உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புனிதமற்ற தீர்த்தம்
  • கண்ணிவெடி குழப்பம்
  • சிறார்களின் கதி
  • மணத்துறவு சர்ச்சை
  • குற்றவாளி யானைகள்
  • மோதிவிட்டு ஓட்டம்பிடிக்கும் முதல் விண்வெளி விபத்து
  • கடற்பஞ்சுகளுக்கு அது முன்பே இருந்தன
  • சூதாட்டக்காரர்கள் தோற்கின்றனர்
  • பாம்பை பயன்படுத்தும் கொள்ளைக்காரர்கள்
  • கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
    விழித்தெழு!—2000
  • போர் பிள்ளைகளை எப்படி சீரழிக்கிறது
    விழித்தெழு!—1997
  • தந்தம்—எந்தளவு மதிப்புமிக்கது?
    விழித்தெழு!—1998
  • கடற்பஞ்சு எளிமையில் ஓர் அதிசயம்
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 28-29

உலகை கவனித்தல்

புனிதமற்ற தீர்த்தம்

72 வயது பெண்மணிக்கு கேட்டராக்ட் ஆப்பரேஷன் செய்வதற்கு சற்று முன்னதாக இரண்டு தடவை கண்ணில் தீவிரமான தொற்று நோய் ஏற்பட்டபோது, அயர்லாந்தில் ஓர் அறுவை மருத்துவர் குழப்பமடைந்தார். அந்தத் தொற்றுக்களை எது ஏற்படுத்தியது? லுர்டஸில் இருந்த “புனித” தீர்த்தத்தை அவர் தன் முகத்தில் தெளித்திருந்தார். “பிரச்சினை என்னவென்றால், புனித தீர்த்தம் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுத்தப்படுகிறது” என்று தி ஐரிஷ் டைம்ஸ் சொல்கிறது. குறிப்பிட்டிருந்த தேதியில் ஆப்பரேஷன் செய்திருந்தால் ஒருவேளை அந்தத் தொற்றால் அந்தப் பெண்மணி எளிதில் பார்வையிழந்திருக்கக்கூடும். தி ஐரிஷ் டைம்ஸ் தொடர்ந்து சொல்வதாவது: “வெறும் ஆசீர்வாதம் கிருமிகளைக் கொல்வதில்லை. குணமாக்குவதற்கென்றே புனித தீர்த்தத்தைத் தெளித்தாலும், அது உண்மையில் உயிருக்கு ஆபத்தான தொற்றை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தலாம்.” அந்த அறிக்கையின்படி, நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, “புனித” தீர்த்தத்தை உங்கள்மேல் தெளிக்கும் நல்லெண்ணமுடைய நண்பர்களோ உறவினர்களோ “நீங்கள் தப்பிப் பிழைக்க முடியாதளவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துபவராக” இருக்கலாம்.

கண்ணிவெடி குழப்பம்

“கண்ணிவெடிகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டம், அதன் நோக்கம் அந்தக் கண்ணிவெடிகளைப் போன்றே அடையாளம் கண்டுகொள்ள முடியாததாய் இருப்பதாக கண்டறிந்துள்ளது” என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது. “கண்ணிவெடிகளை கவனமாய் அகற்றுவதற்குத் தேவையான சாதனம் இல்லை.” இரண்டாம் உலகப் போரில் போர்வீரர்களின் தாத்தாமார்கள் காலத்தில் பயன்படுத்திய அதே அடிப்படை சாதனத்தையே—குச்சியைப் போன்ற சோதனைத் துளையிடும் கருவியும் உலோகத்தாலான காணிகளுமானவற்றையே (metal detectors)—இன்று பயன்படுத்துகின்றனர். ஆனால் நவீன கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்குக் கடினமாய் இருக்கிறது, ஏனெனில் அவை பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவையாய் இருக்கின்றன, மேலும் வெடித்துச் சிதறிய துண்டுகளுடனும் போலி எச்சரிப்பு ஒலியெழுப்பத் தூண்டும் பிற குப்பைக் கூளங்களுடனும் சேர்ந்து புதைந்து கிடக்கின்றன. உலோகக் காணி ஒரு பொருளைக் கண்டறியும்போது, நார்க் கண்ணாடியாலான குச்சி ஒன்று கவனத்துடன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணுக்குள் செருகப்படுகிறது. இவ்வாறு செய்வதன் நோக்கம், அவற்றின் ஒரு பக்கத்தில் இடித்துப்பார்ப்பதின் மூலம் அந்தக் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பது. அந்தக் கண்ணிவெடி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்தாலும், அதன் நுனிப்பகுதி இடிக்கப்பட்டாலும், அது அந்த நபரின் முகத்துக்கு நேராக வெடிக்கும். ஒவ்வொரு கண்ணிவெடியையும் உண்டாக்க, பெரும்பாலும் 5 டாலரை விடக் குறைந்த செலவே ஆகிறது, ஆனால் அவற்றை எடுத்துப்போடுவதற்கு ஆகும் செலவோ, ஒரு கண்ணிவெடிக்கு 1,000 டாலருக்கும் மேல் ஆகலாம். ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரையான கண்ணிவெடிகள் தரையில் வைக்கப்படுகின்றன; மேலும் 25,000-க்கும் மேற்பட்டோர்—பல குழந்தைகள் உட்பட—அவற்றால் முடமாகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

