யெகோவாவுக்குப் பயப்படுவதற்கேற்ற இருதயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
“எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் [“இருதயத்தை அவர்கள் வளர்த்தால்,” Nw] நலமாயிருக்கும்.”—உபாகமம் 5:29.
1. ஜனங்கள் ஒருநாள் பயத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என எப்படி நிச்சயமாக இருக்கலாம்?
பயம்—மனிதகுலத்தை நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்திருக்கிறது. பசி, நோய், குற்றச்செயல், போர் ஆகியவற்றைப் பற்றிய பயம், பெரும்பாலோரை சதா கவலைக் கடலில் ஆழ்த்துகிறது. இதன் காரணமாகவே, மனித உரிமைகளுக்கான அனைத்துலக அறிக்கை, அனைவரும் பயத்திலிருந்து விடுதலை பெற்ற ஓர் உலகை ஸ்தாபிக்க விரும்புவதாக அதன் முகப்புரையில் குறிப்பிடுகிறது.a மனித முயற்சிகளால் இல்லாவிட்டாலும், அத்தகைய உலகம் வருமென கடவுளே நமக்கு உறுதியளிப்பது சந்தோஷத்திற்குரியது. நீதி வாசம் பண்ணும் புதிய உலகில், ‘தம்முடைய ஜனங்களை பயப்படுத்துவார் எவரும் இருக்க மாட்டார்கள்’ என தீர்க்கதரிசி மீகாவின் மூலம் யெகோவா நமக்கு வாக்குறுதி அளிக்கிறார்.—மீகா 4:4.
2. (அ) கடவுளுக்குப் பயப்படும்படி வேதவசனங்கள் நம்மை எவ்வாறு ஊக்குவிக்கின்றன? (ஆ) நாம் கடவுளுக்கு பயப்படுவதன் அவசியத்தை கலந்தாலோசிக்கையில் என்ன கேள்விகள் எழலாம்?
2 மறுபட்சத்தில், பயம் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கலாம். யெகோவாவுக்குப் பயப்படும்படி அவருடைய ஊழியர்களை வேதவசனங்கள் திரும்பத் திரும்ப ஊக்குவிக்கின்றன. ‘உன் தேவனாகிய [யெகோவாவுக்கு] பயந்து, அவருக்கே ஆராதனை செய்ய’ வேண்டும் என இஸ்ரவேலரிடம் மோசே கூறினார். (உபாகமம் 6:13) “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” என நூற்றாண்டுகளுக்குப் பின் சாலொமோன் எழுதினார். (பிரசங்கி 12:13) அதேவிதமாக, தேவதூதரின் மேற்பார்வையில் நடைபெறும் சாட்சிகொடுக்கும் வேலையில், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என எல்லாரையும் நாம் ஊக்குவிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 14:6, 7) யெகோவாவுக்குப் பயப்படுவதோடுகூட, கிறிஸ்தவர்கள் அவரை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும். (மத்தேயு 22:37, 38) கடவுளை நேசிக்கும் அதேசமயத்தில் நம்மால் எவ்வாறு அவருக்குப் பயப்பட முடியும்? அன்புள்ள கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? தேவபயத்தை வளர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகளை பெறுகிறோம்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைப் பெற, தேவபயம் எதை அர்த்தப்படுகிறது, இந்த பயம் எவ்வாறு யெகோவாவுடன் நாம் கொண்டுள்ள உறவுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதை முதலாவது புரிந்துகொள்ள வேண்டும்.
மலைப்பும், பயபக்தியும், பயமும்
3. தேவபயம் எதை அர்த்தப்படுத்துகிறது?
3 தேவபயம் என்பது தங்கள் படைப்பாளரிடம் கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய ஓர் உணர்வு. இந்தப் பயத்திற்கு ஒரு விளக்கம்: “படைப்பாளரிடம் ஏற்படும் மலைப்பு, ஆழ்ந்த பயபக்தி, அவருக்குப் பிரியமில்லாததை செய்துவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம்.” இவ்வாறு, தேவபயம் நம் வாழ்க்கையில் இரண்டு முக்கிய அம்சங்களின்மீது செல்வாக்கு செலுத்துகிறது: கடவுளிடமாக நம் மனப்பான்மை மற்றும் அவர் வெறுக்கிற நடத்தையிடமாக நம் மனப்பான்மை. சந்தேகமில்லாமல் இந்த இரண்டு அம்சங்களுமே மிக முக்கியமானவை, நாம் கவனமாக சிந்திப்பதற்குத் தகுந்தவை. வைனின் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் குறிப்பிடுகிறபடி, கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இந்த பயபக்தி, ‘ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிற சக்தியாக’ உள்ளது.
