விதைகள் வளர தண்ணீர் ஊற்ற வேண்டும்
1. நாம் எதை நீரூற்றி வளர்க்க வேண்டும்?
1 தோட்டத்தில் விதைகளை விதைத்த பிறகு அவை வளருவதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல் நம்முடைய பிராந்தியத்தில் உள்ள மக்களின் இருதயத்தில் நாம் விதைத்த சத்திய விதையை வளர்க்க வேண்டும். (1 கொ. 3:6) அந்தச் சத்திய விதை வேரூன்றி, செழித்து வளர வேண்டுமானால் நாம் மீண்டும் அவர்களைச் சந்தித்து கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி நீரூற்ற வேண்டும்.
2. மறுசந்திப்பிற்கு எது நல்ல அடித்தளமாக இருக்கும்?
2 ஒரு கேள்வி கேளுங்கள்: ஊழியத்தில் பேசுவதற்காக நீங்கள் தயாரிக்கும்போது வீட்டுக்காரரிடம் கடைசியில் கேட்பதற்காக ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியையும் தயாரியுங்கள். மறுசந்திப்பு செய்வதற்கு அது நல்ல அடித்தளமாக இருக்கும். வீட்டுக்காரரிடம் கடைசியாக அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் எப்போது சந்திக்கலாம் எனக் கேளுங்கள். அநேக பிரஸ்தாபிகள் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து ஏதாவதொரு கேள்வியைக் கேட்கிறார்கள். மறுசந்திப்பு செய்யும்போது அந்தக் கேள்விக்கு அந்தப் புத்தகத்திலிருந்து பதிலளித்து ஒரு பைபிள் படிப்பை நடத்திக் காட்டுகிறார்கள்.
3. என்னென்ன விவரங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்?
3 எழுதி வையுங்கள்: வீட்டுக்காரரிடம் பேசி முடித்தவுடனேயே அவரைப் பற்றிய விவரங்களை எழுதுங்கள். அவருடைய பெயரையும் விலாசத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். அவரிடம் பேசிய நேரம், தேதி, விஷயம், கொடுத்த பிரசுரம் போன்றவற்றை எழுதிக்கொள்ளுங்கள். அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொன்னாரா? குடும்பஸ்தரா? அவர் எந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார்? இதையெல்லாம் எழுதி வைத்தால் அதற்கு ஏற்றாற்போல மறுசந்திப்புக்குத் தயாரிக்கலாம். அவரிடம் கேட்ட கேள்வியையும், மறுசந்திப்புக்கான நேரத்தையும்கூட எழுதிக்கொள்ளுங்கள்.
4. ஆர்வமுள்ளவர்களைச் சந்திக்க நாம் ஏன் விடாமுயற்சியோடு இருக்க வேண்டும்?
4 விடாமுயற்சியோடு இருங்கள்: ஒருவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்ட ‘செய்தியை எடுத்துப்போட’ சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். (மாற். 4:14, 15) எனவே, ஆர்வம் காட்டும் நபர்கள் வீட்டில் இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு திரும்பவும் போய்ப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம் அல்லது அவர்கள் வீட்டுக் கதவருகே ஒரு சிறு குறிப்பை எழுதிவைத்துவிட்டு வரலாம். ஒரு பயனியர் சகோதரி ஒரு பெண்மணிக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். ஆனால், அவரை மீண்டும் சந்திக்க முடியவில்லை. எனவே, ஒரு கடிதம் எழுதினார். சில நாட்களுக்குப் பிறகு அவரை வீட்டில் சந்திக்க முடிந்தது. தன்னிடம் அந்த பயனியர் காட்டிய அக்கறையினால் அந்தப் பெண்மணி நெகிழ்ந்து போனார். சத்திய விதைகளை விதைத்து நீரூற்றினால்தான் அவை வளர்ந்து பெரிதாகி ‘முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் பலன் கொடுக்கும்.’ அதைப் பார்க்கும்போது நாம் அளவில்லா ஆனந்தமடைவோம்.—மாற். 4:20.