பயம்—இப்போது எங்குமிருந்தாலும் என்றுமிராது!
ப யம் அதிக சர்வசாதாரணமான காரியமாக இருப்பதைக் குறித்து கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும் மாணவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தில் மிகவும் விரிவாக பரப்பி வந்திருக்கிறபடி, நாம் மனித சரித்திரத்திலேயே மிகவும் குறிப்பிடத்தக்க காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகுதியான அத்தாட்சிகள் இருக்கின்றன. அது பரவலாகக் காணப்படும் பயத்தால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் வெகு காலத்திற்கு முன்பு இயேசு நம்முடைய காலத்தைப் பற்றி குறிப்பிட்டு அல்லது சுட்டிக் காண்பித்தார். அவருடைய வந்திருத்தலைக் குறித்தும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு அல்லது ‘உலகத்தின் முடிவைக்’ குறித்தும் அப்போஸ்தலர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.—மத்தேயு 24:3.
இயேசு முன்னறிவித்தவற்றின் ஒரு பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.”—லூக்கா 21:10, 11.
‘பயங்கரமான தோற்றங்களை’ப் பற்றி அவர் கொடுத்த குறிப்பை நீங்கள் கவனித்தீர்களா? பின்னர் அதே பதிலைக் கொடுக்கும்போது பயத்தைக் குறித்து இயேசு மற்றொரு குறிப்பிடத்தக்க காரியத்தைக் குறிப்பிட்டார், அது உங்களையும் உங்களுக்கு அன்பானவர்களையும் நேரடியாகவும் தீர்மானிக்கும் வகையிலும் பாதிக்கக்கூடும். ஆனால் அதற்கு கவனம் செலுத்துவதற்கு முன்பு, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு சில கூடுதலான அத்தாட்சிகளை சுருக்கமாக மறுபடியும் பார்க்கலாம்.—2 தீமோத்தேயு 3:1.
போரைப் பற்றிய நியாயமான பயம்
இராணுவ சண்டைகள் பூமியில் பெரும்பாலான பகுதிகளை பாழ்படுத்தி விட்டுச்சென்றிருக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் நடந்த மத்திப கிழக்கத்திய சண்டையின் முடிவில் எண்ணெய்க் கிணறுகள் எரிந்துபோகும்படி விடப்பட்டதை, “மனித கைகளினால் செய்யப்பட்ட மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு” என்று ஜியோ பத்திரிகை அழைத்தது. போர்கள் கோடிக்கணக்கான ஆட்களை கொலை செய்திருக்கின்றன அல்லது முடமாக்கியிருக்கின்றன. முதல் உலகப் போரில் லட்சக்கணக்கான இராணுவ மற்றும் பொதுமக்களின் சாவுகளுக்கு மேலாக, இரண்டாம் உலகப் போரில் 5.5 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். உலகத்தின் முடிவு அருகாமையில் உள்ளது என்பதற்குக் கொடுக்கப்பட்ட அடையாளத்தின் பாகமாக “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” என்று இயேசு கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள்.
இனங்களை அழிப்பதற்கு மனிதன் எடுத்த முயற்சிகளையும்கூட நாம் கவனியாமல் விட்டுவிட முடியாது—முழு இனங்களை அல்லது ஜனக்கூட்டத்தை அழித்தல். இலட்சக்கணக்கான ஆர்மீனியர்கள், கம்போடியர்கள், யுக்ரேனியர்கள், யூதர்கள், ருவாண்டர்கள், இன்னும் மற்றவர்கள், 20-ம் நூற்றாண்டின்போது மனிதவர்க்கத்தை தடுமாற்றமடையச் செய்யும் அளவுக்கு ஏற்பட்ட இரத்தப்பழியைக் கூட்டியுள்ளது. மத தீவிரவாதிகளால் தூண்டுவிக்கப்படும் இன விரோதங்கள் உள்ள நாடுகளில் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆம், போர்கள் இன்னும் பூமியை முழுவதுமாக மனித இரத்தத்தால் நனைத்துக் கொண்டிருக்கின்றன.