4. நம் படைப்பாளரிடம் மலைப்பையும் பயபக்தியையும் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை எவ்வாறு நாம் வளர்த்துக் கொள்ளலாம்?
4 நம் படைப்பாளர்மீது பயபக்தியையும் மலைப்பையும் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? ஓர் அழகிய இயற்கை காட்சியை, மனதை கொள்ளைகொள்ளும் நீர்வீழ்ச்சியை, அல்லது கண்ணைக் கவரும் சூரிய அஸ்தமனத்தை காண்கையில் நாம் மலைத்து நிற்கிறோம். இத்தகைய படைப்பின் அதிசயங்களில் கடவுளின் கைவண்ணத்தை விசுவாசக் கண்களால் காண்கையில் இந்த உணர்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகுகிறது. மேலும், தாவீது ராஜாவைப் போலவே, யெகோவாவின் மலைப்பூட்டும் படைப்புகளோடு ஒப்பிட நாம் ஒன்றுமே இல்லை என உணருகிறோம். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்.” (சங்கீதம் 8:3, 4) இந்தப் பெரும் மலைப்பினால் பயபக்தி சுரக்கிறது; அது, நமக்காக யெகோவா செய்யும் எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நன்றி செலுத்தவும் துதிக்கவும் நம்மை தூண்டுவிக்கிறது. “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என்றும் தாவீது எழுதினார்.—சங்கீதம் 139:14.
5. நாம் ஏன் யெகோவாவுக்குப் பயப்பட வேண்டும், இதன் சம்பந்தமாக என்ன சிறந்த முன்மாதிரி நமக்கு இருக்கிறது?
5 மலைப்பும் பயபக்தியும், படைப்பாளராக கடவுளுடைய வல்லமையிடமும் சர்வலோகத்தை ஆளும் உரிமைக்காரராக அவருடைய அதிகாரத்திடமும் ஆரோக்கியமான, மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துகின்றன. அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில், “மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் . . . உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்க”ளை, அதாவது பரலோக ஸ்தானத்தில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகிய கிறிஸ்துவின் சீஷர்களை கண்டார். அதில் அவர்கள், ‘சர்வவல்லமையுள்ள தேவனாகிய [யெகோவாவே], தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். [யெகோவாவே] யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?’ என அறிவிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 15:2-4) பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் அரசாளப் போகும் இவர்களை, கடவுளுடைய மகத்துவத்தின் மீதுள்ள பயபக்தியால் விளைந்த தேவபயம், அவரை உன்னத அதிகாரமுள்ளவராக கனப்படுத்துவதற்கு வழிநடத்துகிறது. யெகோவா செய்திருக்கிற எல்லாவற்றையும், சர்வலோகத்தை அவர் ஆளும் நீதியான முறையையும் நாம் சிந்திக்கையில், அவருக்குப் பயப்பட போதுமான காரணம் நமக்கு இருக்கிறதல்லவா?—சங்கீதம் 2:11; எரேமியா 10:7.
6. யெகோவாவுக்குப் பிரியமில்லாததை செய்துவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் நமக்கு ஏன் வேண்டும்?
6 எனினும், மலைப்பும் பயபக்தியும் மட்டுமல்லாமல், அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயமும் தேவபயத்தில் அடங்கியுள்ளது. ஏன்? ஏனெனில் யெகோவா, ‘கோபப்படுவதற்கு தாமதிக்கிறவராக, அன்புள்ள தயவு நிறைந்தவராக’ இருந்தாலும் ‘தண்டனைக்கு எவ்விதத்திலும் விலக்களிக்க மாட்டார்’ என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். (யாத்திராகமம் 34:6, 7, NW) யெகோவா அன்பும் இரக்கமும் உள்ளவர்; எனினும், அநீதியையும் வேண்டுமென்றே செய்யப்படும் தப்பிதங்களையும் அவர் பொறுத்துக் கொள்வதில்லை. (சங்கீதம் 5:4, 5; ஆபகூக் 1:13) யெகோவா பொல்லாததாக கருதும் காரியங்களை வேண்டுமென்றே செய்கிறவர்களும், மனந்திரும்பாமல் பழக்கமாய் செய்து வருகிறவர்களும், அவரை எதிர்ப்பவர்களும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டபடி, “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.” அத்தகைய நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம், முடிவில் நமக்குப் பாதுகாப்பாக அமைகிறது.—எபிரெயர் 10:31.
