யெகோவாவுக்குப் பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்
“கடவுளுக்குப் பயந்து, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; எல்லா மனிதருடைய கடமையும் இதுவே.”—பிரசங்கி 12:13, தி.மொ.
1, 2. (அ) பயம் எவ்வாறு நம்மை சரீரப்பிரகாரமாக பாதுகாக்கலாம்? (ஆ) ஞானமுள்ள பெற்றோர் நியாயமான பயத்தை தங்கள் பிள்ளைகளின் மனதில் எவ்வாறு பதியவைக்க முயற்சி செய்கிறார்கள்?
“தைரியமோ உயிரை ஆபத்திற்குள்ளாக்கும், பயமோ அதைப் பாதுகாக்கும்” என லியநார்டோ டா வின்ஸி கூறினார். போலித்துணிச்சல், அல்லது முரட்டு தைரியம் ஆபத்தைக் காணாதபடி ஒருவருடைய கண்களை மறைக்கிறது, ஆனால் பயமோ கவனமாயிருக்கும்படி அவருக்கு நினைப்பூட்டுகிறது. உதாரணமாக, ஒரு செங்குத்தான பாறையின் முனைக்கு சென்று எட்டிப் பார்க்கும் கிட்டத்தட்ட எல்லாருமே, உடனடியாக பின்வாங்குவது இயல்பானதே. அதைப் போலவே, முந்தின கட்டுரையில் கற்றபடி, ஆரோக்கியமான பயம் கடவுளுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதோடு தீங்கில் வீழ்ந்துவிடாதபடி நம்மை பாதுகாக்கிறது.
2 எனினும், பயப்பட வேண்டிய நவீன கால ஆபத்துகள் பலவற்றை பற்றி அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மின்சாரத்தில் அல்லது நகர போக்குவரத்தில் உட்பட்டுள்ள ஆபத்துகளைப் பற்றி சிறு பிள்ளைகள் அறியாதிருப்பதால், அவர்கள் எளிதில் பெரும் விபத்துக்குள்ளாகலாம்.a சூழ்ந்திருக்கும் ஆபத்துகளைப் பற்றி திரும்பத் திரும்ப எச்சரிப்பதன் மூலம் ஞானமுள்ள பெற்றோர் நியாயமான பயத்தை தங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவைக்க முயற்சி செய்கிறார்கள். இந்தப் பயம் தங்கள் பிள்ளைகளின் உயிருக்குப் பெரும் பாதுகாப்பாய் அமையும் என பெற்றோர் அறிந்திருக்கிறார்கள்.
3. ஆவிக்குரிய ஆபத்துகளைப் பற்றி யெகோவா நமக்கு ஏன் எச்சரிக்கிறார், எப்படி எச்சரிக்கிறார்?
3 நம்முடைய நலனிலும் அதே போன்ற அக்கறை யெகோவாவுக்கு இருக்கிறது. அன்புள்ள தகப்பனாக, நாம் நன்மையடைய தம்முடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும் அவர் போதிக்கிறார். (ஏசாயா 48:17) அத்தகைய ஆபத்திடம் நியாயமான பயத்தை வளர்த்துக்கொள்வதற்காக ஆவிக்குரிய படுகுழிகளைப் பற்றி “திரும்பத் திரும்ப” நம்மை எச்சரிப்பது கடவுளுடைய போதக திட்டத்தின் பாகமாக இருக்கிறது. (2 நாளாகமம் 36:15, தி.மொ.; 2 பேதுரு 3:2) ‘தேவனுக்கு பயந்து, அவருடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் ஜனங்களுக்கு இருந்திருந்தால் [“இருதயத்தை ஜனங்கள் வளர்த்திருந்தால்,” NW]’ சரித்திரம் முழுவதிலுமே அநேக ஆவிக்குரிய பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம், பேரளவான துன்பத்தைத் தடுத்திருக்கலாம். (உபாகமம் 5:29) ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ தேவபயத்தை எவ்வாறு நம்முடைய இருதயத்தில் வளர்ப்பதன் மூலம் ஆவிக்குரிய ஆபத்தைத் தவிர்க்கலாம்?—2 தீமோத்தேயு 3:1, NW.
தீமையை விட்டு விலகுங்கள்
4. (அ) எப்படிப்பட்ட வெறுப்பை கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்? (ஆ) பாவ நடத்தையைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார்? (அடிக்குறிப்பைக் காண்க.)