சண்டை முடிவடைந்த பின்பும்கூட நவீன-நாளைய போர்கள் ஆட்களின் உயிர்களைக் குடிக்கின்றன. உதாரணமாக, நிலத்தில் கண்ணிவெடிகள் கண்மூடித்தனமாக புதைக்கப்படும் விஷயத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற ஓர் ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கையின்படி, “உலகமுழுவதும் சுமார் பத்து கோடி கண்ணிவெடிகள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.” இத்தகைய கண்ணிவெடிகள் அவை உபயோகப்படுத்தப்பட்ட போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பின்பும்கூட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு தொடர்ந்து ஆபத்தானவையாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 60-க்கும் மேற்பட்ட தேசங்களில் இத்தகைய கண்ணிவெடிகளால் ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உயிருக்கும் உறுப்புகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கண்ணிவெடிகள் ஏன் படிப்படியாக நீக்கப்படுவதில்லை? தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “அப்புறப்படுத்தும் பணியின் மூலம் நீக்கப்படும் கண்ணிவெடிகளைவிட மிகவும் அதிகமான எண்ணிக்கையில் கண்ணிவெடிகள் தினந்தோறும் புதைக்கப்படுகின்றன, எனவே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.”
இந்த கண்ணிவெடிகளை விற்பது, “வருடத்துக்கு 20 கோடி டாலர்களை ஈட்டும்” ஒரு வியாபாரமாக ஆகிவிட்டிருக்கிறது என்று அந்த 1993 செய்தித்தாள் கட்டுரை அறிக்கை செய்தது. இவ்வியாபாரத்தில், “340 விதமான” கண்ணிவெடிகளை “ஏற்றுமதி செய்துவரும் 48 தேசங்களில் உள்ள சுமார் 100 கம்பெனிகளும் அரசாங்க ஸ்தாபனங்களும்” உட்பட்டுள்ளன. சில கண்ணிவெடிகள் பிள்ளைகளுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றுவதற்கு விளையாட்டுப் பொருட்களைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே எவ்வளவு பேய்த்தனமானது! முடமாக்கவும் கொல்லவும் கபடமற்ற பிள்ளைகளை வேண்டுமென்றே குறிவைப்பதை கற்பனை செய்து பாருங்கள்! “பத்து கோடி பயங்கர இயந்திரங்கள்” என்ற தலைப்பைக் கொண்ட தலையங்கம், இத்தகைய கண்ணிவெடிகள் “இரசாயன யுத்தம், தீங்கிழைக்கும் நுண்மங்கள் யுத்தம் மற்றும் அணு யுத்தத்தைக் காட்டிலும் அதிக அளவில் மக்களைக் கொன்றிருக்கின்றன அல்லது முடமாக்கியிருக்கின்றன,” என்று குறிப்பிட்டது.
ஆனால் உலக சந்தைகளில் விற்கப்படும் மரணத்தை விளைவிக்கும் பொருட்கள் கண்ணிவெடிகள் மட்டுமல்ல. ஆயுதங்களை விற்பனை செய்யும் பேராசைமிக்க வியாபாரிகள் உலகமுழுவதும் பல கோடி டாலர் வியாபாரத்தைச் செய்து வருகின்றனர். ஐக்கிய மாகாணங்களில் உள்ள பாதுகாப்புத் தகவல் மையம் வெளியிடும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை (ஆங்கிலம்) என்ற பிரசுரம் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “[முதன்மையான தேசங்களில் ஒன்று], கடந்த பத்தாண்டுகளில் 13,500 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது.” வலிமை வாய்ந்த அதே நாடு “6,300 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள், இராணுவ நிர்மாணிப்புகள், பயிற்சி ஆகியவற்றை 142 தேசங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.” இவ்விதமாக எதிர்கால யுத்தங்களுக்கும் மனித துன்பங்களுக்கும் விதைகள் போடப்படுகின்றன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என்ற பிரசுரத்தின்படி, “1990-ம் ஆண்டில் மட்டும் போர்கள் 50 இலட்சம் ஆட்களைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருந்து, 5,000 கோடி டாலர் செலவிடப்படும்படி செய்து, 2.5 லட்சம் ஜனங்களைக் கொன்றது. அவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தில் ஈடுபடாத நபர்கள்.” அந்த ஆண்டு முதற்கொண்டு செய்யப்பட்டு வரும் அநேக போர்களைப் பற்றி நீங்கள் நிச்சயமாகவே சிந்தித்துப் பார்க்கலாம், அவை பயத்தையும் மரணத்தையும் இன்னும் லட்சக்கணக்கானோருக்கு கொண்டு வந்திருக்கின்றன!
