இளைஞர் கேட்கின்றனர்
நான் எப்படி கடவுளுடைய நண்பராக முடியும்?
“உண்மைப்பற்றுறுதி.” “தனிப்பட்ட ஈடுபாடு.” மிக நெருங்கிய நண்பர்களுடனுள்ள தங்கள் பிணைப்பை விவரிக்க இந்த வார்த்தைகளைத்தான் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இந்த வியப்பூட்டும் அண்டத்தின் மகத்தான படைப்பாளருடனுள்ள ஒரு பிணைப்பையும்—அதாவது, கடவுள் தாமே உங்களுடைய தனிப்பட்ட நண்பராக இருக்க முடியும் என்பதையும்—இந்த வார்த்தைகள் விவரிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா? ஆம், தேவபக்தி உடையவர்களாய் இருப்பதைக் குறித்து பைபிள் பேசுகிறது; அந்தப் பதம் கீழ்ப்படிதலை மட்டுமல்லாமல், கடவுளுடன் ஒரு தனிப்பட்ட பிணைப்பை, போற்றுதலுள்ள இதயத்திலிருந்து பெருக்கெடுக்கும் ஒரு நெருக்கத்தையும் உள்ளடக்குகிறது.
அப்பேர்ப்பட்ட ஒரு பிணைப்பு சாத்தியமானதும் பயனுள்ளதுமாய் இருக்கிறது என்று இந்தத் தொடரின் முந்தின கட்டுரைகள் காண்பித்திருக்கின்றன. a ஆனால் கடவுளிடம் இந்தத் தனிப்பட்ட நட்பைப் பெறுவதுதான் எப்படி? அது பிறப்பிலே உள்ளதாகவோ, தேவபக்தியுள்ள பெற்றோரிடமிருந்து தானாகவே கடத்தப்பட்ட ஒன்றாகவோ இல்லை. மாறாக, அது உண்மையான முயற்சியின் மூலமாகவே வரும் ஒன்று. ‘தேவபக்திக்கேதுவாக தன்னைப் பயிற்றுவிக்கும்படி’ அப்போஸ்தலன் பவுல், இளம் மனிதனாகிய தீமோத்தேயுவிடம் கூறினார். ஆம், ஒரு விளையாட்டு வீரரைப்போல பயிற்றுவிப்புக்காக அவர் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது! (1 தீமோத்தேயு 4:7, 8, 10, NW) கடவுள் உங்களுடைய நண்பராக வேண்டுமானால், நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டும். ஆனால் இதன் சம்பந்தமாக பயிற்சியை நீங்கள் எப்படித் தொடங்கலாம்?
கடவுளைப்பற்றிய தனிப்பட்ட அறிவு
தேவபக்தி இருதயத்திலிருந்து வருவதால், உங்கள் இருதயத்தை தேவனைப்பற்றிய அறிவால் நிரப்ப வேண்டும். “தனிமையில் பைபிளை எவ்வளவு அடிக்கடி வாசிக்கிறீர்கள்?” என்று 500-க்கும் அதிகமான இளைஞரிடம் கேட்கப்பட்டபோது, 87 சதவீதமானோர் “எப்பொழுதாவது,” “அரிதாகவே,” அல்லது “வாசிப்பதேயில்லை,” என பதிலளித்தது வருந்தத்தக்கது. பைபிளை வாசிப்பது, சலிப்பூட்டுவதாகவும் சோர்வூட்டுவதாகவும் இருப்பதாய் பெரும்பாலான இளைஞர் நினைக்கின்றனர் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் அது அவ்வாறு இருக்க வேண்டியதில்லை! யோசித்துப் பாருங்கள்: எல்லா விளையாட்டுகளைப் பற்றிய புள்ளிவிவரங்களையும் ஏன் சில இளைஞர் அத்துப்படியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது தங்களுக்குப் பிடித்த பாடல்களின் வார்த்தைகளை ஏன் தெரிந்து வைக்கிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்கு அந்தக் காரியங்களில் ஆர்வம் இருக்கிறது. அதேவிதமாகவே, நீங்கள் பைபிளைப் படிப்பதில் மூழ்கிவிட்டால் அதுவும் சுவாரஸ்யமானதாகிவிடும். (1 தீமோத்தேயு 4:15, NW) அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு ஊக்குவித்தார்: “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:3) ஆம், வேதவசனங்களின்மீது நீங்கள் அப்பேர்ப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள, அல்லது வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு முயற்சி தேவை, ஆனால் பலன்களைக் கருதுகையில் அந்த முயற்சி தகுந்ததே. b
ஒரு பயன் என்னவென்றால், கடவுளுடைய வார்த்தையையும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் வாசிப்பதும் படிப்பதும் “யெகோவாவின் இனிமையை” வெளிப்படுத்தும். (சங்கீதம் 27:4, NW) ஆம்பெர் என்ற ஓர் இளம் கிறிஸ்தவ பெண், முழு பைபிளையும் வாசிப்பதைத் தன் இலக்காக்கினாள். இதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்தது. “இதுபோன்று அவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்தி, இந்தளவுக்கு பலனளிக்கும் காரியம் வேறேதேனும் என் வாழ்க்கையில் உண்டோ என்பது சந்தேகம்தான்,” என்று ஆம்பெர் கூறினாள். “நான் அதை வாசிக்கும்போது, ஒரு அப்பா மாதிரி யெகோவா என்னை மடியில் உட்கார வைத்து, சொல்லித்தருவது போல இருந்தது. நான் யெகோவாவைப் பற்றி மிக அதிகத்தை—என்னை அவரிடம் அதிக நெருக்கமாக கொண்டுவந்த காரியங்களையும், மீதமுள்ள வாழ்நாளெல்லாம் அவரிடம் பயபக்தியுடன் இருப்பதற்கான காரியங்களையும்—கற்றுக்கொண்டேன்.”
