கடவுளுடைய பார்வையில் பெண்கள் மதிப்புக்குரியவர்கள்
இயேசு பூமியில் இருந்தபோது தன்னுடைய பரலோக தந்தை மாதிரியே நடந்துகொண்டார். அதனால்தான், ‘நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை, தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே . . . பேசுகிறேன் . . . நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்று சொன்னார். (யோவான் 8:28, 29; கொலோசெயர் 1:15) அப்படியென்றால், இயேசு பெண்களை எப்படிப் பார்த்தார்? அவர்களை எப்படி நடத்தினார்? இதைப் புரிந்துகொள்ளும்போது பெண்களைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்பதையும், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் பெண்களை எப்படி நடத்தினார்களோ, அதுபோல இயேசு அவர்களை நடத்தவில்லை. இதைத்தான் சுவிசேஷப் பதிவுகளிலும் பார்க்கிறோம். நிறைய பைபிள் அறிஞர்களும் இதை ஒத்துக்கொள்கிறார்கள். அப்படியென்றால், இயேசு பெண்களை எப்படி நடத்தினார்? அதைவிட முக்கியமாக, இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி எல்லாரும் நடந்துகொண்டால் பெண்களுக்கு இன்னும் அதிக சுதந்திரம் கிடைக்குமா?
பெண்களை இயேசு எப்படி நடத்தினார்?
இயேசு பெண்களைத் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. பெண்களுடன் பேசிப் பழகினாலே தவறான ஆசைகள் வரும், அது மோசமான பாவத்தில்தான் போய் முடியும் என்று அன்றிருந்த சில யூத மதத் தலைவர்கள் யோசித்தார்கள். அதனால், பொது இடங்களில் பெண்கள் ஆண்களோடு பேசிப் பழகக்கூடாது, வெளியே வந்தால் முக்காடு போட்டுக்கொண்டுதான் வர வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டார்கள். ஆனால், இயேசு ரொம்பவே வித்தியாசமான ஒன்றைச் சொன்னார். பெண்களுடன் பேசிப் பழகக்கூடாது என்று சொல்லி அவர்களை ஒதுக்குவதற்குப் பதிலாக, ஆண்கள் தங்களுடைய தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார். அதோடு, பெண்களை மதிப்பு மரியாதையோடு நடத்த வேண்டும் என்றும் சொன்னார்.—மத்தேயு 5:28.
“மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்; இப்படி, தன் மனைவிக்குத் துரோகம் செய்கிறான்” என்றும்கூட இயேசு சொன்னார். (மாற்கு 10:11, 12) “எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும்” ஒரு ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று அன்றிருந்த மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். (மத்தேயு 19:3, 9) ஆனால், இந்தப் போதனை தவறானது என்பதை இயேசுவின் போதனை காட்டியது. ‘முறைகேடான உறவுகொண்டு மனைவிக்கு எதிராக துரோகம் செய்வது’ என்ற ஒரு விஷயமே அன்றிருந்த யூதர்களுக்கு புதிதாக இருந்தது. ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு உண்மையில்லாமல் போனால்தான் அது முறைகேடான உறவு என்றும், ஒரு ஆண் தன்னுடைய மனைவிக்கு உண்மையில்லாமல் போனால் அது முறைகேடான உறவே கிடையாது என்றும் அன்றிருந்த மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். “மனைவிகளைப் போலவே கணவர்களுக்கும் தங்களுடைய துணைக்கு உண்மையாக இருக்க வேண்டிய கடமை இருக்கிறது என்று சொல்வதன் மூலம், இயேசு பெண்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்” என்று ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார்.
இயேசுவின் போதனையின்படி செய்கிற மக்கள்: யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில், பெண்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆண்களோடு பேசிப் பழகுகிறார்கள். யாராவது தவறான எண்ணத்தோடு பார்ப்பார்களோ, தங்களிடம் தவறாக நடந்துகொள்வார்களோ என்று அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், சபையில் இருக்கும் எல்லா ஆண்களும் ‘வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களைச் சுத்தமான உள்ளத்தோடு தங்கைகள் போலவும் நடத்துகிறார்கள்.’—1 தீமோத்தேயு 5:2.
