நவீனநாளைய ஆதன்ஸில் எல்லா வகையான மக்களையும் சென்றெட்டுதல்
சுமார் பொ.ச. 50-ல் அப்போஸ்தலன் பவுல் ஆதன்ஸுக்குச் சென்றிருந்தபோது, அந்த நகரம் அதன் பண்டைய கலை இலக்கிய புலமையின் மகிமையை இனிமேலும் அனுபவிக்காதபோதிலும், அது இன்னும் ஒரு முக்கியமான வணிக மையமாக இருந்தது. வரலாற்றுப் படைப்பு ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “[ஆதன்ஸ்] தொடர்ந்து கிரீஸின் ஆவிக்குரிய மற்றும் கலைக்குரிய தலைநகராகவும், அந்தச் சகாப்தத்திலுள்ள கல்விமான்களும் செல்வாக்குள்ளவர்களும் சென்று காண்பதற்குரிய மிகவும் விரும்பத்தக்க இடமாகவும் இருந்தது.”
அங்கிருந்தபோது, யூதர்களுக்கும், புறமதத்தைச் சேர்ந்த அத்தேனர்களுக்கும், பல்வேறு இடங்களிலிருந்து வந்த மக்களுக்கும் பிரசங்கிப்பதற்கான வாய்ப்பு ஒருவேளை பவுலுக்கு இருந்திருக்கும். சுதாரிப்புள்ள, திறம்பட்ட போதகராகிய அவர், தன்னுடைய பேச்சு ஒன்றில், கடவுள் “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும்” கொடுத்தார் என்றும் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே [“மனுஷனாலே,” NW] தோன்றப்பண்ணி”னார் என்றும், அவர் “பூலோகத்தை” நியாயந்தீர்ப்பார் என்பதால் ‘எங்குமுள்ள மனுஷரும் மனந்திரும்பவேண்டும்’ என்றும் சொன்னார்.—அப்போஸ்தலர் 17:25-31.
பல்வகைப்பட்ட பிராந்தியம்
சமீபத்திய பத்தாண்டுகளில் ஆதன்ஸ், எங்குமுள்ள மக்களை ஈர்க்கிற நகரமாக மறுபடியும் ஆகியிருக்கிறது. தூதுவர்களும் இராணுவ பணியாளர்களும் அயல்நாட்டு தூதுக் குழுக்களின் பாகமாக வந்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வந்திருக்கும் இளைஞர், பல்கலைக்கழக மாணவர்களாக அங்கு தங்கியிருக்கின்றனர். ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறும் வேலையாட்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். வீட்டு வேலையாட்களாக வேலை தேடி வந்திருக்கும் அநேக ஃபிலிப்பினோக்களும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மற்றவர்களும் அங்கிருக்கின்றனர். அண்டை நாடுகளிலிருந்தும் உலகெங்கும் அதிக குழப்பமுள்ள இடங்களிலிருந்தும் அகதிகள் தொடர்ந்து உள்ளே வந்துகொண்டிருக்கிறார்கள்.
ராஜ்ய நற்செய்தியை உள்ளூரில் பிரசங்கிப்பவர்களுக்கு இந்த நிலைமை ஒரு சவாலை அளிக்கிறது. தற்காலிகமாக குடியிருப்பவர்களில் பலர் ஆங்கிலம் பேசுகிறார்கள்; ஆனால் சிலர் அவர்களுடைய சொந்த மொழியை மட்டுமே பேசுகிறார்கள். இந்த மக்கள் வித்தியாசப்பட்ட கலாச்சார மற்றும் மதப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். விஜயம் செய்கிறவர்களின் மத்தியில், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், ஆவியுலகக் கோட்பாட்டாளர், அறியொணாமைக் கொள்கையினர், மற்றும் நாத்திகர் என உரிமைபாராட்டிக்கொள்பவர்களைக் காணலாம். இந்த மக்களின் பல்வேறு பின்னணிகளுக்கு ஏற்றவாறு தங்கள் பிரசங்கங்களை மாற்றியமைத்துக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.
