‘ஓர் இருண்ட சகாப்தத்தில் ஒளிக்கீற்று’
ஜெர்மனியிலுள்ள விழித்தெழு! நிருபர்
இப்படித்தான் நாஸி காலப்பகுதியில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைக் குறித்து சரித்திராசிரியர் ஒருவர் விவரித்தார். அது ஜெர்மனியிலுள்ள ரேவன்ஸ்பர்க் நினைவு மன்றத்தில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகள் நாஸி தாக்குதலுக்கு எதிராக உறுதியாய் நிற்கிறார்கள் (ஆங்கிலம்) என்ற வீடியோ விளக்கப்படத்தின் உலக படக்காட்சி அரங்கேற்ற நிகழ்ச்சியாக இருந்தது. மதம் மற்றும் சரித்திரத்தில் நிபுணர்களான பத்து பேரோடுகூட, நாஸி சகாப்தத்தைத் தப்பிப்பிழைத்த 24 நபர்கள் சொல்லும், தைரியம் மற்றும் விசுவாசத்தின் மனதைத் தொடும் பதிவை இந்த வீடியோ விளக்குகிறது.
இந்த ரேவன்ஸ்பர்க் சித்திரவதை முகாம் ஒரு சமயத்தில் நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளைக் கொண்டிருந்தது. 50-க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பாக நாஸிக்களால் சிறைப்படுத்தப்பட்டு, தப்பிப்பிழைத்திருந்த சில சாட்சிகள் இந்தப் படக்காட்சி அரங்கேற்றத்திற்காக வந்திருந்தனர். அவர்களுடன், சரித்திராசிரியர்களும் அரசாங்க அதிகாரிகளும்கூட, நாஸி ஆதிக்கத்தால் ஐரோப்பா நெடுக பரவியிருந்த கொடுங்கோலாட்சியின் இருண்ட நாட்களை நினைவுகூர்ந்தனர். ஏறக்குறைய 350 பார்வையாளர்கள், தங்களுடைய விசுவாசத்தை மறுதலிப்பதற்கு மாறாக, மரணத்தை தைரியமாக தழுவிக்கொண்ட நூற்றுக்கணக்கான சாட்சிகளுடைய கிறிஸ்தவ உத்தமத்தன்மையின் ஊக்கமூட்டும் பதிவுகளைக் கவனித்துக் கேட்டனர்.
செய்தித்துறை குறிப்பெடுத்துக் கொண்டது
இந்தப் படக்காட்சி அரங்கேற்றப்பட்ட நவம்பர் 6, 1996 அன்று காலையில், ஒரு பெர்லின் ஹோட்டலில் நிருபர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் அந்த வீடியோவின் சில பகுதிகளைப் பார்த்த பிறகு, சிறிதே அறியப்பட்டிருந்த ஆனால் சரித்திரத்தின் முக்கியமான அம்சத்தை வெளிப்படுத்திய இந்தப் புதிய விளக்கப்படத்தின் முக்கியத்துவத்தின் பேரில் குறிப்புச் சொன்ன நிபுணர்களின் பேச்சுக்களைக் கேட்டனர். நியூன்கெம்மீ மெமோரியலின் இயக்குநரான டாக்டர் டெட்லெஃப் ஃகார்பெ விளக்கினார்: “நாம்—யெகோவாவின் சாட்சிகளும் சாட்சிகளல்லாதவர்களும்—கருஞ்சிவப்பு முக்கோணத்தையுடைய [சிறையிலிருந்த சாட்சிகள் அணிந்திருந்த அடையாளம்] கைதிகளின் சரித்திரத்தை மறப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இது, ஓர் இருண்ட சகாப்தத்தில் ஒளிக்கீற்றாக இருந்திருக்கிறது.”
உறுதியாய் நிற்கிறார்கள் படக்காட்சியில் காட்டப்பட்ட அநேக தப்பிப்பிழைத்த சாட்சிகள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்வதற்காக அங்கிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய துன்பங்களைக் குறித்து கசப்புற்றவர்களாக இருந்தார்களா? அவர்களுடைய சாந்தமான, பிரகாசித்த முகங்கள் அவர்கள் அவ்வாறில்லை என்பதைத் தெரிவித்தன.