இயேசு பெண்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அன்று இருந்த மதத் தலைவர்கள் பெண்களுக்கு எதுவும் சொல்லித்தரவில்லை. ஆனால் இயேசு, நேரம் எடுத்து பெண்களுக்கு கற்றுக்கொடுத்தார். அவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களை மரியாள் கேட்பதற்கு அனுமதித்தார். அதன்மூலம், பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்பவர்கள்தான் என்ற எண்ணத்தை மாற்றினார். (லூக்கா 10:38-42) இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களைக் கேட்டதால் மரியாளின் சகோதரி மார்த்தாளும் நன்மையடைந்தாள். லாசரு இறந்துபோன பிறகு அவள் இயேசுவிடம் சொன்ன பதிலில் இருந்து இது தெரிகிறது.—யோவான் 11:21-27.
பெண்களின் உணர்வுகளைக்கூட இயேசு முக்கியமானதாக நினைத்தார். அன்று வாழ்ந்த யூத பெண்கள், தங்களுடைய மகன் ரொம்பப் பிரபலமானவராக ஆகும்போது அதுவும் ஒரு தீர்க்கதரிசியாக ஆகும்போது ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். சொல்லப்போனால் அதுதான் உண்மையான சந்தோஷம் என்றுகூட நினைத்தார்கள். ஒருசமயம், ஒரு பெண் இயேசுவைப் பார்த்து ‘உங்களை வயிற்றில் சுமந்த தாய் சந்தோஷமானவள்!’ என்று சொன்னாள். (லூக்கா 11:27, 28) அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இயேசு அவளிடம் ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, கடவுள் சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் ரொம்ப முக்கியம் என்று சொன்னார். இதன்மூலம், ஒரு பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதைவிட கடவுளோடு நல்ல பந்தம் இருந்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்பதைப் புரியவைத்தார்.—யோவான் 8:32.
இயேசுவின் போதனையின்படி செய்கிற மக்கள்: கிறிஸ்தவ சபைக் கூட்டங்களில் பெண்கள் பதில் சொல்லும்போது, அந்தக் கூட்டத்தை நடத்துகிற போதகர்கள் அதைச் சந்தோஷமாக கேட்கிறார்கள். முதிர்ச்சியுள்ள பெண்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் ‘நல்லதைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.’ நல்ல முன்மாதிரி வைப்பதன்மூலம் சபையில் இருக்கிற மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள். (தீத்து 2:3) இப்படிப்பட்ட முதிர்ச்சியுள்ள பெண்களை சபையை வழிநடத்துகிறவர்கள் மதிக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்கிறவர்களில் நிறைய பேர் பெண்கள்தான் என்பதையும் புரிந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 68:11; பக்கம் 9-ல் இருக்கும், “பெண்கள் பேசவே கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னாரா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
இயேசு பெண்கள்மேல் அக்கறையாக இருந்தார். பைபிள் காலங்களில் ஆண் பிள்ளைகளை மதித்த அளவுக்கு பெண் பிள்ளைகளை யாரும் மதிக்கவில்லை. யூதர்கள் பயன்படுத்திய தால்முட் இப்படிச் சொல்கிறது: “ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறவன் சந்தோஷமானவன், பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!” சில பெற்றோர்கள் பெண் பிள்ளைகளைச் சுமையாகத்தான் பார்த்தார்கள். ஏனென்றால், ‘அவங்களுக்கு கல்யாணம் பண்ணிவெக்கணும், அப்புறம் வரதட்சணையும் கொடுக்கணும்’ என்றெல்லாம் யோசித்தார்கள். அதுமட்டுமல்ல, வயதான காலத்தில் தங்களை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றுகூட நினைத்தார்கள்.
