உங்கள் மனோபாவத்தை—எது செல்வாக்கு செலுத்துகிறது?
சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தனையைத் தூண்டுவதாயுள்ள பின்வரும் நீதிமொழியை ஏவப்பட்ட எழுத்தாளர் ஒருவர் எழுதினார்: ‘காம விகாரச் செயலில் ஈடுபடுவது மூடனுக்கு விளையாட்டு.’ (நீதிமொழிகள் 10:23, NW) குறிப்பாக, பாலின புரட்சி ஏற்பட்டது முதற்கொண்டு இந்தக் கூற்று நிஜமாகியிருக்கிறது. எய்ட்ஸ் நோயைப் பற்றிய பீதி ஏற்படுவதற்கு முன்பெல்லாம், செக்ஸ் என்பது ‘பங்கேற்கும் இன்ப விளையாட்டு’ என்றிருந்ததோடு, காம உணர்வு வேகம், ‘அதன் விளைவு என்னவாயிருந்தாலும்’ வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு மனோபாவம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. இந்த மனோபாவம் மாறியிருக்கிறதா? நிஜத்தில் மாறவில்லை.
இன்றைய செக்ஸ் ஈடுபாடு, “மோக அடிமைகள்,” ‘நாளுக்கொரு துணை தேடுவோர்,’ “பட்சிக்கும் காம வெறியர்கள்” ஆகியோரை இன்னமும் உருவாக்கிவருகிறது; இப்படிப்பட்டவர்கள், ஒழுக்கநெறிகள் என்பவை ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், பலருடன் பொறுப்பற்ற காதல் உறவு சாதாரணமான விஷயம் என்றும் வாதிடுகின்றனர். (பக்கம் 6-ல் உள்ள “பாலியல் வாழ்க்கைப்பாணிகள்” என்ற பெட்டியைக் காண்க.) வயதுவந்த இருவர், தங்களுக்குள் சம்மதித்துக்கொள்ளும் வரையில், தான் விரும்புபவர் யாராயிருந்தாலும் சரி, அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் ‘எவருக்குமே தீங்கு ஏற்படுவதில்லை’ என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். 1964-ல், அயோவா அரசு பல்கலைக்கழக சமூகவியலர் ஐரா ரைஸ், “பாசத்துடன் சகித்துக்கொள்ளுதல்” என்று இதை விவரித்தார்.
எடின்பர்க், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆங்கிலிக்கன் பிஷப்பும் அப்படியே உணருவதாகத் தோன்றுகிறது; ஏனெனில், பல காதலர்களைப் பெற்றிருக்கும்படியாகவே மனிதர் பிறந்துள்ளனர் என்று அவர் சொன்னார். செக்ஸும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பிலான ஒரு பேச்சில் அவர் குறிப்பிட்டதாவது: “வெளியில் போய் நம் விந்துக்களை விதைக்கும்படியான காம உணர்வு வேகத்தை நமக்குள் வைத்திருப்பதாக நம்மைப் படைத்தபோதே கடவுளுக்குத் தெரியும். பலருடன் பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்துப் படைத்திருக்கிறார். தங்கள் உள்ளுணர்வுகளுக்கேற்ப செயல்படுபவர்களை சர்ச் கண்டிப்பது தவறானதாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.”
இப்படிப்பட்ட ஒரு நோக்குநிலை நல்லதுதானா? பொறுப்பற்ற காதல் உறவின் விலை என்ன? குறுகிய கால அளவுகளில் பலருடன் உறவு கொள்வது திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகின்றனவா?
