பெண்களுக்கு ஆயுள் அதிகம் ஆனந்தமோ குறைவு
உலகெங்கிலும் பெண்கள் சற்று வயதான பிறகு கல்யாணம் செய்துகொண்டு, அளவோடு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, நீண்ட நாள் வாழ்கின்றனர். “பெண்களின் வாழ்க்கைப் பாணி மாறிவருகிறது” என யுனெஸ்கோ சோர்ஸஸ் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. 1970-க்கும் 1990-க்கும் இடையே, பச்சிளம் பெண் குழந்தைகளின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள் காலமானது, வளர்ச்சியடைந்த நாடுகளில் நான்கு வருடக்காலம் அதிகமானது, வளர்முக நாடுகளில் கிட்டத்தட்ட ஒன்பது வருடக்காலம் அதிகமானது. “அப்படியென்றால் வளர்ச்சியடைந்திருக்கும் நாடுகளில் இன்று பெண்கள் ஆண்களைக் காட்டிலும் சராசரியாக 6.5 வருடங்கள் கூடுதலாக வாழ்கின்றனர். வளர்முக நாடுகளைப் பொருத்ததிலோ, லத்தீன் அமெரிக்காவிலும் கரிபியனிலும் இது ஐந்து வருடங்களாவும், ஆப்பிரிக்காவில் 3.5 வருடங்களாகவும் ஆசியாவிலும் பசிபிக்கிலும் மூன்று வருடங்களாகவும் இருக்கிறது.”
இருந்தபோதிலும் அநேக பெண்களுக்கு நீண்டகாலம் வாழ்வதென்பது நலன்கள் பெற்று சிறப்பாக வாழ்வதை அர்த்தப்படுத்துவதில்லை. உலகில் வாழும் பெரும்பாலான பெண்களுக்கு, இன்னும் அடிப்படை மனித உரிமைகள், “இதுவரை ருசி பார்த்திராத பாதாம் பாயாசத்தைப் போன்று இருக்கிறது. அவர்கள் இன்னமும் சாதாரண கூழுக்கும் கஞ்சிக்கும்தான் ஏங்குகிறார்கள்” என ஐக்கிய நாட்டு அமைப்பின் பத்திரிகையான நம் கிரகம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. ஆனாலும் அப்படிப்பட்ட அடிப்படை உரிமைகள்கூட கோடிக்கணக்கான பெண்களுக்கு எட்டாத கனியாக இருக்கிறது; ஏனென்றால் இன்னமும் உலகிலுள்ள படிப்பறிவில்லாதவர்கள், அகதிகள், ஏழைகள் ஆகியோரில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே என்பதாக ஐநா சொல்கிறது. சில முன்னேற்றங்களின் மத்தியிலும், “பெண்களின் எதிர்காலம் . . . இருண்டிருக்கிறது,” என்பதாக முடிவில் சொன்னது யுனெஸ்கோ சோர்ஸஸ் பத்திரிகை.