உலகை கவனித்தல்
எழுதித்தரும் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன
“ஆஸ்திரேலிய நாட்டவர்கள் ஒரு வருடத்திற்கு $300 கோடியை மருந்துக்காக செலவிடுகிறார்கள்; அதோடுகூட டாக்டர் எழுதித்தரும் வலி நிவாரணிகளை உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாவது மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்பதாக ஆஸ்திரேலியாவின், விக்டோரியா மாகாணத்திலுள்ள மெல்போர்னின் செய்தித்தாள் ஹெரால்டு சன் அறிவிக்கிறது. “எழுதித்தரும் மருந்துகளை தவறாக பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே திருட்டுத்தனமாக மெல்ல நுழைந்துகொண்டிருக்கிறது; சட்டவிரோதமான போதைப்பொருட்களைப் போலவே, இது உடலாரோக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் கெடுக்கும் விஷமாகும்” என்று எச்சரிக்கை கொடுக்கிறார் விக்டோரியா மாகாணத்தின் சுகாதார அமைச்சர். பல்வேறு மருந்து சீட்டுகளை பெறவேண்டும் என்பதற்காக “பல டாக்டர்களிடம்” போகும் ஆட்களின் எண்ணிக்கை இப்போதெல்லாம் பெருகிக்கொண்டிருக்கிறது என்ற அறிக்கையைக் கேட்டு அவர் தனது கவலையைத் தெரிவித்தார். சில மாத்திரைகளை மீதம் வைத்திருந்து, பிறகு பொடிசெய்து, இரத்த நாளங்களில் ஊசி மூலம் ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு சுற்றாய்வின்படி, தவறான காரணங்களுக்காக வலி நிவாரணிகளை சாப்பிடும் ஆட்களின் எண்ணிக்கை, 1993-ல் 3 சதவிகிதமாக இருந்தது 1995-ல் 12 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ருவாண்டாவில் அப்பாவி பலியாட்கள்
சமீபத்தில் ருவாண்டாவில் நடந்த படுகொலையில், லட்சக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; சிலர் பாலுறவு-அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். பலரது விவகாரங்களில், கற்பழித்த காமுகர்கள்தான் அந்தப் பெண்களின் கணவர்களையும் உறவினர்களையும் மிருகத்தனமாக கொன்ற கொடியவர்கள். கற்பழிப்புக்கு பலியான பெண்களில் சுமார் 35 சதவிகிதத்தினர் கர்ப்பமானார்கள். தங்களுடைய பெரும் பிரச்சினைக்கு முடிவுகட்ட சில பெண்கள் கருச்சிதைவை நாடினார்கள் அல்லது சிசு-கொலை செய்தனர்; மற்றவர்கள் குழந்தையை எறிந்துவிட்டார்கள் அல்லது தத்துக்கொடுத்து விட்டார்கள். இருப்பினும், “கைவிடப்பட்ட பிள்ளைகள் 2,000 முதல் 5,000 வரை ருவாண்டாவில் இருக்கிறார்கள்; இவர்களது அம்மாக்கள் உள்நாட்டு போரில் கற்பழிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் கறாராக எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது” என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பெரும் எண்ணிக்கையான விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் அவர்களுடைய சொந்த சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். “புதிய கணவர்களை கண்டெடுப்பதோ அல்லது புதியதோர் வாழ்க்கையை துவங்குவதோ தங்களுக்கு எட்டாத கனியாகிவிட்டதை பல பெண்கள் கண்டுள்ளனர்” என்று டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. சில அம்மாக்களுக்கு தங்கள் பிள்ளைகளின் முகங்களைப் பார்க்கும்போது, தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதன், அன்பானவர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டதன் நினைவுகளே கண்முன் தாண்டவம் ஆடுகின்றன. இப்படிப்பட்ட வேதனையான நினைவுகளால் சிலர் தாய்பாசத்தை தங்கள் குழந்தைகளின்மீது பொழிய கஷ்டப்படுகிறார்கள்.