நாயீன் நகரத்தில் வாழ்ந்த விதவையின் மகனை இயேசு உயிர்த்தெழுப்பியதைப் போலவே யவீருவின் மகளையும் உயிர்த்தெழுப்பினார். இதன்மூலம் ஒரு ஆண் பிள்ளையின் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு சின்ன பெண்ணின் உயிரும் ரொம்ப முக்கியம் என்பதை இயேசு காட்டினார். (மாற்கு 5:35, 41, 42; லூக்கா 7:11-15) ‘பேய் பிடித்திருந்ததால் 18 வருஷங்களாக உடல்நலப் பிரச்சினையோடு தவித்துவந்த ஒரு பெண்ணை’ குணப்படுத்திய பிறகு, அவளை ‘ஆபிரகாமின் மகள்’ என்று சொன்னார். (லூக்கா 13:10-16) இப்படியொரு வார்த்தையை அன்றிருந்த யாரும் கேள்விப்பட்டதும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை. ஆனால் மரியாதையான, அன்பான இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் மூலம், அந்த பெண்ணும் சமுதாயத்தில் ஒரு முக்கியமான நபர் என்பதை இயேசு புரியவைத்தார்.—லூக்கா 19:9; கலாத்தியர் 3:7.
இயேசுவின் போதனையின்படி செய்கிற மக்கள்: “பெண் பிள்ளையை வளர்ப்பது அடுத்தவன் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல்” என்று ஒரு ஆசிய பழமொழி சொல்கிறது. பெண் பிள்ளைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாலும் பெற்றோர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்! ஆனால், யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற அப்பாக்கள் அப்படி யோசிப்பதில்லை. அவர்களுடைய எல்லா பிள்ளைகளின் தேவைகளையும் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்; அது ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி. அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் நல்ல கல்வி கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள், அவர்களுடைய ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்கிறார்கள்.
இயேசு, தான் உயிர்த்தெழுந்ததைப் பற்றி அப்போஸ்தலர்களுக்குச் சொல்லும் பாக்கியத்தை மகதலேனா மரியாளுக்குக் கொடுத்தார்
இயேசு பெண்களை நம்பினார். யூத நீதிமன்றங்களில் ஒரு அடிமையின் வாக்குமூலத்தை எப்படி ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ, அதேபோல் பெண்களின் வாக்குமூலத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திர ஆசிரியர் ஜொசிஃபஸ் இப்படிச் சொன்னார்: “பெண்கள் பொதுவாக யோசிக்காமல் நடந்துகொள்வார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க மாட்டார்கள். அதனால், அவர்களின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.”
இதற்கெல்லாம் நேர்மாறாக இயேசு நடந்துக்கொண்டார். தன்னுடைய உயிர்த்தெழுதலைப் பற்றிச் சாட்சி கொடுக்க பெண்களை இயேசு தேர்ந்தெடுத்தார். (மத்தேயு 28:1, 8-10) ஆனால், அந்தப் பெண்கள் சொன்னதை நம்புவது அவருடைய அப்போஸ்தலர்களுக்கே கஷ்டமாக இருந்தது. இத்தனைக்கும், இயேசு இறந்ததையும் அடக்கம் செய்யப்பட்டதையும் அந்தப் பெண்கள் நேரில் பார்த்திருந்தார்கள்! (மத்தேயு 27:55, 56, 61; லூக்கா 24:10, 11) உயிர்த்தெழுந்த பிறகு முதலில் பெண்களுக்குத் தோன்றுவதன் மூலம், மற்ற சீஷர்களைப் போலவே பெண்களுக்கும் சாட்சி கொடுக்க தகுதி இருப்பதை இயேசு காட்டினார்.—அப்போஸ்தலர் 1:8, 14.
இயேசுவின் போதனையின்படி செய்கிற மக்கள்: இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், பெண்கள் சொல்வதை பொறுப்பில் இருக்கிற ஆண்கள் ரொம்பக் கவனமாகக் கேட்கிறார்கள். தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு பெண்கள் சொல்வதையும் கருத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அதேமாதிரி கணவர்களும் அவர்களுடைய மனைவிகள் சொல்வதை ரொம்பக் கவனமாகக் கேட்கிறார்கள். இப்படி, அவர்களுக்குக் ‘கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கிறார்கள்.’—1 பேதுரு 3:7; ஆதியாகமம் 21:12.