நீங்கள் பைபிளை வாசிக்கும்போது, கடவுள் உண்மைப்பற்றுறுதியுடன் தம் நண்பர்களை ஆதரித்த அநேக சமயங்களைக் குறித்து தெரிந்து கொள்கிறீர்கள். (சங்கீதம் 18:25, NW; 27:10) அவருடைய தராதரங்கள் எப்போதுமே மிகச் சிறந்தவை என்றும் நம்முடைய நிரந்தர நன்மைக்கானவை என்றும் கண்டறிவீர்கள். (ஏசாயா 48:17) கடவுளுடைய அன்பு மற்றும் ஞானம் போன்ற ஈடற்ற பண்புகளைக் குறித்து வாசிக்கையில், நீங்கள் அவற்றைப் பின்பற்றும்படி தூண்டப்படுகிறீர்கள். (எபேசியர் 5:1) ஆனால் அப்படிப்பட்ட தகவல் உங்கள் இருதயத்தைத் தூண்டியெழுப்ப வேண்டுமானால், நீங்கள் தியானிக்கவும் வேண்டும். நீங்கள் வாசிக்கையில், உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் பற்றி இது எனக்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய சிந்தனையிலும் செயல்களிலும் இதை நான் எப்படி பொருத்த முடியும்? கடவுளைப் போன்ற மிகச் சிறந்த நண்பரை ஒருபோதும் என்னால் கண்டடைய முடியாது என்று இது எப்படிக் காண்பிக்கிறது?’
தனிப்பட்ட மற்றும் சபை படிப்பின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளும் கடவுளைப் பற்றிய அறிவு வேறொரு வழியிலும் அவரிடம் நெருங்கி வர உங்களுக்கு உதவும். பிரெஞ்சு பழமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: “ஒரே விதமாக சிந்திப்பவர்களே உண்மையான நண்பர்கள் ஆவர்.” ஆனால் கடவுளைப் போலவே, அதாவது ‘ஒரே விதமாக சிந்திப்பது’ எப்படி? இளம் டென்னிஸ் இவ்வாறு விளக்குகிறாள்: “நீங்கள் ஒரு விஷயத்தைக் குறித்து எவ்வளவு அதிகமாக படித்து, ஆராய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அதைக் குறித்த யெகோவாவின் நோக்குநிலையைக் கண்டறிகிறீர்கள். ஏதோவொன்றைக் குறித்து அவர் எப்படி நினைக்கிறார் என்று தெரிந்திருப்பது உதவியாக இருக்கிறது.”
நேர்மையான நடத்தை இன்றியமையாதது
கடவுளுடைய ஒழுக்க தராதரங்களை மதிப்பவர்களை மட்டுமே அவர் தம்முடைய நண்பர்களாகத் தெரிந்தெடுக்கிறார். “நேர்மையுள்ளவர்களிடம் அவருடைய நெருக்கம் இருக்கிறது,” என்று நீதிமொழிகள் 3:32 (NW) சொல்லுகிறது. நேர்மையாக இருக்க முயலும் ஓர் இளைஞர், ‘யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்க கவனமாக இருப்பார்.’ (2 இராஜாக்கள் 10:31, NW) கீழ்ப்படிதலுள்ள நடத்தை ஒரு நபரை கடவுளிடம் எவ்வளவு நெருக்கமாகக் கொண்டுவர முடியும்? இயேசு கிறிஸ்து சொன்னார்: “அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.” (யோவான் 14:21-24) உள்ளத்தை நெகிழ்விக்கும் எப்பேர்ப்பட்ட ஒரு காட்சி! அண்டத்திலேயே மிகப் பெரிய இரு நபர்கள் தங்கள் நிலையான சிந்தையையும் கவனிப்பையும் ஒரு மனிதன்மீது வைத்து வருவதை கற்பனை செய்து பாருங்கள்! யெகோவாவின் சட்டத்தின்படி நடக்க நீங்கள் கவனமாக இருந்தால் அந்நிலை உங்களுக்கு ஏற்படும்.