நேர்முக பேட்டிகளுக்கு பிறகு, அந்த நிருபர்கள் சுமார் 64 கிலோமீட்டர் தள்ளியிருந்த ரேவன்ஸ்பர்க் நினைவுமன்றத்தில் காட்டப்படவிருந்த உறுதியாய் நிற்கிறார்கள் என்ற விளக்கப்படத்தின் படக்காட்சி அரங்கேற்றத்திற்கு அழைக்கப்பட்டார்கள். ஏறக்குறைய எல்லாருமே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
படக்காட்சி அரங்கேற்றம்
அந்த இலையுதிர் நாளில் மந்தாரமான வானமும், நல்ல மழைச்சாரலும் இருந்தாலும் ரேவன்ஸ்பர்க் மெமோரியலுக்கு அடுத்துள்ள அந்த புதுப்பிக்கப்பட்ட மன்றத்திற்குள்ளே சூழ்நிலையை உற்சாகமானதாக மாற்றியிருந்தது. ரேவன்ஸ்பர்க், சாக்ஸன்ஹாஸன், ப்ரேன்டன்பர்க் மெமோரியல் ஆகிய ஸ்தாபனங்களுக்கு அப்போது இயக்குநராக இருந்த பேராசிரியர் யூர்கென் டிட்பெர்னெர் சொன்னார்: “தேசிய ஜனநாயகத்தின்கீழ் யெகோவாவின் சாட்சிகளால் காண்பிக்கப்பட்ட தார்மீக துணிவு மதிக்கப்பட வேண்டும். . . . தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல், அதன் விளைவாக துன்பப்படவும் அல்லது இறக்கவும்கூட வேண்டியிருந்த இந்த மக்களைப் பற்றிய நினைவுகளை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் மெச்சுகிறோம்.”
ஜெர்மனியிலுள்ள ப்ரேன்டன்பர்க்கின் கல்வி, இளைஞர், விளையாட்டுத்துறையின் அமைச்சரான ஆங்கலீகா பேட்டர் அனுப்பிய ஒரு செய்தி வாசிக்கப்பட்டது: “யெகோவாவின் சாட்சிகளின் இந்த உறுதியான முன்மாதிரியை இன்று நாம் நினைவுகூருவது முக்கியமானதாக உள்ளது” என்று அது குறிப்பிட்டது. ரேவன்ஸ்பர்க் மெமோரியலின் இயக்குநரான டாக்டர் ஸீஃக்ரிட் யாக்கோபைட் சொன்னார்: “நான் இந்தப் படக்காட்சியின் அரங்கேற்றத்திற்காக எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் நோக்கியிருந்தேன். நம் எல்லாருக்குமே இது ஒரு விசேஷமான நாள் என்று நான் நம்புகிறேன்.”
பிறகு வீடியோ துவங்குவதற்காக வெளிச்சம் மங்கலாக்கப்பட்டது. சுமார் 78 நிமிடங்களுக்கு எட்டு நாடுகளிலிருந்து வந்திருந்த தப்பிப்பிழைத்தவர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் எல்லாருமே ஜெர்மானிய சரித்திரத்தின் இந்த வேதனையான சகாப்தத்தின் அவல நிகழ்ச்சிகளின், வெற்றிகளின் நினைவுகளில் மீண்டுமாக வாழ்ந்தார்கள். படுபயங்கரமான சூழ்நிலைமைகளின் கீழே அன்பு மற்றும் விசுவாசத்தின் அளவுகடந்த செயல்களைப் பற்றி இந்த சாதாரண மக்கள் சொன்னபோது அநேகர் தங்களுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாகக் கண்டார்கள்.
இடிமுழக்க கைத்தட்டல்கள் அடங்கிய பிறகு, சரித்திராசிரியரான யோயாச்சீம் க்யூர்லிட்ஸ், ப்ரேன்டன்பர்க்கில் கொலை செய்யப்பட்டிருந்த ஒரு சாட்சியின் கடைசி வார்த்தைகளைப் படித்தார். க்யூர்லிட்ஸ் தான் இயக்குநராக இருக்கும் ப்ரேன்டன்பர்க் மெமோரியல் மற்றும் ஆர்காய்வில், வெறுமனே இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் போது இந்தக் குறிப்பைக் கண்டெடுத்திருக்கிறார். தங்களுடைய கர்த்தரை உண்மையாய்ப் பற்றிக் கொள்ளும்படி தன்னுடைய உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்திய இந்த விசுவாசமுள்ள கிறிஸ்தவ மனிதருடைய வார்த்தைகளை வாசித்தபோது அவருடைய குரல் உணர்ச்சிவசப்பட்டு தடுமாறியது. க்யூர்லிட்ஸ் இவ்வாறு முடித்தார்: “பெரியோரே தாய்மாரே, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய இந்தப் படம் நம்முடைய கல்வித்துறைச் சார்ந்த வேலைகளுக்கு ஒரு மதிப்புமிக்க நன்கொடையாக அமையும் என்று நான் நம்புகிறேன்.”
