நீதிக்கான—எங்கள் தேடுதல்
ஆன்டோன்யோ வீல்யா சொன்னபடி
1836-ல், 200-க்கும் குறைவாக இருந்த ஆலாமோவின் டெக்ஸஸைச் சேர்ந்த காவலர்கள் அனைவரும், 4,000 ஆண்களைக்கொண்ட ஒரு மெக்ஸிக்க இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். பின்னர், “ஆலாமோவை நினைவுகூரு” என்ற கூக்குரல் சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கமூட்டப் பயன்படுத்தப்பட்டது; பிறகு அதே வருடத்தில் தானே சுதந்திரமும் கிடைத்தது. 1845-ல், முன்பு மெக்ஸிகோவின் பாகமாக இருந்த பகுதி இப்போது ஐக்கிய மாகாணங்களின் பாகமாக ஆனது; மேலும், அங்கிருந்த மெக்ஸிக்கர்கள் அதிக எதிர்ப்புமிக்க பிராந்தியத்தில் தங்களைக் கண்டனர். இன வேறுபாடுகள் இன்னமும் நினைவுகூரப்படுகின்றன.
நான் 1937-ல், ஆலாமோ அமைந்திருக்கும் இடமாகிய டெக்ஸஸிலுள்ள சான் அன்டோனியோவுக்கு அருகில், பிறந்தேன். அந்நாட்களில் குளியலறைகள், தண்ணீர் குடிக்கும் இடங்கள், இன்னும் மற்ற பொதுவசதிகள் யாவும் “வெள்ளையர் மட்டும்” என்றும் “மற்றவர்கள்” என்றும் பிரித்து குறிக்கப்பட்டிருந்தன. “மற்றவர்கள்” என்பது மெக்ஸிக்க மரபுவழியில் வந்தவர்களாகிய எங்களையும் உட்படுத்துகிறது என்பதை நான் சீக்கிரத்தில் கற்றுக்கொண்டேன்.
ஒரு சினிமா தியேட்டரிலும்கூட, மெக்ஸிக்கர்களும் கறுப்பர்களும் அரங்குக்குள் உட்கார அனுமதிக்கப்படாமல், பால்கணியில் மட்டுமே உட்கார முடியும். அநேக சிற்றுண்டிச் சாலைகளும் மற்ற கடைகளும் மெக்ஸிக்கர்களுக்கு சேவையளிக்க மறுத்தன. ஒருமுறை என்னுடைய மனைவி வெல்யாவும் அவள் தங்கையும் ஒரு அழகுநிலையத்திற்குச் சென்றனர். “மெக்ஸிக்கர்களுக்கு இங்கே அனுமதியில்லை” என்று சொல்லும் மரியாதைக்கூட அந்த உரிமையாளர்களிடம் இல்லை. வெல்யாவும் அவள் தங்கையும் வெட்கப்பட்டு, திரும்பிச்செல்லும் வரை வெறுமனே அவர்களைப் பார்த்துச் சிரித்திருக்கின்றனர்.
சில சமயங்களில் வெள்ளை ஆண்கள்,—அநேகமாக போதையிலிருக்கும் போது—இயல்பாகவே ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தவர்கள் என அவர்களில் அநேகர் கருதிய, மெக்ஸிக்க பெண்களைத் தேடினர். ‘ஒரு குளியலறையையோ ஒரு தண்ணீர் குடிக்கும் இடத்தையோ எங்களோடு பகிர்ந்துகொள்ளமாட்டார்கள், ஆனால் மெக்ஸிக்கப் பெண்களோடு படுக்கையை மாத்திரம் பகிர்ந்துகொள்வார்கள்’ என நான் நினைத்தேன். இந்த அநியாயங்கள் முதலில் என்னை பாதுகாப்பற்றவனாகவும் பின்னர் எதிர்ப்பவனாகவும் ஆக்கின.
சர்ச்சுகளோடு உள்ள பிரச்சினைகள்
மதத்தின் மாய்மாலம் என்னை இன்னும் வெறுப்படையச் செய்தது. வெள்ளையர்கள், கறுப்பர்கள் மற்றும் மெக்ஸிக்கர்களுக்கு தனித்தனி சர்ச்சுகள் இருந்தன. ஒரு கத்தோலிக்கனாக என்னுடைய முதல் புதுநன்மைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு பாதிரியார் அப்பாவிடம் கொடுக்கும்படி வரப்போகும் வாரங்களுக்கான தேதியிட்ட சில கவர்களை என்னிடம் கொடுத்தார். நாங்கள் ஒவ்வொரு வாரமும் காணிக்கையுடன் ஒரு கவரை திரும்ப அனுப்பவேண்டும். கொஞ்சநாள் கழித்து, அந்தப் பாதிரி என்னிடம்: “அந்தக் கவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை என்று உன் அப்பாவுக்கு ஞாபகப்படுத்து” என்று சொன்னார். “பணம் மட்டுமே அவர்களுடைய ஒரே குறிக்கோள்!” என்ற என் அப்பாவுடைய கோபமான வார்த்தைகள் என்னில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.
