கியு தோட்டங்கள் உலகத்துக்குத் தாவர மறுநடவு மையம்
பிரிட்டன் விழித்தெழு! நிருபர்
உயரத்துக்கு இயல்பான அச்ச உணர்வை மேற்கொண்டு, இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் சைமன் குட்டினஃப் தென் அட்லாண்டிக் சமுத்திரத்திலுள்ள செய்ன்ட் ஹெலினா தீவில் ஒரு மலைச் சிகரத்தின் பாறையில் கயிறு கட்டி நெஞ்சில் அச்சம் குடிகொள்ள அதைப் பிடித்துக்கொண்டு இறங்குகிறார். கடைசியில் தன்னுடைய இலக்கை அடைந்த அவர் அந்தக் குன்றின் பக்கங்களிலிருந்து சிறு மலர்களையுடைய அரியதோர் டெய்சி மர வகையின் ஒரு தனித் தாவரத்தை மெதுவாகப் பிடுங்கினார். அநேகமாய் அழிந்துபோகும் நிலையிலிருந்த இந்தத் தாவர இனம் தீவிர சிகிச்சைக்காக இங்கிலாந்துக்குத் தன்னுடைய 6,800 மைல் பயணத்தைத் துவங்கியது.
இங்கிலாந்தில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு அது நல்ல விதத்தில் பிரதிபலித்ததால் விருத்தியடைய ஆரம்பித்தது. அது செய்ன்ட் ஹெலினாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தனியொரு தாவரம் ஆயிரமாக வளர்ந்து, அந்தத் தீவின் அரிமானத்தை மேற்கொள்ள உதவியது.
இங்கிலாந்தில் லண்டனிலுள்ள கியு ராயல் தாவரவியல் தோட்டங்களின் தாவர மறுநடவுமுறை கண்ட வெற்றிகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்தத் தாவரத்தை ஏன் இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டும் என்று நீங்கள் யோசிக்கக்கூடும். கியு தோட்டங்களைப்பற்றிய விசேஷம் என்ன?
அறிவியலுக்கும் இன்பத்துக்குமான தோட்டங்கள்
நன்கு அமைக்கப்பட்டிருக்கும் 288 ஏக்கர் தோட்டங்களைக் கண்டு மகிழ கியுவுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயம் செய்கிறவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்துக்கும் அதிகமாகும். பருவக் காலம் என்னவாயிருந்தாலும், பல்வேறு தாவரங்களின் புத்துயிரளிக்கும் நறுமணம் காற்றில் கலந்து வீசுகின்றன. இங்கு 40,000-க்கும் மேற்பட்ட வித்தியாசமான தாவர வகைகள் சேர்க்கப்பெற்றிருப்பதால் சிலர் இதை உலகிலேயே மிகச் சிறந்த தாவரவியல் தோட்டமாகக் கருதுகின்றனர். ஆனால் கியு தோட்டங்களில் அழகு மட்டும் அல்ல, அதைவிட அதிகம் உட்படுகிறது.
தாவரவியல் தோட்டங்களின் ஒரு முக்கியமான பங்கு பொது கல்வி என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன், கியு “ஒரு பல்கலைக்கழகம், மலர்களே அதன் பாடங்கள்,” என்று விளக்கப்பட்டிருக்கிறது! இந்தத் தாவரவியல் மையம் எவ்விதம் துவக்கப்பட்டது?
18-வது நூற்றாண்டின் மத்தியில் வேல்ஸ் நாட்டு டொவேஜர் இளவரசி அகஸ்தா, ரிச்மண்டிலுள்ள தேம்ஸ் நதி ஓரமாய்த் தன்னுடைய நிலத்தில் தோட்டங்களை அமைக்க ஆரம்பித்ததுமுதல், கியு, தோட்டக்கலையின் மையமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் சர் ஜோசஃப் பாங்க்ஸ் (1743-1820) என்பவருக்குத்தான் மிகுந்த நன்றி, ஏனென்றால் அவரால்தானே கியு தோட்டங்கள் புகழ்பெற ஆரம்பித்தன. அவர் பேரளவில் தாவரங்களைச் சேகரிப்பதற்கான ஒரு மாபெரும் திட்டத்தை ஒழுங்குபடுத்தினார். தாவரக் குடும்பங்களின் ஆய்வுக்காகத் தாவர வகைகளைச் சேகரிப்பதற்கு தாவரவியல் துறையினர் உலகப்பயணமாக லண்டனிலிருந்து புறப்பட்டனர். பலன்? வற்றலாக்கப்பட்ட தாவர வகைகளைப் பேரளவாக சேகரித்து வைத்திருக்கும் உலகிலேயே மிகப் பெரிய இடங்களில் ஒன்று கியு. இதன் கோப்புகள் ஏறக்குறைய 65,00,000 தாவரங்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கின்றன.