பாதத்திற்கு வந்த ‘தலைவலி’
ஜெர்மனியில், உடல்நல சேவை மருத்துவர்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அந்நாட்டின் குடிமக்களில் பாதிப்பேருக்கு பாதங்களில் தொல்லைதரும் வேதனை இருக்கிறது. “அநேக ஆட்கள் தங்களுடைய பாதங்களை சரிவர பராமரிப்பதில்லை அல்லது ரொம்ப இறுக்கமான ஸூக்களை அணிந்து கொள்கிறார்கள்; அல்லது உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும் விதத்தில் ஸூக்களை அணிந்து கொள்கின்றனர்; இவ்வாறாக பாதங்களை முரட்டுத்தனமாக பராமரிக்கிறார்கள்” என்பதாக அறிக்கை செய்கிறது நாஸயுஷ் நௌ ப்ரெஸே என்ற செய்தித்தாள். உயரமான அல்லது கால்களுக்கு ரொம்ப டைட்டாக இருக்கும் ஸூக்களை தினந்தோறும் அணிந்தால், முட்டி வலி, இடுப்பு வலி அல்லது முதுகு வலி வரக்கூடும். பூஞ்சை கிருமிகளால் வரும் நோய்களாகிய அத்தலெட் ஃபுட், மைகாஸிஸ் போன்றவையும் இன்னும் அதிகளவில் பரவுகின்றன. “சோப்பின் பிசுபிசுப்பை நன்கு கழுவி விட்டு, விரல் இடுக்குகளில் இருக்கும் ஈரத்தை கவனமாக ஒற்றி எடுத்து காயவிட வேண்டும்” என்று வரும்முன் காக்கும் வழியாக பரிந்துரை செய்கிறது உடல்நல சேவையின் மருத்துவர்கள் கூட்டமைப்பு.
ஷாப்பிங் பைத்தியம்
அயர்லாந்தில், ஷாப்பிங் பைத்தியம் “இப்போது ஓர் அடிமைப்படுத்தும்பழக்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; நிபுணர்களின் உதவியைத் தேவைப்படுத்தும், தீவிர உணர்ச்சி ரீதியிலும், மன ரீதியில் பித்துபிடித்து அலைய செய்யும் மதுபானம், போதைப்பொருள், சூதாட்டம், ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் ஆகியவற்றின் வரிசையில் [ஷாப்பிங் பைத்தியம்] சேர்ந்துள்ளது” என்று தி ஐரீஸ் டைம்ஸ் கூறுகிறது. இப்படி பித்துப்பிடித்து அலைபவர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்குவதில் ஒருவேளை கணிசமான பணத்தை செலவுசெய்வார்கள். அந்த அறிக்கை இவ்வாறு விளக்குகிறது: “துணி வாங்கும்போது ஏற்படும் குதூகலம், உடலில் அண்ணீரையும் சரொடொனின் நீரையும் சுரக்கச்செய்கின்றன; பிறகு அவை ஒருவித திருப்தியான உணர்வை தருகின்றன.” ஒரு போதைப்பொருள் அடிமையைப்போலவே, ஷாப்பிங் பைத்தியத்திற்கும் கிக் கிடைப்பது மேலும் மேலும் கஷ்டமாகிக்கொண்டே இருக்கிறது.
“டிவி பார்க்கும் மழலைப் பட்டாளம்”
இத்தாலியில் 21,000 குடும்பங்களில் நடத்தப்பட்ட சுற்றாய்வு, பெரும்பான்மையான இத்தாலிய பிள்ளைகள் டிவியே கதி என்று இருக்கிறார்கள் என்ற உண்மையை வெளியிட்டது. லா ரேப்பூப்ளிக்கா என்ற செய்தித்தாள் குறிப்பிடுவதாவது, ‘டிவி பார்க்கும் மழலைப் பட்டாளத்திற்கு’ ரிமோட் கண்ட்ரோலை உபயோகிக்க நல்லாவே தெரிந்திருக்கிறது. மூன்றிலிருந்து பத்து வயதுக்கு இடைப்பட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான இத்தாலிய பிள்ளைகள் டிவி முன்னால் அமர்ந்தபடி, இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக அப்படியே மதிமயங்கிபோய் கிடக்கிறார்கள். பல பிள்ளைகள், ஏன் ஆறு முதல் எட்டு மாத குழந்தைகளும் இப்போதே பெரும் ஆர்வத்தோடு டிவி பார்க்கிறார்கள் என்ற உண்மையைக் குறித்து மனநல நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.
