கண்ணிவெடிகள்—ஓர் உலகளாவிய அச்சுறுத்தல்
மாதாமாதம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில், ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் கண்ணிவெடிகளால் (land mines) முடமாக்கப்பட்டும் சிலர் கொல்லப்பட்டும் வருகின்றனர். இரசாயன, உயிரியல்சார்ந்த, மற்றும் அணு ஆயுத யுத்தங்களைவிட, போர் வீரர்களுக்காக வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் (antipersonnel mines) அதிக ஆட்களைக் கொன்றிருக்கின்றன அல்லது காயப்படுத்தி இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற ஆராய்ச்சி அமைப்பின்படி, கம்போடியாவில் மட்டும் கண்ணிவெடிகளால் சுமார் 30,000 பேர் முடமாக்கப்பட்டிருக்கின்றனர்.
பல்வேறு யுத்தங்களின்போதும் இந்தச் சிறிய வெடிகள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒருபோதுமே அகற்றப்படவில்லை. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் அவற்றில் சுமார் 10 கோடி பூமிக்கடியில் புதைக்கப்பட்டுக் கிடக்கின்றன என்று கணக்கிடப்படுகிறது. காலடி ஒன்று எடுத்துவைத்தாலே அவற்றை வெடிக்கச்செய்யலாம். அவை யுத்தங்களில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன, ஏனென்றால் அவற்றின் செலவு குறைவாகவும் விளைவுகள் பலமாகவும் இருந்தன. ஒரு வகை வெடியின் விலை $3 (ஐ.மா.) மட்டுமே. 700 ஸ்டீல் குண்டுகளைச் செலுத்தி, 40 மீட்டர் தூரத்திற்கு கொல்லும் மற்றொரு வகையின் விலை $27 மட்டுமே. 48 நாடுகள் இப்போது இவற்றை உற்பத்திசெய்து, அவற்றில் 340 வித்தியாசமான ரகங்களை விற்கும் அளவுக்கு அவற்றிற்கு பெருமளவு தேவை இருக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் கண்ணிவெடி அகற்றும் சேவையினரால் எத்தனை வெடி செயலற்றுப்போகச் செய்யப்படுகிறதோ அதைவிட அதிகம் புதைத்து வைக்கப்படுகிறது.
கண்ணிவெடிகளை அகற்றுவது கடினமானதும் செலவு அதிகமாகக்கூடிய பணியுமாகும். காரணம் வெடிகள் எங்கெல்லாம் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற பதிவை அநேக ராணுவங்கள் வைத்திருப்பதில்லை. மேலும் வெடிகள் அதிகமதிகம் மரத்தினாலும் பிளாஸ்டிக்கினாலும், உலோகக் கண்டுபிடிப்புக் கருவிகளிடமிருந்து (metal detectors) தப்பித்துக்கொள்ளுகிற மற்ற பொருட்களாலும் செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்யும்படி வேண்டுகோள் விடுத்த ஐ.மா. சட்டமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹி இவ்வாறு கூறினார்: “நெதர்லாந்தில், இரண்டாம் உலக யுத்தத்தில் புதைக்கப்பட்ட ஜெர்மானிய வெடிகளால் இன்றும் மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானம், கம்போடியா, அங்கோலா, போஸ்னியா போன்ற நாடுகளிலும் ஏராளமான வெடிகள் புதைக்கப்பட்டுள்ள மற்ற எல்லா நாடுகளிலும் இது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.”
வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகம் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும். அவருடைய வார்த்தை இவ்வாறு வாக்களிக்கிறது: “[கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [யுத்த] இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:9.