பிரபல வெற்றிகள்
பூகோளத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தாவரங்களை மாற்றுவதில் கியுவின் தூதுவர்கள் அதிக உதவியாயிருந்திருக்கின்றனர். 1787-ல் டேவிட் நெல்சன், ஒரு கியு தோட்டக்காரர், கப்பற்குழு முதல்வர் பிளை என்பவர் தலைமையின்கீழ் சிறப்பு வாய்ந்த பெளன்ட்டி கப்பலில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டார். அவருடைய பயணத்தின் இலட்சியம்? கரீபிய தீவில் உணவுக்கு ஆதார தாவரமாயிருக்க தென் பசிபிக் தஹித்தியிலிருந்து மாச்சத்து மிகுந்த ஈரப்பலா தாவர வகையை சேகரித்துக் கொண்டுவருவதாகும். அந்தப் பயணம் எதிர்ப்பாராத விதத்தில் ஓர் உட்பூசல் கொண்ட கலவரத்தில் முடிந்தது. நெல்சன் அந்தப் பயணக் குழுவின் தலைவருடன் கைவிடப்பட, கடைசியில் அவர்கள் இந்தோனேசிய தீவாகிய திமோர் தீவில் இறங்கி, அங்கேயே மரித்துவிட்டார். என்றபோதிலும் மற்ற கியு பிரதிநிதிகள் பின்தொடர்ந்தனர், அந்த ஈரப்பலா தாவர வகையும் அது சேரவேண்டிய இடமாகிய செய்ன்ட் வின்சென்ட் தீவை சேர்ந்தடைந்தது.
பொருளாதார தாவரவியல், அல்லது பயனுள்ள தாவரங்களைத் தேடிக் கண்டுபிடித்தல்தானே கியுவின் சிறப்பு அம்சம். உலகத்தின் சரித்திரத்தை மாற்றியமைத்ததாகச் சிலர் கருதும் ஒரு பொருளின் உற்பத்திக்கு இந்தத் தோட்டங்கள் உதவியிருக்கின்றன: கொயினா, பெருவின் சிங்கோனாபட்டைக் காரமடங்கிய மருந்துவகை, மலேரியா விஷ ஜுரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய துணைகண்டத்தில் பெருமளவில் வாதையாக இருந்த மலேரியா விஷ ஜுரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமுடையவராயிருந்தார் கிளெமண்ட்ஸ் மார்க்ஹாம் என்பவர். அவர் 1859-ல் கியு தோட்டக்கலைஞர்களுடன் பெரு, ஈக்வேடார், பொலிவியா போன்ற இடங்களுக்குச் சென்று என்றும் பசுமையாயிருக்கும் சிங்கோனா தாவர வகையின் விதைகளையும் இளஞ்செடிகளையும் சேகரித்துக் கொண்டுவரும் நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கினார். வானிலை மோசமாக இருந்த போதிலும், செடிகளைக் கொண்டுவருவது கடினமாயிருந்தபோதிலும், சில நாற்றுகள் கியுவின் அரிய தாவரக் கண்ணாடிக் கூடத்தை வந்தடைந்தன. இங்கு நிபுணர்களின் அருமையான கவனிப்பின்கீழ் அவை பெருக ஆரம்பித்து, பின்பு இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டன. வெகு சீக்கிரத்திலேயே இந்தியாவின் கிராமங்களில் கொயினா மருந்து தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தது.
கியு அருந்தாவர காட்சியகத்தில் ஒரு காட்சிப் பகுதி மற்றொரு தாவர மறுநடவு சிகிச்சையின் வெற்றியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அங்கு ரப்பர் மர விதைகள் (ஹெவிய பிரேசிலியன்சிஸ்) சேகரிக்கப்பட்டிருப்பதையும் அதன் விவரங்களையும் காணலாம். கியுவின் முன்னாள் இயக்குநர் ஜோசஃப் ஹுக்கர், இந்த விதைகளைத் தென் அமெரிக்காவிலிருந்து கியுவுக்கு மாற்றிக் கொண்டுவர ஒரு விசேஷ திட்டத்தை வகுத்தார். அவற்றைக் கொண்டுவருவதில் பல கஷ்டங்கள் இருந்தபோதிலும், கடைசியில் 70,000 விதைகள் இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் வந்தடைந்தன. அங்கிருந்து கியுவுக்கு விசேஷ இரயில் மூலம் பயணத்தைத் தொடர்ந்தன. அவற்றில் 2,397 விதைகள்தான் வெற்றிகரமாக முளைத்தன. இரண்டே மாதங்களில் 1,919 செடிகள் இலங்கைக்கும் மலேயாவுக்கும் அனுப்பப்பட்டன. இவற்றிலிருந்துதான் அந்நாடுகளில் இன்றைய பேரளவான ரப்பர் சாகுபடி செய்யப்படுகின்றன.
