போர் பிள்ளைகளை எப்படி சீரழிக்கிறது
சியர்ரா லியோனில், நடைபெற்ற பல உள்நாட்டுப் போர்களில் ஒன்றான அந்தப்போர் 1995-ன் ஆரம்பத்தில் நடந்தது. துப்பாக்கியின் வெடிச்சத்தம் ஓய்ந்தபோது, ஏற்கெனவே போரில் பெற்றோர்களை இழந்திருந்த நான்கு வயது டெனா படுகாயமடைந்து கிடந்தாள். ஒரு துப்பாக்கி குண்டு, அவளுடைய வலது கண்ணுக்கு பின்புறம், தலையைத் துளைத்திருந்தது. அந்தக் குண்டு, அவளுடைய தலையில் தொற்றை ஏற்படுத்தி, மூளையை தாக்கி, அவளை சாகடிக்கும் என்ற அபாயம் இருந்தது.
பதினாறு மாதங்களுக்குப்பிறகு, பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், அறுவைசிகிச்சைக்காக டெனா இங்கிலாந்துக்கு விமானம் மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். அறுவை மருத்துவர்களின் ஒரு குழு, துப்பாக்கி குண்டை நீக்கியது; ஆபரேஷன் வெற்றியடைந்து, ஒரு இளம் உயிர் காப்பாற்றப்பட்டதைக் குறித்து மக்கள் சந்தோஷமடைந்தனர். இருப்பினும், டெனா சுடப்பட்டிருக்கக்கூடாத ஒரு அனாதை என்று தெரியவந்தபோது, அந்தச் சந்தோஷம் அடங்கிப்போனது.
ஆயுதங்கள், பட்டினி, நோய்
ஏதோ குறிதவறி வந்த ஒரு துப்பாக்கி குண்டுதான் டெனாவை தாக்கியது; ஆனால் அதிகளவில் பிள்ளைகள் எதேச்சையாக பலியாகிறதில்லை. அவர்கள் குறிவைத்தே தாக்கப்படுகிறார்கள். இனக்கலவரம் வெடிக்கும்போது, பெரியவர்களை கொல்வது மட்டுமே போதுமானதாக இல்லை; எதிரிகளின் பிள்ளைகளும் வருங்கால எதிரிகளாகவே கருதப்படுகிறார்கள். 1994-ல் ரேடியோ ஒலிபரப்பு ஒன்றில் ஒரு அரசியல் விளக்கவுரையாளர் சொன்னது போல்: “பெரிய எலிகளைக் கொல்வதற்கு, நீங்கள் சிறிய எலிகளைக் கொல்லவேண்டும்.”
இருப்பினும், போர் காலத்தில் இறக்கும் பிள்ளைகளில் அதிகமானவர்கள், வெடிகுண்டுக்கோ துப்பாக்கி குண்டுக்கோ பலியாவதில்லை, ஆனால் பட்டினிக்கும் நோய்க்குமே பலியாகிறார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவில் நடந்த போர்களில், உணவு மற்றும் மருத்துவ சேவைகளின் பற்றாக்குறை, போர்கள் கொன்றதைக் காட்டிலும் சுமார் 20 மடங்கு அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. அத்தியாவசியமான பொருட்களை பெறவிடாமல் செய்வதே நவீன காலங்களில் ஈவிரக்கமின்றி பயன்படுத்தப்படும் போர்யுக்தியாக இருக்கிறது. படைகள், உணவுப்பயிரை விளைவிக்கும் மிகப்பெரிய நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருக்கின்றன; தானியக் கிடங்குகளையும், குடிநீர் மூலங்களையும் தகர்த்திருக்கின்றன; நிவாரணப் பொருட்களை அபகரித்திருக்கின்றன. சுகாதார மையங்களையும்கூட அழித்து, மருத்துவ பணியாட்களை சிதறடித்திருக்கின்றன.
இத்தகைய போர்யுக்திகள் பிள்ளைகளை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்றன. உதாரணமாக, 1980-க்கும் 1988-க்கும் இடைப்பட்ட காலத்தில், போருடன் தொடர்புடைய காரணங்களுக்காக மரித்த பிள்ளைகளின் எண்ணிக்கை அங்கோலாவில் 3,30,000-மாகவும் மொஸாம்பிக்கில் 4,90,000-மாகவும் இருந்தது.