‘நீங்கள் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும்’
7. யெகோவாவின் காக்கும் வல்லமையில் நம்பிக்கை வைப்பதற்கு என்ன காரணங்கள் நமக்கு உள்ளன?
7 கடவுளிடம் பயபக்தியும் அவருடைய மலைப்பூட்டும் வல்லமையைப் பற்றிய கூர்ந்த விழிப்புணர்வும், அவர்மீது சார்ந்திருக்கவும் நம்பிக்கையோடு இருக்கவும் வழிநடத்துகின்றன. அருகே தகப்பன் இருக்கையில் பாதுகாப்பை உணரும் சிறு பிள்ளையைப்போல், யெகோவாவின் வழிநடத்தும் கரத்தில் நாம் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உணருகிறோம். யெகோவா தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்த பின்னர் அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை கவனியுங்கள்: ‘யெகோவா எகிப்தியரில் செய்த அந்த மகத்தான செயலை இஸ்ரவேலர் கண்டு யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவினிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்.’ (யாத்திராகமம் 14:31, திருத்திய மொழிபெயர்ப்பு) “யெகோவாவின் தூதனானவர் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” என்ற உண்மைக்கு எலிசாவின் அனுபவமும் சாட்சி பகருகிறது. (சங்கீதம் 34:7; 2 இராஜாக்கள் 6:15-17; தி.மொ.) யெகோவா தம்மைச் சேவிப்பவர்களுக்காக தம்முடைய வல்லமையை உபயோகிப்பதை அவரது ஜனங்களுடைய நவீன கால சரித்திரமும், ஒருவேளை நம்முடைய சொந்த அனுபவமும்கூட உறுதிப்படுத்துகின்றன. (2 நாளாகமம் 16:9) இவ்வாறு, “யெகோவாவுக்குப் பயப்படுவோன் பலத்த நம்பிக்கையுடையவன்” என்பதை நாம் உணர ஆரம்பிக்கிறோம்.—நீதிமொழிகள் 14:26, தி.மொ.
8. (அ) அவருடைய வழிகளில் நடக்கும்படி தேவபயம் நம்மை ஏன் தூண்டுவிக்கிறது? (ஆ) நாம் எவ்வாறு யெகோவாவைப் ‘பற்றிக்கொள்ள’ வேண்டும் என்பதை விளக்குங்கள்.
8 கடவுளிடம் காட்டும் ஆரோக்கியமான பயம், அவரில் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு அவருடைய வழிகளில் நடக்கவும் நம்மை தூண்டுவிக்கிறது. சாலொமோன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்கையில் யெகோவாவிடம் இவ்வாறு ஜெபித்தார்: “தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் [இஸ்ரவேலர்] உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு . . . பலன் அளிப்பீராக.” (2 நாளாகமம் 6:31) இதற்கு முன்னால், “நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் சப்தத்திற்குச் செவிகொடுத்து அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும்” என மோசே இஸ்ரவேலரை ஊக்குவித்தார். (உபாகமம் 13:4, தி.மொ.) இந்த வசனங்கள் தெளிவாக காட்டுகிறபடி, யெகோவாவின் வழிகளில் நடப்பதற்கும் அவரைப் ‘பற்றிக்கொள்வதற்குமான’ ஆவல், அவர் மீதுள்ள நம்பிக்கையால் பிறக்கிறது. ஆம், யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் அவரைச் சேவிக்கவும் தேவபயம் நம்மை வழிநடத்துகிறது; அப்பாமீது அளவிலா நம்பிக்கையுள்ள சிறு பிள்ளை எவ்வாறு அவரை இறுகப் பற்றிக்கொள்ளுமோ அதுபோலவே நாம் கடவுளை பற்றிக்கொள்ளவும் வழிநடத்துகிறது.—சங்கீதம் 63:8; ஏசாயா 41:13.
கடவுளை நேசிப்பது அவருக்குப் பயப்படுவதை குறிக்கிறது
9. கடவுளிடமுள்ள அன்புக்கும் கடவுளிடமுள்ள பயத்துக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?