சிறார்களின் கதி

“போர்கள் அனைத்துக் குடிமக்களும் பங்கெடுக்கும் ஒன்றாக மாறினபோது, தங்களைவிட மூத்தவர்கள் போடும் சண்டைகளுக்கு சிறார்கள் பொதுவாக பலியாட்களாக ஆரம்பித்தனர். அதாவது, கொல்லும்போது குண்டுகளும் ஏவுகணைகளும் வயது வேறுபாடு பார்ப்பதில்லை” என்று தி இக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. “உள்நாட்டுப் போர்கள்—தற்காலங்களில் சர்வசாதாரணமானவை—பெரும்பாலும் நாடுகளை முழுமையாய் கொள்ளை கொள்கின்றன. சில இடங்களில் இப்போதெல்லாம், அடிப்படை உணவுப் பண்டங்களுக்கு கவனம் செலுத்துவதைப் போலவே சிறார்களாய் இருக்கும் போர்வீரர்களை ராணுவ சேவையிலிருந்து விடுவிப்பதற்கும் மீட்புக் குழுக்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளன. அவை எங்கே சென்றாலும், அகதிகளுக்கு மத்தியிலும், காயமுற்றவர்களுக்கு மத்தியிலும், இறந்தவர்களுக்கு மத்தியிலும் சிறார்கள் காணப்படுவதை எதிர்பார்க்கலாம்.” அனைவருமே தாங்கள் சிறார்களை நேசிப்பதாக சொல்லிக்கொள்கிற போதிலும், முன்பைவிட அதிகமாய் துன்பத்துக்கு ஆளாகுபவர்கள் அவர்களே. கடந்த ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தால் 18 வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 லட்சம் சிறார்கள் இடம் பெயர்ந்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் சிறார்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மீட்புக் குழுக்கள் மதிப்பிடுகின்றன. கூடுதலான 40 முதல் 50 லட்ச சிறார்கள் ஊனமுற்றவர்களானார்கள். “மனோரீதியிலான பாதிப்புகளைக் குத்துமதிப்பாக மட்டுமே சொல்ல முடியும்” என்று தி இக்கானமிஸ்ட் கூறுகிறது.

மணத்துறவு சர்ச்சை

“குருமார்கள் மணத்துறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுவதன் காரணமாக, ரோமன் கத்தோலிக்க சர்ச் மிகுதியான குருமார்களை இழந்துவருகிறது” என்று இஎன்ஐ புல்லட்டின்-ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. பிரேஸிலியாவில் நடைபெற்ற திருமணமான குருமார்களின் நான்காவது சர்வதேச காங்கிரஸ் கூட்டத்தில், 1,00,000 ரோமன் கத்தோலிக்க குருமார்கள் உலகமுழுவதிலும் குருத்துவத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டதாகவும் மணத்துறவை கைவிட்டுவிட்டதாகவும் அறிக்கை செய்யப்பட்டது. பிரேஸிலியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணியாற்றிவரும் ஸார்ஜே பான்ஸ்யானூ ரிபேரூ என்ற முன்னாள் மதகுரு கூறுவதன்படி, 5 குருமார்களில் ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காக குருத்துவத்திலிருந்து விலகிக்கொண்டார். பிரேஸிலில் மட்டுமே 3,500 திருமணமான குருமார்கள் இருக்கின்றனர். ரிபேரூ கூறினதாவது: “மணத்துறவு என்பது, சர்ச்சுக்கும் குருமார்களின் வாரிசுகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக உறுதிப்படுத்தப்பட்டதேயல்லாமல், பாலுறவுகளில் ஈடுபடாதவர்களால் கடவுளுடைய வார்த்தை மேம்பட்ட விதத்தில் பரப்பப்படுவதற்காக அல்ல.”