வீடும் இல்லை, குடும்பமும் இல்லை
போர், பெற்றோர்களைக் கொல்வதன்மூலம் அனாதைகளை உருவாக்குகிறது. ஆனால் குடும்பங்களைப் பிரிப்பதன்மூலமும்கூட அது அவ்விதம் செய்கிறது. வன்முறை அச்சுறுத்தலினால் உலகமுழுவதும் சுமார் 5.3 கோடி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடியிருக்கிறார்கள். அதாவது, பூமியிலிருக்கும் கிட்டத்தட்ட 115 மக்களுக்கு ஒருவர்! அதில் குறைந்தது பாதியளவாவது பிள்ளைகள் ஆவர். ஓடியொளியும் பீதியில் அடிக்கடி பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள்.
ருவாண்டாவில் நடந்த சண்டையின் விளைவாக, 1994-ன் முடிவில், 1,14,000 பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள். 1995-ல் நடந்த ஒரு சுற்றாய்வின்படி, அங்கோலாவில் ஐந்து பிள்ளைகளில் ஒன்று இவ்விதமாக பிரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பிள்ளைகளுக்கு, குறிப்பாக மிகச்சிறிய பிள்ளைகளுக்கு, போர் ஏற்படுத்தும் கலக்கத்தைக் காட்டிலும் பெற்றோருடன் சேர்ந்து இல்லாமலிருக்கும் மன அதிர்ச்சியே அதிக துயரத்தையளிக்கிறது.
கண்ணிவெடிகளால் கொல்லப்படுதல்
உலகமுழுவதும், விளையாடுவதற்கோ, கால்நடைகளை மேய்ப்பதற்கோ, விறகு பொறுக்குவதற்கோ, பயிர்செய்வதற்கோ வெளியே செல்லும் பிள்ளைகளில் லட்சக்கணக்கானோர், கண்ணிவெடிகள் வெடித்துச் சாகிறார்கள். கண்ணிவெடிகள் ஒவ்வொரு மாதமும் 800 மக்களை கொல்லுகின்றன. 64 நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 11 கோடி கண்ணிவெடிகள் நிலத்தில் புதைந்துகிடக்கின்றன. கம்போடியாவில் மட்டுமே, இதுபோன்ற கிட்டத்தட்ட 70 லட்சம் கண்ணிவெடிகள், ஒவ்வொரு பிள்ளைக்கும் இரண்டு என்ற கணக்கில் புதைந்து கிடக்கின்றன.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், பல்வேறுபட்ட உருவமைப்பையும், நிறங்களையும்கொண்ட சுமார் 340 வகையான கண்ணிவெடிகளை உற்பத்தி செய்கின்றன. சில கற்களைப் போலவும், மற்றவை அன்னாசிப்பழத்தைப் போலவும் இருக்கின்றன; இன்னும் மற்றவை சிறிய பச்சைநிற வண்ணத்துப்பூச்சிகளைப் போல, ஹெலிகாப்டரிலிருந்து தரைக்கு பஞ்சுபோல பறந்து வந்து வெடிக்காமல் கிடக்கின்றன. சில கண்ணிவெடிகள், பார்ப்பதற்கு விளையாட்டு பொருட்களைப் போல வடிவமைக்கப்பட்டு, பெண்களும் பிள்ளைகளும் அவற்றை கண்டுபிடிக்கும் வண்ணமாக பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு அருகே போடப்பட்டிருக்கின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இராணுவத்திற்கெதிரான கண்ணிவெடி ஒன்றை உற்பத்திசெய்ய சுமார் மூன்று டாலர் மட்டுமே செலவாகிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கண்ணிவெடி இருக்குமிடத்தை கண்டுபிடித்து அதை நிலத்திலிருந்து அகற்றுவதற்கு 300 டாலரிலிருந்து 1,000 டாலர் வரை செலவாகிறது. 1993-ல் சுமார் 1,00,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன; ஆனால் 20 லட்சம் புதியவை வைக்கப்பட்டன. இவை எல்லாமே ஒருபோதும் செயலிழக்காத பொறுமையான கொலையாளிகள்; இவற்றிற்கு போர்வீரனுக்கும் குழந்தைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தெரியாது; சமாதான ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்ளாமல் 50 வருடங்கள் வரைக்கும்கூட செயலிழக்காமல் இருக்கின்றன.