9 பைபிளின் நோக்குநிலையில், கடவுளுக்குப் பயப்படுவது எந்த விதத்திலும் அவரை நேசிக்க முடியாதபடி செய்வதில்லை. மாறாக, ‘தேவனாகிய [யெகோவாவுக்குப்] பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூரும்படி’ இஸ்ரவேலர் கட்டளையிடப்பட்டார்கள். (உபாகமம் 10:12) இவ்வாறு, கடவுளுக்குப் பயப்படுவதும் கடவுள்மீது அன்புகூருவதும் ஒன்றுக்கொன்று நெருங்க தொடர்புடையவை. கடவுளுக்குப் பயப்படுவது அவருடைய வழிகளில் நடக்கும்படி நம்மை செய்விக்கிறது, இது அவர் மீதுள்ள நம் அன்புக்கு அத்தாட்சி அளிக்கிறது. (1 யோவான் 5:3) இது நியாயமானது; ஏனெனில் நாம் ஒருவரை நேசிக்கையில் அவர் மனதைப் புண்படுத்திவிடக் கூடாதே என பயப்படுவது சரியானதே. தங்கள் கலகத்தன போக்கால் வனாந்தரத்தில் இஸ்ரவேலர் யெகோவாவின் மனதைப் புண்படுத்தினார்கள். அப்படி நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு விசனத்தைத் தரும் எதையும் செய்ய நாம் நிச்சயமாகவே விரும்ப மாட்டோம். (சங்கீதம் 78:40, 41) மறுபட்சத்தில், “தமக்குப் பயந்தவர்களில் . . . யெகோவா பிரியங்கொள்”வதால் நம்முடைய கீழ்ப்படிதலும் உண்மைத்தவறாமையும் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகின்றன. (சங்கீதம் 147:11, தி.மொ.; நீதிமொழிகள் 27:11) கடவுளிடமுள்ள அன்பு அவரைப் பிரியப்படுத்த நம்மை தூண்டுகிறது, கடவுளிடமுள்ள பயம் அவரைப் புண்படுத்திவிடாதபடி தடுக்கிறது. இந்தப் பண்புகள் ஒன்றோடொன்று முரண்படுவதற்கு மாறாக இணைந்து செயல்படுகிறவையாகவே உள்ளன.
10. யெகோவாவுக்குப் பயப்படுவதில் தாம் இன்பம் கண்டதை இயேசு எவ்வாறு காட்டினார்?
10 ஒரே சமயத்தில் நம்மால் எப்படி கடவுளை நேசிக்கவும் அவருக்கு பயப்படவும் முடியும் என்பதை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைப்போக்கு தெளிவாக சித்தரித்துக் காட்டுகிறது. இயேசுவைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “அவர்மேல் யெகோவாவின் ஆவி தங்கும்; அது ஞானத்தையும் உணர்வையும் ஆலோசனையும் வல்லமையையும் யெகோவாவைப் பற்றிய அறிவையும் பயத்தையும் அருளும் ஆவியாம். யெகோவாவுக்குப் பயப்படுவதே அவருக்கு மிகவும் பிரியமானது.” (ஏசாயா 11:2, 3, தி.மொ.) இந்தத் தீர்க்கதரிசனத்தின்படி, பரலோக தகப்பனுக்குப் பயப்படும்படி இயேசுவை கடவுளுடைய ஆவி உந்துவித்தது. மேலும், இந்த பயம் கொஞ்சமும் சுமையாக இராமல் மிகுந்த திருப்தி அளித்ததையே நாம் காண்கிறோம். மிக கஷ்டமான சூழ்நிலைகளிலும்கூட கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலும் அவரை பிரியப்படுத்துவதிலும் இயேசு இன்பம் கண்டார். அவர் வாதனையின் கழுமரத்தில் மரிக்கப்போகும் தறுவாயில், “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று யெகோவாவிடம் சொன்னார். (மத்தேயு 26:39) இந்தத் தேவபயத்தின் காரணமாக, தம்முடைய குமாரனின் வேண்டுதல்களுக்கு யெகோவா செவிசாய்த்தார், அவரைப் பலப்படுத்தினார், மரணத்திலிருந்து மீட்டார்.—எபிரெயர் 5:7.
யெகோவாவுக்குப் பயப்பட கற்றுக்கொள்ளுதல்
11, 12. (அ) நாம் ஏன் கடவுளுக்குப் பயப்பட கற்றுக்கொள்ள வேண்டும்? (ஆ) யெகோவாவுக்கு பயப்பட இயேசு எவ்வாறு நமக்குக் கற்பிக்கிறார்?