4 ‘தீமையை வெறுப்பதே [யெகோவாவுக்கு] பயப்படும் பயம்’ என பைபிள் விளக்குகிறது. (நீதிமொழிகள் 8:13) இப்படி வெறுப்பது, “எந்தத் தொடர்பையோ உறவையோ வைத்துக்கொள்ள விரும்பாத, பகைக்கிற, அருவருக்கிற, இழிவாக கருதுகிற ஆட்களிடமும் பொருட்களிடமும் ஒருவர் வெளிக்காட்டும் மனப்பான்மை” என ஒரு பைபிள் அகராதி விவரிக்கிறது. ஆகவே தீமையென யெகோவா கருதும் எல்லாவற்றையும் உள்ளூர வெறுப்பதை அல்லது அருவருப்பதை தேவபயம் உட்படுத்துகிறது.b (சங்கீதம் 97:10) செங்குத்தான பாறை முனையில் நம்முடைய இயல்பான பயம் தரும் எச்சரிக்கையால் எவ்வாறு உடனடியாக பின்வாங்குவோமோ அதுபோல் தேவபயத்தின் உந்துவிப்பால் தீமையை விட்டுவிலகுவோம். “யெகோவாவுக்குப் பயப்படுவதால் மனிதன் தீமையினின்று விலகுவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 16:6, தி.மொ.
5. (அ) தேவபயத்தையும் தீமையிடம் வெறுப்புணர்ச்சியையும் நாம் எவ்வாறு வலுப்படுத்திக் கொள்ளலாம்? (ஆ) இதன் சம்பந்தமாக இஸ்ரவேலரின் சரித்திரம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
5 பாவத்தால் வரும் தவிர்க்க முடியா தீய விளைவுகளை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் இந்த ஆரோக்கியமான பயத்தையும், தீமையின் மீது வெறுப்பையும் நாம் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். மாம்சத்தின்படி விதைத்தாலும் ஆவியின்படி விதைத்தாலும் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (கலாத்தியர் 6:7, 8) இதன் காரணமாகவே, தம்முடைய கட்டளைகளை மதிக்காமல், உண்மை வணக்கத்தை விட்டு விலகுவதால் வரும் தவிர்க்க முடியா பாதிப்புகளை யெகோவா தெளிவாக விவரித்தார். கடவுளுடைய பாதுகாப்பு இல்லாதிருந்தால், அந்தச் சிறிய, எளிதில் கைப்பற்ற முடிந்த இஸ்ரவேல் தேசம் கொடூரமும் பலமுமிக்க அண்டை அயலாரின் கைகளில் சிக்கி தவித்திருக்கும். (உபாகமம் 28:15, 45-48) நாம் படிப்பினை கற்றுக்கொள்வதற்காகவும் தேவபயத்தை வளர்த்துக்கொள்வதற்காகவும் இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் வருந்தத்தக்க விளைவு ‘எச்சரிக்கையாக’ பைபிளில் விவரமாய் பதிவு செய்யப்பட்டது.—1 கொரிந்தியர் 10:11.
6. தேவபயத்தைக் கற்றுக்கொள்வதில் நாம் சிந்திப்பதற்கான சில பைபிள் உதாரணங்கள் யாவை? (அடிக்குறிப்பைக் காண்க.)
6 மொத்தத்தில் இஸ்ரவேலருக்கு சம்பவித்த விவரங்கள் மட்டுமல்லாமல், பொறாமை, ஒழுக்கக்கேடு, பேராசை, அல்லது பெருமை போன்ற குணங்களுக்கு அடிமையான தனிப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களும் பைபிளில் உள்ளன.c இவர்களில் சிலர் யெகோவாவை பல ஆண்டு காலம் சேவித்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் சோதனைமிக்க ஒரு கட்டத்தில் தேவபயம் போதியளவு வலுவுள்ளதாய் இராததால் வருந்தத்தக்க பெரும் பாதிப்பை அறுவடை செய்தார்கள். இத்தகைய பைபிள் உதாரணங்களைப் பற்றி தியானிப்பது அதே போன்ற தவறுகளை தவிர்ப்பதற்கான நம் தீர்மானத்தைப் பலப்படுத்தலாம். நாமே தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்படும் வரை கடவுளுடைய அறிவுரையை இருதயத்தில் ஏற்காதிருப்பது எவ்வளவு விசனகரமானது! பொதுவாக நம்பப்படுகிறபடி அனுபவம்—முக்கியமாய் தனிப்பட்ட விதத்தில் அனுபவிப்பது—சிறந்த ஆசானே அல்ல.—சங்கீதம் 19:7.
