மெய்க் கடவுளுக்கு ஏன் இப்போது பயப்பட வேண்டும்?
“தேவனுக்குப் [“மெய்க் கடவுளுக்குப்,” NW] பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
1, 2. கடவுள் பேரில் சரியான பயத்தைக் கொண்டிருப்பது ஏன் பொருத்தமானது?
கடவுள் பேரில் ஓர் ஆரோக்கியமான, மரியாதைமிக்க பயம் மனிதனுக்கு இருப்பது நல்லது. ஆம், அநேக மனித பயங்கள் உணர்ச்சிப்பூர்வமாய் அமைதியைக் குலைக்கக் கூடியவையாயும் நம்முடைய நலனுக்கு தீங்குண்டாக்கக் கூடியவையாயும் இருந்தபோதிலும், யெகோவா தேவனுக்கு பயப்படுவது நமக்கு நல்லது.—சங்கீதம் 112:1; பிரசங்கி 8:12.
2 சிருஷ்டிகர் இதை அறிந்திருக்கிறார். தம் சிருஷ்டிப்பின் பேரிலுள்ள அன்பின் காரணமாக, தமக்கு பயப்படவும் தம்மை வணங்கவும் வேண்டும் என்று அவர் அனைவருக்கும் கட்டளையிடுகிறார். நாம் வாசிக்கிறோம்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.”—வெளிப்படுத்துதல் 14:6, 7.
3. நம்முடைய முதல் பெற்றோருக்கு சிருஷ்டிகர் என்ன செய்தார்?
3 எல்லா காரியங்களையும் சிருஷ்டித்து, உயிருக்கு ஊற்றுமூலராயிருக்கும் சிருஷ்டிகரை நாம் நிச்சயமாகவே அசட்டை செய்யக்கூடாது, ஏனென்றால் நமக்கும் இந்தக் கோளத்துக்கும் சொந்தக்காரர் அவரே. (சங்கீதம் 24:1) தம்முடைய மிகப்பெரிய அன்பின் வெளிக்காட்டுதலாக, யெகோவா தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளுக்கு உயிரையும் வாழ்வதற்கு ஒரு மகத்தான இடமாகிய ஒரு அழகான பரதீஸையும் அவர்களுக்கு அளித்தார். இருப்பினும், இந்த அற்புதமான பரிசு நிபந்தனையற்ற ஒன்றல்ல. உண்மையில் அதை கவனித்துக்கொள்வதற்காக அவர்களிடம் அது ஒப்படைக்கப்பட்டது. நம்முடைய முதல் பெற்றோர் தங்கள் வீட்டை கவனித்துக்கொண்டு, அதை ஆட்களால் நிரப்பி முழு பூமியையும் கீழ்ப்படுத்தும்வரை அவர்கள் விரிவாக்க வேண்டும். அவர்கள் நிலத்தின் மிருகங்கள், பறவைகள், மீன்கள் ஆகியவற்றினிடமாக சிலாக்கியங்களையும் உத்தரவாதங்களையும் கொண்டிருந்தனர்—அவர்களோடும் அவர்களுடைய சந்ததியாரோடும் பூமியை பகிர்ந்துகொள்ளப்போகும் மற்ற எல்லா உயிருள்ள சிருஷ்டிகளோடும் அவற்றைக் கொண்டிருந்தனர். இந்த பெரும் நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட பொறுப்புக்காக மனிதன் கணக்குக் கொடுக்க வேண்டியவனாய் இருப்பான்.
4. கடவுளுடைய சிருஷ்டிப்புக்கு மனிதன் என்ன செய்திருக்கிறான்?
