அழிவுக்கே “அழிவு”
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“கடந்த 25 ஆண்டுகளில், மனித நடவடிக்கைகளால் மட்டும் உலகின் இயற்கை வளம் மூன்றில் ஒரு பாகம் அழிக்கப்பட்டுவிட்டது.”
இதுதான் உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் அறிக்கை. லிவிங் பிளானட் இன்டெக்ஸ் என்ற உலகத்தின் சுற்றுப்புற சூழலைப் பற்றிய புதிய புள்ளிவிவர ஆய்வு வெளியீட்டின்போது இந்த அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் ‘ஊதுகிற சங்கை ஊதி வைப்பதுபோல்’ வெளியிடப்பட்டது.
பூமியிலுள்ள காடுகளில் 10 சதவீதம் குறைந்து விட்டது என்பதாக இயற்கை பாதுகாப்பாளர்கள் அறிவிக்கின்றனர். இதைக் குறித்து த இன்டிபென்டன்ட் என்ற லண்டன் செய்தித்தாள் பின்வரும் குறிப்பை அளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், வெப்ப மண்டல மழைக்காடுகளின் அழிவு, வறண்ட காடுகளின் பரப்புகளின் அழிவு ஆகியவற்றை குறித்த இலக்கத்தில் உண்மையான விவரத்தை அளிக்கவில்லை. காடுகளில் வாழும் உயிரினங்களின் அழிவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இதைப் பற்றியும் அந்த புள்ளிவிவரத்தில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. கடல் சார்ந்த சுற்றுச்சூழல்கள் 30 சதவீத இழப்பை அனுபவித்திருக்கின்றன; அட்லான்டிக் கடலில் கிடைக்கும் நீலத்துடுப்பு சூரை மீன்களும், ஆசிய கடல்களில் வாழும் தோல்-ஓட்டு ஆமைகளும் பெருமளவில் குறைந்திருக்கின்றன என்பது இதற்கான சான்று. இவற்றில் மிக மோசமான விஷயம் நன்னீரில் வசிக்கும் உயிரினங்களின் இழப்பை எடுத்துக்காட்டும் அட்டவணையே. இப்பகுதி 50 சதவீத இழப்பை அனுபவித்திருக்கிறது. அதிகமாக பயன்படுத்தப்படும் நீரும், அதிகரித்துக்கொண்டேயிருக்கும் விவசாய மற்றும் தொழில்துறை மாசு படுத்துதலுமே இந்த நிலைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில், லண்டனுக்கு அருகேயுள்ள கியூ என்ற இடத்தில் அமைந்திருக்கும் ராயல் பொட்டானிக்கல் கார்டனின் டைரக்டர் சர் கிலியன் பிரான்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இயற்கை வளங்களை பாதுகாப்பது என்பது பணக்காரர்களால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம் என்று எண்ணக்கூடாது. நம்முடைய பூமியில், உயிரை ஆதரிப்பதற்கு தேவையான இயற்கை செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படுவதற்கு இவை அத்தியாவசியத் தேவை. நம் உயிரும் இதில்தான் சார்ந்திருக்கிறது.” பூமியிலிருக்கும் ஒவ்வொருவரும் ‘ஒன்றுக்குள் ஒன்று’ என்பதுபோல் இதில் உட்பட்டிருக்கின்றனர். அப்படியென்றால் எவ்வாறு நிரந்தரமான ஒரு தீர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தலாம்?
பூமியை சீரழிப்பவர்களைப் பற்றி பைபிளின் கடைசி புத்தகம் குறிப்பிடுவது அக்கறைக்குரிய விஷயம். அப்படிப்பட்டவர்கள் அழிக்கப்படும் காலம் வரும் என்பதாக அது தீர்க்கதரிசனம் உரைக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) அப்போது தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா? நிச்சயமாகவே. ஏனெனில் ‘சர்வவல்லமையுள்ள யெகோவா தேவன்’ இதற்கான நடவடிக்கையை எடுப்பார். பூமியின் சுற்றுப்புறச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அவரால் மட்டுமே தீர்வை அளிக்க முடியும், அவருக்கே அதை செய்வதற்கான வல்லமையும் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:17) ஒரு குறிப்பிட்ட காலத்தில் ‘மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கும்,’ என்பதாக வெளிப்படுத்துதல் 21:3-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது.
சீரழிந்துகொண்டே போகும் இன்றைய பூமியின் சுற்றுச்சூழல், சீர்செய்யப்படுவதை பார்ப்பதற்கு ‘அவருடைய ஜனங்களுக்குத்தான்’ கொடுத்துவைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஜனங்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு எழுதுவதன் மூலம் உங்கள் அருகாமையில் உள்ள யெகோவாவின் சாட்சிகளை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது அடுத்த முறை அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது அவர்களோடு பேசுங்கள். வெகு சீக்கிரத்தில் கடவுள் நடவடிக்கை எடுக்கும்போது நீங்கள் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் சந்தோஷமாக உங்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள்.