பயம்—நண்பனா அல்லது எதிரியா?
“நான் எப்படி இறந்துபோக வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன். என்னை ஒரு துப்பாக்கியினால் சுடுவதை விரும்புவதில்லை, அப்படி என்னை சுட்டார்கள் என்றால், இங்கு நேராக என் தலையின் மீது சுடுவதை விரும்புகிறேன், ஏனென்றால் நான் அப்போது உடனடியாக இறந்து விடுவேன்.”
இவ்வாறு ஒரு 14-வயது பெண் சொல்வதை லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஒருவர் கேட்டார். சமீபத்தில் நடந்த கொலைகளைக் குறித்து—இளைஞர் பெரியவர்களையும் மற்ற இளைஞரையும் கொலை செய்வதைக் குறித்து—அவர் மாணவர்களை பேட்டி கண்டு கொண்டிருந்தார். அந்த அறிக்கை, “பயம் நிறைந்த உலகம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
பெரும்பாலான ஆட்கள் பயம் நிறைந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாகவே அறிந்திருக்கிறீர்கள். எதைப் பற்றிய பயம்? ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான பயத்தைப் பற்றி குறிப்பிடுவது கடினமானதாய் இருக்கும். உங்களுடைய நண்பர்கள் அல்லது உங்களுடைய பிராந்தியத்தில் உள்ள அநேகர் பயப்படும் விஷயங்களை நீங்கள் பக்கத்தில் உள்ள பெட்டியில் காணமுடிகிறதா என்பதைப் பாருங்கள். இந்தப் பெட்டி நியூஸ்வீக் நவம்பர் 22, 1993, பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, “10 முதல் 17 வயது வரை உள்ள 758 பிள்ளைகளையும் அவர்களோடுகூட அவர்களுடைய பெற்றோரையும் சேர்த்து” எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வின் முடிவுகளை அது காண்பிக்கிறது.
அந்த இளைஞரை இப்போது பேட்டி கண்டால், அவர்கள் பயப்படுவதற்கு பூகம்பம் போன்ற கூடுதலான காரணங்களை ஒருவேளை குறிப்பிடலாம். ஜனவரி 1994-ல் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட நாசகரமான பூகம்பத்தைப் பின்தொடர்ந்து டைம் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “அதற்குப் பின் ஏற்பட்ட மன அதிர்ச்சிக் கோளாறின் அறிகுறிகளுள், கடந்தகால அனுபவம் திடீரென தெளிவாக வருதல், மனக்கிலி, ஒருவருடைய வாழ்க்கை மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதைக் குறித்து அளவுக்கு மீறி விழிப்பாயிருக்கும் நிலையும் கோபமும்.” பூகம்பம் ஏற்பட்ட இடத்தை விட்டு இடம் மாறிச்செல்ல வேண்டுமென்று தீர்மானித்திருந்த ஒரு தொழில் அதிபர் இவ்வாறு சொன்னார்: “சேதம் எதுவுமில்லை. பயம்தான் காரணம். நீங்கள் உங்கள் ஷூக்களை போட்டுக்கொண்டு கீழ்த்தளத்திலுள்ள படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் தூங்குவதில்லை. அங்கு உட்கார்ந்துகொண்டு பூகம்பம் சம்பவிப்பதற்காக ஒவ்வொரு இரவும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். அது கெட்ட செய்தியாய் இருக்கிறது.”
“தொடர்ச்சியாக நடந்த பேராபத்துக்கள் ஜப்பானியர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும்படி விட்டுச்சென்றது” என்று டோக்கியோவிலிருந்து ஏப்ரல் 11, 1995 அன்று வந்த அறிக்கைக்கு தலைப்பு கொடுக்கப்பட்டது. அது சொன்னது: “நரம்பு விஷவாயு நோய்த்தாக்கம் . . . குறிப்பாக ஜப்பானியர்களின் மனதுக்கு ஒரு பலத்த அடியாக இருந்தது, ஏனென்றால் அது தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களின் பாகமாக இருந்தது, அது ஒட்டுமொத்தமாக சேர்ந்து எதிர்காலத்தைப் பற்றி அடிப்படையான புதிய அநிச்சயங்களை உருவாக்கியது. . . . பகலாயிருந்தாலும் இரவாயிருந்தாலும் ஒரு சமயத்தில் பாதுகாப்பான தெருக்கள் என்று அறியப்பட்டிருந்த தெருக்களில் இப்போது ஜனங்கள் பாதுகாப்பாய் உணருவதே இல்லை.” வயதானவர்கள் மட்டுமே பயப்படுவது கிடையாது. “இளைஞர் மத்தியில் குறிப்பாக இக்கவலை . . . அதிகக் கடுமையாக உள்ளது, ஏனென்றால் அவர்களுக்கு பெரும்பாலும் எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து தெளிவான எண்ணம் இருப்பதில்லை என்று [சேஜோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த] பேராசிரியர் இஷிக்காவா சொன்னார்.”
“சமாளிக்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட திகிலான சம்பவம் ஒன்று பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் மூளையின் வேதியியலை மாற்றியமைத்து, அண்ணீரக இயக்குநீருக்கு ஜனங்களை அதிக கூருணர்வுள்ளதாக ஆக்கக்கூடும்” என்று அத்தாட்சிகள் குறிப்பிடுகின்றன. பயம் நிறைந்த சூழ்நிலை ஒன்றை மூளை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயற்சிசெய்து கொண்டிருக்கின்றனர்—நாம் எவ்வாறு விவரங்களை மதிப்பிட்டு பயத்தோடு பிரதிபலிக்கிறோம். பேராசிரியர் ஜோசஃப் லடூ எழுதினார்: “ஒரு சூழ்நிலை ஒரு சிருஷ்டியை பயத்தைப் பற்றி அறிந்துகொள்ளும்படி தூண்டும் நரம்பு வழிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம், இந்த நினைவாற்றல் முறை பொதுவாக இயங்கும் விதங்களைப் பற்றி முடிவுசெய்ய நாங்கள் நம்புகிறோம்.”