தங்கள் சபையிலுள்ள பெண்களோடு ஓடிப்போன பிரசங்கிமார்களைப் பற்றிய மோசடிகள் சர்வசாதாரணமாக இருந்தன. இப்படிப்பட்ட அனுபவங்கள், “மதத்திற்கு இரண்டு குறிக்கோள்கள் மட்டுமே இருக்கின்றன—ஒன்று உங்கள் பணத்தைப் பிடுங்குவது அல்லது உங்கள் பெண்ணை பறித்துக்கொள்வது” என்று திரும்பத்திரும்ப சொல்லும்படி என்னைத் தூண்டின. ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் என்னை சந்திக்கும்போது, “எனக்கு மதம் வேண்டுமென்றால், அதை நானே தேடிக்கொள்வேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடுவேன்.
இராணுவ சேவையும் திருமணமும்
1955-ல் நான் ஐ.மா. விமானப்படையில் சேர்ந்தேன். என் வேலையில் திறம்பட்டு விளங்குவதன்மூலம், ஒரு மெக்ஸிக்க நாட்டானாக எனக்கு மறுக்கப்பட்ட மரியாதையை சம்பாதிக்க முடியும் என்று நினைத்தேன். கடினமாக உழைப்பதன் மூலம் அங்கீகாரம் பெற்று, கடைசியில் தரக்கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டேன். இது இராணுவத்தின் மற்றத் துறைகளை மதிப்பிடுவதை உட்படுத்தியது.
1959-ல், வெல்யாவை திருமணம் செய்துகொண்டேன். வெல்யா எப்போதுமே மதப்பற்றுடையவளாக இருந்தாள். ஆனாலும், அவள் சென்றிருந்த வித்தியாசப்பட்ட சர்ச்சுகளால் ஏமாற்றமடைந்திருந்தாள். 1960-ல் ஒருநாள், மிகவும் சோர்வுற்றவளாக உணர்ந்தபோது, “கடவுளே, நீர் உண்மையில் இருக்கிறீர் என்றால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்தும்; நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று ஜெபம் செய்தாள். அதேநாளில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கலிபோர்னியா, பெடாலுமாவிலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார்.
ஆனால் சீக்கிரத்திலேயே, என்னுடைய இராணுவப் பொறுப்பில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் காரணமாக வெல்யா சாட்சிகளை சந்திக்க முடியாமல் போனது. நான் வியட்நாமில் இருந்தபோது, 1966-ல் தான் வெல்யா டெக்ஸஸிலுள்ள செமினோலில் சாட்சிகளோடு தன்னுடைய பைபிள் படிப்பை மறுபடியும் தொடங்க முடிந்தது. அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நான் வியட்நாமிலிருந்து வீடு திரும்பியபோது, அவள் சாட்சிகளோடு பைபிளை படிப்பதைக் கண்டு வருத்தமடைந்தேன்.
என்னுடைய பிடிவாதமான எதிர்ப்பு
வெல்யா மதத்தினால் ஏமாற்றப்பட்டு, சோர்ந்துபோவாள் என்று நான் நினைத்தேன். ஆகவே, மாய்மாலத்தின் மிகச்சிறிய அத்தாட்சி தெரிந்தாலும் அதை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நானும் பைபிள் படிப்பில் உட்கார்ந்து கவனித்தேன். சாட்சிகள் அரசியலில் நடுநிலைமை வகிக்கிறார்கள் என்று அந்தப் பெண் கூறியவுடன், “உங்கள் கணவர் என்ன வேலை செய்கிறார்?” என்று நான் குறுக்கிட்டேன்.
“அவர் பருத்தி பயிர் செய்கிறார்” என்று பதிலளித்தார்.
“ஹா! மிலிட்டரி யூனிபார்ம்கள் பருத்தியிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே நீங்களும் போரை ஆதரிக்கத் தான் செய்கிறீர்கள்!” என்று நான் அகந்தையாக பதிலளித்தேன். நான் சப்தமாகவும் நியாயமற்ற விதத்திலும் பேசத் தொடங்கினேன்.
ஜூன் 1967-ல் என்னுடைய புதிய இராணுவ நியமிப்பினால் நாங்கள் மிகத் தொலைவிலிருந்த இடமாகிய வட டகோடாவில் உள்ள மினோட்டுக்கு மாறிச் செல்லவேண்டியிருந்த போதிலும், அங்கிருந்த சாட்சிகள் வெல்யாவை சந்தித்து பைபிள் படிப்பைத் தொடர்ந்தனர். சிறுபிள்ளைத்தனமாக நான் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தேன். வேண்டுமென்றே படிப்பு நடக்கும் நேரத்தில் வந்து, படாரென்று கதவை மூடிவிட்டு, டம்டம்மென்று மாடிப்படிகளில் ஏறிச் சென்று, என்னுடைய பூட்ஸ்களை தரையில் டமாரென்று வீசியெறிந்து, அநேக முறைகள் டாய்லெட்டை ப்லஷ் செய்வேன்.