மே 1996-ல், ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனிவாவில், இரண்டு வருடங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பு, சர்வதேச பிரதிநிதிகள் கண்ணிவெடிகளின்மீது உலகளாவிய தடைவிதிக்கத் தவறினார்கள். சில வகை கண்ணிவெடிகளை தடைசெய்து மற்ற சிலவற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தியபோதிலும்கூட, 2001-ம் வருடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும், அடுத்த பேச்சுவார்த்தை கூட்டம் வரையிலுமாக கண்ணிவெடிகளை முழுமையாக தடைசெய்வது பற்றி மறுபரிசீலனை செய்யப்படாது. இதற்கிடையில், இங்குமங்குமாக, கண்ணிவெடிகள் மேலும் 50,000 பேரைக் கொன்று, 80,000 பேரை ஊனமாக்கும். இவர்களில் பெருமளவு பாதிக்கப்படப்போவது பிள்ளைகளே.
சித்திரவதையும் கற்பழிப்பும்
சமீபகால போர்களில், பெற்றோரைத் தண்டிப்பதற்காகவும், பெற்றோரைப் பற்றிய செய்திகளை பெறுவதற்காகவும் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர். சிலசமயங்களில், சண்டை சச்சரவுகள் நிறைந்த காட்டுமிராண்டித்தனமான வட்டாரத்துக்குள், எந்தக் காரணமுமில்லாமல் வெறுமனே பொழுதுபோக்குக்காகவும்கூட பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
கற்பழிப்பு உட்பட, பாலின வன்முறை, போர்களின்போது சர்வசாதாரணம். பால்கன் நாடுகளில் போர் நடந்தபோது, பருவவயது பெண்களை கற்பழித்து, எதிரியின் குழந்தையை பெற்றெடுக்கும்படி கட்டாயப்படுத்துவது கொள்கையாக இருந்தது. அதைப்போலவே, ருவாண்டாவிலும், குடும்ப உறவுகளை அழிப்பதற்கு போர்வீரர்கள் கற்பழிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்தினர். அதிரடித்தாக்குதல் சிலவற்றின்போது, ராணுவத் தாக்குதலைத் தப்பித்திருந்த, கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவவயதுப் பெண்ணும் கற்பழிக்கப்பட்டாள். கர்ப்பமான அநேக பெண்கள் தங்களுடைய குடும்பங்களாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டனர். சில பெண்கள் தங்கள் குழந்தைகளை கைவிட்டுவிட்டனர்; மற்றவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
உணர்ச்சிப்பூர்வ பாதிப்பு
போர்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், பெரும்பாலும் அநேக பெரியவர்களுக்கு கொடுங்கனவாக இருப்பவற்றைக் காட்டிலும் படுபயங்கரமாயிருக்கும் காரியங்களை சகித்திருக்கிறார்கள். உதாரணமாக, சரஜெவோவில், 1,505 பிள்ளைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு, கிட்டத்தட்ட அனைவருமே பீரங்கித்தாக்குதலை அனுபவித்திருந்தார்கள் என்று காட்டியது. பாதிக்கும் மேலானவர்கள் சுடப்பட்டிருக்கின்றனர்; மூன்றில் இரண்டு பங்கினர் கொல்லப்படும் தறுவாயில் இருந்திருக்கின்றனர்.
இனப்படுகொலை நடந்தபோது, 95 சதவீத ருவாண்டா நாட்டுச் சிறுவர்கள் வன்முறையையும் கொலையையும் நேரில் பார்த்திருந்தனர் என்றும் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் குடும்ப அங்கத்தினர்களை இழந்திருந்தனர் என்றும் 3,000 பிள்ளைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு கண்டறிந்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் கற்பழித்தலை அல்லது பாலின தாக்குதலை கண்கூடாக பார்த்திருந்தனர்; கொல்வதிலோ அடிப்பதிலோ மற்ற பிள்ளைகள் ஈடுபட்டதையும் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் பார்த்திருந்தனர். இத்தகைய அனுபவங்கள் பிஞ்சு மனங்களையும் இருதயங்களையும் சீரழிக்கின்றன. உணர்ச்சிப்பூர்வமாய் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைக் குறித்து முன்னாள் யுகோஸ்லாவியாவிலிருந்து வந்த ஒரு அறிக்கை இவ்விதம் குறிப்பிட்டது: “நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன . . . பயங்கரமான கனவுகளையும், திகிலூட்டும் சம்பவங்கள் திடீரென்று மனதில் தோன்றிமறைவதையும், பயத்தையும், பாதுகாப்பின்மையையும், கடும் பகையுணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.” ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையைப் பின்தொடர்ந்து, தேசிய மனநிலை பாதிக்கப்பட்டோர் சீரமைப்பு மையத்தின் (National Trauma Recovery Centre) மனோதத்துவ மருத்துவர் இவ்வாறு அறிவித்தார்: “கொடுங்கனவு, மனதை ஒருமுகப்படுத்துவதில் இடையூறு, மனச்சோர்வு மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற மனநிலை ஆகியவை பிள்ளைகளிடம் வெளிப்படும் அறிகுறிகளாக உள்ளன.”