7. அடையாள அர்த்தமுடைய தமது கூடாரத்திற்கு வரும்படி யாருக்கு யெகோவா அழைப்புவிடுக்கிறார்?
7 கடவுளுடன் கொண்டுள்ள நம் உறவைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆவல், அவருக்குப் பயப்படும் பயத்தை வளர்ப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாய் அமைகிறது. யெகோவாவின் நட்பை நாம் பொக்கிஷம்போல் கருதுவதால் அவருக்குப் பிரியமில்லாததைச் செய்ய பயப்படுகிறோம். கடவுள் யாரை நண்பனாக கருதி தம்முடைய அடையாள அர்த்தமுள்ள கூடாரத்திற்கு வரும்படி அழைப்புவிடுக்கிறார்? ‘உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பிப்பவரை’ மட்டுமே. (சங்கீதம் 15:1, 2) நம்முடைய படைப்பாளரோடு கொண்டுள்ள இந்த சிலாக்கியமிக்க உறவை நாம் உயர்வாய் மதித்தால் அவருடைய பார்வையில் உத்தமராய் நடப்பதற்கு கவனமாயிருப்போம்.
8. மல்கியாவின் நாளிலிருந்த இஸ்ரவேலர் சிலர், கடவுளுடன் கொண்டிருந்த நட்புறவை எவ்வாறு இலேசாக எடுத்துக்கொண்டனர்?
8 மல்கியாவின் நாளிலிருந்த இஸ்ரவேலரில் சிலர் கடவுளுடன் கொண்டிருந்த நட்புறவை இலேசாக எடுத்துக்கொண்டது வருத்தகரமானது. யெகோவாவுக்குப் பயந்து அவரைக் கனப்படுத்துவதற்குப் பதிலாக நோயுற்ற, முடமான மிருகங்களை அவருக்குப் பலி செலுத்தினார்கள். தேவபயத்தில் அவர்கள் குறைவுபட்டது திருமணத்தைக் குறித்த அவர்களுடைய மனப்பான்மையிலும் வெளிப்பட்டது. இளம் பெண்களை மணமுடிப்பதற்காக வாலிபத்தில் மணந்த மனைவிமாரை அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்தார்கள். “தள்ளிவிடுதலை” யெகோவா வெறுத்தார் என்றும், அவர்களுடைய நம்பிக்கை துரோகம், கடவுளிடமுள்ள நட்புறவை இழக்கும்படி செய்தது என்றும் மல்கியா அவர்களிடம் சொன்னார். பலிபீடம் அடையாள அர்த்தமுள்ள கண்ணீரால், அதாவது, அபலைகளான அவர்களது மனைவிமார் மனங்கசந்து சிந்திய கண்ணீரால் நிரம்பியிருக்கையில், அவர்களுடைய பலிகளை எவ்வாறு கடவுள் சந்தோஷமாக ஏற்க முடியும்? அவருடைய தராதரங்களை அந்தளவுக்கு மோசமாக அவமதித்ததால், “எனக்குப் பயப்படும் பயம் எங்கே?” என யெகோவா கேட்கிறார்.—மல்கியா 1:6-8; 2:13-16.
9, 10. யெகோவாவின் நட்புறவை உயர்வாய் மதிப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
9 அவ்வாறே இன்று, தன்னலமும் ஒழுக்கக்கேடுமிக்க கணவர்களாலும் தகப்பன்களாலும் மனைவிகளாலும் தாய்களாலும்கூட நிராதரவாக்கப்பட்ட, பழிபாவமறியாத பல மணத்துணைகள் மற்றும் பிள்ளைகளின் மனவேதனையை யெகோவா காண்கிறார். இது உண்மையிலேயே அவருக்குத் துயரத்தைத் தருகிறது. கடவுளின் நண்பனாக இருப்பவர் காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் காண்பார்; தன் திருமணத்தை பலப்படுத்த கடினமாக உழைப்பார், விவாக பந்தத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துப்போடும் உலகப்பிரகாரமான சிந்தனையைத் தவிர்த்து, ‘வேசித்தனத்திற்கு விலகியோடுவார்.’—1 கொரிந்தியர் 6:18.