உலகளவில் பாலுறவால் கடத்தப்படும் தொற்றுநோய்கள் பரவிவருவதும், குறிப்பாக டீனேஜர்களின் மத்தியில் திருமண பந்தத்துக்குப் புறம்பான கருத்தரிப்புகள் லட்சக்கணக்கில் ஏற்பட்டிருக்கும் நிஜத்தன்மையும், அப்படிப்பட்ட ஒரு தத்துவத்தின் தோல்விக்கு நிரூபணமாய் இருக்கின்றன. நியூஸ்வீக் பத்திரிகையின்படி, ஐக்கிய மாகாணங்களில் மட்டும், பாலுறவால் கடத்தப்படும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும், கணக்கிடப்பட்ட 30 லட்சம் டீனேஜர்களை அவதிப்பட வைக்கின்றன. கூடுதலாக, ‘வயதுவந்த சம்மதிப்பவர்களான’ இவர்களில் பலர், ‘சுபாவ அன்பில்லாதவர்களாகவோ’ அல்லது பொதுவாக விளைவடைவதாய் உள்ள பிறவாக் குழந்தையினிடம் பொறுப்புணர்வு ஏதும் இல்லாதவர்களாகவோ தோன்றுகின்றனர்; அதனால் கருக்கலைப்பு செய்வதற்கான வழியை விரைந்து தேடுகின்றனர். (2 தீமோத்தேயு 3:3) இது அந்தப் பிறவாக் குழந்தையின் உயிரைக் காவுகொள்ளுகிறது; ஏனெனில் அதன் தாயிடமிருந்து அது கொடூரமாய் சிதைத்தெறியப்படுகிறது. அந்த இளம் தாய் செலுத்த வேண்டிய விலையோ, கடும் மனச்சோர்வும், தன் வாழ்நாள் முழுவதும் ஆட்டிப்படைக்கும் குற்றவுணர்வுமே.
1990-களின் மத்திபப் பகுதியில் பிரிட்டனில் மட்டுமே, பாலின புரட்சியின் விளைவாக ஏற்பட்ட வருடாந்தர பணச்செலவு, திணறச்செய்யும் 2,000 கோடி டாலர் என்பதாக டாக்டர் பேட்ரிக் டிக்ஸன் கணக்குப் போட்டுப் பார்த்தார். அதிகரித்துவரும் காதல் விலை (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில், எய்ட்ஸ் உள்ளிட்ட, பாலுறவால் கடத்தப்படும் நோய்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவு, மணவிலக்கினால் ஏற்படும் செலவு, ஒற்றைப் பெற்றோராய் இருப்பதால் சமுதாயத்துக்கு ஆகும் செலவு, குடும்பம் மற்றும் குழந்தை சிகிச்சைச் செலவு ஆகியவற்றை எழுதிவைத்திருந்ததன் மூலம் டாக்டர் டிக்ஸன் இந்தத் தொகையைப் பெற்றார். தி குளோப் அண்ட் மெய்ல் என்ற கனடாவைச் சேர்ந்த ஒரு செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டபடி, டாக்டர் டிக்ஸன் முடிவாகச் சொல்வதாவது: “நமக்குச் சுயாதீனம் அளிப்பதாக வாக்குக் கொடுத்த பாலின புரட்சியானது, பாலியல் குழப்பம், அவலம், தனிமை, உணர்ச்சிப்பூர்வ வேதனை, வன்முறை, துர்ப்பிரயோகம் ஆகியவற்றால் அழிக்கப்பட்ட ஓர் உலகுக்குள் பலரை அடிமைச் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கிறது.”
ஆனால், தொடர்ந்து செக்ஸ் ஈடுபாடும், குறுகிய கால உறவுகளை விரும்பித் தெரிந்தெடுப்பதும், பொறுப்பற்ற காதல் உறவுகளைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் ஏன்? கடந்த இம் முப்பது ஆண்டுகளாக, இப்படிப்பட்ட கெட்ட விளைவுகளையே வெளிப்படையாகக் கண்டபோதிலும், இந்த அழிவுக்கேதுவான ஈடுபாடென்னும் நெருப்புக்கு எண்ணெய்யாய் இருப்பது எது?
ஆபாசம் செக்ஸைத் திரித்துக்கூறுகிறது
செக்ஸ் ஈடுபாடு எனும் நெருப்புக்கு ஆபாசம் எண்ணெய்யாய் இருப்பதில் ஓர் அம்சமாய் இருப்பதாகக் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. செக்ஸுக்கு அடிமையாகியிருந்து, தானாகவே அறிக்கை செய்த ஒருவர் த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் எழுதுவதாவது: “நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டேன்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மது அருந்துவதை நிறுத்திவிட்டேன்; என் வாழ்வில், ஏதேதோ அடிமையாக்கும் பழக்கங்களிலிருந்தெல்லாம் எளிதில் மீள முடிந்தபோதிலும், செக்ஸுக்கும் ஆபாசத்துக்கும் அடிமைப்பட்டிருக்கும் பழக்கத்திலிருந்து மீளத்தான் என்னால் முடியவில்லை.”