குற்றவாளி யானைகள்

“சிறார்களைப் போலவே இளம் யானைகளுக்கும், அவை யானை சமுதாயத்தின் நம்பத்தகுந்த அங்கத்தினர்களாக வேண்டுமென்றால் கண்டிப்பு தேவைப்படுகிறது” என்று நியூ சயன்டிஸ்ட் குறிப்பிடுகிறது. “தென் அமெரிக்காவின் வனவிலங்கு சரணாலயத்தில் அனாதையாக விடப்பட்ட இளம் ஆண் யானைகள் குற்றமிழைப்பவையாய் மாறியிருப்பதற்குக் காரணம், அவற்றின் மூத்த யானைகளால் கண்டிக்கப்படாமல் விடப்பட்டதே என்று வனவிலங்கு உயிரியலர்கள் கூறுகின்றனர்.” கடந்த மூன்று ஆண்டுகளில், மதம்பிடித்த யானைகள் மனிதரைத் தாக்கியிருக்கின்றன, 19 வெள்ளைக் காண்டாமிருகங்களைக் குத்திக் கொன்றிருக்கின்றன, காண்டாமிருகங்களுடன் இணைசேரவும் முயன்றிருக்கின்றன. மனிதரில் இருவர் கொல்லப்பட்டனர்; சுற்றுலா பயணிகளின் ஒரு குழுவைத் தாக்கிய குற்றத்திற்காக ஓர் யானையைச் சுடுவதற்காக அனுப்பப்பட்டிருந்த ஒரு தொழில்முறை வேட்டைக்காரரும் அவர்களில் ஒருவர். யானைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக குரூகர் தேசிய பூங்காவைச் சேர்ந்த யானைக் கூட்டத்திலிருந்த சில யானைகள் கொல்லப்பட்டன. மீந்திருந்த இளம் யானைகளின் தொகுதி அங்கிருந்து சரணாலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குற்றம் இழைத்த யானை எதுவென்று பார்த்தால் வேறு எதுவுமில்லை இந்தக் குட்டி ஆண் யானைத் தொகுதியைச் சேர்ந்த ஒரு யானையே. யானைகள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு பல காரணங்கள் இருக்கும் அதே சமயத்தில், முதிய விலங்குகளால் சரிவர கண்டிக்கப்படாதிருப்பதும் சரிவர வளர்க்கப்படாதிருப்பதும் முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் உணருகின்றனர். இது, பொதுவான வாழ்க்கைமுறையைக் கொண்ட யானைக் குடும்பங்களில் காணப்படும் முக்கிய அம்சமாய் இருக்கிறது, இதுவே அவற்றின் மூர்க்கமான நடத்தைக்கு ஓரளவு காரணமாகவாவது இருக்கிறது. இப்போது, யானைகள் குடும்பமாக வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன, அவ்வாறு செய்வதால் இளம் ஆண் யானைகள் “அவற்றுக்குத் தேவைப்படும் கடும் கண்டிப்பை அதன் பெற்றோரிடமிருந்து தொடர்ந்து பெற்றுக்கொள்ளும்” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