புதிதாக வந்திருக்கும் இவர்களில் அநேகர் கடினமான காலங்களினூடே அனுபவப்பட்டிருப்பதால், அடிக்கடி அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்தும், வருங்காலத்தின் எதிர்நோக்குகளைக் குறித்தும் கேள்விகள் இருக்கும். சிலர் பைபிளை உயர்வாக மதிப்பதால், அது சொல்வதை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. இந்தப் பல்வகைப்பட்ட பிராந்தியத்தில் பெரும்பாலானோர் மனத்தாழ்மையுள்ளவர்களும், சாந்தமுள்ளவர்களும், சத்தியத்திற்காகப் பசியுள்ளவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடமிருந்தும் வீட்டுச் சூழலிலிருந்தும் தூரமாக இருப்பதால் சத்தியத்தைத் தேடுவதற்கு அதிக சுயாதீனமுள்ளவர்களாக உணர்கிறார்கள்.
இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்து முடிப்பதற்காக, 1986-ல் ஆதன்ஸில் முதல் ஆங்கில சபை ஒழுங்கமைக்கப்பட்டது. அற்புதமான வளர்ச்சி இருந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில், சுமார் 80 புதியவர்கள் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். பலன் என்னவென்றால், ஒரு அரபிக் சபை, ஒரு போலிஷ் சபை, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு பிரெஞ்சு தொகுதி ஆகியவை ஆதன்ஸில் நிறுவப்பட்டிருந்தன. வடக்கே தெஸ்ஸலோனிகி, ஹிராக்லியன், கிரீட், பிரேயஸ், ஆதன்ஸ் துறைமுகம் ஆகிய இடங்களிலுள்ளவற்றைப் போன்ற மற்ற சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் உதவும்படி ஆங்கில சபையிலிருந்து சிலர் சென்றிருக்கிறார்கள். ஆதன்ஸில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கிற அயல்நாட்டினர் சிலரை நீங்கள் சந்திக்க விரும்புகிறீர்களா?
ஜாதிகளிலிருந்து விரும்பத்தக்கவர்கள் உள்ளே வந்துகொண்டிருக்கின்றனர்
தாமஸ் என்பவர் எரிட்ரியாவிலுள்ள அஸ்மராவில் பிறந்து, மதப்பற்றுள்ள கத்தோலிக்கராக வளர்ந்துவந்தார். அவருக்கு 15 வயதாக இருந்தபோது ஒரு துறவிமடத்தில் சேர்ந்தார். அங்கிருந்த குருமட தலைவரிடம் அவர் கேட்டார்: “ஒரு கடவுளில் மூன்று கடவுட்கள் இருப்பது எவ்வாறு சாத்தியம்?” அந்த குருமட தலைவர் பதிலளித்தார்: “ஏனென்றால் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து போப் என்ன சொல்கிறாரோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு இரகசியம், இதைப் புரிந்துகொள்வதற்கு நீ மிக இளைஞன்.” மடத்தில் ஐந்து வருடங்கள் இருந்தபிறகு, சர்ச்சின் நடத்தை மற்றும் போதனைகளைக் குறித்து தெளிவுபெற்றவராகவும் ஏமாற்றமடைந்தவராகவும் தாமஸ் அங்கிருந்து வெளியேறினார். இருந்தாலும், உண்மைக் கடவுளுக்கான தேடுதல் முயற்சியை அவர் கைவிட்டுவிடவில்லை.
அவர் ஆதன்ஸில் குடியேறியபின் சில நாட்களில், “ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உங்களுடையதாகலாம்” என்ற அட்டைப்பக்க பொருளையுடைய காவற்கோபுரம் பிரதி ஒன்றைத் தன் கதவண்டையில் கண்டார். அதை அவர் பலமுறை வாசித்தார். அதே பத்திரிகையில், நாம் முதலாவதாக தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும் என்று வாசித்தார். (மத்தேயு 6:33) இதை எப்படிச் செய்யவேண்டுமென காண்பிக்கும்படி தாமஸ் முழங்காற்படியிட்டுக் கடவுளிடம் கேட்டு, இவ்வாறு வாக்குக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யத்தை எப்படித் தேடுவது என்று நீர் எனக்குக் காண்பித்தால், உம்மை எப்படிச் சேவிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்காக நான் ஆறு மாதங்களை அர்ப்பணிப்பேன்.” அதற்குப்பின் நான்கு வாரங்கள் கழித்து, இரண்டு சாட்சிகள் அவருடைய கதவைத் தட்டினர். தாமஸ் உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்; பத்து மாதங்கள் கழித்து அவர் முழுக்காட்டப்பட்டார். அவர் சொல்கிறார்: “யெகோவா நிஜமாகவே என் ஜெபத்திற்குப் பதிலளித்தார்; அவருடைய சாட்சிகளில் ஒருவராவதற்கு எனக்கு வாய்ப்பளித்தார். இப்போது அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடுவதற்கு அவருடைய அன்பு என்னைத் தூண்டுகிறது.”