“இந்தப் படத்தின் மூலமாக ஒரு மதிப்புள்ள புதிய பொக்கிஷம்—தூரத்தில் எப்போதாவது கேட்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களின் குரல்களும், மேலும் . . . தப்பிப்பிழைக்காதவர்களின் குரல்களுமே—கூட்டப்பட்டுள்ளது” என்று சரித்திராசிரியர் வுல்ஃப் ப்ரேபெக் குறிப்பிட்டார். தொடர்ந்து டாக்டர் ஃகார்பெ பேசும் போது: “இவை அந்தப் பயங்கரமான காலப்பகுதியின்போது கடவுளிலுள்ள விசுவாசத்தாலும் பைபிளுடைய வாக்குறுதிகளின் பேரிலான நம்பிக்கையாலும் மேற்கொள்வதற்கான பலத்தைப் பெற்ற மனிதர்களைப் பற்றிய முக்கியமான அனுபவங்களாக உள்ளன” என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான முடிவாக, மீண்டும் ஒருமுறை தப்பிப்பிழைத்த அநேக சாட்சிகள் கூடியிருந்தோரைப் பார்த்து பேசினர். இந்த தைரியமான கிறிஸ்தவர்கள் தங்களுடைய அநேக துன்பங்களின்போது உறுதியாய் நிலைத்திருக்கச்செய்த பலமான விசுவாசத்தை இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
இந்தப் படக்காட்சியைத் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் உறுதியாய் நிற்கிறார்கள் விளக்கப்படத்தைப் பற்றியும் 340-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஜெர்மனி முழுவதிலுமுள்ள செய்தித்தாள்களில் வெளிவந்தன. அநேக ரேடியோ நிகழ்ச்சிகளிலும்கூட, தேசிய ரேடியோ நிலையம் ஒன்றிலுமாக நல்ல அறிக்கை கொடுக்கப்பட்டது.
இந்த உறுதியாய் நிற்கிறார்கள் விளக்கப்படமானது குறைந்தது 24 மொழிகளிலாவது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். வகுப்பறையில் பயன்படுத்துவதற்காக இவ்வீடியோவின் எடிட் செய்யப்பட்ட சில பகுதிகள் காலப்போக்கில் தயாரிக்கப்படும். இந்த வீடியோ வெளியிடப்பட்டது முதற்கொண்டு அதிக எண்ணிக்கையான கல்வியாளர்கள் உறுதியாய் நிற்கிறார்கள் விளக்கப்படத்தை தங்களுடைய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு, தப்பெண்ணம், சகாக்களின் அழுத்தம், மனசாட்சியின் குரல் போன்ற முக்கியமான பிரச்சினைகளை இளைஞர்கள் சிந்திப்பதற்கு உதவி செய்யப் பயன்படுத்துகிறார்கள்.
நம்பிக்கை துரோகத்தாலும் பகைமையாலும் பிளவுபட்ட இவ்வுலகத்தில், உத்தமத்தை பற்றிய இந்தக் கதையை மக்களுக்கு தெரியப்படுத்துவது எவ்வளவு காலத்திற்கேற்றதாக உள்ளது! உண்மையில் இந்த விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் பட்ட துன்பங்கள் வீணாகப் போய்விடவில்லை.—எபிரெயர் 6:10.
[பக்கம் 15-ன் படங்கள்]
பெர்லின் நிருபர் கூட்டம். இடப்பக்கத்திலிருந்து: டாக்டர் டெட்லெஃப் ஃகார்பெ, படுகொலையைத் தப்பிப்பிழைத்த சைமன் லிப்ஸ்டர், ப்ரேன்ஸ் வுல்ப்பர்ட், சரித்திராசிரியர் வுல்ஃப் ப்ரேபெக் ஆகியோர்