மோதிவிட்டு ஓட்டம்பிடிக்கும் முதல் விண்வெளி விபத்து

மோதிவிட்டு ஓட்டம்பிடிக்கும் முதல் விண்வெளி விபத்து பூமிக்கு மேல் 700 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில் நிகழ்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸெரிஸ் என அழைக்கப்படும் கோள் தாறுமாறாக குட்டிக்கரணம் போட்டது. எப்போதெனில், அதை நிலைநிறுத்தும் நீண்ட மரச்சட்டத்தை ஓர் ஆரியன் ராக்கெட்டின் பத்தாண்டுக்கால பாளம் ஒன்று இடித்தவுடன் அச் சட்டம் தூள்தூளானபிறகு அவ்வாறானது. அந்த ராக்கெட்டு அதே உயரத்தில், மணிக்கு 50,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தது. பூமியின் சுழல் பாதைகளில் குப்பைக் கூளங்கள் சேரச்சேர, அப்படிப்பட்ட மோதல்களுக்கான சந்தர்ப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. ஏற்கெனவே, விண்வெளியிலுள்ள 20,000-க்கும் மேற்பட்ட குப்பைக்கூளத் துண்டுகள் பூமியைச் சுற்றிலும் மோதிவருகின்றன. பூமிக் கோளத்துக்கு அருகிலுள்ள சுழல்பாதையிலுள்ள குப்பைகள் வளிமண்டலம் விரிவடைதல் போன்ற இயற்கை முறைகளின் மூலம் நீக்கப்படுகின்ற அதே சமயத்தில், பூமிக் கோளத்துக்குத் தொலைவிலுள்ள சுழல்பாதையில் இருக்கும் குப்பைக்கூளங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அப்படியே அங்கு இருந்துவிடலாம். அவை பிற குப்பைக்கூளத் துண்டுகளுடன் மோதுகையில், சிறுசிறு துண்டுகளாகின்றன, அவை விண்வெளி வீரர் அணியும் விண்வெளி ஆடையையோ (space suit) அல்லது ஒரு விண்வெளிக் கப்பலின் பாதுகாப்பு உறையையோ துளைத்தும் விடலாம். பெயிண்ட்டுத் துண்டுகளும்கூட ஆபத்தை விளைவிப்பவையாய் இருக்கின்றன. தற்போது, செயல்பட்டு வரும் விண்வெளிக் கப்பலுக்கு ஒன்றுக்கு நான்கு என்ற கணக்கில் செயல்படாமல் இருக்கும் விண்வெளிக் கப்பல்கள் உள்ளன; அதோடுகூட ஆற்றல் இழந்த ராக்கெட்டுகள் சுழல்பாதையில் வெடித்துச் சிதறியிருப்பது, விண்வெளியில் உள்ள கால் பங்கு குப்பைக்கூளங்களுக்குக் காரணம் என்று அறியப்பட்டிருக்கிறது.

கடற்பஞ்சுகளுக்கு அது முன்பே இருந்தன

“மனிதகுலத்தின் புத்திநுட்பம் வாய்ந்த பல கருத்துக்கள் இயற்கையின் நீடித்து நிலைத்து நிற்கும் தந்திரங்களாகவே மாறுகின்றன” என்று தி வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. “உதாரணமாக, இழைம வகை ஒளியியலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒளியை ஈர்த்து எல்லா பக்கங்களிலும் செலுத்த கண்ணாடி போன்ற இழைமங்களை விஞ்ஞானிகள் 1951-ல் ஏற்படுத்தினர். அதையே அன்டார்க்டிகாவின் ராஸ் கடலிலுள்ள ஆழ்-நீர் கடற்பஞ்சுகள் யுகயுகமாய்ச் செய்துவந்திருந்ததாகக் கண்டறியப்படுகிறது.” 100-அடி ஆழ நீரில் காணப்படும் பெரிய கடற்பஞ்சுகளின் உடலை ஒட்டி, இழைம முட்கூறுகள் இருக்கின்றன, அவை ஒளியை ஈர்த்து அதைக் கடத்தும் சக்திவாய்ந்தவை. அவற்றின் உடலின் மத்திபப் பகுதியில் வசித்துக்கொண்டு, ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் ஆல்காக்களுக்கு ஒளி கிடைக்கச் செய்வதற்கு, 90 டிகிரி கோணத்திலும்கூட ஒளியைக் கடத்த முடியும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படும் ஒளியும்கூட சேகரித்து வைக்கப்படுகிறது என்று சோதனைகள் காட்டியுள்ளன; இது, கடற்பஞ்சின் பக்கப்பகுதிகளிலுள்ள இழைம முட்கூறுகளும்கூட ஆல்காக்களுக்கு ஒளியை உணவாக அளிக்கும் திறமை உடையவை என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது.