பூமியையும் அதன் உயிரினங்களையும் கூடுதலாக கெடுத்தல்
பேராசிரியர் பேரி காமனர் எச்சரிக்கிறார்: “பூமி தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தாமல் இருந்தால், இக்கோளம் மனித உயிர்வாழ்வுக்கு தகுதியான இடமாக இருப்பதை இறுதியில் இழந்துவிடும்.” பிரச்சினை என்னவென்றால், அறியாமை அல்ல, ஆனால் வேண்டுமென்றே காட்டப்படும் பேராசை என்று அவர் தொடர்ந்து சொல்கிறார். நம்முடைய நீதியான, அன்பான கடவுள் இந்த நிலையை என்றைக்குமாக பொறுத்துக்கொண்டு, மாசுபடுத்தலைக் குறித்து அதிகமாக பயப்படும் நிலையில் நம்மை விட்டுவிடுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பூமி கொள்ளையடிக்கப்படுவது, கொள்ளையடிப்பவர்களோடே ஒரு நீதி விசாரணைக்காகவும், அதற்குப் பிறகு தெய்வீக மறு சீரமைப்பு இக்கோளத்தில் நடைபெற வேண்டும் என்றும் கூக்குரலிடுகிறது. ‘உலக முடிவைக்’ குறித்து இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் கொடுத்த பதிலில் இது ஒரு பகுதியாக இருக்கிறது.
கடவுள் எப்படி அந்தக் கடைசி தீர்ப்பைக் கொண்டுவருவார் என்பதை நாம் சிந்திப்பதற்கு முன்பு, மனிதனுடைய பதிவை நாம் கூடுதலாக ஆராய்வோம். மனிதன் செய்திருக்கும் தூய்மைக்கேடு பட்டியலில் ஒரு பகுதியை சிந்திப்பதும்கூட வருத்தமுண்டாக்குகிறது: அமில மழை, மரங்களை வெட்டி வீழ்த்தும் பேராசையான பழக்கங்களால் முழு காடுகளையும் அழித்துவிடுதல்; அணு-ஆற்றல் கழிவுகள், நச்சு இரசாயனப் பொருட்கள், சுத்தப்படுத்தப்படாத கழிவுநீர் ஆகியவற்றை கவலையீனமாக குவித்து வைப்பது; பாதுகாப்பான ஓசோன் மண்டலத்தின் ஆற்றலை பலவீனப்படுத்துதல், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை கவலையீனமாக பயன்படுத்துதல்.
வியாபார பேராசைகள், இலாபத்திற்காக மற்ற வழிகளிலும் பூமியை அசுத்தப்படுத்துகின்றன. தினந்தோறும் டன் கணக்கான கழிவுப்பொருட்கள் ஆறுகளிலும் கடல்களிலும் காற்றிலும் மண்ணிலும் கொட்டப்படுகின்றன. விண்வெளிக் கலங்களிலிருந்து உதிரும் பொருட்களினால் விஞ்ஞானிகள் விண்வெளியைக் குப்பையால் நிரப்பி, அதை அதற்குப் பிறகு சுத்தம் செய்யாதது போல் தோன்றுகிறது. பூமியைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் இந்த விண்வெளிக் குப்பைக்கூளத்தால் பூமி சூழப்பட்டு வருகிறது. பூமி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்படி கடவுள் செய்திருக்கும் இயற்கையான வழிமுறைகள் இல்லையெனில், நம்முடைய நிலவுலகஞ்சார்ந்த வீடு உயிரினங்களை ஆதரிக்க முடியாது, மனிதன் அவன் போடும் குப்பையினாலேயே எப்போதோ மூச்சுத் திணறி செத்துப் போயிருப்பான்.
