பூமியிலுள்ள எண்ணற்ற வகைகள்—எப்படி வந்தன?
அறிவியலாளர்கள் இதுவரை கண்டுபிடித்து பெயரிட்டிருக்கும் 15 லட்சத்திற்கும் அதிகமான விலங்கினங்களில், சுமார் பத்து லட்சம் பூச்சியினங்களாகும். இதுவரை அறியப்பட்டிருக்கும் அனைத்து பூச்சிகளையும் பட்டியலிட 6,000 பக்கங்கள்கொண்ட என்ஸைக்ளோப்பீடியா தேவைப்படும்! இந்த ஜீவராசிகள் எப்படி வந்தன? ஏன் இவற்றில் எண்ணற்ற தினுசுகள்? இவை குருட்டாம்போக்கில், இயற்கைக்கு பல கோடி தடவை “யோகம்” அடித்ததால் உண்டானவையா? இல்லையென்றால் இவை திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவையா?
முதலில், நம் கிரகத்திலுள்ள மற்ற உயிரினங்கள் சிலவற்றைக் குறித்து சுருக்கமாக சிந்திக்கலாம்.
வியப்பிலாழ்த்தும் பறவைகள்
அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் 9,000-த்திற்கும் அதிகமான வெவ்வேறு பறவையினங்களைப் பற்றியென்ன? சில வகை தேன் சிட்டுகள் பெரிய தேனீக்களைப்போல் அவ்வளவு சிறியவையாய் இருந்தாலும், அதிநவீன ஹெலிகாப்டரைக் காட்டிலும் அதிக சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் பறக்கின்றன. மற்ற பறவைகள் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு இடம் பெயர்ந்துசெல்கின்றன; உதாரணத்திற்கு, வடதுருவ கடற்பறவை (arctic tern) ஒவ்வொரு முறையும் 35,000 கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்துசென்று திரும்புகிறது. அதற்கு பறப்பதற்கு கம்ப்யூட்டரோ திசைகாட்டும் கருவிகளோ இல்லாவிட்டாலும், செல்லவேண்டிய இடத்திற்கு சரியாக போய்ச்சேருகிறது. அதனுள் இருக்கும் இந்தத் திறமை தற்செயலாக உண்டானதா வடிவமைக்கப்பட்டதா?
மனங்கவரும் பலவித தாவரங்கள்
கூடுதலாக, 3,50,000-த்திற்கும் அதிகமான, வகைவகையான, அழகழகான தாவரங்கள் இருக்கின்றன. இவற்றில் தோராயமாக 2,50,000 இனங்கள் பூ பூப்பவை! பூமியிலேயே மிகப் பெரிய உயிரினங்களாகிய பிரமாண்டமான செக்கோயா மரங்கள் தாவரங்களே.
உங்களது தோட்டத்தில் அல்லது நீங்கள் குடியிருக்கும் பகுதியில் எத்தனை விதமான மலர்கள் மலர்கின்றன? காட்டுப் புஷ்பம், டெய்ஸி, பட்டர்கப் போன்ற சின்னஞ்சிறு மலர்கள் முதற்கொண்டு அதிக வேலைப்பாடுள்ள ஆர்க்கிடுகள் (orchids) வரை இந்த அனைத்துப் பூக்களின் அழகும், அமைப்பும், வாசனையும் நம்மைத் திகைக்க வைக்கின்றன. மீண்டும் கேட்கிறோம்: அவை எப்படி வந்தன? தற்செயலாகவா அல்லது வடிவமைக்கப்பட்டதாலா?