4 அது ஓர் அதிசயமான ஆரம்பமாக இருந்தபோதிலும், மனிதன் தன் அழகான பூமிக்குரிய வீட்டை மாசுபடுத்துவதற்கு செய்திருக்கும் காரியங்களைப் பாருங்கள்! கடவுளுக்கு சொந்தமான இந்த நவரத்தினக்கல்லுக்கு அவமதிப்போடுகூடிய அசட்டை மனப்பான்மையைக் காண்பிப்பதன் மூலம், மனிதர்கள் பூமியை அசுத்தப்படுத்தியிருக்கின்றனர். மிருகங்கள், பறவைகள், மீன்கள் போன்ற முழு ஜீவராசிகளின் அதிகமதிகமான வகைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையை அடையும் அளவுக்கு இந்த மாசுபடுத்துதல் எட்டியுள்ளது. நம்முடைய நீதியான, அன்பான கடவுள் இதை என்றைக்குமாக பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். பூமி கொள்ளையடிக்கப்படுவது கணக்குக் கேட்பதைத் தேவைப்படுத்துகிறது, அதைக் குறித்து பயப்படுவதற்கு அநேகருக்கு காரணமாய் அது உள்ளது. மறுபட்சத்தில், என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்து அறிந்துகொள்வது, கடவுள் மீது மரியாதையோடு நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆறுதலாயிருக்கிறது. யெகோவா கட்டாயம் கணக்குக் கேட்பார், பூமி கட்டாயம் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படும். இது மெய்யாகவே பூமியில் வாசமாயிருக்கும் எல்லா நேர்மை இருதயமுள்ளவர்களுக்கும் சந்தோஷமான செய்தி.
5, 6. மனிதன் தம் சிருஷ்டிப்புக்கு செய்திருப்பவற்றிற்கு யெகோவா எவ்வாறு பிரதிபலிப்பார்?
5 கடவுள் எதன் மூலம் தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்? கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இப்போது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலம். அந்தப் பரலோக குமாரனின் மூலம் யெகோவா தற்போதைய அசுத்தமான, கலகத்தனமான ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவார். (2 தெசலோனிக்கேயர் 1:6-9; வெளிப்படுத்துதல் 19:11) இந்த விதத்தில் அவர் தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவருவார், அதே சமயத்தில் நம்முடைய பூமிக்குரிய வீட்டை மீட்டு பாதுகாப்பார்.
6 இது எவ்வாறு நடைபெறும்? அர்மகெதோன் யுத்தத்தில் முடிவடையப் போகும் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:14; 16:16) இந்த மாசுபடுத்தப்பட்ட ஒழுங்குமுறைக்கு எதிராகவும் அதை மாசுபடுத்தியவர்களுக்கு எதிராகவும் இது கடவுளுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கும். மானிடர்கள் யாராவது உயிரோடு இருப்பார்களா? ஆம்! நோயுற்ற, ஆரோக்கியமற்ற பயத்தை உடையவர்கள் அல்ல, ஆனால் கடவுள் பேரில் மரியாதையான, பக்தியோடுகூடிய பயத்தை உடையவர்கள் இருப்பார்கள். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.—நீதிமொழிகள் 2:21, 22.
திகைப்பூட்டும் வல்லமையின் வெளிக்காட்டு
7. மோசேயின் நாட்களில் இஸ்ரவேலர் சார்பாக கடவுள் ஏன் குறுக்கிட்டார்?
7 நம்முடைய பொது சகாப்தத்துக்கு சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு, யெகோவா தேவன் தம்முடைய வணக்கத்தார் சார்பாக நடத்திய ஒரு பலத்த செயலின் மூலம் இந்த நடவடிக்கை முற்குறிப்பிடப்பட்டது. மிகப்பெரிய இராணுவ வல்லரசாக இருந்த எகிப்து, அதில் வந்து குடியேறிய இஸ்ரவேல வேலையாட்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்தது, புதிதாகப் பிறந்திருந்த எல்லா இஸ்ரவேல ஆண்குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு இஸ்ரவேல இனத்தைப் பூண்டோடு அழிக்க முயற்சிசெய்யும் அளவுக்கு சென்றது. எகிப்தின் மீது கடவுள் வெற்றிசிறந்ததானது இஸ்ரவேலருக்கு அந்தக் கொடூரமான அடக்கியாளும் அரசியல் ஒழுங்குமுறையிலிருந்து விடுதலையைக் கொண்டு வந்தது, ஆம், அநேக கடவுட்களுடைய வழிபாட்டினால் அசுத்தமாக்கப்பட்டிருந்த ஒரு தேசத்திலிருந்து விடுதலையைக் கொண்டுவந்தது.
8, 9. கடவுளுடைய குறுக்கிடுதலுக்கு மோசேயும் இஸ்ரவேலரும் எவ்வாறு பிரதிபலித்தனர்?