மனிதன் தன்னையும் அசுத்தப்படுத்திக் கொள்கிறான். உதாரணமாக, புகையிலை மற்றும் போதை மருந்துகளின் துர்ப்பிரயோகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஐக்கிய மாகாணங்களில் இத்தகைய போதைமருந்துகளின் துர்ப்பிரயோகம் “தேசத்தின் முதலாவது சுகாதாரப் பிரச்சினையாக” குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கென அத்தேசம் ஆண்டொன்றுக்கு 23,800 கோடி டாலரை செலவழிக்கிறது, இதில் 3,400 கோடி டாலர் “தேவையற்ற [அதாவது, தவிர்க்கப்படக்கூடிய] ஆரோக்கிய கவனிப்பிற்காக” செலவிடப்பட்டது. பணம் மற்றும் உயிர்கள் சம்பந்தமாக நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தில் புகையிலையின் விலை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தங்களுடைய உரிமை என்பதாக அநேகர் வற்புறுத்தும் எதையும் அனுமதிக்கும் நெறிதவறிய வாழ்க்கைபாணிகள், சாவுக்கேதுவான பால்வினை நோய்களின் பயங்கர விளைவுகளை உண்டுபண்ணி அநேகருக்கு அகால மரணத்தை வருவிக்கின்றன. பெருநகர் செய்தித்தாள்களில் வெளிவரும் இறப்பு செய்தி அறிக்கைகள் இப்போது தங்கள் 30 அல்லது 40 வயதுகளில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் காட்டுகிறது. ஏன்? பெரும்பாலானோருடைய விஷயத்தில் அவர்களுடைய அழிவுக்கேதுவான வாழ்க்கைபாணிகளின் விளைவுகளை இறுதியில் அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்ததன் காரணமாகவே. பாலின நோய்களிலும் மற்ற நோய்களிலும் இப்படிப்பட்ட பெரும் வருத்தம் தரும் அதிகரிப்பும்கூட இயேசுவின் தீர்க்கதரிசனத்துக்கு பொருத்தமாயிருக்கிறது, ஏனென்றால் ‘பல இடங்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்று அவர் சொன்னார்.
இருப்பினும், மிக மோசமாக மாசுபட்டிருப்பது மனித மனமும் மனநிலையுமே. இம்மட்டும் குறிப்பிட்ட எல்லாவிதமான தூய்மைக்கேட்டையும் நீங்கள் மறுபார்வையிட்டால், அவற்றில் பெரும்பாலானவை மாசுபட்ட மனங்களினால் ஏற்பட்டிருக்கும் விளைவே என்பது உண்மையல்லவா? கொலைகள், கற்பழிப்புகள், களவுகள், மனிதர்கள் ஒருவருக்கொருவர் விளைவித்துக்கொள்ளும் வன்முறைகள் ஆகியவற்றின் வடிவில் நோயுற்ற மனங்கள் விளைவித்திருக்கும் பேரழிவைப் பாருங்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகள், மனமும் ஆவிக்குரியத்தன்மையும் கறைபட்டிருப்பதன் ஓர் அறிகுறியாக உள்ளது என்பதையும்கூட அநேகர் கண்டுணர்கின்றனர்.
இளைஞரின் மனப்பான்மைகளில் இத்தகைய நிலையை நாம் அதிகம் காண்கிறோம். பெற்றோரின் அதிகாரத்துக்கும் மற்ற அதிகாரங்களுக்கும் காட்டப்படும் அவமரியாதை, குடும்ப சீர்குலைவுக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் புறக்கணிப்பதற்கும் வழிவகுக்கிறது. இவ்வாறு அதிகாரத்தின் பேரில் இளைஞர் ஆரோக்கியமுள்ள பயமின்றி இருப்பது, அவர்கள் ஆவிக்குரியத் தன்மையின்றி இருப்பதோடு நேரடியாக தொடர்புள்ளதாய் இருக்கிறது. எனவே, பரிணாமக் கொள்கை, நாத்திகம், விசுவாசத்தைக் குலைக்கும் மற்ற கொள்கைகள் போன்றவற்றைக் கற்பிப்பவர்கள் அதிகமான குற்றப்பழியை சுமக்கின்றனர். மேலும், தங்களுடைய போதனை நவீனமாயும் ‘சரியாகவும்’ இருக்கவேண்டும் என்ற விருப்பத்தினால் கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்ற மறுத்திருக்கும் பல மத போதனையாளர்களும்கூட பழியை சுமக்கின்றனர். உலக ஞானத்தில் ஊறியிருக்கும் அவர்களும் மற்றவர்களும் முரண்படும் மனித தத்துவங்களைப் போதிக்கின்றனர்.