உயிரினங்கள் ததும்பும் சமுத்திரங்கள்
உலகிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் சமுத்திரங்களிலும் காணப்படும் எண்ணற்ற உயிரினங்களைப் பற்றியென்ன? வெவ்வேறு வகையைச் சேர்ந்த சுமார் 8,400 மீன்கள் நன்னீரில் வாழ்வதாகவும் சுமார் 13,300 மீன் வகைகள் சமுத்திரத்தில் வாழ்வதாகவும் அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இவற்றில் மிகச் சிறியது இந்தியப் பெருங்கடலில் காணப்படும் கோபி என்ற மீனாகும். அதன் நீளம் வெறுமனே ஒரு சென்டிமீட்டர்தான். மிகப் பெரியது பெருஞ்சுறாமீன்; இது சுமார் 18 மீட்டர் நீளமுள்ளது. வெவ்வேறு இனங்களைப் பற்றிய இந்த எண்ணிக்கைகள், முதுகெலும்பற்ற பிராணிகளையோ இன்னும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்களையோ உள்ளடக்குவதில்லை!
கற்பனைகளை விஞ்சும் மூளை
எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மூளை கற்பனைகளை விஞ்சுகிறது; அதில் குறைந்தபட்சம் 1,000 கோடி நரம்பணுக்கள் இருக்கின்றன, இவை ஒவ்வொன்றும் 1,000-க்கும் அதிகமான கூடல்வாய்களை (synapses), அதாவது மற்ற நரம்பணுக்களோடு இணைப்புகளைக் கொண்டுள்ளன. நரம்பியல் நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டக் இவ்வாறு சொல்கிறார்: “மூளையின் மிகப் பெரிய நரம்பியல் வலையமைப்பிலுள்ள ஒட்டுமொத்த இணைப்புகளின் எண்ணிக்கை உண்மையிலேயே சிந்தனைக்கு அப்பாற்பட்டது.” (மூளை, [ஆங்கிலம்]) அவர் கூடுதலாக இவ்வாறு சொல்கிறார்: “மூளையில், பத்து லட்சம் கோடியிலிருந்து 100 லட்சம் கோடி கூடல்வாய்கள் வரை இருக்கலாம்.” பின் அவர் இப்படிப்பட்ட ஒரு பொருத்தமான கேள்வியைக் கேட்கிறார்: “1,000 கோடியிலிருந்து 10,000 கோடி உயிரணுக்களைக் கொண்டிருக்கும் மூளையைப்போன்ற ஓர் உடலுறுப்பு, எப்படித்தான் ஒரேவொரு உயிரணுவான கருமுட்டையிலிருந்து உருவாக முடியும்?” மூளையானது திடுதிப்பென, குருட்டாம்போக்கில், இயற்கையாய் உருவான ஒன்றா? இல்லையென்றால் இவை எல்லாவற்றிற்குப் பின்னும் புத்திக்கூர்மையான வடிவமைப்பு இருக்கிறதா?
ஆம், முடிவற்றதாய் தோன்றும் இப்படிப்பட்ட பல்வகை உயிரினங்களும் அவற்றின் வடிவமைப்பும் எப்படி உண்டாயின? இவை வெறுமனே தற்செயலாக நிகழ்ந்தவை, தானாகவே தட்டுத்தடுமாற்றத்துடன் ஏற்பட்டவை, பரிணாமமென்ற குருட்டுத்தனமான சந்தர்ப்பவசத்தால் தோன்றியவை என்றெல்லாம் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? அப்படியென்றால், உயிரியலுக்கு அடிப்படை என அழைக்கப்படும் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி சில அறிவியலாளர்கள் எழுப்பும் ஒளிவுமறைவற்ற கேள்விகளைக் குறித்து தொடர்ந்து வாசியுங்கள்.
[பக்கம் 4-ன் படம்]
ஒரு சாதாரண காமிராவிற்கே வடிவமைப்பாளர் தேவையென்றால், அதிகச் சிக்கலான மனித கண்களைப் பற்றியென்ன?
லென்ஸ்
(பெரிதாக்கப்பட்டது)
முன் கண்-நீர்
கண்மணி
கருவிழி
லென்ஸ்
விழித்திரை
சிலியரி தசை
முழு கண்
பார்வை நரம்பு
விழிக்குழியிலுள்ள திண்நீர்மம்
விழித்திரை
கோராயிட்
வெண்விழிப்படலம்