தொடர்ந்து ஆபாசத்தின் மூலம் தீனி போடப்படும் டீனேஜர்கள், பாலியல் நடவடிக்கையைப் பற்றி திரித்துக்கூறப்படும் ஒரு நோக்குநிலையையே வளர்க்கின்றனர் என்றும் அவர் நம்புகிறார். அவர்கள் பாலியல் கற்பனைகளை நடைமுறையில் அப்படியே வெளிப்படுத்திக்கொண்டு, நிஜத்தில் அப்படிப்பட்ட உறவுகளை சிக்கலானவையாயும் சிரமமானவையாயுமே காண்கின்றனர். இவ்வாறு காண்பது, தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் வழிநடத்துகிறது; இதுவே, நிலைத்து நிற்கும் அன்பின் பிணைப்பை உண்டாக்குவதில் மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பொழுதுபோக்கு உலகம் செக்ஸை சுயநல நோக்குடன் தவறாக பயன்படுத்துகிறது
சட்டப்படி திருமணம் செய்தோ செய்யாமலோ, பலருடன் உடலுறவு கொள்ளும் தாறுமாறான வாழ்க்கைப்பாணிகள், பரவலாய் கடைப்பிடிக்கப்படுகின்றன; பொழுதுபோக்கு உலகால் பொதுவில் காட்சிக்கும் வைக்கப்படுகின்றன. அன்பற்ற, தரக்குறைவான பாலியல் நெருக்கக் காட்சிகளை திரையில் பார்ப்பது, செக்ஸ் ஈடுபாடென்னும் நெருப்புக்கு எண்ணெய்யாய் இருக்கிறது. அதுவே, மனித பாலியலைப் பற்றிய திரித்துக் கூறப்பட்ட ஒரு நோக்குநிலையை இந்தச் சந்ததிக்கு அளிக்கிறது. பொழுதுபோக்கு மீடியாக்கள் பெரும்பாலும், திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு கொள்வதை, அன்பின் நெருக்கத்துடன் தவறுதலாக முடிச்சுப் போடுகின்றன. பொழுதுபோக்கு கலைஞர்களை விக்கிரகமாய் வணங்கும் விசிறிகள், கட்டுப்படுத்த இயலா காம உணர்வுக்கும் அன்புக்கும் இடையிலான வேறுபாட்டையோ, குறுகிய கால பாலுறவு விவகாரத்துக்கும் நீண்ட கால பொறுப்பேற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டையோ, அல்லது கனவுக்கும் நனவுக்கும் இடையிலான வேறுபாட்டையோ உணர்ந்துகொள்ள முடியாதவர்களாய்த் தோன்றுகின்றனர்.
அதைப்போலவே, அடிக்கடி, விளம்பர உலகும், செக்ஸை ஒரு வியாபாரப் பொருளாக சுயநல நோக்குடன் தவறாக பயன்படுத்தியிருக்கிறது. செக்ஸ், “விளம்பரப்படுத்தப்படும் ஒரு பொருளுக்கு கவனத்தைக் கவரும் நோக்கத்தையுடைய ஆளைக் குறிக்காத ஒரு பொருளாய்” ஆகியிருக்கிறது, என்பதாக ஒரு செக்ஸ் சிகிச்சையாளர் கூறினார். விளம்பரதாரர்கள், செக்ஸை சுயநலத்துக்காகத் தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்; செக்ஸ் சம்பந்தப்பட்ட வெளிக்காட்டை, இனிய வாழ்வுடன் முடிச்சுப் போட்டிருக்கின்றனர். அதோடு, குடும்ப உறவுகள் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை குறிப்பிட்டதுபோல், இது 20-வது நூற்றாண்டின் மற்றொரு “பாலியல் சிந்தனைத் திறத்தின் திரிவாய்” இருக்கிறது.
மாறிவரும் பாகங்கள் மனோபாவங்களை மாற்றுகின்றன
மாறிவரும் சமூகச் சூழலும், 1960-ல் கருத்தடை மாத்திரைகள் சந்தைக்கு அறிமுகமானதும், லட்சக்கணக்கான பெண்களின் பாலியல் நடவடிக்கையை மாற்றியிருக்கின்றன. இந்த மாத்திரை, பாலியல் ரீதியில் ஆணுக்குப் பெண் சமம் என்ற, இதற்கு முன்பு உணர்ந்துகொள்ளப்படாத பாலியல் சுயாதீனம் அல்லது சுதந்திரத்தைப் பெண்களுக்கு அளித்தது. ஆண்களைப் போலவே, அவர்களும் இப்போது குறுகிய கால உறவுகளை, வேண்டாத கருத்தரிப்பு பற்றிய பயத்தால் தடைசெய்யப்படாமலே பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள முடியும். ஆணும் பெண்ணும் ஒரேவிதமாக, தங்களுடைய பாலியல் சுயாதீனக் களியாட்டில் திளைத்தவர்களாய், இயல்பான குடும்ப, பாலியல் பாகங்களை, அவை இல்லாமற்போய்விடும் அளவுக்கு ஒதுக்கித்தள்ளினர்.
