தோட்டத்திற்கான நம் ஆசை
இந்தக் காதைப் பிளக்கும் சத்தத்திலிருந்தும், சலிப்பூட்டும் வாழ்க்கை சக்கரத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள அழகிய தோட்டத்தில் நிலவும் அமைதியில் தஞ்சம்புக நீங்கள் நினைப்பதில்லையா? புல்வெளிகளும் மலர்களும் நிழல் தரும் மரங்களும் குளங்களும் உள்ள பூங்காக்கள் அல்லவோ நாம் குடும்பத்தோடு கண்டுகளிக்க அல்லது நண்பரோடு சாவகாசமாக நடந்துபோக விரும்பும் இயற்கைச்சூழல்கள்? ஆக, தோட்டம் எத்தனை இதமாக, புத்துயிர் அளிப்பதாக, சாந்தம் கமழுவதாக, ஏன் நோய்தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறதே!
ஒருவேளை நேரம் இல்லாத காரணத்தால் சிலர் தோட்டம் ஒன்றை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தட்டிக்கழித்தாலும், தோட்டத்திற்கே உரிய எழில்மிகு வண்ணங்களையும் வாசங்களையும் இனிய ஓசைகளையும் சுவை மிகு கனிகளையும் அனுபவித்து மகிழ நம்மில் யாருக்குத்தான் விருப்பமிருக்காது! கட்டடக்கலைஞராகவும் அறிவியல் அறிஞராகவும் வழக்கறிஞராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஐ.மா.-வின் ஜனாதிபதியாகவும் இருந்த தாமஸ் ஜெஃபர்சனுக்கு தோட்டம் என்றால் உயிர். அவர் எழுதினார்: “எனக்கு இந்தப் பூமியில் பயிர் செய்வதைக் காட்டிலும் அதிக ஆனந்தம் தரும் வேலை வேறு ஏதும் இல்லை. . . . தோட்டத்திற்காக எனது நாட்டம் இன்னமும் தணியவில்லை. நான் கிழவனாக இருக்கலாம், ஆனால் தோட்டவேலை என்று வந்துவிட்டால், நான் ஓர் இளம் தோட்டக்காரனே.”
இவரது இந்தக் கருத்தை பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகின் புகழ்பெற்ற தோட்டங்களைக் கண்டுகளிக்க ஒவ்வொரு வருடமும் மக்கள் வெள்ளமென திரண்டு செல்கிறார்கள். அத்தகைய தோட்டங்களில் சிலவற்றை குறிப்பிடவேண்டுமென்றால், இங்கிலாந்திலுள்ள கியூ கார்டன்ஸ் (ராயல் தாவரவியல் தோட்டம்), ஜப்பானின் கியோடோவிலுள்ள தோட்டங்கள், பிரான்ஸின் வெர்சாய் அரண்மனை தோட்டங்கள், அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவிலுள்ள லாங்வுட்டு கார்டன்ஸ் முதலியன. நெடுக மரங்கள் நடப்பட்ட பாதைகளும், செடி, கொடி, மரங்கள் என வண்ணமிகு எழிலால் சூழப்பட்ட வீடுகளையும் உடைய, சுருங்க சொன்னால், ஒரு குட்டி பரதீஸ் போல் இருக்கும் நகர் பகுதிகளையும் சில நாடுகள் கொண்டுள்ளன.
தோட்டங்கள் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
மனிதர்கள் இயற்கை உலகோடு தொடர்பு கொள்கையில், மலர்களையும் மரங்களையும் செடிகளையும் பறவைகளையும் அருகில் சென்று தொடாவிட்டாலும்கூட ஜன்னல் வழியே பார்வையால் தழுவுகையில் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையானது, நியூ யார்க் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையை அதன் மாடியில் ஒரு தோட்டம் போடும்படி வழிகோலியது. தோட்டம் நடுவதை “உற்சாக துள்ளலோடு வரவேற்றார்கள். அது நோயாளிகள், பணியாளர்கள் என்று இருசாரரின் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கு ஏற்ற தூண்டுகோலாக செயல்படும். அது நோய்த்தீர்க்கும் பல சாத்தியங்களை கொண்டுள்ளது என்பதை நம்மால் பகுத்துணர முடிகிறது” என்று அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறினார். உண்மையில், இயற்கையை தங்கள் புலன் உணர்வுகளால் அள்ளிப்பருகும் ஆட்கள், உடல் ரீதியிலும் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பலனடைகின்றனர் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
மேலும் ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் கடவுளின் கைவண்ணத்தில் உள்ளம் திளைக்கையில் கடவுளோடு நெருங்கி இருப்பதாக அவர் உணரலாம். தோட்டக்கலையைப் பற்றிய ஆரம்பம், நம்மை இந்தப் பூமியின் முதல் தோட்டமாகிய ஏதேனிடம் அழைத்துச்செல்கிறது. அங்குத்தான் மனிதனோடு கடவுள் முதன்முதலில் பேச்சுத்தொடர்பு கொண்டார்.—ஆதியாகமம் 2:15-17; 3:8.
எந்நாட்டவருக்கும் தோட்டம் என்றால் கொள்ளை ஆசைதான். இந்த ஆசை எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் காணவிருக்கிறோம். இந்த அம்சத்தைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கு முன், பரதீஸ் உண்மையில் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எல்லாருடைய இருதயங்களிலும் எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை காண்பதற்காக நாங்கள் உங்களை வரலாற்று புகழ்வாய்ந்த சில தோட்டங்களிடமாக “அழைத்து” செல்லவிருக்கிறோம்.