8 எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபோது இஸ்ரவேலர் எப்படி பிரதிபலித்தனர் என்பதை யாத்திராகமம் 15-ம் அதிகாரம் பதிவு செய்கிறது. நம்முடைய நாளில் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் கறைபடுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையிலிருந்து கிறிஸ்தவர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட முடியும் என்பதைப் போற்றுவதற்கு இப்பதிவை ஆராய்வது நமக்கு உதவிசெய்யும். நாம் ஏன் மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கு பயப்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்காக யாத்திராகமம் 15-ம் அதிகாரத்தில் உள்ள தெரிந்தெடுக்கப்பட்ட வசனங்களின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் நாம் அதை சிந்திப்போம். நாம் 1, 2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்:
9 “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்.”
10. கடவுள் எகிப்தின் இராணுவ சேனையை அழிப்பதற்கு எது வழிநடத்தியது?
10 யெகோவா இஸ்ரவேலரை எவ்வாறு எகிப்திலிருந்து விடுவித்தார் என்பதைப் பற்றிய பதிவைக் குறித்து பூமி முழுவதிலுமுள்ள ஜனங்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். பார்வோன் இஸ்ரவேலரை இறுதியில் போகும்படி அனுமதிக்கும் வரை அவர் அந்த வல்லமை வாய்ந்த உலக வல்லரசின் மீது வாதைகளைக் கொண்டு வந்தார். ஆனால் பிற்பாடு பார்வோனின் சேனைகள் இந்த பாதுகாப்பற்ற ஜனங்களை துரத்திச் சென்று சிவந்த சமுத்திரத்தின் கரையில் அவர்கள் ஓட வழியின்றி பிடிபட்டதுபோல் தோன்றச் செய்தன. இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் புதிதாகக் கண்டடைந்த சுயாதீனத்தை விரைவில் இழந்துவிடுவார்கள் போல் தோன்றியபோதிலும், யெகோவா வேறொரு காரியத்தை மனதில் கொண்டிருந்தார். அற்புதகரமாக சமுத்திரத்தின் நடுவே ஒரு பாதையை அவர் திறந்து தம் ஜனங்களை பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச் சென்றார். எகிப்தியர்கள் பின்தொடர்ந்து வந்தபோது, அவர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களைத் திரும்பி வரச்செய்து பார்வோனையும் அவனுடைய இராணுவ சேனைகளையும் மூழ்கடித்தார்.—யாத்திராகமம் 14:1-31.
11. எகிப்துக்கு விரோதமாக கடவுள் எடுத்த நடவடிக்கையிலிருந்து என்ன விளைவடைந்தது?
11 எகிப்திய இராணுவ படைகளை யெகோவா அழித்ததானது அவருடைய வணக்கத்தாரின் பார்வையில் அவரை உயர்த்தியது, அவருடைய பெயர் எல்லா இடங்களிலும் மிகவும் விரிவாகப் பரவும்படி செய்தது. (யோசுவா 2:9, 10; 4:23, 24) ஆம், எகிப்தின் வல்லமையற்ற பொய்க் கடவுட்களுக்கு மேலாக அவருடைய பெயர் உயர்த்தப்பட்டது, அக்கடவுட்கள் தங்கள் வணக்கத்தாரை விடுவிக்க முடியாதவர்களாய் நிரூபித்தனர். அவர்களுடைய தெய்வங்கள், சாகக்கூடிய மனிதர்கள், இராணுவ பலம் ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கை அதிக கசப்பான ஏமாற்றத்தில் முடிவடைந்தது. (சங்கீதம் 146:3) தம் ஜனங்களை வல்லமைவாய்ந்த விதத்தில் விடுவிக்கும் உயிருள்ள கடவுளின் பேரில் கொண்டிருந்த ஆரோக்கியமான பயத்தை பிரதிபலிக்கும் துதிகளைப் பாடும்படி இஸ்ரவேலர்கள் தூண்டப்பட்டனர் என்பது ஆச்சரியமாயில்லை!
12, 13. சிவந்த சமுத்திரத்தில் கடவுள் பெற்ற வெற்றியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
12 அதே போல், நம்முடைய காலத்தில் இருக்கும் எந்த பொய்க் கடவுட்களோ அல்லது வல்லரசுகளோ, அவை அணு ஆயுதக் கருவிகளை உடையவையாக இருந்தாலும்கூட, யெகோவாவின் வல்லமைக்கு ஈடிணையாகாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவரால் தம் ஜனங்களை விடுவிக்க முடியும், நிச்சயமாக விடுவிப்பார். “அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.” (தானியேல் 4:35) இச்சொற்களின் உட்கருத்தை நாம் முழுமையாக அறிந்துகொள்ளும்போது நாமும்கூட அவருடைய துதிகளை மகிழ்ச்சியாய்ப் பாட தூண்டப்படுகிறோம்.