வீடுவீடாகப் பிரசங்கிக்கும்போது, வேறே இரு சாட்சிகள், அழைப்பு மணிக்கு அருகே அயல்நாட்டுப் பெயரைக் கண்டார்கள்.
“உங்களுக்கு என்ன வேணும்?” என்பதாக உள்தொடர்பு தொலைபேசி மூலம் ஒரு பெண் குரல் கேட்டது.
பைபிளில் அக்கறை கொண்டிருக்கிற ஆங்கிலம் பேசும் மக்களை அவர்கள் காண முயலுவதாக சாட்சிகளில் ஒருவர் கூறினார்.
“நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டார்கள்.
“நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்.”
“ஓ, நல்லது! மேல் மாடிக்கு வாருங்கள்.”
அவர்கள் அவ்வாறு செய்தார்கள்; உயர்த்தியின் (elevator) கதவு திறந்ததும், ஓரளவு எதிர்மறையான மனநிலையுள்ள மிகப் பெரிய உருவமுள்ள ஆள் ஒருவர் அங்கு நின்றார். ஆனால் அந்தப் பெண் உள்ளேயிருந்து சப்தமாகப் பேசினார்.
“அவர்களை உள்ளே விடுங்கள். நான் அவர்களிடம் பேச வேண்டும்.”
அவர்கள் தன் கணவனின் விளையாட்டுக் குழுவுடன் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள் என்றும் அதற்கு முந்தின நாள்தான், யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜெபம் செய்ததாகவும் சொன்னார்கள். ஆகவே அப்போதே ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. அவர்கள் கிரீஸில் குறைந்த காலத்திற்கே தங்குவதாக இருந்ததால், ஒரு வாரத்திற்கு மூன்று படிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன; என்றும் வாழலாம் புத்தகம் பத்தே வாரங்களில் முடிக்கப்பட்டது.
அடுத்த விளையாட்டுக் காலம் அவர்களை மீண்டும் கிரீஸுக்குக் கொண்டுவந்தது. அந்த மனைவி மீண்டும் படிக்க ஆரம்பித்தார்கள்; சிறந்தவிதத்தில் முன்னேறினார்கள். இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக பிரசங்க வேலையில் சாட்சிகளுடன் சேர்ந்துகொண்டார்கள்; சீக்கிரமாக தன் முதல் படிப்பை ஆரம்பித்தார்கள். யாரோடு? சாட்சிகளாலும் தன் மனைவியிலுள்ள மாற்றங்களாலும் மிகவும் கவரப்பட்ட அவர்களுடைய கணவனுடனேயே.
புராட்டஸ்டன்ட் பாதிரியார் ஒருவரின் மகன் ஆலன், தென் ஆப்பிரிக்காவில் வளர்ந்து வந்தார். பைபிளானது கடவுளிடமிருந்து வந்த ஏவப்பட்ட வெளிப்பாடு என்பதாக அவர் மிக இள வயதிலிருந்தே உறுதியாக நம்பினார். தன்னுடைய மதத்தில் திருப்தியற்றவராக, அவர் தத்துவயியல் மற்றும் அரசியலிடமாகத் திரும்பினார்; ஆனால் இது அவரை முன்பிருந்ததைவிட வெறுமையாக உணர வைத்தது. அவர் கிரீஸுக்குச் சென்ற பின்னர், அவருடைய வெறுமை உணர்ச்சி அதிகரித்தது. அவருடைய வாழ்க்கை நோக்கமற்றதாக இருக்கிறதென்றும், எங்குமே கொண்டுசெல்லாத ஒரு பாதையில் தான் இருப்பதாகவும் உணர்ந்தார்.