சூதாட்டக்காரர்கள் தோற்கின்றனர்

“சூதாட்ட இல்லங்கள் (Casinos) எக்காரணத்தை முன்னிட்டும் பணத்தைத் தோற்காதிருக்கும்படியே அவற்றின் உரிமையாளர்களால் வடிவமைக்கப்படுகின்றன” என்று பிரேஸிலைச் சேர்ந்த பொருளியலர் ரிக்கார்டூ காஸெல் கூறுகிறார். “சூதாட்டத்தின் மூலம் பணத்தை ஒருவர் பெறுவதன் கணித முறைப்படியான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாய் இருக்கின்றன.” சூதாட்ட இல்லங்களுக்கு எளிதில் செல்லும் வாய்ப்பு இருப்பதானது, சூதாட்டப் பழக்கத்துக்கு அடிமைப்படும் மேலுமதிகமானவர்களையே உண்டாக்கும் என்று எச்சரிப்பவராய் காஸெல் மேலும் கூறுவதாவது: “கடின முயற்சியின்றி பணத்தைச் சம்பாதிக்கும் மாயையான எதிர்பார்ப்பு உள்ளது. அடிக்கும் அதிர்ஷ்டத்தில் தாங்கள் சீக்கிரம் பணக்காரராகிவிடும் வாய்ப்பைக் குறித்து மக்கள் கனவு காண்கின்றனர்.” மேலுமாக, சர்ச் அல்லது அரசாங்கம் காணும் குறைநிறைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது தொடர்பாக அந்த நபரைப் பற்றி வேஜா மேற்கோள் கூறுவதாவது: “நாட்டிலுள்ள மிகப் பெரிய சூதாட்ட நிறுவனம் அரசாங்கமே. மாகாண லாட்டரிகளைச் சேர்க்காமலே கூட்டிணை அரசால் நிர்வகிக்கப்படும் ஆறு வித்தியாசப்பட்ட வகை லாட்டரிகள் இருக்கின்றன. சூதாட்டத்தைச் சட்டரீதியாக்குவதைப் பற்றி சர்ச் குறைகூற முடியாது. ஏனெனில் பங்குகளுக்காக (parishes) பணம் பெறுவதற்கென பஜார்களில் சூதாட்டப் பழக்கத்தை சர்ச் முன்னேற்றுவிக்கிறது. அங்கே எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய நிலையத்தில் சர்ச் உறுப்பினர்கள் பந்தயத்தில் பணத்தைத் தோற்கின்றனர்.” காஸெல் கூறுவதன்படி, ‘உதவியை நாடாத வெறித்தனமான சூதாட்டக்காரர்கள், சிறையில் போடப்படுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற அபாயத்தில் விளைவடைவதையோ, அல்லது பைத்தியமாவதையோ, தாங்களாகவே வருவித்துக்கொள்கிறார்கள்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாம்பை பயன்படுத்தும் கொள்ளைக்காரர்கள்

நிகராகுவாவைச் சேர்ந்த மனகுவாவுக்குத் தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நகரான டிரியம்பாவில் வசிப்பவர்களை திருடர்கள் ஏமாற்றுகிறார்கள். எல் நியூவோ டியார்யோ செய்தித்தாளில் அறிக்கை செய்திருந்ததன்படி, அந்தக் கும்பல் அருகிலுள்ள வயல்களிலிருந்து சங்கிலிக் கறுப்பன் பாம்புகளைப் (rattlesnakes) பிடித்து, அவற்றின் நச்சை அகற்றிவிட்டு, பிறகு நகரின் புறப்பகுதியிலுள்ள சாலைகளில் மக்கள் பயணம் செய்யும்போது, அந்தப் பாம்புகளைக் காட்டி அவர்களைக் கடிக்கவிடப் போவதாக பயமுறுத்தி அவர்களைக் கொள்ளையடிக்கின்றனர். அந்தப் பாம்பின் விஷப்பற்களைப் பார்த்தபோது மயக்கமடைந்த ஓர் இளம்பெண், மயக்கம் தெளிந்தபோது, தன்னுடைய தங்கச் சங்கிலிகள் திருடப்பட்டிருந்ததாகக் கண்டாள். அந்தக் கும்பல் நாட்டுப்புறத்தாரிடமிருந்து உணவுப்பொருட்களையும் ரொக்கப்பணத்தையும்கூட கொள்ளையடித்திருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்