10 திருமணத்திலும் சரி வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் சரி, யெகோவாவின் பார்வையில் தீமையாக உள்ள அனைத்தையும் வெறுத்து, அவருடைய நட்புறவுக்கு ஆழ்ந்த போற்றுதல் காட்டுவது அவரது தயவையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என அப்போஸ்தலன் பேதுரு தெளிவாய் குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 10:34, 35) பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளில் தேவபயம் எவ்வாறு சரியானதைச் செய்ய தனிப்பட்டவர்களை உந்துவித்தது என்பதைக் காட்டும் அநேக பைபிள் உதாரணங்கள் இருக்கின்றன.
கடவுளுக்கு பயந்து நடந்த மூவர்
11. என்ன சூழ்நிலைகளின்கீழ் ஆபிரகாம் ‘தேவனுக்குப் பயப்படுபவர்’ என அறிவிக்கப்பட்டார்?
11 தம் சிநேகிதன் என யெகோவாவே அழைத்த ஒருவரைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது; அவர்தான் கோத்திர பிதாவாகிய ஆபிரகாம். (ஏசாயா 41:8) தன் ஒரேபேறான குமாரன் ஈசாக்கை பலியாக செலுத்தும்படி ஆபிரகாமிடம் கடவுள் கேட்டபோது, அவருடைய தேவபயம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஈசாக்கின் மூலமே ஆபிரகாமின் சந்ததியார் பெரிய தேசமாவார்கள் என்ற வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றுவார். (ஆதியாகமம் 12:2, 3; 17:19) ‘யெகோவாவின் நண்பன்’ இந்தக் கடும் சோதனையில் வெற்றி பெறுவாரா? (யாக்கோபு 2:23, NW) ஈசாக்கைக் கொல்லும்படி ஆபிரகாம் தன் கத்தியை ஓங்கிய அதே நேரம் யெகோவாவின் தூதன், “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்று சொன்னார்.—ஆதியாகமம் 22:10-12.
12. எது ஆபிரகாமின் தேவபயத்திற்கு தூண்டுதலாய் அமைந்தது, அதைப் போன்ற மனப்பான்மையை நாம் எப்படி காட்டலாம்?
12 ஆபிரகாம் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர் என்பதை முன்பே நிரூபித்திருந்த போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் தன்னுடைய தேவ பயத்தை அவர் ஒப்பற்ற விதத்தில் வெளிக்காட்டினார். ஈசாக்கை பலி செலுத்த அவர் முன்வந்தது, மரியாதை கலந்த கீழ்ப்படிதலின் வெளிக்காட்டாக மட்டுமல்லாமல் இன்னும் அதிகத்தை குறித்தது. தேவைப்பட்டால் ஈசாக்கை உயிர்த்தெழுப்புவதன் மூலம் தம்முடைய வாக்குறுதியை பரலோக தகப்பன் நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கை ஆபிரகாமை தூண்டியது. பவுல் எழுதின பிரகாரம், ‘தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று [ஆபிரகாம்] முழு நிச்சயமாய் நம்பினார்.’ (ரோமர் 4:16-21) பெரும் தியாகங்களை செய்ய வேண்டியிருந்தாலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? யெகோவா “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று” அறிந்து, அத்தகைய கீழ்ப்படிதல் நீண்ட கால நன்மைகளைத் தரும் என்று முழு நம்பிக்கை வைக்கிறோமா? (எபிரெயர் 11:6) அதுவே உண்மையில் தேவபயம்.—சங்கீதம் 115:11.
13. ‘மெய் தேவனுக்குப் பயப்படுகிறவன்’ என தன்னைக் குறித்து யோசேப்பு சொன்னது ஏன் பொருத்தமானது?
