உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 8/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “அனைத்துலகையும் பாதிக்கிற ஒரு அவசரநிலை”
  • “மிகவும் மோசமான போதைப்பொருள்”
  • பெண்களுக்கு எதிராக அதிகமான வன்முறை
  • விஷமுள்ள புகைகள்
  • நான்கு சக்கர இயக்கம் கொண்ட வாகனம் பாதுகாப்பானதா?
  • வன்முறையைத் தோற்றுவிக்கும் விளையாட்டு சாமான்கள்
  • புதிய சாதனம் மாரடைப்பு ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கிறது
  • “உங்கள் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுங்கள்”
  • சர்ச் ராஜினாமாக்கள்
  • பெரியதோர் நகரத்தில் வாழ்க்கை
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • எய்ட்ஸ் அதற்குத் துக்ககரமாக பலியாகும் குழந்தைகள்
    விழித்தெழு!—1992
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 8/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

“அனைத்துலகையும் பாதிக்கிற ஒரு அவசரநிலை”

ஏழாவது வருடாந்தர உலக எய்ட்ஸ் நாளன்று பாரீஸில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் மாநாட்டில், ஐநா பொது செயலர் பூட்ரோஸ் காலி, எய்ட்ஸ் உலக நாடுகள் முழுவதிலும் திடுக்கிடச்செய்யும் வகையில் வேகமாக பரவிவருவதை முன்னிட்டு 42 தேசங்களிலும் 5 கண்டங்களிலுமிருந்து வந்திருந்த தேசத்தின் தலைவர்களையும் சுகாதார அமைச்சர்களையும் “அனைத்துலகையும் பாதிக்கிற ஒரு அவசரநிலையை பிரகடனம் செய்யும்படி” கேட்டுக்கொண்டார். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க உலகமுழுவதிலும் செய்யப்படும் முயற்சிகள் மத்தியிலும், ஜூலை 1993 மற்றும் ஜூலை 1994-க்கு இடையே, உலகில் எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்து, சுமார் 40 லட்சத்தை எட்டியது. தற்போதைய வளர்ச்சியின் வேகத்தில், எய்ட்ஸ் நோய் “முழு சமுதாயங்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்துவதாக உள்ளது,” என்று எச்சரித்து ஆண்டு 2000-க்குள்ளேயே உயிர்கொல்லி நோயாகிய எய்ட்ஸ் உண்டுபண்ணும் HIV நச்சுக்கிருமியினால் மூன்று கோடியிலிருந்து நான்கு கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பர் என்பதாக உலக சுகாதார அமைப்பு சோகமான ஒரு அறிக்கையில் முன்னுரைத்தது.

“மிகவும் மோசமான போதைப்பொருள்”

பிரேஸில் நாட்டு செய்தித்தாள் ஜர்னல் டோ பிரேஸில்-ல் அண்மையில் வந்த தலையங்கம் சிகரெட்டுகளை “மிகவும் மோசமான போதைப்பொருள்” என்பதாக விவரித்தது. பிரேஸிலின் தேசீய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் மார்க்கோஸ் மொரைஸ்-ன் பிரகாரம், புகையிலை தொழிலின் இலக்கு இளைஞரே. “ஒரு இளைஞன் எவ்வளவு சீக்கிரமாக புகைபிடிக்க ஆரம்பிக்கிறானோ அவ்வளவு அதிக நீண்ட காலம் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருப்பான். எத்தனை நீண்ட காலமாக அவன் புகைபிடிக்கிறானோ அத்தனை அதிகமாக அவனுக்கு உடல்நல ஆபத்துக்கள் ஏற்படும்,” என்று அவர் விளக்கினார். பிரேஸில் நாட்டில் புகைபிடிக்கும் மூன்று கோடி மக்களில், “20.4 லட்சம் பேர் பிள்ளைகளாகவும் வளரிளமை பருவத்தினராகவும் இருக்கின்றனர்,” என்பதாக டாக்டர் மொரைஸ் குறிப்பிடுகிறார். “எய்ட்ஸ், கோக்கேய்ன், ஹிராயின், சாராயம், தீ, கார் விபத்துக்கள் மற்றும் தற்கொலைகள் ஆகியவற்றால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமான [மக்களை] சிகரெட்டுகள் கொன்றுவிடுகின்றன,” என்பதாக அவர் மேலுமாகச் சொல்கிறார்.