13 சிவந்த சமுத்திரத்தின் அருகே பாடிய வெற்றிப் பாடல் தொடர்ந்து சொல்கிறது: “யெகோவா யுத்தத்தில் வல்லவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.” ஆகையால் வெல்லப்பட முடியாத இந்தப் போர்வீரர், மனிதக் கற்பனையில் உருவான பெயரில்லாத நபர் அல்லர். அவருக்கு ஒரு பெயர் உள்ளது! அவர் ‘ஆகும்படி செய்கிறவர்,’ மகத்தான சிருஷ்டிகர், ‘பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர், யேகோவா என்னும் நாமத்தையுடையவர்.’ (யாத்திராகமம் 3:14; 15:3-5, NW; சங்கீதம் 83:17) அந்தப் பூர்வகால எகிப்தியர்கள் சர்வவல்லமையுள்ள கடவுளை எதிர்த்து நிற்பதற்கு பதிலாக, நியாயமான மரியாதையோடுகூடிய அச்ச உணர்வைக் கொண்டிருந்திருந்தால் எவ்வளவு ஞானமாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?
14. தேவ பயத்தின் மதிப்பு எவ்வாறு சிவந்த சமுத்திரத்தில் வெளிப்படுத்திக் காண்பிக்கப்பட்டது?
14 இப்பூமியை வடிவமைத்து, கடலையும் உண்டாக்கிய இவர், திரளான தண்ணீர்களை அடக்கும் ஆற்றலை முழுமையாகக் கொண்டிருக்கிறார். (யாத்திராகமம் 15:8) காற்றையும்கூட அடக்கும் ஆற்றலை பயன்படுத்தி, நடந்திருக்க முடியாததைப் போல் தோன்றியதை அவர் சாதித்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழமான தண்ணீர்களைப் பிளந்து, தம்முடைய ஜனங்கள் நடந்துசெல்வதற்கு பாதையை விடும்படி தண்ணீர்களை இருபக்கமும் விலகிப்போகப் பண்ணினார். அக்காட்சியை மனதில் கற்பனை செய்து பாருங்கள்: இலட்சக்கணக்கான டன் எடையுள்ள கடல்நீர் எதிரெதிரே செங்குத்தான சுவர்களைப் போல் நின்று, இஸ்ரவேலர் தப்பியோடுவதற்கு பாதுகாப்பான வழியை உருவாக்கின. ஆம், கடவுள் பேரில் ஆரோக்கியமான பயத்தை வெளிக்காட்டியவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொண்டனர். பின்னர் யெகோவா அந்தத் தண்ணீர்களை விடுவித்தார், அது ஒரு பெரும் பிரளயமாக திரும்பவும் பாய்ந்தோட அனுமதித்தார். அது பார்வோனின் படைகளையும் அவர்களுடைய எல்லா சாதனங்களையும் முழுவதுமாக மூடிக்கொண்டது. பிரயோஜனமற்ற கடவுட்கள், மனித இராணுவ பலம் ஆகியவற்றின் மீது தெய்வீக வல்லமை எப்படி வியப்பூட்டும் விதத்தில் வெளிப்படுத்தப்பட்டது! நிச்சயமாகவே யெகோவா பயத்திற்கு உகந்தவர் அல்லவா?—யாத்திராகமம் 14:21, 22, 28; 15:8.
கடவுள் பேரிலுள்ள நம்முடைய பயத்தை நடைமுறைப்படுத்திக் காண்பித்தல்
15. கடவுளின் வல்லமைவாய்ந்த பாதுகாக்கும் செயல்களுக்கு நம்முடைய பிரதிபலிப்பு என்னவாயிருக்க வேண்டும்?