11 இயற்கையின் வல்லமையும் அதில் மிளிரும் கம்பீரமும் இயல்பாய் மலைப்பை ஏற்படுத்துவதைப் போல் தேவபயம் இயல்பாகவே வருவதில்லை. இதன் நிமித்தமே பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசன ரீதியில் நமக்கு இந்த அழைப்பை விடுக்கிறார்: “பிள்ளைகளே வாருங்கள், எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தை உங்களுக்குப் போதிப்பேன்.” (சங்கீதம் 34:11, தி.மொ.) யெகோவாவுக்குப் பயப்பட இயேசுவினிடமிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?
12 நம்முடைய பரலோக தகப்பனின் அற்புதமான குணங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுவதன் மூலம் யெகோவாவுக்குப் பயப்பட இயேசு கற்பிக்கிறார். (யோவான் 1:18) தம்முடைய தகப்பனின் குணங்களைப் பரிபூரணமாக இயேசு பிரதிபலிப்பதால் கடவுள் எவ்வாறு சிந்திக்கிறார், மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பவற்றை அவருடைய முன்மாதிரியே வெளிப்படுத்துகிறது. (யோவான் 14:9, 10) மேலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி ஜெபிக்கையில் இயேசுவின் பலியின் மூலமாக யெகோவாவை அணுக முடிகிறது. இப்படி ஒப்பற்ற விதத்தில் கடவுள் இரக்கத்தை வெளிக்காட்டியிருப்பதே அவருக்குப் பயப்பட பலமான காரணத்தை நமக்கு அளிக்கிறது. “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” என சங்கீதக்காரர் எழுதினார்.—சங்கீதம் 130:4.
13. நீதிமொழிகள் புத்தகத்தில் குறிப்பிடப்படுகிற என்ன படிகள் யெகோவாவுக்குப் பயப்பட நமக்கு உதவுகின்றன?
13 தேவபயத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும் சில படிகளை நீதிமொழிகள் புத்தகம் குறிப்பிடுகிறது. “மகனே, ஞானத்திற்கு நீ செவிசாய்த்து உணர்வுக்கு உன் இருதயத்தைத் திருப்புமாறு என் மொழிகளை நீ ஏற்றுக்கொண்டு, என் கட்டளையை உன்னிடமே காத்து விவேகத்தை வா எனக் கூப்பிட்டு உணர்வைச் சத்தமிட்டு அழைத்து . . . அதைத் தேடுவாயாகில், யெகோவாவுக்குப் பயப்படுவது இன்னதென்று நீ உணர்வாய், கடவுளை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” (நீதிமொழிகள் 2:1-5, தி.மொ.) ஆகையால், கடவுளுக்குப் பயப்படுவதற்கு நாம் அவருடைய வார்த்தையைப் படிப்பதும், அதன் போதனையைப் புரிந்துகொள்ள ஊக்கமாய் முயற்சி செய்வதும், பின்பு அதன் அறிவுரைக்கு ஆழ்ந்த கவனம் செலுத்துவதும் அவசியம்.
14. இஸ்ரவேலின் அரசர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
14 பூர்வ இஸ்ரவேலின் அரசர் ஒவ்வொருவரும், நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை எழுதி ‘தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை ஆராய்ந்து வாசிக்கும்படியும் . . . நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும் . . . செய்வதற்குத் தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்க கற்றுக்கொள்ளும்படியும்’ அறிவுறுத்தப்பட்டார்கள். (உபாகமம் 17:18, 19, தி.மொ.) அதைப் போலவே, நாம் யெகோவாவுக்கு பயப்பட கற்றுக்கொள்வதற்கு, பைபிளை வாசிப்பதும் படிப்பதும் மிக மிக முக்கியம். பைபிள் நியமங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுகையில், நாம் படிப்படியாய் தேவ ஞானத்தையும் அறிவையும் பெறுகிறோம். அதனால் விளையும் நற்பலன்களை நம் வாழ்க்கையில் காண்கையில், ‘யெகோவாவுக்குப் பயப்படுவது இன்னதென்று உணர்கிறோம்,’ கடவுளுடன் கொண்டுள்ள உறவை பொக்கிஷமாய் காக்கிறோம். மேலும், இளைஞரும் முதியோரும் சகவிசுவாசிகளோடு தவறாமல் சபை கூடிவருவதன் மூலம், தெய்வீக போதனைக்கு செவிசாய்த்து, கடவுளுக்குப் பயப்பட கற்றுக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கலாம்.—உபாகமம் 31:12.
யெகோவாவுக்குப் பயப்படுகிற அனைவரும் சந்தோஷமுள்ளவர்கள்
15. தேவபயம் எந்த வழிகளில் அவருடைய வணக்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது?