13 அடுத்து, தேவபயத்தை செயலில் காட்டிய யோசேப்பின் உதாரணத்தை நாம் சிந்திக்கலாம். போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருக்கையில், வேசித்தனத்தில் ஈடுபடும்படியான அழுத்தத்தை அவர் நித்தம் எதிர்ப்பட்டார். தொடர்ந்து ஒழுக்கக்கேடான விதத்தில் நெருங்கி வந்த தன் எஜமானரின் மனைவியைத் தவிர்ப்பதற்கு அவருக்கு வேறு வழியேதும் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. முடிவில் அவள், ‘அவருடைய வஸ்திரத்தைப் பிடித்தபோது . . . வெளியே ஓடிப்போனார்.’ உடனடியாக தீமையிலிருந்து விலகியோட எது அவரை உந்துவித்தது? முக்கியமாக தேவபயமே, அதாவது ‘இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வதைத்’ தவிர்க்கும்படியான ஆவலே அவரை உந்துவித்ததில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 39:7-12) “[“மெய்,” NW] தேவனுக்குப் பயப்படுகிறவன்” என தன்னை குறித்து யோசேப்பு சொன்னது பொருத்தமானதே.—ஆதியாகமம் 42:18.
14. யோசேப்பின் இரக்கம் எவ்வாறு உண்மையான தேவபயத்தை வெளிப்படுத்தியது?
14 ஆண்டுகள் கடந்து செல்கையில், துளியும் இரக்கமின்றி தன்னை அடிமையாக விற்றுப்போட்ட தன் சகோதரர்களை யோசேப்பு நேருக்குநேர் சந்தித்தார். உணவுக்காக பெரும் கஷ்டப்பட்ட அவர்களுடைய நிலையை, தனக்கு இழைத்த தீங்கிற்கு பழிவாங்கும் வாய்ப்பாக அவர் எளிதில் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் ஜனங்களைக் கொடூரமாக நடத்துவது, தேவபயத்திற்கு அடையாளம் அல்ல. (லேவியராகமம் 25:43) ஆகவே, தன் சகோதரர்களின் இருதய மாற்றத்திற்குப் போதிய நிரூபணத்தை யோசேப்பு கண்டபோது, இரக்கத்துடன் அவர்களை மன்னித்தார். யோசேப்பைப் போல், நம்முடைய தேவபயம் தீமையை நன்மையால் வெல்ல நம்மை தூண்டுவிக்கும், அதோடு சோதனையில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மை காக்கும்.—ஆதியாகமம் 45:1-11; சங்கீதம் 130:3, 4; ரோமர் 12:17-21.
15. யோபின் நடத்தை ஏன் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தியது?
15 கடவுளுக்குப் பயந்து நடந்தவர்களில் மற்றொரு முதன்மையான உதாரணம் யோபுவுடையது. யெகோவா பிசாசிடம் இவ்வாறு சொன்னார்: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) யோபின் உத்தம நடத்தை பல ஆண்டுகளுக்கு அவருடைய பரம தகப்பனின் இருதயத்தை சந்தோஷப்படுத்தியது. யோபு கடவுளுக்குப் பயந்து நடந்தார்; ஏனென்றால் அதுவே சரியான செயலென்றும், வாழ்வதற்கு சிறந்த வழியென்றும் அவர் அறிந்திருந்தார். “இதோ, ஆண்டவருக்குப் [“யெகோவாவுக்குப்,” NW] பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” என்று யோபு சொன்னார். (யோபு 28:28) மணமானவரான யோபு இளம் பெண்களை தவறான எண்ணத்துடன் ஏறெடுத்து பார்க்கவுமில்லை, தன் இருதயத்தில் வேசித்தன திட்டங்களை மறைவாக வகுக்கவுமில்லை. வசதி படைத்தவராக இருந்தபோதிலும் தன் ஐசுவரியங்களின்மீது நம்பிக்கையை வைக்கவில்லை, எல்லா விதமான விக்கிரக வணக்கத்திலிருந்தும் விலகியிருந்தார்.—யோபு 31:1, 9-11, 24-28.
16. (அ) என்ன வழிகளில் யோபு அன்புள்ள இரக்கம் காட்டினார்? (ஆ) மன்னியாதிருக்கவில்லை என்பதை யோபு எவ்வாறு காட்டினார்?