15 மோசேயோடே நாம் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தோம் என்றால், நிச்சயமாகவே இவ்வாறு பாடுவதற்கு தூண்டப்படுவோம்: “யெகோவாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்திராகமம் 15:11, NW) இப்படிப்பட்ட உணர்ச்சிமிக்க கருத்துக்கள் அந்த சமயத்திலிருந்து நூற்றாண்டுகளாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. பைபிளின் கடைசி புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் உண்மைத்தன்மையுள்ள கடவுளுடைய அபிஷேகம்செய்யப்பட்ட ஊழியர்களின் ஒரு தொகுதியை விவரிக்கிறார்: ‘அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடுகிறார்கள்.’ இந்த மகத்தான பாடல் என்ன? “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?”—வெளிப்படுத்துதல் 15:2-4.
16, 17. என்ன மகத்தான வளர்ச்சி இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்?
16 அதேபோல் இன்றும்கூட கடவுளுடைய சிருஷ்டிப்பின் வேலைப்பாடுகளை மட்டுமல்லாமல் அவருடைய தீர்ப்புகளைக் குறித்தும் விடுவிக்கப்பட்ட வணக்கத்தார் போற்றுதல் தெரிவிக்கின்றனர். எல்லா தேசங்களிலிருந்து வரும் ஜனங்களும் ஆவிக்குரியபிரகாரமாய் விடுதலையாக்கப்பட்டு, இந்த அசுத்தமான உலகிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய நீதியான தீர்ப்புகளை அறிந்து அவற்றை நடைமுறையில் அப்பியாசிக்கின்றனர். யெகோவாவின் வணக்கத்தார் அடங்கிய சுத்தமான, நேர்மையான அமைப்போடு வசிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கானோர் இந்தக் கறைபடிந்த உலகிலிருந்து வெளியேறுகின்றனர். விரைவில், பொய் மதத்திற்கு எதிராகவும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் மீதமாயுள்ள பாகத்திற்கு எதிராகவும் கடவுளின் கடுங்கோபமான நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்கள் ஒரு நீதியான புதிய உலகில் என்றென்றுமாக வாழ்வர்.
17 வெளிப்படுத்துதல் 14:6, 7-க்கு இணக்கமாக, தேவதூதர்களின் வழிநடத்துதலின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கும் நியாயத்தீர்ப்பு செய்தியை மனிதவர்க்கம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் 230-க்கும் மேற்பட்ட தேசங்களில், சுமார் 50 லட்சம் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும் அவருடைய நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளையைப் பற்றியும் அறிவித்தனர். தப்பிப்பிழைப்பதைக் குறித்து தங்கள் உடன் மானிடர்களுக்கு போதிப்பதற்காக இந்த சாட்சிகள் ஜனங்களுடைய வீடுகளுக்கு ஒழுங்காகச் சென்று இலவச பைபிள் படிப்புகளை நடத்தினர். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான நபர்கள் அறிவுத்திறத்தோடு மெய்க் கடவுளுக்கு பயப்பட போதுமான அளவு கற்றுக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மெய்க் கடவுளுக்கு பயப்பட கற்றுக்கொண்டிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது!—லூக்கா 1:49-51; அப்போஸ்தலர் 9:31; ஒப்பிடுக: எபிரெயர் 11:7.
18. நம்முடைய பிரசங்க வேலையில் தேவதூதர்கள் உட்பட்டிருக்கின்றனர் என்பதை எது எடுத்துக்காட்டுகிறது?
18 இந்தப் பிரசங்க வேலையில் தேவதூதர்கள் உட்பட்டிருக்கின்றனர் என்பது உண்மையா? நிச்சயமாகவே, ஆவிக்குரிய உதவிக்காக அதிக ஆவலாய் ஜெபித்துக்கொண்டு துயரத்தில் இருக்கும் ஒரு நபரின் வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகளைக் கொண்டுசெல்வதில் தேவதூதர்களின் வழிநடத்துதல் தெளிவாய் இருந்திருக்கிறது! உதாரணமாக, ஒரு கரீபியன் தீவிலே இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ஒரு சிறு பிள்ளையோடு சேர்ந்து நற்செய்தியை சொல்லிக் கொண்டிருந்தனர். நடுப்பகல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில், அந்த இரண்டு சாட்சிகளும் அதோடு அன்றைக்கு முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். ஆனால் அந்தப் பிள்ளையோ அடுத்த வீட்டுக்குச் செல்வதற்கு வழக்கத்திற்கு மாறாக அதிக ஆவலாயிருந்தது. அந்த சமயத்தில் அந்த வீட்டுக்கு செல்வதற்கு பெரியவர்களுக்கு விருப்பமில்லை என்பதை அறிந்தபோது, அப்பிள்ளை தானாகவே சென்று தட்டியது. ஒரு இளம் பெண் கதவைத் திறந்தாள். பெரியவர்கள் இதைப் பார்த்தபோது, அவர்களும் அங்குச் சென்று அவளிடம் பேசினர். அவள் அவர்களை வீட்டுக்குள் அழைத்தாள், கதவைத் தட்டும் சப்தம் கேட்டபோது, சாட்சிகளை அனுப்பி பைபிளை தனக்கு கற்றுக்கொடுக்கும்படி ஜெபித்துக்கொண்டிருந்ததாக அவள் விளக்கினாள். பைபிள் படிப்பு ஒன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
19. கடவுளுக்கு பயப்படுவதால் வரும் நன்மைகளில் ஒன்றாக எதை நாம் குறிப்பிடலாம்?