ஆனால் நம்மில் பெரும்பான்மையர் பயத்துக்கு வேதியியல் அல்லது நரம்பு அமைப்பைச் சார்ந்த அடிப்படையை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாய் இல்லை. நாம் ஏன் பயப்படுகிறோம்? நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? ஏதாவது பயம் இருப்பது நல்லதா? போன்ற கேள்விகளுக்கான பதில்களில் நாம் மெய்யாகவே அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருக்கலாம்.
சில சமயங்களில் பயம் உங்களுக்கு உதவக்கூடும் என்பதை நீங்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள். உதாரணமாக, உங்களுடைய வீட்டை நோக்கி நீங்கள் நெருங்கி சென்றுகொண்டிருக்கையில் இருட்டாக உள்ளது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் கதவை இறுக்கமாக மூடி வைத்திருந்தபோதிலும் கதவு சிறிது திறந்து உள்ளது. ஜன்னல் வழியாக அசைந்துகொண்டிருக்கும் நிழல்களை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போல் உங்களுக்குத் தோன்றுகிறது. ஏதோவொன்று அதிக தவறாக இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உடனடியாக விறைப்பாக ஆகிவிடுகிறீர்கள். ஒருவேளை ஒரு திருடனோ அல்லது கத்தியை-பிடிப்பில் வைத்திருக்கும் அழையாது உள்ளே நுழைந்த ஒருவரோ உள்ளே இருக்கலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப்பற்றி உங்களுக்கு இயற்கையாக இருக்கும் பயம், ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் கவனமின்றி செல்வதிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடும். நீங்கள் தீங்கை எதிர்ப்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கோ அல்லது உதவியைப் பெற்றுக்கொள்வதற்கோ பயம் உங்களுக்கு உதவக்கூடும். அப்படிப்பட்ட உதாரணங்கள் அநேகம் உள்ளன: உயர் மின் அழுத்தத்தைக் குறித்து உங்களை எச்சரிக்கும் ஒரு அறிவிப்பு; உங்களுடைய பிராந்தியத்தில் ஒரு புயல் விரைவாக வருவதைக் குறித்து சொல்லும் ஒரு வானொலி அறிவிப்பு; ஜனக்கூட்டம் நிறைந்த சாலையில் நீங்கள் காரை ஓட்டிச்செல்கையில் உங்களுடைய காரிலிருந்து புறப்படும் ஊடுருவிச்செல்லும் இயந்திர சப்தம்.
சில விஷயங்களில் பய உணர்வு நிச்சயமாகவே ஒரு நண்பனாக இருக்கக்கூடும். அது நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள அல்லது ஞானமாக செயல்பட நமக்கு உதவி செய்யக்கூடும். ஆனால் எப்போதும் பயந்துகொண்டே இருத்தல் அல்லது கடுமையான பயம் உண்மையில் ஒரு நண்பனாக இருப்பதில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அது ஒரு எதிரி. அது குறுமூச்சு வாங்குதல், இருதய படபடப்பு, மயக்கம், நடுக்கம், குமட்டல் உணர்ச்சி, ஒருவருடைய சூழ்நிலையிலிருந்து பிரிந்து இருப்பதைப் போன்ற உணர்வு ஆகியவற்றைக் கொண்டுவரக்கூடும்.
நம்முடைய காலத்தில் பூமியின் மீது அச்சந்தரும் சம்பவங்களும் கடும் பயமும் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படும் என்று பைபிள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டதை அறிவது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கும். அது ஏன் அவ்வாறு இருக்கிறது, அது உங்களுடைய வாழ்க்கையிலும் சிந்தனையிலும் என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்? பைபிளின் நோக்குநிலையிலிருந்து, குறிப்பாய் உதவியளிப்பதாயும், நல்லதாயும் உள்ள அனுதின பயம் ஒன்று உள்ளது என்று ஏன் சொல்லலாம்? நாம் அதைக் காண்போம்.
[பக்கம் 3-ன் பெட்டி]
தங்களையும் தங்கள் குடும்பங்களையும் எது அதிகமாக கவலைப்படுத்துகிறது என்று கேட்டபோது பின்வருபவற்றைக் குறித்து பெரியவர்களும் பிள்ளைகளும் பயப்படுவதாக சொல்கின்றனர்:
பிள்ளைகள் பெற்றோர்
56% குடும்ப அங்கத்தினருக்கு எதிராக வன்முறையான குற்றச்செயல் 73%
53% வயதுவந்தவர் ஒருவர் வேலை இழந்துவிடுதல் 60%
43% உணவுப் பொருட்கள் வாங்கமுடியாத நிலை 47%
51% மருத்துவ செலவுகளைத் தாங்கமுடியாத நிலை 61%
47% தங்குவதற்கு இடம் பெறமுடியாத நிலை 50%
38% போதை மருந்து பிரச்சினையையுடைய ஒரு குடும்ப அங்கத்தினர் 57%
38% அவர்களுடைய குடும்பம் ஒன்றாக சேர்ந்து இருப்பதில்லை 33%
தகவல் மூலம்: நியூஸ்வீக், நவம்பர் 22, 1993