பெண்களுக்கு எதிராக அதிகமான வன்முறை

“அவர்களுடைய கணவர்மாராலும் ஆண் துணைவர்களாலும் பெண்கள் தாக்கப்படுவது உலகின் மிகப் பொதுவான வகையான வன்முறையாகும்,” என்பதாக ஐநா அறிக்கைபற்றிய ஒரு கட்டுரையில் தி ஆஸ்திரேலியன் என்ற செய்தித்தாள் சொல்கிறது. “உலகிலுள்ள பெண்களில் 25 சதவீதத்தினர் வரையாக வன்முறையாக தகாப்பிரயோகம் செய்யப்படுகின்றனர்,” என்பதாக அந்தக் கட்டுரை விளக்குகிறது. கொரியா குடியரசு, சிலி, தாய்லாந்து, பாகிஸ்தான், பாப்புவா நியூ கினீ போன்ற சில தேசங்களில் இந்த விகிதம் இன்னும் உயர்வாயுள்ளது. அதே ஐநா அறிக்கையை கலந்தாராய்கையில், ஒரு தேசத்தில் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீத பெண்கள் தகாப்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற மற்றொரு செய்தித்தாள் கூறியது. இந்தப் பலியாட்களில் பலர் அதிகரித்துவரும் உணர்ச்சி சம்பந்தமான தகாப்பிரயோகத்தையும்கூட சகித்துக்கொள்கின்றனர். வீட்டில் வன்முறைக்குத் தீர்வுகாண்பது மிகவும் கடினமாக இருக்கிறது, ஏனென்றால் அது எப்பொழுதும் வீட்டில் தனிமறைவிடத்தில் நிகழுகிறது. அநேகமாக நண்பர்கள், அயலகத்தார் மற்றும் உறவினர்கள் அதைக் குறித்து அறிவிப்பதற்குத் தயங்குகிறார்கள்.

விஷமுள்ள புகைகள்

ஐக்கிய மாகாணங்களின் சுகாதார அதிகாரிகள் கார்பன் மோனாக்ஸைடினால் (CO) நச்சூட்டப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். MMWR (Morbidity and Morality Weekly Report) “தேசத்தில், ஒவ்வொரு ஆண்டும் எண்ணிச் செய்யப்படாத கார்பன் மோனாக்ஸைடு நச்சூட்டப்படுதலினால் சுமார் 590 இறப்புகள் ஏற்படுகின்றன,” என்பதாக குறிப்பிடுகிறது. இதில் சாவுக்கேதுவானதாக இல்லாத கார்பன் மோனாக்ஸைடு நச்சூட்டப்படுதல் சேர்க்கப்பட்டில்லை. சாவுக்கேதுவான இந்த வாயு நிறமற்றதாக, மணமற்றதாக மற்றும் சுவையற்றதாக இருப்பதன் காரணமாக இதைக் கண்டுபிடிப்பது கடினமாகும். இந்த வாயு செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்லுவதற்குரிய இரத்தத்தின் திறமையை அழித்து தலைவலி, வாந்தி, நரம்பு மண்டலத்தில் கோளாறு, நினைவற்ற நிலை மற்றும் மரணத்தைக் கொண்டுவருகிறது. MMWR-ன் பிரகாரம், “கார்பன் மோனாக்ஸைடு சேர்ந்துவிடுவதற்கு காரணம் வீட்டிற்குள் நடைபெறும் எரிதலோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் (உ-ம்., வீட்டை சூடாக்குவது, சமைப்பது அல்லது மோட்டாரை நிறுத்தாமல் வாகனத்தை நிறுத்திவைப்பது அல்லது கல்லெண்ணெய் சக்தியால் இயங்கும் கருவியை இயக்குவது)—குறிப்பாக காற்றுவசதி போதுமானதாக இல்லாதபோது இப்படியாகிறது.”