19 கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியை உண்மைத்தன்மையோடு அறிவிக்கையில், அவருடைய நீதியான தீர்ப்புகளையும்கூட நாம் கற்பிக்கிறோம். இவை ஜனங்களின் வாழ்க்கையில் பொருத்தப்படும்போது, சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, எல்லாவிதமான பால் சம்பந்தப்பட்ட ஒழுக்கயீனத்தையும் கண்டனம் செய்வதில் பைபிள் வெகு தெளிவாயிருக்கிறது. (ரோமர் 1:26, 27, 32) இன்று உலகில் தெய்வீக தராதரங்கள் பரவலாக அசட்டை செய்யப்பட்டு வருகின்றன. அதன் விளைவு என்ன? திருமணங்கள் முறிந்துபோகின்றன. தவறுதலான தீச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காயமுண்டாக்கும் பால்வினை நோய்கள் கடத்தப்படுதல் இந்த 20-ம் நூற்றாண்டில் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றன. அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய் பால்வினை ஒழுக்கயீனத்தின் மூலம் பெரும்பாலும் பரவுகிறது. கடவுள் பேரில் மரியாதையோடுகூடிய பயம் மெய் வணக்கத்தாருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்திருக்கவில்லையா?—2 கொரிந்தியர் 7:1; பிலிப்பியர் 2:12; இதையும் காண்க: அப்போஸ்தலர் 15:28, 29.
இப்போது கடவுளுக்கு பயப்படுவதால் வரும் விளைவுகள்
20. யெகோவாவின் சாட்சிகளுடைய நற்பெயரைக் குறித்து மற்றவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதை எது எடுத்துக்காட்டுகிறது?
20 கடவுளுக்கு பயந்து அவருடைய தீர்ப்புகளைப் பின்பற்றுவோருக்கு ஆசீர்வாதங்கள் ஏராளமாய் உள்ளன. யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்கப்பிரகாரமாய் நேர்மையாய் இருக்கும் கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு சமாதானமான சகோதரத்துவம் என்ற உண்மையை அதிக அளவில் மக்கள் இப்போது அங்கீகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள். ஒரு தென் அமெரிக்க நாட்டில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு பிரதிநிதிகளாக சென்றிருந்த அநேக சாட்சிகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். சாட்சிகளாக இல்லாத ஆட்கள் ஓர் இரவு அந்த ஹோட்டலை ஒரு கூட்டத்திற்காக பயன்படுத்தினர், அக்கூட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி பேசுவதாக இருந்தது. ஜனாதிபதியை எலிவேட்டருக்குள் ஏற்றுவதற்காக ஒரு பாதுகாப்பு குழு விரைவாக செல்கையில், அந்த எலிவேட்டருக்குள் யார் இருப்பது என்பதை அறியாத ஒரு சாட்சி அதற்குள்ளே ஏறிவிட்டார்கள், இது பாதுகாவலர்களை அதிக ஆச்சரியத்துக்குள்ளாக்கியது! அந்த சாட்சி, தான் செய்ததை உணர்ந்தபோது, இடையே புகுந்ததற்காக மன்னிப்பு கேட்டார்கள். தன்னை ஒரு யெகோவாவின் சாட்சியாக அடையாளம் காண்பித்த பேட்ஜைக் காண்பித்து, ஜனாதிபதிக்கு தான் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். பாதுகாவலரில் ஒருவர் புன்சிரிப்புடன் இவ்வாறு சொன்னார்: “எல்லா ஜனங்களும் யெகோவாவின் சாட்சிகளைப் போல் இருந்தால், இந்த வகையான பாதுகாப்பு நமக்கு தேவையே இருக்காது.”—ஏசாயா 2:2-4.