16 எனினும், கடவுளுக்குப் பயப்படுவது, தீமையை விட்டுவிலகுவதோடு நன்மை செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. ஆகவே யோபு குருடருக்கும், முடவருக்கும், தரித்திரருக்கும் தயவு காட்டினார். (லேவியராகமம் 19:14; யோபு 29:15, 16) “சகமனிதனிடம் அன்புள்ள தயவுகாட்ட தவறுகிற எவனிடமும் சர்வவல்லவருக்கான பயம் இருக்காது” என்பதை யோபு புரிந்துகொண்டிருந்தார். (யோபு 6:14, NW) அன்புள்ள இரக்கம் காட்டாதிருப்பது, மன்னியாதிருப்பதை அல்லது கோபத்தை மனதில் வைத்திருப்பதை உட்படுத்தலாம். தனக்கு பெரும் துயரைத் தந்த தன் மூன்று நண்பர்களுக்காக கடவுள் சொன்னபடியே யோபு ஜெபித்தார். (யோபு 42:7-10) ஏதோவொரு விதத்தில் நம்மை புண்படுத்திய சகவிசுவாசியிடம் அதே போன்ற மன்னிக்கும் மனப்பான்மையை நாம் வெளிக்காட்டுவோமா? நம்மை புண்படுத்தியவருக்காக செய்யும் மனமார்ந்த ஜெபம் மனக்கசப்பை சமாளிக்க நமக்கு பெரிதும் உதவலாம். தன் தேவ பயத்தின் நிமித்தம் யோபு அனுபவித்த ஆசீர்வாதங்கள், ‘யெகோவா தமக்கு பயப்படுவோருக்காக பொக்கிஷமாக வைத்திருக்கிற ஏராளமான நன்மையின்’ முன்காட்சியை நமக்கு அளிக்கின்றன.—சங்கீதம் 31:19, NW; யாக்கோபு 5:11.
தேவபயமும் மனித பயமும்
17. மனித பயம் நமக்கு என்ன செய்யலாம், ஆனால் அத்தகைய பயம் ஏன் குறுகிய நோக்குடையது?
17 தேவபயம் சரியானதை செய்ய உந்துவிக்கலாம், மனித பயமோ நம் விசுவாசத்தையே பலவீனப்படுத்திவிடலாம். ஆகவேதான் நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பதற்கு அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்தியபோது இயேசு இவ்வாறு சொன்னார்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [“கெஹென்னாவில்,” NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” (மத்தேயு 10:28) நமது எதிர்கால வாழ்க்கைக்குரிய வாய்ப்புகளை மனிதர் அழிக்க முடியாததால் மனித பயம் குறுகிய நோக்குடையது என இயேசு விளக்கினார். மேலும், கடவுளுடைய மலைப்பூட்டும் வல்லமைக்கு பக்கத்தில் சகல தேசங்களின் வல்லமையும் அற்பமானதாக இருப்பதை நாம் அறிந்திருப்பது அவருக்கு பயப்பட காரணத்தை அளிக்கிறது. (ஏசாயா 40:15) ஆபிரகாமைப் போல், தம்முடைய உண்மையுள்ள ஊழியரை உயிர்த்தெழுப்பும் யெகோவாவின் வல்லமையில் நமக்கும் முழுமையான நம்பிக்கை இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 2:10) ஆகையால், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என நம்பிக்கையுடன் சொல்கிறோம்.—ரோமர் 8:31.
18. தமக்குப் பயப்படுவோருக்கு யெகோவா எந்த விதத்தில் பலனளிக்கிறார்?
18 நம்மை எதிர்க்கிறவர் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, பள்ளியிலுள்ள முரடனாக இருந்தாலும் சரி, “யெகோவாவுக்குப் பயப்படுவோன் பலத்த நம்பிக்கையுடையவன்” என்பதை நாம் உணருவோம். (நீதிமொழிகள் 14:26, தி.மொ.) கடவுள் நமக்கு செவிசாய்ப்பார் என்பதை அறிந்தவர்களாய் பலத்திற்காக அவரிடம் ஜெபிக்கலாம். (சங்கீதம் 145:19) தமக்கு பயப்படுவோரை யெகோவா ஒருபோதும் மறப்பதில்லை. தம்முடைய தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் மூலம் அவர் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “இப்படியிருக்கையிலேயே யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்தார்கள், யெகோவா கவனித்துக் கேட்டார், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கெனவும் அவருடைய திருநாமத்தை நினைக்கிறவர்களுக்கெனவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”—மல்கியா 3:16, தி.மொ.
19. என்னென்ன பயம் இனி இராது, ஆனால் என்ன விதமான பயம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்?