இப்படிப்பட்டவர்களைப் பற்றி முதல் நூற்றாண்டு பைபிள் எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: ‘இவர்கள் . . . விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள். . . . பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடையவர்கள். . . . செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்தவர்கள்.’—2 பேதுரு 2:14, 15.
பள்ளிகளில் செக்ஸ் கல்வி
“செக்ஸ் கல்வியின் மூலம் கற்றுக்கொண்ட அறிவும், கருத்தடை பற்றிய தங்களின் தனிப்பட்ட அறிவும்” திருமண பந்தத்துக்கு உட்படாமல் இருந்த டீனேஜ் கருத்தரிப்பு விகிதத்தின்மீது எவ்வித பாதிப்பையும் விளைவிக்கவில்லை என்று மேல்நிலைக் கல்வி பயிலும் வயதிலிருந்த, திருமணமாகாத பெண்பிள்ளைகளில் சுமார் 10,000 பேரிடம் நடத்திய ஓர் ஐ.மா. ஆய்வு வெளிக்காட்டியது. இருந்தபோதிலும், இப்படிப்பட்ட திருமணமாகாத டீனேஜ் கருத்தரிப்புக்கு ஆவன செய்யும் வகையில், தங்கள் மாணவர்களுக்கு இலவச கருத்தடை உறைகளை சில பள்ளிகள் வழங்கிவருகின்றன; எனினும், இந்தப் பழக்கத்துக்கு எதிரான விவாதம் சூடுபிடிக்கிறது.
கல்கரி ஹெரல்ட் என்ற செய்தித்தாளால் பேட்டி காணப்பட்ட 17 வயது மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி கூறினதாவது: “மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் டீனேஜர்களில் பெரும்பான்மையானவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்பது உண்மையே. . . . அவர்களில் வெறும் 12 வயதே ஆன சிறுவர்களும் உட்பட்டிருக்கின்றனர்.”
அன்பும் பொறுப்பேற்றலும் என்ன?
அன்பு, நம்பிக்கை, போற்றிப் பேணும் தோழமை ஆகிய இவை யாவும், இயல்பான பாலின கவர்ச்சியினாலோ, அல்லது பாலுணர்வைத் திருப்திப்படுத்திக்கொள்வதாலோ தானாகவே வந்துவிடும் துணை-விளைபொருள்களாய் இருக்கிறதில்லை. உடலுறவு மட்டுமே உண்மையான அன்பை உருவாக்க முடியாது. அன்பும் நெருக்கமும், ஒருவரிலொருவர் அக்கறை காட்டும் இயல்புடைய இரண்டு தனிநபர்களின் இதயங்களில் உருவாக்கப்படுகின்றன. அந்த இருவரே ஒரு நிரந்தரமான உறவைக் கட்டும் பொறுப்பேற்றவர்களாவர்.
குறுகிய கால காதல் உறவுகள், காலப்போக்கில் ஒருவரை பாதுகாப்பற்றவராய், தனிமையானவராய், மேலும் ஒருவேளை எய்ட்ஸ் போன்ற பாலுறவால் கடத்தப்படும் ஒரு நோயால் அவதியுறுபவராய் விட்டுவிடுகின்றன. “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே” என்று 2 பேதுரு 2:19-ல் காணும் வார்த்தைகளுக்கேற்றபடியே, பொறுப்பற்ற காதலுக்குச் சாதகமாக வாதம் செய்பவர்கள் விவரிக்கப்படுவது பொருத்தமாய் இருக்கிறது.