வேலைபார்க்கும் பெண்களும் தற்கொலையும்
“ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் பிரிட்டனில் ஒரு வருடத்தில் 4,500 தற்கொலைகள் நடக்கின்றன” என்று லண்டனின் தி டைம்ஸ் அறிவிக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளம் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்துள்ளது. சௌதாம்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தற்கொலைக்கான பல காரணங்களில் சாத்தியமான ஒரு காரணத்தை விளக்கினார்: “இளம் பெண்கள், தங்கள் வேலைபார்க்கும் இடத்திலும் சிறந்துவிளங்க விரும்புகிறார்கள், கூடவே குடும்பத்தை நிர்வகிக்கும் அழுத்தங்களையும் தங்கள் தலையில் போட்டுக்கொள்கிறார்கள். நடுத்தரக்குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் வேலைக்குப் போகையில், தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆட்களை அமர்த்துகிறார்கள். அதன்பிறகு வருத்தப்படுகிறார்கள், குற்றவுணர்வு அவர்களை வாட்டியெடுக்கிறது. அவர்களது தாய்மை தாயாக இருக்க சொல்கிறது, மனதோ வேலைபார்த்து சம்பாதிக்க சொல்கிறது.” நிறைய ஆட்களை இத்தகைய மன உளைச்சல்களும் அழுத்தங்களும் தற்கொலைக்கு வழிநடத்தலாம் என்று இந்தப் போராசிரியர் நம்புகிறார்.
எய்ட்ஸின் “மாபெரும் உறைவிடம்”
“சூறைக்காற்றை எதிர்நோக்கி மின்னல்வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இரயிலைப்போலவே,” இந்தியா பேராபத்தான ஒன்றை நெருங்கிக்கொண்டிருக்கிறது. “மனிதனை இதுவரை தாக்கிய உயிர்க்கொல்லி நோய்களிலேயே மிக பயங்கரமான நோய் ஒன்றுக்கு மாபெரும் உறைவிடமாக” அது மாறிவருகிறது என்று கூறுகிறது லண்டனிலுள்ள தேம்ஸ் வாலி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு புதிய சுற்றாய்வு. அதைப்போலவே, ஐக்கிய நாட்டு சபையினுடைய எய்ட்ஸ் திட்டத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் பீட்டர் பிஜா என்பவர் 11-வது சர்வதேச எய்ட்ஸ் கூட்டத்தில், இந்தியாவின் 95 கோடி மக்கள்தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமான ஆட்கள் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பெரும் எண்ணிக்கையைக் கொண்டுள்ள ஒரு நாடாக திடீரென்று காட்சியில் தோன்றியுள்ளது என்று கூறினார். இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின்படி, பாலுறவில் தீவிரமாக இருக்கும் 22.3 கோடிக்கும் அதிகமான ஆண்களில் 10 சதவிகிதத்தினர் விலைமாதரிடம் தொடர்ந்து போகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு கணக்கிட்டது. பெரும் நகரங்களில் விபச்சாரத்தொழில் செய்யும் விலைமாதர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தவுடன் கிராமங்களிலுள்ள அவர்களுடைய வீட்டிற்கு பொதுவாகவே அனுப்பிவைக்கப்படுகிறார்கள்; அங்கே நகரங்களில் இருப்பதுபோன்று நோயைப்பற்றிய அறிவும் அவ்வளவாக இல்லை, சரியான மருத்துவ வசதிகளும் இல்லை; இவை நோயை வெகுவேகமாக பரவச்செய்கின்றன. 2000-ம் வருடத்திற்குள், இந்தியாவில் 50 லட்சத்திலிருந்து 80 லட்ச ஆட்களுக்கு ஹெச்ஐவி பாசிடிவ் பரவிவிடும்; மேலும் குறைந்தது 10 லட்சம் ஆட்கள் எய்ட்ஸால் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அது கணக்கிட்டது.
விளையாட்டு காயங்கள்
• “மௌவுண்டன் பைக்கிங் என்ற விளையாட்டு வெகு வேகமாக பிரபலமாகி வருகிறது, அதற்கேற்ப ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்” என்று அறிக்கைச் செய்கிறது கனடாவின் வான்கூவர் சன். ஐக்கிய மாகாணங்களில் மௌவுண்டன் பைக்கிங்கில் பங்கேற்கும் ஆட்களின் எண்ணிக்கை 1987-க்கும் 1994-க்கும் இடையே 15 லட்சத்திலிருந்து 92 லட்சமாக அதிகரித்துள்ளது; அது 512 சதவிகித அதிகரிப்பாகும் என்று அந்தச் செய்தித்தாள் அறிவிக்கிறது. பேரார்வத்தோடு இருக்கும் கற்றுக்குட்டிகள், ஒதுக்குப்புறமான ரோடுகளிலும், கரடுமுரடான பாதைகளிலும் தங்களுடைய திறமைக்கு மிஞ்சி ஓட்டிச்சென்று, பைக்கிலிருந்து தூக்கி ஏறியப்படுகிறார்கள்; அதனால் வெறும் வெட்டுக்காயங்களும் சிராய்ப்புகளும் மட்டுமல்லாமல், முழங்கால்களிலும், மணிக்கட்டுகளிலும், தோள்களிலும், தோள்ப்பட்டைகளிலும் ஆழமான காயங்கள் ஏற்படுவதனால் துன்பப்படுகிறார்கள். சில காயங்கள் உயிருக்கு ஆபத்தானவையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், நீண்டகாலத்திற்கு பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். மணிக்கட்டிலிருக்கும் சிறிய எட்டு எலும்புகளில் ஏதேனும் ஒன்று முறிந்தால், அது எக்ஸ்ரேவிலும்கூட கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்று விளையாட்டு விபத்துக்களுக்கு மருத்துவம் செய்வதில் நிபுணராக இருக்கும் டாக்டர் ரூ அவலர் நினைக்கிறார். அவர் இவ்வாறு எச்சரிக்கை தருகிறார்: “கையை விரித்தப்படி விழுந்திருந்தால், அதைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.” ஒருவருக்கு மணிக்கட்டு எலும்பு அழற்சி நோயும், நிரந்தரமான சேதமும் ஏற்படலாம்.