19 பூமியில் அனைவரும் யெகோவாவை வணங்குவதற்கும் மனித பயம் ஒழிந்துபோவதற்குமான காலம் சமீபித்திருக்கிறது. (ஏசாயா 11:9) பசி, நோய், குற்றச்செயல், போர் ஆகியவற்றிற்கான பயமும் இராது. ஆனால், பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் கடவுளுடைய உண்மை ஊழியர்கள், தகுந்த மரியாதையையும் கீழ்ப்படிதலையும் கனத்தையும் அவருக்கு தொடர்ந்து காட்டுகையில் தேவபயம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும். (வெளிப்படுத்துதல் 15:4) இதற்கிடையில், தேவாவியால் ஏவப்பட்ட சாலொமோனின் இந்த அறிவுரையை நாம் எல்லாரும் இருதயத்தில் ஏற்போமாக: “பாவிகள்மேல் உன் மனம் பொறாமைகொள்ள வேண்டாம், யெகோவாவின்மேல் என்றும் பயபக்தியாயிரு. நிச்சயம் உனக்குப் பிரதிபலன் வரும், உனது நம்பிக்கை அற்றுப்போகாது.”—நீதிமொழிகள் 23:17, 18, தி.மொ.
[அடிக்குறிப்புகள்]
a எப்போதும் அபாயகரமான சூழ்நிலைகளில் வேலை செய்யும் சில பெரியவர்கள் ஆபத்தைக் கண்டு பயப்படுவதில்லை. ஏன் தச்சர்கள் அநேகர் தங்கள் விரலை இழந்துவிடுகின்றனர் என அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “படுவேகமாக இயங்கும் மின் ரம்பத்தைக் கண்டு அவர்களுக்கு பயமில்லை” என தயங்காமல் பதிலளித்தார் அனுபவம் வாய்ந்த ஒரு தொழிலாளி.
b யெகோவா தாமே அருவருப்பு அடைகிறார். உதாரணமாக, ‘கெட்ட வார்த்தையை’ உபயோகிக்க வேண்டாமென எபேசியர் 4:29 நமக்கு அறிவுரை கூறுகிறது. ‘கெட்ட’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை அழுகிப்போன பழம், மீன், அல்லது மாம்சத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய வார்த்தை, மோசமான அல்லது அருவருக்கத்தக்க பேச்சிடம் நமக்கு ஏற்பட வேண்டிய வெறுப்புணர்ச்சியை தெளிவாக சித்தரிக்கிறது. அவ்வாறே, விக்கிரகங்களும் ‘நரகலானவையாக’ வேதவசனங்களில் அடிக்கடி விவரிக்கப்படுகின்றன. (உபாகமம் 29:17; எசேக்கியேல் 6:9) நரகல் அல்லது மலத்தினிடம் ஏற்படும் நம்முடைய இயல்பான வெறுப்புணர்ச்சி, எந்தவகை விக்கிரகாராதனையிடமும் கடவுளுக்கு ஏற்படும் கடும் அருவருப்பை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
c உதாரணத்திற்கு பின்வரும் பைபிள் பதிவுகளை கலந்தாலோசியுங்கள்: காயீன் (ஆதியாகமம் 4:3-12); தாவீது (2 சாமுவேல் 11:2–12:14); கேயாசி (2 இராஜாக்கள் 5:20-27); உசியா (2 நாளாகமம் 26:16-21).
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தீமையை வெறுக்க நாம் எப்படி கற்றுக்கொள்கிறோம்?
• மல்கியாவின் நாளிலிருந்த இஸ்ரவேலர் சிலர் யெகோவாவின் நட்புறவை எவ்வாறு இலேசாக எடுத்துக்கொண்டார்கள்?
• கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தைப் பற்றி ஆபிரகாம், யோசேப்பு, யோபு ஆகியோரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• எந்த பயம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும், ஏன்?
[பக்கம் 19-ன் படம்]
ஞானமுள்ள பெற்றோர் நியாயமான பயத்தை தங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கிறார்கள்
[பக்கம் 20-ன் படம்]
பயம் ஆபத்திலிருந்து நம்மை காப்பதுபோல் தேவபயம் தீமையிலிருந்து காக்கிறது
[பக்கம் 23-ன் படம்]
மூன்று போலி நண்பர்களை எதிர்ப்பட்ட போதிலும் தேவபயத்தை யோபு காத்துக்கொண்டார்
[படத்திற்கான நன்றி]
From the Bible translation Vulgata Latina, 1795