நேர்மையாக இருப்பதென்றால் நீங்கள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று அர்த்தப்படுகிறதா? இல்லவே இல்லை! பலவீனத்தின் காரணமாக ஒரு தவறைச் செய்வது, நீங்கள் ‘கடவுளுடைய கற்பனைகளின் பாதையை’ விட்டுவிட்டீர்கள் என்று அர்த்தப்படுத்துவதில்லை. (சங்கீதம் 119:35) அரசனாகிய தாவீதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். கடவுளுக்கு உண்மைப்பற்றுறுதியுள்ள நண்பனாக இருந்தபோதிலும், பலவீனத்தின் காரணமாக அவர் சில படுமோசமான தவறுகளைச் செய்தார். அவ்வாறு இருந்தும், அவர் ‘மன உத்தமமும் செம்மையுமாய்’ நடந்ததாய் யெகோவா சொன்னார். (1 இராஜாக்கள் 9:4) அரசனாகிய தாவீது, தான் செய்த எந்தத் தவறுக்கும் எப்போதும் இருதயப்பூர்வமாக வருந்தி, கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய கடினமாக முயற்சி செய்தார்.—சங்கீதம் 51:1-4.
தாவீது கடவுளை நேசித்த போதிலும், சரியானதைச் செய்வது சில சமயங்களில் எவ்வளவு கடினமாக இருக்கலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அவர் கடவுளிடம் இவ்வாறு மன்றாடினார்: ‘உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தும்.’ ஆம், கடவுளைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற நேர்மையான அச்சத்தை, அல்லது பயத்தை அவர் வளர்த்துக் கொண்டார். இதனால் தாவீதால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “கர்த்தருடைய இரகசியம் [“நெருக்கம்,” NW] அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.” (சங்கீதம் 25:5, 14) இது ஓர் ஆரோக்கியமற்ற பயமல்ல; ஆனால் படைப்பாளருக்கான ஆழ்ந்து உணரப்பட்ட பயபக்தியும் அவரைப் பிரியப்படுத்தாமல் போவதைக் குறித்த ஆரோக்கியமான பயமும் ஆகும். இந்த தேவபயத்தின் அடிப்படையிலேயே சரியான நடத்தை ஊன்றியிருக்கிறது. உதாரணமாக, ஜாஷுவா என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ இளைஞனைக் குறித்துச் சிந்தியுங்கள்.
ஜாஷுவா தன் பள்ளியிலுள்ள ஒரு பெண்ணிடமிருந்து, அவள் அவனை விரும்புவதாகவும் அவனுடன் “காதலுறவு” கொள்ள விரும்புவதாகவும் கூறிய ஒரு கடிதத்தைப் பெற்றான். ஜாஷுவாவுக்கு அவளைப் பிடித்திருந்தபோதிலும், அவிசுவாசியுடன் கூட்டுறவு கொள்வது ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தி, யெகோவாவுடனுள்ள தன் உறவை கெடுக்கக்கூடும் என்பதை உணர்ந்தான். ஆகவே தனக்கு விருப்பமில்லை என்பதாக சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக அவளிடம் கூறிவிட்டான்! பின்னர் அவன் அந்த நிலைமையை எப்படி சமாளித்தான் என்பதைக் குறித்து தன் தாயிடம் சொன்னபோது, அவர் முதலில் சிந்திக்காமல், “ஓ, ஜாஷுவா, நீ அவளுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தியிருப்பாய்!” என்று கூறினார். “ஆனால், அம்மா. நான் யெகோவாவை வருத்தப்படுத்துவதைவிட அவளை வருத்தப்படுத்தினால், அது தேவலை,” என்று ஜாஷுவா பதிலளித்தான். அவனுடைய தேவபயம், தன் பரலோக நண்பரை துக்கப்படுத்திவிடக் கூடாதென்ற பயம், நேர்மையான நடத்தையைக் காத்துக்கொள்ள அவனைத் தூண்டியது.