நான்கு சக்கர இயக்கம் கொண்ட வாகனம் பாதுகாப்பானதா?

எப்பொழுதும் நான்கு சக்கர இயக்கம் கொண்ட வாகனத்தை விசேஷமாக பனியிலும் ஐஸ் கட்டியிலும் ஓட்டுவது பாதுகாப்பானது என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். என்றபோதிலும், “நிறுத்துவது என்பதற்கு வருகையில், இரண்டு சக்கர இயக்கம் கொண்ட வாகனங்களைவிட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிக அனுகூலமாயில்லை,” என்பதாக தி வால் ஸ்டீரீட் ஜர்னல் அறிவிக்கிறது. காப்பீட்டு அதிகாரிகளின்படி, மிகவும் பிரசித்திப்பெற்ற சில வகையான கார்களே உண்மையில், “சராசரியைவிட மோசமான காயங்களையும் மோதல் காப்பீட்டு உரிமைகோரிக்கை தொகையையும் கொண்டிருக்கின்றன.” அத்தாட்சியின்படி, அநேக ஓட்டுநர்கள் அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கையுள்ளவர்களாகி நான்கு சக்கர இயக்கம் கொண்ட வாகனங்களை அநாவசியமான துணிச்சலோடு ஓட்டுகிறார்கள். “திரைப்படங்கள் மற்றும் டிவி-யின் மூலமாக, மக்கள் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதை சுதந்திர உணர்வோடும் தடையில்லாத செயலுரிமையோடும் சம்பந்தப்படுத்த ஆரம்பித்திருப்பதாக,” லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள UCLA மருத்துவ மையத்திலுள்ள ஒரு ஆய்வாளர் மார்க் ஷோயன் குறிப்பிடுகிறார். இந்தச் சக்தி மற்றும் வெல்லமுடியாத உணர்வு முடிவில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு மிகச் சிறந்த கொள்கையாக இருக்கும் என்கிற நல்ல நிதானத்தோடு குறுக்கிடுவதாக இருக்கலாம்.

வன்முறையைத் தோற்றுவிக்கும் விளையாட்டு சாமான்கள்

ஒரு மந்திரத்தால் மாற்றப்படுவது போல போர்புரியும் மாவீரர்களாக மாறும் பருவ வயதினரைப் பற்றிய டிவி நிகழ்ச்சி ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிள்ளைகள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் நிகழ்ச்சியாக ஆகியிருக்கிறது. டிவி கதாபாத்திரங்கள் மைட்டி மார்ஃபின் பவர் ரேஞ்சர்கள் என்பதாக அறியப்படுகிறார்கள். பவர் ரேஞ்சர்களின் வன்முறையான செயல்களைப் பார்த்து அப்படியே செய்யும் சிறு பிள்ளைகள் வெளிப்படுத்தும் அலைக்கழிக்கும் நடத்தையைக் குறித்து பள்ளி அதிகாரிகள் கவலைதெரிவிக்கிறார்கள். சமீப கால ஆய்வில், “வாக்கெடுப்பில் உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 96 சதவீதத்தினர் மார்ஃபின் டிவி கதாபாத்திரங்களைப் பார்த்து செய்யப்பட்ட வலுசண்டையைப் பார்த்திருப்பதாக” சொல்வதை தி வால் ஸ்டீரிட் ஜர்னல் அறிக்கை செய்கிறது. சில சமயங்களில் பிள்ளைகள் மூன்றே வயதினராக இருக்கின்றனர். “சிறு பிள்ளைகள் திடீரென்று ஆவேசமுள்ள, குத்துச்சண்டைக்காரர்களாக மாறிவிடக்கூடும்,” என்பதாக ஜர்னல் சொல்கிறது. ஒரே ஆண்டில் பவர் ரேஞ்சர் விளையாட்டு சாமான்களினால் 300 மில்லியன் டாலர் பணம் சம்பாதிக்க எதிர்பார்ப்பு, நிகழ்ச்சிநிரலுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் அபிமானத்தைப் பிரதிபலிக்கிறது.