இன்று விளைவுகள் தெளிவாக இருக்கின்றன. மக்கள் கடவுள் பேரிலும் அயலான் பேரிலுமுள்ள அன்பினால் அல்ல, பேராசையாலும் விரோதத்தாலும் தூண்டுவிக்கப்படுகின்றனர். விரிவாகப் பரவியுள்ள ஒழுக்கயீனமும் வன்முறையும் நம்பிக்கையற்ற நிலையுமே அவர்கள் அறுக்கும் கெட்ட கனிகள் ஆகும். விசனகரமாக இது நேர்மையான ஆட்களுக்கு பயத்தை உண்டாக்குகிறது, மனிதன் தன்னையும் இக்கிரகத்தையும் அழித்துவிடுவான் என்ற பயத்தையும்கூட ஏற்படுத்துகிறது.
அது மோசமடையுமா அல்லது மேம்படுமா?
பயத்தைப் பற்றிய விஷயத்தில் சமீப எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது? பயம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகுமா அல்லது அது மேற்கொள்ளப்படுமா? இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் கூறியவற்றை நாம் மறுபடியும் கவனிப்போம்.
சமீப எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு காரியத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்—மிகுந்த உபத்திரவம். அவருடைய வார்த்தைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.”—மத்தேயு 24:29, 30.
ஆகையால் மிகுந்த உபத்திரவம் விரைவில் ஆரம்பிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதன் முதல் பாகம் பூமி முழுவதிலுமுள்ள பொய் மதத்தின் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுக் காண்பிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதோவொரு வகையான வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் உட்பட அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அதற்குப் பின்பு வரும். கோடிக்கணக்கான ஜனங்கள் மீது என்ன பாதிப்பு இருக்கும்?
இயேசு கொடுத்த பதிலுக்கு இணையான ஒரு பதிவை சிந்தித்துப் பாருங்கள், அங்கே நாம் விரிவாக்கப்பட்ட தீர்க்கதரிசன குறிப்புகளைக் காண்கிறோம்:
“சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26.
அது இனிமேல் நடக்கவிருக்கிறது. ஆனால் அப்போது எல்லா மானிடர்களுமே சோர்ந்து போகும் அளவுக்கு அப்படிப்பட்ட பயத்தில் இருக்கமாட்டார்கள். அதற்கு மாறாக இயேசு சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28.
அவர் அந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளை தம்மை உண்மையாய் பின்பற்றினவர்களிடம் தெரிவித்தார். மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டம் அருகாமையில் உள்ளது என்பதை அறிந்திருக்கிறபோதிலும் பயத்தினால் சோர்வடைந்தோ ஸ்தம்பித்தோ போவதற்கு மாறாக, அவர்கள் பயமின்றி தங்கள் தலைகளை உயர்த்துவதற்கு காரணத்தைக் கொண்டிருப்பர். ஏன் பயப்படுவதில்லை?
ஏனென்றால் இந்த ‘மிகுந்த உபத்திரவம்’ முழுவதிலுமிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:14) நாம் தப்பிப்பிழைப்பவர்கள் மத்தியில் இருந்தோம் என்றால், கடவுளுடைய கைகளிலிருந்து ஈடிணையற்ற ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம் என்று இதை வாக்களிக்கும் பதிவு சொல்கிறது. இயேசு “இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.”—வெளிப்படுத்துதல் 7:16, 17.
அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிப்பவர் கள்—அதில் நாமும் சேர்த்துக்கொள்ளப்படலாம்—இன்றைக்கு ஜனங்களை தொந்தரவுபடுத்தும் பயங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும், அவர்களுக்கு பயமே இருக்காது என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் நல்லதும் ஆரோக்கியமானதுமான பயம் ஒன்று உள்ளது என்பதை பைபிள் காண்பிக்கிறது. இது என்ன என்பதையும், இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும் என்பதையும் பின்வரும் கட்டுரை சிந்திக்கும்.
[பக்கம் 8-ன் படம்]
அணுகி வந்துகொண்டிருக்கும் புதிய உலகுக்காக யெகோவாவின் வணக்கத்தார் சந்தோஷத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
Pollution: Photo: Godo-Foto; rocket: U.S. Army photo; trees burning: Richard Bierregaard, Smithsonian Institution