், அதன் பலன்களோ ருசிமிக்கவை!

[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]

ஜப்பானிய ஸ்டென்ஸில் வடிவமைப்பு

[பக்கம் 24-ன் படம்]

முதல் நாள்: தானியங்களைச் சேகரித்து தண்ணீரில் எட்டு முதல் பத்து மணிநேரம் ஊறவையுங்கள்

[பக்கம் 24, 25-ன் படம்]

இரண்டாம் மூன்றாம் நாட்கள்: ஒரு நாளுக்கு இரண்டு தடவை தானியங்களை நன்றாக கழுவுங்கள்

[பக்கம் 25-ன் படம்]

நான்காம் நாள்: முளைகள் (பக்கவாட்டில் இங்கு காணப்படுகிறது, சல்லடைத்துணிக்கு மேல் உள்ளது) உண்பதற்குத் தயார்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்