21. இன்று ஜனங்களுக்கு செயல்படுவதற்கான என்ன வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன?
21 இந்த ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரப்போகும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வருவதற்கு’ இந்த வகையான ஜனங்களைத்தான் யெகோவா இப்போது கூட்டிச் சேர்த்துக்கொண்டும் தயாரித்துக்கொண்டும் வருகிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) இப்படிப்பட்ட தப்பிப்பிழைத்தல் தற்செயலாய் நிகழப்போகும் ஒரு விஷயமாய் இருக்காது. ஒருவர் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், அவர் யெகோவாவுக்கு பயப்பட வேண்டும், அவரை உரிமையுள்ள பேரரசராகக் கருத வேண்டும், அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், பெரும்பாலான ஜனங்கள் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு தங்களைத் தகுதியாக்கக்கூடிய பயத்தை அபிவிருத்தி செய்துகொள்ள மாட்டார்கள். (சங்கீதம் 2:1-6) கிடைக்கக்கூடிய எல்லா அத்தாட்சிகளின்படி, யெகோவாவால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராகிய இயேசு கிறிஸ்து திருப்புக்கட்ட ஆண்டாகிய 1914-லிருந்து ராஜாவாக ஆட்சிசெய்துகொண்டு வருகிறார். யெகோவாவின் பேரில் ஆரோக்கியமான பயத்தை வளர்த்துக்கொண்டு அதை வெளிப்படுத்திக் காண்பிக்க விரும்பும் தனிப்பட்ட நபர்களுக்கு மீதமாயிருக்கும் காலம் விரைவில் முடிவடைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், நம்முடைய சிருஷ்டிகர், சமுதாயத்தில் உயர்வான ஸ்தானத்தில் இருக்கும் நபர்களும்கூட பிரதிபலிக்கும்படி அனுமதிக்கிறார்: “இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.”—சங்கீதம் 2:7-12.
22. இப்போது கடவுளுக்கு பயப்படும் ஆட்களுக்கு எதிர்காலம் எதைக் கொண்டுவரும்?
22 நம்மை விடுவித்த நம்முடைய சிருஷ்டிகருக்கு துதி செலுத்தப்போகிறவர்கள் மத்தியில் நாம் காணப்படுவோமாக. மெய்க் கடவுளுக்கு இப்போதே பயப்படுவதை இது தேவைப்படுத்துகிறது! (ஒப்பிடுக: சங்கீதம் 2:11; எபிரெயர் 12:28; 1 பேதுரு 1:17.) நாம் அவருடைய நீதியான தீர்ப்புகளை தொடர்ந்து கற்று, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். யெகோவா பூமியின் மீதிருக்கும் எல்லா துன்மார்க்கத்தையும் அழித்து, பாவத்தின் அசுத்தமான பாதிப்புகளிலிருந்து மனிதனையும் அவனுடைய பூமிக்குரிய வீட்டையும் குணமாக்க ஆரம்பிக்கும்போது, வெளிப்படுத்துதல் 15:3, 4-ல் (NW) பதிவு செய்யப்பட்டிருக்கும் மோசேயின் பாடலும் ஆட்டுக்குட்டியானவரின் பாடலும் ஓர் உச்சநிலையை அடையும். பின்பு, முழு இருதயத்தோடு நாம் இவ்வாறு பாடுவோம்: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். யெகோவாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நாம் ஆரோக்கியமான பயத்தைக் காண்பிப்பதற்கு யெகோவா ஏன் தகுதியுள்ளவராய் இருக்கிறார்?
◻ சிவந்த சமுத்திரத்தில் கடவுள் நிகழ்த்திய சாதனைகள் மூலம் எது வெளிப்படுத்திக் காண்பிக்கப்பட்டது?
◻ யெகோவாவின் பேரில் மரியாதையோடுகூடிய பயத்தைக் காண்பிப்பதிலிருந்து என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
◻ இப்போது மெய்க் கடவுளுக்கு பயப்படுகிறவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?