மாறிவரும் மனோபாவங்கள்—புதுப்புது கேள்விகளை எழுப்புகின்றன
பாலின புரட்சி,” “பாலின எழுச்சி,” “தார்மீக புரட்சி.” இப்படிப்பட்ட பதங்கள், குறிப்பாக 1960-களின் மத்திபத்திலும் அதற்குப் பிறகும் பாலின நடவடிக்கை சம்பந்தமாக மாறிவரும் மனோபாவங்களைப் பற்றி பகிரங்கமாக தெரிவித்தன. “பொறுப்பற்ற காதல் உறவு” என்ற கொள்கைக் குரலைப் பலர் ஏற்றனர்; அதாவது, தனிநபர்கள், திருமணம், கன்னிமை ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளும் ஒரு வாழ்க்கைப்பாணியை அது குறிப்பிட்டுக்காட்டுகிறது.
ஆசிரியர் அர்னஸ்ட் ஹெமிங்வேயின், “நீங்கள் ஒரு செயலைச் செய்தபின்பு, நன்றாய் உணர்ந்தால் அது ஒழுக்கமான செயல்; வருத்தமாய் உணர்ந்தால் அது ஒழுக்கங்கெட்ட செயல்” என்ற கருத்தறிவிப்பு, பாலின சுயாதீனத்தையும் அதனால் பெறும் பாலின திருப்தியையும் பற்றிய வாக்குகளால் வசீகரிக்கப்பட்டவர்களின் மனோபாவங்களைத் தொகுத்துரைக்கிறது. இத் தத்துவத்தின்படி, குறுகிய கால அளவுகளில் பலருடன் உடலுறவு கொள்வது சரியே என்றாகிவிட்டது. இவ்வாறு உடலுறவு கொள்வதன் மூலம், தனிநபர்களான ஆண்களும் பெண்களும், தங்கள் காம உணர்வுகளைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டனர். பாலுறவினால் பெறும் ‘திருப்திக்கோ’ எல்லையே இல்லை. அதே பத்தாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கருத்தடை மாத்திரை, இன்னமும் கட்டுக்கடங்கா காம உணர்வு பரிசோதனைக்கு வழிவகுத்தது.
என்றபோதிலும், எய்ட்ஸும் பாலுறவால் கடத்தப்படும் பிற நோய்களும், பலருடன் பாலுறவு கொள்ளும் வாழ்க்கைப்பாணி விட்டுச்சென்ற சொத்தாயின. கற்பிழந்த சந்ததியின் பாலின மனோபாவங்கள் பலவீனமாயின. சில ஆண்டுகளுக்கு முன்பு, “1980-களில் செக்ஸ்—இந்தப் புரட்சி முடிவடைந்தது” என்ற தலைப்புச்செய்தி டைம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. முக்கியமாக இந்த அறிவிப்பு, பல அமெரிக்கர்களைப் பாதித்திருந்ததும், எங்கும் பரவியிருந்ததுமான, பாலுறவால் கடத்தப்பட்ட நோய்களை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இன்றுவரையாக, உலகமுழுவதிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, கிட்டத்தட்ட மூன்று கோடி என்ற மலைக்க வைக்கும் எண்ணிக்கையை எட்டியிருக்கிறது!
பாலுறவால் கடத்தப்படும் நோய்களைப் பற்றிய பயம், குறுகிய கால உடலுறவுகளைப் பற்றிய பலருடைய மனோபாவங்களில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐமா (ஆங்கிலம்) என்ற ஒரு பொழுதுபோக்குப் பத்திரிகையின் 1992-ம் ஆண்டு வெளியீடு ஒன்று, அரசின் சுற்றாய்வு ஒன்றைப் பற்றி அறிக்கை செய்வதாய் குறிப்பிட்டதாவது: “திருமணமாகாத சுமார் 68 லட்சம் பெண்கள், எய்ட்ஸ் நோயாலும் பாலுறவால் கடத்தப்படும் பிற நோய்களாலும் பயமுறுத்தப்பட்டவர்களாய், தங்கள் பாலுறவு நடவடிக்கையில் மாற்றங்களைச் செய்திருக்கின்றனர்.” அந்தக் கட்டுரையின்படி, தெளிவான செய்தி இதுவே: “செக்ஸ் அற்பமான ஒரு விஷயமல்ல. வந்தது வரட்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த அபாயத்தைச் சந்திப்பீர்.”
இந்தக் கரடுமுரடான பத்தாண்டுகள், உடலுறவினிடமாக இருக்கும் மனோபாவங்களை எவ்வாறு மாற்றியிருக்கின்றன? சமீப பத்தாண்டுகளில் நடந்துவரும், பொறுப்பற்ற காதல் உறவால் குறிப்பிட்டுக் காட்டப்படும், துணிச்சலாக உணர்ச்சிகளுக்கு இணங்கிவிடும் நிலையிலிருந்தும், 1980-களில் பாலுறவால் கடத்தப்படும் நோய்களின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தும் பாடங்கள் ஏதாவது புகட்டப்பட்டிருக்கின்றனவா? பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருப்பது, தங்கள் பாலுணர்வை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு இளைஞருக்கும் இளம் பெண்பிள்ளைகளுக்கும் உதவியிருக்கிறதா? பாலியல் சம்பந்தமாக இன்றைய மாறிவரும் மனோபாவங்களின் சவாலை சமாளிக்க எது மிகச் சிறந்த வழியாய் இருக்கிறது?