பிள்ளைகளுக்கு எவ்விதம் உதவலாம்?
பிள்ளைகள் தங்களுடைய உணர்ச்சிகளையும் நினைவுகளையும் மனதிற்குள்ளேயே அடக்கிவைக்கும்போது, மன அதிர்ச்சி நீங்கிவிடுவதில்லை என்று அநேக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நடந்த சம்பவங்களைப் பற்றி நன்கறிந்த, பரிவுள்ள ஒரு பெரியவரிடம் பேசுவதன்மூலம் கெட்ட நினைவுகளை எதிர்த்து போராடும்போதுதான் காயம் பெரும்பாலும் ஆறத்தொடங்குகிறது. “நிஜமாகவே தொந்தரவுக்குள்ளாகியிருக்கும் பிள்ளைகளை மனம்விட்டு பேசும்படி செய்ய வைப்பதே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது” என்று மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சமூக சேவகி சொல்கிறார்.
மனப்புண்ணை ஆற்றுவதற்குரிய மற்றொரு முக்கியமான உதவியானது குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் வரும் பலமான நெருக்கமும் ஆதரவுமே. மற்ற எல்லா பிள்ளைகளைப்போலவே, போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் அன்பும், புரிந்துகொள்ளுதலும், பரிவும், தேவைப்படுகின்றன. இருப்பினும், பிள்ளைகள் அனைவரும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை அனுபவிப்பதற்கான நம்பிக்கை இருக்கிறது என்பதை நம்புவதற்கு உண்மையில் காரணம் உள்ளதா?
[பக்கம் 8-ன் பெட்டி]
அது ஒரு பந்தைப்போல இருந்தது
லாவோஸில் ஒரு சிறுமியும் அவளுடைய தம்பியும் எருமைமாட்டை மேய்ப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். அந்தப்பெண் பந்தைப்போல இருந்த ஒரு பொருளை சாக்கடையில் பார்த்தாள். அவள் அதை எடுத்து தன் தம்பியை நோக்கி வீசினாள். அது தரையில் விழுந்து வெடித்தது; அக்கணமே அவன் செத்தான்
[பக்கம் 9-ன் பெட்டி]
ஆயிரக்கணக்கானவைகளில் ஒன்றே
தன்னுடைய ஊரான அங்கோலாவில் போர் தொடங்கியபோது, அனாதையான 12 வயது மரியா கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானாள். போர் தீவிரமடைந்தபோது, மரியா தப்பியோடினாள்; 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு பாதுகாப்பான பகுதிக்கு நடந்துசென்றாள்; அங்கு தப்பியோடிவரும் பிள்ளைகளுக்கான ஒரு மையத்தில் தஞ்சம் புகுந்தாள். அவள் மிகச்சிறியவளாக இருந்ததால், சீக்கிரமாகவே கர்ப்பவேதனை அடைந்தாள்; மிகுந்த சிரமத்துடன் குறைமாதக் குழந்தையை பெற்றெடுத்தாள். அக்குழந்தை இரண்டு வாரங்களே உயிரோடிருந்தது. ஒரு வாரம் கழித்து மரியா இறந்தாள். சமீபகால போர்களில் சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்படுகிற ஆயிரக்கணக்கான பிள்ளைகளில் ஒருத்திதான் மரியா
[பக்கம் 9-ன் பெட்டி]
மனங்களும் இதயங்களும் சீரழிக்கப்படுதல்
பிள்ளைகள் அடிக்கடி வன்முறையால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்தியாவைச் சேர்ந்த எட்டுவயது ஷபானாவின் விஷயத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு அடிதடி கும்பல் அவளுடைய அப்பாவை அடித்தே கொன்றதையும், பின்பு அவளுடைய அம்மாவை வெட்டிக் கொன்றதையும் அவள் பார்த்தாள். அவளுடைய மனமும் இருதயமும், திகிலையும் இழப்பையும் மறைத்துக்கொண்டு மரத்துப்போய்விட்டன. தாழ்ந்த, உணர்ச்சியற்ற குரலில் அவள் சொல்கிறாள்: “அம்மாப்பா இல்லாதமாதிரியே தோணல. நான் அவங்கள பத்தி நினைக்கிறதேயில்ல.”