பெண்கள் சந்தோஷமாக இருப்பதற்கு பைபிள் நியமங்கள் உதவி செய்கின்றன
பைபிள் சொல்கிற மாதிரி நடக்கிற ஆண்கள் பெண்களை மதிப்பு மரியாதையோடு நடத்துகிறார்கள்
ஆண்கள் கிறிஸ்து மாதிரி நடந்துகொள்ளும்போது பெண்களுக்கு மரியாதையும் சுதந்திரமும் கிடைக்கும். மனிதர்களைக் கடவுள் படைத்தபோது பெண்கள் இப்படி நடத்தப்பட வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்பட்டார். (ஆதியாகமம் 1:27, 28) கிறிஸ்தவ கணவர்கள் ஆண் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, பைபிள் சொல்வதுபோல் நடக்கிறார்கள். மனைவி சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள்.—எபேசியர் 5:28, 29.
எலெனா என்ற பெண்ணின் அனுபவத்தைக் கவனிக்கலாம். அவள் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, அவளுடைய கணவர் ரொம்ப மோசமாக நடத்தினார். ஏனென்றால், எதற்கெடுத்தாலும் அடிதடி-சண்டை என்று இறங்குகிற ஆட்கள் மத்தியில்தான் அவர் வளர்க்கப்பட்டார். அதுமட்டுமல்ல, அவருடைய ஊரில் ஒரு பழக்கம் இருந்து. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அவளை கடத்திக்கொண்டு போய் கல்யாணம் செய்துவிடுவார்கள். அதோடு, அங்கே இருந்த கணவர்கள் தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்துவார்கள். “பைபிள்ல இருந்து கத்துக்கிட்ட விஷயங்கள் எனக்கு பலத்த கொடுத்துச்சு. என்மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கிற… என்ன மதிக்கிற… என்மேல அக்கறையா இருக்கிற… ஒரு கடவுள் இருக்காருங்கிறத நான் தெரிஞ்சுக்கிட்டேன். என் கணவர் பைபிள படிச்சாருனா அவரோட மனசும் மாறும்னு நினைச்சேன்” என்று எலெனா சொல்கிறார். இந்தப் பெண்ணின் கனவு நிஜமானது! அவளுடைய கணவர் பைபிளைப் படித்தார், ஞானஸ்நானமும் எடுத்தார். “கோவப்படாம இருக்குறதுக்கு அவர பாத்து நாலு பேர் கத்துக்கிற மாதிரி இப்ப அவர் நடந்துக்குறாரு. எங்களுக்குள்ல ஏதாவது பிரச்சனை வந்துச்சுனாகூட நாங்க ஒருத்தர ஒருத்தர் மன்னிக்கிறதுக்கு கத்துக்கிட்டோம்” இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று எலெனாவே சொல்கிறார்: “எங்களோட கல்யாண வாழ்க்கை முறிஞ்சிடாம இருக்குறதுக்கும் எனக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு மரியாதை கிடைக்குறதுக்கும் பைபிள் நியமங்கள்தான் உதவி செஞ்சிருக்கு.”—கொலோசெயர் 3:13, 18, 19.
லட்சக்கணக்கான கிறிஸ்தவ பெண்கள் எலெனாவை மாதிரிதான் உணருகிறார்கள். ஏனென்றால், அவர்களும் அவர்களுடைய கணவர்களும் பைபிள் நியமங்களின்படி வாழ்வதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுடைய கல்யாண வாழ்க்கையும் நன்றாக இருக்கிறது. மற்ற கிறிஸ்தவர்களோடு பழகும்போதுகூட எந்தத் தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாக அவர்களால் இருக்க முடிகிறது. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மதிப்பு மரியாதையும் கிடைக்கிறது.—யோவான் 13:34, 35.
கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் ஒரு உண்மையை புரிந்துவைத்திருக்கிறார்கள். அதாவது, மனிதர்கள் பாவிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தவறு செய்யும் இயல்பு இருக்கிறது. ‘வீணான வாழ்க்கையை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.’ ஆனால், அன்பான கடவுளாகவும் அப்பாவாகவும் இருக்கிற யெகோவாவிடம் நெருங்கிப் போகும்போது, ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை’ அவர்களுக்கு இருக்கிறது. இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!—ரோமர் 8:20, 21.