புதிய சாதனம் மாரடைப்பு ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கிறது

கழுத்திலுள்ள முக்கியமான ஒரு தமனியின்மீது சருமத்தின்மேல் வைக்கப்படுகையில் மாரடைப்பு ஆபத்துக்களைக் குறித்து முன்னறிவிக்கும் ஒரு சாதனத்தை ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவிலுள்ள அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலினுள் அறுவை சிகிச்சை செய்யாமலே, இது ஒவ்வொரு இதய துடிப்புக்குப் பின்னரும் இரத்த ஓட்டத்தின் வேகத்தையும் இரத்த அழுத்தத்திலுள்ள வேறுபாடுகளையும் கணக்கிட்டுவிடுகிறது. அதற்குப் பின்னர் “ஒரு நோயாளியின் முழு கார்டியோவாஸ்குலர் மண்டலத்தின் மீள் சக்தியை” கணக்கிடுவதற்கு ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படலாம், என்பதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாளின் அறிக்கை சொல்கிறது. கார்டியோவாஸ்குலர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் வழக்கமான முறைகளைவிட இந்தக் கருவி அதிக திருத்தமாக இருப்பதாக உறுதியளிக்கிறது. உயர்ந்த கொழுப்புச் சத்து அளவும் உயர்ந்த இரத்த அழுத்தமும் அபாயத்துக்கு பலமான அறிகுறிகளாக இருந்தபோதிலும், “இந்தத் தொகுதிகளிலுள்ள அநேக ஆட்களுக்கு ஒருபோதும் மாரடைப்பு ஏற்படுவதில்லை,” என்பதாக அறிக்கை சொல்கிறது; “இந்தப் பரிசோதனையை வைத்து, கொழுப்புச் சத்தைக் குறைக்கும் விலையுயர்ந்த மருந்துகளை எடுப்பதிலிருந்தும் அல்லது அவர்களுக்கு அவசியமாயிராத உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதிலிருந்தும் [அவர்கள்] பாதுகாக்கப்படலாம்,” என்பதாக அது மேலுமாகச் சொன்னது.

“உங்கள் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுங்கள்”

பூர்த்திசெய்யும் உணவாக கரோட்டீனாய்டுகளை உட்கொள்வதை பல பத்தாண்டுகளாக அறிவியல் அறிஞர்கள் சிபாரிசு செய்து வந்திருக்கிறார்கள். பீட்டா கரோட்டீன் நன்கு அறியப்பட்ட ஒரு கரோட்டீனாய்டு ஆகும், இது மாரடைப்புகள், வாதங்கள் மற்றும் ஒருசில புற்றுநோய்களைத் தடைசெய்வதோடு சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், சமீப கால ஆய்வுகள், பீட்டா கரோட்டீனை பூர்த்திசெய்யும் உணவுப்பொருட்களாக உட்கொள்ளுவதன் நன்மைகளைக் குறித்து சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன. தி நியூ யார்க் டைம்ஸ் பிரகாரம், உணவு அறிவியல் அறிஞர் டாக்டர் பால் லாஷான்ஸ் “தனித்த கரோட்டீனாய்டுகளைப் பூர்த்திசெய்யும் உணவாக உட்கொள்வதைக் குறித்து எச்சரித்திருக்கிறார்.” “இயற்கையான உணவுப்பொருட்களில் நாம் கரோட்டீனாய்டுகளின் ஒரு கலவையைப் பெற்றுக்கொள்கிறோம், இந்தக் கலவையைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு இன்னும் தெரியாது,” என்பதாக அவர் விளக்கினார். மற்றொரு ஆய்வாளர் டாக்டர் ரெஜினா சைக்ளர், “பழங்களிலும் காய்கறிகளிலுமுள்ள பாதுகாப்பான வஸ்துக்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வரையாக, அவற்றை நாம் ஒரு மாத்திரையில் அடக்கிவிட முடியாது,” என்பதாக சிபாரிசு செய்கிறார். “ ‘உங்கள் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுங்கள்,’ என்று அம்மாக்கள் பாரம்பரியமாக கொடுத்து வந்திருக்கும் ஆலோசனைக்கு பெரும்பாலான நிபுணர்கள் திரும்பியிருப்பதாக” டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சர்ச் ராஜினாமாக்கள்