ஓரிரவு ஏதோவொன்று சம்பவித்தது. “நான் முழங்கால்படியிட்டு கடவுளிடம் மனம்விட்டுப் பேசினேன். என் வாழ்க்கைப் போக்கைக் குறித்து சோகக் கண்ணீருடன், கடவுளை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களிடம் என்னை வழிநடத்தும்படி அவரிடம் கெஞ்சினேன். அவருடைய வழிநடத்துதலின் வெளிச்சத்தில் நான் நடப்பேன் என்று வாக்களித்தேன்,” என்று ஆலன் சொல்லுகிறார். அந்த வாரத்திற்குள்ளாக, ஒரு கடையில், சாட்சியாக இருந்த அதன் உரிமையாளராகிய ஒரு பெண்ணுடன் அவர் ஓர் உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் ஆலனின் வாழ்க்கையில் ஒரு திருப்புக்கட்டமாக நிரூபித்தது. “அதைப் பின்தொடர்ந்த நாட்களில், நான் பேணிக்காத்து வந்த நம்பிக்கைகள் சிதைந்தன: திரித்துவம், எரிநரகம், ஆத்துமா அழியாமை ஆகியவை—யாவும் தெளிவாகவே பைபிள் போதனைகள் அல்லவே.” ராஜ்ய மன்றத்தில், சாட்சிகளின் ஒரு தம்பதி, அவருடன் பைபிளைப் படிக்க முன்வந்தனர். அவர் ஏற்றுக்கொண்டு, விரைவான முன்னேற்றத்தைச் செய்தார். “சத்தியம் என்னை மகிழ்ச்சியால் கண்ணீர்விட வைத்தது, அது என்னை விடுதலையாக்கியது,” என்பதாக ஆலன் நினைவுகூருகிறார். ஒரு வருடம் கழித்து அவர் முழுக்காட்டப்பட்டார். உள்ளூர் சபையில் இன்று ஒரு உதவி ஊழியராகச் சேவிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
எலிசபெத் நைஜீரியாவில் உள்ளவர்; அவர் அங்கு பல்வேறு சர்ச்சுகளில் கடவுளுக்காகத் தேடி, திருப்தியற்றவராக விடப்பட்டவர். எரிநரகத்தில் நித்திய வாதனையை அனுபவிக்கும் போதனை அவருக்கு மிகவும் அச்சமூட்டுவதாய் இருந்தது. அவர் தன் குடும்பத்துடன் ஆதன்ஸுக்கு வந்தபோது, கதவண்டையில் இரண்டு சாட்சிகள் அவரை அழைத்தார்கள், ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. கடவுள் மக்களை வதைப்பதில்லை, ஆனால் பரதீஸான ஒரு பூமியில் நித்திய வாழ்வுக்கான ஒரு நம்பிக்கையை அவர் அளிக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்வதில் எலிசபெத் கிளர்ச்சியுற்றார். தன் நான்காவது குழந்தையை வயிற்றில் சுமந்தவராகவும், அதைக் கருச்சிதைவு செய்ய நினைத்துக்கொண்டும் இருந்தார். பின்னர் உயிரின் புனிதத்தன்மையின் மீதான யெகோவாவின் நோக்கை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டார். இப்போது அவருக்கு ஓர் அழகிய மகள் இருக்கிறாள். எலிசபெத் மிகவும் விரைவாக முன்னேற்றமடைந்து, சீக்கிரத்தில் முழுக்காட்டப்பட்டார். நான்கு பிள்ளைகளையும் ஒரு முழுநேர வேலையையும் கொண்டிருக்கிறபோதிலும், ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் அவரால் துணைப் பயனியர் ஊழியத்தையும் செய்ய முடிகிறது. அவரது கணவரும் பைபிளைப் படிக்கத் தொடங்கியிருப்பதைக் காணும் ஆசீர்வாதமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவர் சொல்கிறார்: “நான் கடைசியாக உண்மையான கடவுளையும் உண்மையான வணக்கத்தையும் கண்டுபிடித்துவிட்டேன், யெகோவாவுக்கும் அவருடைய அன்பான அமைப்புக்கும் நன்றி.”
இந்தப் பல்வகைப்பட்ட பிராந்தியத்திலுள்ள அநேக மக்கள் தெரு ஊழியத்தின்போது சந்திக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களுடைய ஆர்வத்தை வளர்ப்பதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது. சியர்ரா லியோனிலிருந்து வந்த ஸாலே என்ற ஓர் இளம் பெண்ணின் விஷயத்தில் இதுவே உண்மையாக இருந்தது. ஒரு சாட்சி அவருக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு, அவருடைய முகவரியை வாங்கிக்கொண்டு, மீண்டும் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்தார். ஸாலே ஆர்வமுடையவராக இருந்து, ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார்; ஆனால் வேலையின் அழுத்தம் மற்றும் வேறு பிரச்சினைகளின் காரணமாக அது ஒழுங்காக நடத்தப்படவில்லை. பின்னர் திடீரென்று தன்னுடைய புதிய முகவரியைக் கொடுக்காமல் வேறெங்கோ குடிபெயர்ந்துவிட்டார். பழைய முகவரிக்குச் சென்றுகொண்டே இருப்பதில் அந்தச் சாட்சி விடாமுயற்சியுடன் தொடர்ந்தார்; முடிவில் ஸாலே, தன்னுடைய புதிய வீட்டிற்கு வரும்படி அந்தச் சாட்சிக்கு செய்தி அனுப்பினார்.