நல்ல கூட்டாளிகளைத் தேடுங்கள்
என்றபோதிலும், லின் என்ற பெயருள்ள ஓர் இளம் பெண் தொந்தரவுக்குள் மாட்டிக்கொண்டே இருந்தாள். என்ன பிரச்சினை? அவள் தவறான கும்பலுடன் கூட்டுறவு வைத்து வந்தாள். (யாத்திராகமம் 23:2; 1 கொரிந்தியர் 15:33) என்னதான் தீர்வு? புதிய நண்பர்களைக் கண்டடைதல்! லின் முடிவாகச் சொன்னது என்னவென்றால், “யெகோவாவை நேசிக்கிறவர்களை உங்கள் நண்பர்களாக வைத்திருந்தால், நீங்கள் ஓர் உணர்வுள்ள மனச்சாட்சியைக் கொண்டிருக்கவும் தொந்தரவிலிருந்து விலகிநிற்கவும் அது உங்களுக்கு உதவுகிறது. தவற்றை அவர்கள் வெறுப்பது, உங்களையும் அதேவிதமாக உணர வைக்கிறது.”
உண்மையில், நண்பர்களைத் தவறாக தெரிவு செய்துகொள்வது, கடவுளுடனான ஒரு நட்புக்கு மிகப் பெரிய தடங்கலாக இருக்கலாம். பதினெட்டு வயது ஆன் ஒத்துக்கொண்டாள்: “உங்கள் கூட்டாளிகள் உங்கள்மீது அதிக செல்வாக்கு செலுத்துகிறார்கள். என்றாவது ஒருநாள் நீங்களும் அவர்களைப்போல் ஆகிவிடுவீர்கள். உங்களையும் அவர்கள் போக்கில் சிந்திக்கும்படி செய்துவிடுகிறார்கள். உரையாடல்கள் பெரும்பாலும் பால் சம்பந்தமான காரியங்களைச் சுற்றியே இருக்கக்கூடும். அதைப்பற்றி அறிய வேண்டிய ஆவலுள்ளவர்களாக உங்களை ஆக்கிவிடுகிறது. அது எப்படி இருக்கும் என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள்.” ஆன் இதை ஒரு கசப்பான அனுபவத்தின் மூலமே கற்றுக்கொண்டாள். அவள் சொல்வதாவது: “கெட்ட கூட்டுறவின் செல்வாக்கைப் பற்றி எனக்குத் தெரியும். நான் ஒழுக்கக்கேட்டில் விழுந்து, 15 வயதில் கர்ப்பமானேன்.”
பைபிளின் பின்வரும் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆன் கடைசியாக மதித்துணர ஆரம்பித்தாள்: “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) ஆம், ஆன் உலகத்திற்கு சிநேகிதியாக இருக்க விரும்பினாள், அவ்வாறிருக்க திடதீர்மானமாக இருந்தாள். ஆனால் இது ஒன்றன்பின் ஒன்றாக அதிக மனவேதனைகளுக்கே வழிநடத்தியது. சந்தோஷத்திற்குரிய விதத்தில் நிலைமை மாறிவிட்டது, ஆனுக்கு புத்தி வந்தது. அவள் தன் போக்கைக் குறித்து ஆழ்ந்து வருந்தி, தன் பெற்றோரிடமிருந்தும் சபையிலுள்ள மூப்பர்களிடமிருந்தும் உதவியை நாடினாள். அவள் தனக்கு புதிய நண்பர்களின் கூட்டத்தையும் தெரிந்துகொண்டாள். (சங்கீதம் 111:1) அவளுடைய பாகத்தில் அதிகமான முயற்சி எடுத்து, ஆன் மீண்டும் கடவுளுக்கு ஒரு சிநேகிதியானாள். இப்போது, பல வருடங்கள் கழித்து, அவள் சொல்கிறாள்: “யெகோவாவிடமான என் உறவு அதிக நெருக்கமானதாக இருக்கிறது.”
தனிப்பட்ட விதமாக பைபிளைப் படிப்பது, தியானம், நேர்மையான நடத்தை, ஆரோக்கியமான கூட்டுறவுகள் ஆகியவற்றின் மூலம், நீங்களும் கடவுளுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளலாம். என்றபோதிலும், அந்த நட்பை தொடர்ந்து காத்துக்கொள்வதென்பது வேறொரு விஷயமாக இருக்கிறது. கஷ்டங்கள் மத்தியிலும் சொந்த பலவீனங்களின் மத்தியிலும் அவ்வாறு காத்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? இந்தத் தொடரில் இனி வெளிவரவிருக்கும் கட்டுரை ஒன்று இந்த விஷயத்தைக் கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஜூலை 22 மற்றும் நவம்பர் 22, 1995-ன் விழித்தெழு! பிரதிகளைக் காண்க.
b மே 8, 1986 பிரதியில் “இளைஞர் கேட்கின்றனர் . . . பைபிளை ஏன் வாசிக்கவேண்டும்?” என்பதைக் காண்க.
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய நண்பராக இருக்க என் கூட்டாளிகள் எனக்கு உதவுவார்களா?