கத்தோலிக்க செய்தித்தாள் கிறிஸ்ட் இன் டெர் கெகென்வார்ட்-ன்படி, ஜெர்மனியிலுள்ள 2 கோடி 80 லட்சம் ஆட்கள் அல்லது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் கத்தோலிக்கராக இருக்கின்றனர். 1992 மற்றும் 1993 ஆண்டுகளில், மொத்தமாக ஏறக்குறைய 3,50,000 பேர் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர். ஜெர்மன் தேசத்து ஆயர்கள் மாநாட்டின் அக்கிராசினர் பிஷப் கார்ல் லெஹமான், 1995-ல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஒரு புதிய வரி, இன்னும் அதிக வேகமான ராஜினாமாக்களுக்கு வழிநடத்தும் என்பதாக அஞ்சுவதாக ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. ஜெர்மனியிலுள்ள சர்ச் உறுப்பினர்கள் சர்ச் வரி ஒன்றை செலுத்தும்படி கேட்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, சில கத்தோலிக்கர்கள் சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்வதன் மூலம் இந்தப் புதிய வரியைத் தவிர்க்க முயற்சிசெய்வார்கள் என்பதாகக் கருதப்படுகிறது.

பெரியதோர் நகரத்தில் வாழ்க்கை

இங்கிலாந்திலுள்ள லண்டனே ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய நகரமாக இருந்தபோதிலும், தி இன்டிப்பென்டண்ட் செய்தித்தாளின்படி, அதில் வசிக்கும் எழுபது லட்சம் பேர் அங்கு வாழ்வதைக் குறித்து மொத்தத்தில் சந்தோஷமாக இல்லை. லண்டன்வாசிகளை வைத்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 7 பேரில் 6 பேர் தலைநகரில் வாழ்க்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமாகிவிட்டிருப்பதாக நம்புகிறார்கள். அவர்களுடைய முக்கிய கவலைகள் தூய்மைக்கேடு மற்றும் போக்குவரத்து நெரிசல் பற்றியதாக இருக்கிறது. அவர்கள் எந்தத் தொகுதியான மக்களை நம்பினார்கள் என்பதாக கேட்கப்பட்டபோது, 64 சதவீதத்தினர் மருத்துவர்களை நம்பியதாக சொன்னார்கள், போலீஸ் மற்றும் ஆசிரியர்கள் குறைந்த அளவில்தானே நம்பப்பட்டனர். வெறுமனே 2 சதவீதத்தினர், லண்டனின் பணப்புழக்கமுள்ள மாவட்டத்தில் வேலைசெய்யும் வியாபாரிகளை நம்பலாம் என்பதாக நினைத்தார்கள். சுமார் 60 சதவீதத்தினர், இந்தப் பகுதியில் “உண்மையாக செல்வத்தை உருவாக்காமல் மற்றவர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கி தங்களைப் பணக்காரராக்கிக் கொள்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்,” என்பதாக நம்பினார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்