ஸாலே தன் கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் இருந்தபோதும்கூட, அந்தப் படிப்பு இப்போது மிகவும் ஒழுங்காக நடைபெற்றது. குழந்தை பிறந்தபின், ஸாலே முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபி ஆனார். இவை யாவும் எளிதாகத் தோன்றக்கூடும் என்றாலும், உண்மையில் அவ்வாறிருக்கவில்லை. காலை 6:30 மணிக்கு, அவர் தன்னுடைய குழந்தையை பாலர் பள்ளிக்குக் கொண்டுசெல்வதற்காக, அரை மணிநேரம் பேருந்தில் பயணம் செய்வதற்கும் அதைத் தொடர்ந்து வேலைக்குப் போவதற்காக இன்னொரு மணிநேரம் பேருந்தில் பயணம் செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். தன்னுடைய சுத்தம்செய்யும் வேலையைச் செய்தபிறகு, மீண்டுமாக வீடு திரும்புவதற்குப் பயணப்படுகிறார். கணவனிடமிருந்து வரும் எதிர்ப்பின் மத்தியிலும், கூட்டங்கள் உள்ள இரவுகளில், அல்லது வெளி ஊழியத்திற்குப் போகையில், போகவர இன்னும் இரண்டு மணிநேரங்கள் பேருந்தில் பயணம்செய்கிறார். அவரிடம் அன்பையும் பொறுமையையும் காண்பித்துக்கொண்டே, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு முன்னேறினார். அவரது கணவரைப் பற்றியென்ன? அவர் கிறிஸ்துவினுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராயிருந்து, பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதற்கு ஒத்துக்கொண்டார்.
சிறந்த பலன்களால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்
இந்த மக்களில் அநேகர், ஆதன்ஸில் தற்காலிகமாகவே தங்கியிருக்கின்றனர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்காக அநேகர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுகின்றனர். இன்னும் மற்றவர்கள் வெவ்வேறு மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று, தொடர்ந்து யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள். கிரீஸில் தங்குகிறவர்கள் தங்கள் நாட்டுக்குக் குடிபெயர்ந்து வந்து தங்கள் நாட்டினராக இருப்பவர்களுக்கும் சாட்சிபகர்வதில் நல்ல பலன்களை அனுபவிக்கிறார்கள். இன்னும் மற்றவர்களுடைய காரியத்தில், அந்த வருகையாளர்கள் வேறொரு நாட்டிற்குச் சென்று சாட்சிகளால் தொடர்புகொள்ளப்பட்ட பிறகுதான் அந்த சத்தியத்தின் விதைகளுடைய பலன் அனுபவிக்கப்படுகிறது.
யெகோவா பட்சபாதமற்றவர் என்பதை இவை யாவும் நிரூபிக்கின்றன. எல்லா தேசத்திலிருந்தும் அவருக்குப் பயந்து நீதியை நேசிக்கிற மக்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். (அப்போஸ்தலர் 10:34, 35) அப்படிப்பட்ட செம்மறியாட்டைப்போன்ற மக்களுக்கு, பொருளாதார நன்மைகளுக்காக மற்றொரு நாட்டிற்கு அவர்கள் சென்றது, அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான ஆசீர்வாதங்களில்—உண்மைக் கடவுளாகிய யெகோவாவையும் நீதியான ஒரு புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் வாக்குறுதியைப் பற்றியதுமான அறிவில்—விளைந்தன. ஆம், நவீன நாளைய ஆதன்ஸில் பிற மொழி பேசும் மக்களைச் சென்றெட்டுவதற்கான முயற்சிகளை யெகோவா உண்மையிலேயே நிறைவாக ஆசீர்வதித்திருக்கிறார்!
[பக்கம் 16-ன் படங்கள்]
அநேக தேசங்களிலுள்ள மக்கள் ஆதன்ஸில் நற்செய்தியைக் கேட்கிறார்கள்