சர்ச் ஆஃப் இங்லண்டின் சமுதாய பொறுப்பு வாரியம், “கொண்டாட வேண்டிய ஒன்று” என்று தலைப்பிடப்பட்ட அதன் அறிக்கையை ஜூன் 1995-ல் வெளியிட்டது. த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் கூறுவதன்படி, பைபிளின் புத்திமதிக்கு நேர் முரணாக, அந்த வாரியம், “ ‘பாவத்தில் வாழ்வது’ என்ற சொற்றொடரை நீக்கிவிடும்படியும், திருமணமாகாமல் உடலுறவு கொள்பவர்களிடம் காட்டும் கண்டன மனோபாவத்தை விட்டுவிடும்படியும்” சர்ச்சிடம் கேட்டுக்கொண்டது. “சபைகள், திருமணமாகாமல் ஒன்றுசேர்ந்து வாழ்பவர்களை வரவேற்க வேண்டும், அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், . . . அப்போதுதான் அவர்களுடைய வாழ்வில் கடவுளுடைய பிரசன்னம் இருப்பதை அனைவருமே கண்டுபிடிக்கலாம்” என்று அந்த அறிக்கை சிபாரிசு செய்தது.
அப்படிப்பட்ட மதத் தலைவர்களை இயேசு எப்படி அழைத்திருப்பார்? சந்தேகமின்றி, ‘குருட்டு வழிகாட்டிகள்’ என்று அழைத்திருப்பார். அப்படிப்பட்ட வழிகாட்டிகளைப் பின்பற்றுபவர்களைப் பற்றியென்ன? “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே” என்று அவர் நியாய விவாதம் செய்தார். “விபசாரங்களும்” “வேசித்தனங்களும்” ‘ஒரு மனிதனைத் தீட்டுப்படுத்தும் விஷயங்களில்’ ஒன்றாய் இருப்பதாக இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார் என்பதைப் பற்றி நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்.—மத்தேயு 15:14, 18-20.
செக்ஸைப் பற்றி திரித்துக் கூறுவதாயும், சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்துவதாயும் உள்ள இந்த வெவ்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்கையில், ஒரு நபர், குறிப்பாக ஓர் இளைஞர், செக்ஸ் ஈடுபாட்டிலிருந்து எப்படி தன்னை விலக்கிக் கொள்ள முடியும்? மகிழ்ச்சியான, நீண்ட கால உறவுகளின் இரகசியம் என்ன? எதிர்காலத்துக்காகத் தயாரிக்க இளைஞருக்கு உதவ பெற்றோர் என்ன செய்யலாம் என்பது பற்றி அடுத்த கட்டுரை குறிப்பிடும்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
ஐக்கிய மாகாணங்களில் மட்டும், பாலுறவால் கடத்தப்படும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும், கணக்கிடப்பட்ட 30 லட்சம் டீனேஜர்களை அவதிப்பட வைக்கின்றன
[பக்கம் 6-ன் பெட்டி]
பாலியல் வாழ்க்கைப்பாணிகள்
மோக அடிமைகள் (Attraction Junkies): காதல்வயப்படுவதில் அவர்கள் மயங்குகிறார்கள்; ஆகவே, மோகத்தின் பரவசம் மறைந்தவுடன், ஒரு காதல் விவகாரத்திலிருந்து மற்றொரு காதல் விவகாரத்திற்குத் தாவுகிறார்கள். இந்தப் பதம், நியூ யார்க் அரசு மனநோய் மருத்துவ ஸ்தாபனத்தைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் லீபவிட்ஸால் உருவாக்கப்பட்டது.
நாளுக்கொரு துணை தேடுவோர் (Serial Polygamists): சட்டப்படி திருமணம் செய்வதையும், மணவிலக்கு செய்வதையும் மறுமணம் செய்வதையும் உள்ளடக்கும் காதல் விவகாரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து ஈடுபடுபவர்களை சமூகவியலர்கள் இவ்வாறு அழைக்கின்றனர்.
பட்சிக்கும் காம வெறியர்கள் (Sexual Predators): பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம், அவர்கள் தங்களுடைய பாலின வீரியத்தைப் பிறருக்குக் காட்ட வழிவகைகளைத் தேடுகின்றனர் என்று, குடும்ப ஆய்வுகள் பேராசிரியரும் சான்று பெற்ற செக்ஸ் சிகிச்சையாளருமான லூதர் பேக்கர் குறிப்பிடுகிறார். இந்தப் பதம் இப்போது சிறுவரைப் பாலியல் தொந்தரவு செய்வோருக்கும் பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 7-ன் படம்]
ஆபாசம் அடிமைப்படுத்துவதாயும் பாலியல் நடவடிக்கையைப் பற்றிய திரிவுற்ற ஒரு கருத்துக்கு வழிநடத்துவதாயும் இருக்கிறது