• ஜெர்மனியில் “ஒவ்வொரு வருடமும் 12 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விளையாட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன” என்று ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கையிடுகிறது. பொழுதுபோக்கிற்காக விளையாடிய விளையாட்டுக்களில் மக்களுக்கு ஏற்பட்ட 85,000 காயங்களைப் பற்றி துல்லியமான, விவரமான விஷயத்தை சேகரிப்பதற்காக போக்கம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் அவற்றை அலசி ஆராய்ந்தார். அவற்றில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கால்பந்தாட்டத்தினால் ஏற்பட்டவை. இருப்பினும் கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம் கூடைப்பந்தாட்டம் என்று பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையை கருத்தில் எடுத்துக்கொண்டால் ஏற்படும் காயங்களின் விகிதம் ஒரே அளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். விளையாட்டு விபத்துக்களில் சுமார் 3-க்கு 1 என்ற கணக்கில் கணுக்காலில் காயம் ஏற்படுகிறது; அதனை அடுத்து 5-க்கு 1 என்ற கணக்கில் முட்டியில் ஏற்படுகிறது.
E. Coli O157:H7 ஜாக்கிரதை
“E. coli என்ற பாக்டீரியா கடுமையாக தாக்குவதால் உணவு நச்சு ஏற்படுகிறது . . . அது உலகெங்கும் பரவிவருகிறது. விஷத்தை ஏந்திச் செல்லும் பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது; அதன் விளைவாகத் தொற்று நோய்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளது” என்று எச்சரிக்கிறது தி நியூ யார்க் டைம்ஸ். 1982-ல்தான் O157:H7 வகை பாக்டீரியாவின் தாக்கம் ஒரு பிரச்சினை என்பதாக முதன்முதலில் அறியப்பட்டது. இருப்பினும், அன்றிலிருந்து அது ஒரு ஜீனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு ஷிகா நச்சாக உருப்பெற்றுள்ளது, அது ஷிங்கெல்லா சீதபேதியை உண்டாக்குகிறது. உடனடியாக கவனிக்கவில்லையென்றால், பேதியானது மூளையைப் பாதித்து, கிட்னியை பாதித்து, மரணத்தையும் விளைவிக்கும். 1993-ல் வடமேற்கு ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு பிரபலமான கிளை ரெஸ்டாரண்டில் சரிவர வேகாத மாட்டிறைச்சியின் கொத்துக்கறி சான்விச்சுகளைச் சாப்பிட்டதால் 4 பேர் இறந்துபோனார்கள்; 700 பேர் நோய்வாய்ப்பட்டார்கள். சமீப வருடங்களில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் தெரிகிறது. ஐக்கிய மாகாணங்களில் மாத்திரம், E. coli O157:H7 பாக்டீரியாவால், 20,000 வகையான வியாதிகளும், 250 முதல் 500 இறப்புகளும் ஏற்பட காரணமாக இருக்கலாம். “மாமிசத்தை விசேஷமாக கொத்துக்கறிகளை நன்கு வெந்திருக்கிறதா என்பதை சாப்பிடுபவர்கள் உறுதிசெய்துகொண்டால், கிருமியால் பாதிக்கப்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதில் முன்னேற்றம் காணலாம்; அப்படியானால் மாமிசத்திற்குள்ளே 155 பாரன்ஹீட் வெப்பம் செல்லவேண்டும்; அந்த வெப்பநிலை மாமிசத்தின் சிகப்புநிறத்தை முற்றிலுமாக நீக்க போதுமானது” என்று டைம்ஸ் கூறுகிறது.