கியுவின் 19-வது நூற்றாண்டு சாதனைகளில் மற்றொன்று, அநேகமாய் மரங்களே இல்லாதிருந்த அசென்ஷன் தீவில் வளர்க்க மரங்களைத் தெரிந்தெடுத்தலாகும். இந்தத் தோட்டங்கள் ஒப்பனைப்பொருட்களுக்கும் பானங்களுக்கும் நிறமூட்ட பயன்படுகிற உலர்த்தப்பட்ட செந்நிற தம்பலப்பூச்சியினத்தைப் பெருக்குவதற்கான கள்ளிச்செடிவகைகளைக் கேனரி தீவுக்கு அனுப்பியது. பயனுள்ள மற்றுமநேக தாவரங்களும் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால் இன்று கியுவைப் பற்றியதென்ன? அதன் தோட்ட நிபுணர்களிலிருந்து நாம் இன்றும் நன்மையடைந்து வருகிறோமா?
சிகிச்சைக்குச் சாதகமான இங்கிலாந்தின் சீதோஷணம்
“உலகின் பல பகுதிகளில், விசேஷமாக விசாலமான வெப்பமண்டலங்களில் வளர்ப்பதற்குத் தகுதியான பொருளாதார தாவரங்களை விருத்திசெய்வதன் பேரில் இருக்கும் அறிவின் தேவையை” அந்தத் தோட்டங்களின் இயக்குநர் காண்கிறார். நிலத்தடி எரிபொருட்களாகிய நிலக்கரி மற்றும் எரியெண்ணெயின் இருப்பு குறைந்துகொண்டிருப்பது, அடிப்படை எரிபொருளுக்காகவும் மருந்துகளுக்காகவும் மனிதவர்க்கம் தாவரங்களிடமே செல்ல வற்புறுத்தப்படும் என்று அவர் நம்புகிறார். சில பகுதிகள் சுற்றுச்சூழலில் முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றன. நிலத்துக்கு நல்ல மேல் மண்ணையளிக்கும் திறமைகொண்ட தாவரங்களை ஆராய்ந்து பயிர்செய்திருப்பதற்காக கியுவுக்கு நன்றி.
தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களை மேற்கொள்வதற்காக, “இடையீடான தொற்றுத்தடைக்காப்புமுறை” (intermediate quarantining) பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது. கியுவுக்கு வந்து சேரும் எந்த ஒரு நோய்ப்பட்ட தாவர வகையும் அதன் புதிய இடத்துக்குப் பயணப்படுவதற்கு முன்னால் சிகிச்சை பெற்றுக்கொள்ள காலம் தேவைப்படுகிறது. இந்தக் காரியத்தில்தான் இங்கிலாந்தின் சீதோஷணம் பிரயோஜனமாயிருக்கிறது. உதாரணமாக, சில சமயங்களில் மேற்கிந்திய கொக்கோவை மாசுபடுத்தும் நோய்களைக் கியுவின் கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷணநிலை அழித்துவிடுகிறது. இப்படிப்பட்ட சிகிச்சை, இப்பொழுது ஆரோக்கியமடைந்திருக்கும் அந்தத் தாவரங்கள் மேற்கு ஆப்பிரிக்க விளைச்சலைப் பெருக்குவதற்காகத் தங்கள் பயணத்தை மீண்டும் தொடருவதைக் கூடியகாரிமாக்குகிறது.
தாவர இனங்கள் இல்லாமற்போகும் நிலைகுறித்து அச்சுறுத்தல்
ஒருபக்கம் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. “ஐந்து கண்டங்களிலும் இருக்கும் 3,00,000 தாவர வகைகளில், குறைந்தபட்சம் 20,000 தாவர வகைகளாவது அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாயிருக்கிறது,” என்கிறார் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் மிசெளரியின் செய்ன்ட் லூயிஸ் தாவரவியல் தோட்டத்தின் இயக்குநர் பீட்டர் ரேவன். ஃப்ரெஞ்சு பத்திரிகை Science et Vie, (அறிவியலும் உயிர்வாழ்வும்) கூடுதலாகச் சொல்கிறதாவது: “அடுத்த நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள் இந்த எண்ணிக்கை 40,000-க்குக் கூடிவிடும். அது ஏழில் ஒன்று என்று இருக்கும்!” இப்படிப்பட்ட இக்கட்டான நிலையை எதிர்ப்பட்டிருக்க, இன அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அந்தப் போக்கைத் தடை செய்வதற்கு என்ன செய்யப்பட்டுவருகிறது?
இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வ தேச ஒன்றியம் கியுவில் ஓர் இடர் எச்சரிப்பு அங்கத்தை நிறுவியுள்ளது. இங்கு அறிவியல் துறையினர் அழிந்துவிடும் ஆபத்தை எதிர்ப்படும் விதைவகைகளை ஆராய்ச்சி செய்து, அவை பயிர்செய்யப்படுவதற்கான மிகப் பொருத்தமான சீதோஷணநிலைகளைக் கவனித்துவருகின்றனர். இந்தத் தகவல்களைக் கொண்டு, ஒரு தாவரம் வளர்வதற்கேதுவான சூழ்நிலையை உருவாக்க முயலுகின்றனர். அதைத் தொடர்ந்து அந்தத் தோட்டக்கலைஞர்கள் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் தாவர இனங்களின் “அமோக விளைச்சலின்” அல்லது விருத்தியின் செயல் முறையை ஆரம்பிக்கின்றனர்.
பாதுகாப்பளிப்பதற்கான கூடுதல் படியாக, அழிந்துவிடும் அனைத்து தாவர இனங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தாவரவியல் தோட்டங்களில் வளர்க்கப்படும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இது எவ்விதம் ஏற்பாடு செய்யப்படுகிறது? தாவரவியல் தோட்டங்களுக்கிடையே விதைகளின் பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம் விதை வங்கிகள் நிறுவப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. இந்த விதை வங்கிகளைப் பராமரித்துவருவது எதிர்காலத்துக்கான ஒரு சேமிப்பாக அல்லது வைப்புத் தொகையாக அமைகிறது.
தாவரவியல் தோட்டங்களால் ஏன் இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கக்கூடும். மால்காம் கோ பதிப்பு செய்த இயற்கை உலகம் (The Natural World) ஓர் இன்றியமையாத காரணத்தைக் காட்டுகிறது: “இயற்கைச் சுற்றுச்சூழலில் சமநிலை முறைக்குக் கேடுவிளைவிப்பது இறுதியில் மனிதனின் நலத்துக்குக் கேடு விளைவித்திடும்.”
செய்ன்ட் ஹெலினாவின் மண் அரிமானப் பிரச்னைகளை மேற்கொள்வதற்கு இப்பொழுது உதவிவந்திருக்கும் தாவர மறுநடவுமுறை போன்ற கியுவின் வெற்றிச்சாதனை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வெற்றிச் சாதனைகள் வேறு இடங்களில் பயன்படுத்தப்படமுடியுமா? தாவர மறுநடவுமுறை வெற்றுப் பகுதிகளை எந்தளவுக்குச் செழிப்பாக்கிடும்? காலம்தானே விடை கூறவேண்டும். ஆனால் அதற்கிடையில், கியு தோட்டங்களின் தாவரவியல் மற்றும் தோட்டக்கலை நிபுணர்களின் ஒப்பற்ற பணியை நாம் போற்றுகிறோம். ஒருவேளை, என்றாவது ஒரு நாள், “உலகத்துக்குத் தாவர மறுநடவு மையமாகத்” திகழும் இந்த இடத்தை நீங்கள் சென்று பார்க்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். (g89 1⁄8)
[பக்கம் 12-ன் படம்]
கியு தோட்டங்களில் அமைந்த ஒரு பாதுகாப்புக் கூடத்தில் இராட்சத அல்லி இலைகள்
[பக்கம் 13-ன் படங்கள்]
பெலார்கோனியா கிரெனேடா என்ற 250 வித்தியாசமான ஜெரேனியம் மலர்வகைகளில் ஒரு வகை
செம்பருத்தி மலர்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ணங்களில் மலருகின்றன
[பக்கம் 14-ன் படம்]
உலக முழுவதும் ரோஜாக்களின் இனம் நூற்றுக்கணக்கிலும், அவற்றின் வகை ஆயிரக்கணக்கிலும் காணப்படுகின்றன
[பக்கம் 15-ன் படம்]
இந்தக் கோபுரம் கியு தோட்டங்களின் பிரபல எல்லைக்குறியாகும்