15 இதுவரை சிந்தித்தவற்றை வைத்து பார்க்கும்போது, தேவபயம் நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான மனப்பான்மை என்பது தெரிகிறது; ஏனெனில் அது யெகோவாவின் வணக்கத்தின் அடிப்படை அம்சம். நாம் அவரை முழுமையாக நம்பவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவரை விடாது பற்றிக்கொண்டிருக்கவும் அது உதவுகிறது. தேவபயம் இயேசு கிறிஸ்துவை உந்துவித்தது போலவே, ஒப்புக்கொடுத்தலின் உறுதிமொழிக்கு ஏற்ப இப்போதும் எப்போதும் வாழவும் நம்மை உந்துவிக்கலாம்.
16. யெகோவா ஏன் தமக்குப் பயப்படும்படி நம்மை ஊக்குவிக்கிறார்?
16 தேவபயம் ஒருபோதும் திகிலூட்டுவதாகவோ மிதமிஞ்சி கட்டுப்படுத்துவதாகவோ இல்லை. “யெகோவாவுக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிற எவனும் பாக்கியவான்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (சங்கீதம் 128:1, தி.மொ.) இந்தப் பண்பு நம்மை பாதுகாக்கும் என்பதை யெகோவா அறிந்திருப்பதால் தமக்குப் பயப்படும்படி ஊக்குவிக்கிறார். அவருடைய அன்புள்ள அக்கறையை மோசேயிடம் அவர் சொன்ன பின்வரும் வார்த்தைகளில் காண்கிறோம்: “அவர்களும் [இஸ்ரவேலர்களும்] அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் [“இருதயத்தை அவர்கள் வளர்த்தால்,” NW] நலமாயிருக்கும்.”—உபாகமம் 5:29.
17. (அ) கடவுளுக்குப் பயப்படுவதிலிருந்து என்ன நன்மைகளை நாம் அடைகிறோம்? (ஆ) தேவபயத்தின் என்ன அம்சங்களை அடுத்த கட்டுரை சிந்திக்கும்?
17 அவ்வாறே, கடவுளுக்கு பயப்படுவதற்கேற்ற இருதயத்தை வளர்த்துக்கொண்டால் நமக்கு நலமாயிருக்கும். எந்த வழிகளில்? முதலாவதாக, அத்தகைய மனப்பான்மை கடவுளுக்குப் பிரியமானது, அது நம்மை அவரிடம் நெருங்கிவர செய்கிறது. “அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” என்பது தாவீது தன் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. (சங்கீதம் 145:19) இரண்டாவதாக, தீமையைப் பற்றிய நம் நோக்குநிலையை தேவபயம் பாதிக்கும் என்பதால் அது நமக்கு நன்மை பயக்கும். (நீதிமொழிகள் 3:7) ஆவிக்குரிய ஆபத்திலிருந்து இந்தப் பயம் நம்மை எப்படி பாதுகாக்கும் என்பதையும் கடவுளுக்குப் பயந்து தீமையை விட்டு விலகிய சிலருடைய பைபிள்பூர்வ உதாரணங்களையும் அடுத்த கட்டுரை சிந்திக்கும்.
[அடிக்குறிப்பு]
a மனித உரிமைகளுக்கான அனைத்துலக அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 10, 1948-ல் ஏற்றது.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
• தேவபயம் எதை அர்த்தப்படுத்துகிறது, அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது?
• கடவுளுக்குப் பயப்படுவதற்கும் கடவுளோடு நடப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன?
• கடவுளுக்குப் பயப்படுவது கடவுளை நேசிப்பதோடு சம்பந்தப்பட்டிருப்பதை இயேசுவின் முன்மாதிரி எவ்வாறு காட்டுகிறது?
• என்ன வழிகளில் யெகோவாவுக்குப் பயப்படுவதற்கேற்ற இருதயத்தை நாம் வளர்க்கலாம்?
[பக்கம் 17-ன் படம்]
இஸ்ரவேல் அரசர்கள் தங்களுக்கென நியாயப்பிரமாணத்தை நகல் எடுத்து, அதை நாள்தோறும் வாசிக்கும்படி கட்டளையிடப்பட்டார்கள்
[பக்கம் 18-ன் படம்]
தகப்பன் மீது மகன் நம்பிக்கை வைப்பதுபோல், யெகோவா மீதுள்ள பயம் அவரில் நம்பிக்கை வைக்க நம்மை வழிநடத்துகிறது
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள்: Photo by Malin, © IAC/RGO 1991