வெல்யா ஒரு அமைதியான, கீழ்ப்படிதலுள்ள மனைவியாக, என்னுடைய அனுமதியில்லாமல் எதையும் செய்யாதவளாக இருந்தாள். அவளை பைபிள் படிப்பதற்கு நான் வேண்டாவெறுப்புடன் அனுமதித்த போதிலும், சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போவது அதிக கடினமாக இருக்கும் என்று அவள் அறிந்திருந்தாள். கூட்டங்களுக்கு வரும்படி உற்சாகப்படுத்தப்படும்போது, அவள் எப்பொழுதும் “நான் வராமலிருப்பது நல்லது. டோனீயை வருத்தப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்லுவாள்.
என்றபோதிலும், ஒருநாள் வெல்யா பைபிளிலிருந்து, “பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று வாசித்தாள். (எபேசியர் 4:30) “அது எதை அர்த்தப்படுத்துகிறது?” என்று அவள் விசாரித்தாள். பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்த சாட்சி, “கடவுளுடைய பரிசுத்தஆவி பைபிள் எழுதப்படுவதை ஏவினது என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே, பைபிள் சொல்வதை நாம் செய்யாதபோது, கடவுளுடைய பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்துகிறோம். உதாரணமாக, கூட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறதை தாங்கள் அறிந்திருந்தபோதிலும், சிலர் போவதில்லை” என்று விளக்கினார். (எபிரெயர் 10:24, 25) வெல்யாவின் தாழ்மையான இருதயத்தைத் தூண்ட அது போதுமானதாக இருந்தது. அப்போதிலிருந்து என்னுடைய எதிர்ப்பின் மத்தியிலும் அவள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்றாள்.
“எனக்கு சாப்பாடு மேஜையில் தயாராக இல்லாதபோது நீ எப்படி கூட்டங்களுக்குப் போகலாம்?” என்று நான் வெடுக்கென்று கேட்பேன். சீக்கிரத்திலேயே என்னுடைய இரவு உணவை எப்போதும் சூடாகவும் தயாராகவும் வைத்திருப்பதற்கு வெல்யா கற்றுக்கொண்டாள். ஆகவே நான், “என்னிடமோ நம்முடைய குழந்தைகளிடமோ உனக்கு அன்பில்லை. அந்தக் கூட்டங்களுக்காக நீ எங்களை புறக்கணித்து விடுகிறாய்” போன்ற மற்ற சாக்குப்போக்குகளை உபயோகிக்க ஆரம்பித்தேன். அல்லது சாட்சிகளுடைய நம்பிக்கைகளை நான் குறைகூறுகையில் வெல்யா பொறுமையாக அவற்றை ஆதரித்துப் பேசும்போது, என்னுடைய போகோனா—“வாயாடி”—பட்டபெயரை பயன்படுத்தி, அவளை ஒரு மரியாதையில்லாத, கீழ்ப்படியாத போகோனா என்று அழைப்பேன்.
என்றபோதிலும், வெல்யா தொடர்ந்து கூட்டங்களுக்குச் சென்றாள். என்னுடைய வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவளாக அநேகமாக கண்ணீருடன்தான் வீட்டிலிருந்து செல்வாள். ஆனாலும் எனக்கென்று சில நியமங்கள் இருந்தன. நான் என் மனைவியை ஒருபோதும் அடித்ததில்லை அல்லது அவளுடைய புதிய விசுவாசத்தினிமித்தம் அவளை கைவிட்டுவிடும் எண்ணமும் எனக்கிருந்ததில்லை. என்றாலும் அந்தக் கூட்டங்களுக்கு வரும் யாராவது ஒரு ஆணழகன் அவள் மேல் ஒரு கண் வைத்திருக்கலாம் என்று பயந்தேன். மதத்தைப் பற்றிய என்னுடைய கருத்து இன்னமும், ‘அவர்கள் பணம் அல்லது பெண்ணில் தான் அக்கறைக் கொண்டுள்ளனர்’ என்பதாகவே இருந்தது. கூட்டங்களுக்காக வெல்யா உடையணியும்போது நான் எப்போதும், “நீ மற்றவர்களுக்காக உன்னை அதிகமாக அழகுபடுத்திக்கொள்வாய் ஆனால் எனக்காக ஒருபோதும் இப்படி செய்துகொள்ளமாட்டாய்” என்று சொல்லுவேன். ஆகவே முதன்முதலாக நான் கூட்டங்களுக்குப் போக தீர்மானித்தபோது, “நான் வருகிறேன்—ஆனால் உன்னை உன்னிப்பாய் கவனிப்பதற்காகவே!” என்று சொன்னேன்.
என்னுடைய உண்மையான நோக்கமானது சாட்சிகளுக்கு எதிராக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. நான் ஆரம்பத்தில் சென்றிருந்த கூட்டங்கள் ஒன்றில், “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பேச்சு கொடுக்கப்பட்டது. (1 கொரிந்தியர் 7:39) நாங்கள் வீட்டிற்கு வந்ததும் நான் வெறுப்புடன், “பார்த்தாயா! அவர்களும் மற்றவர்களைப் போலத்தான்—தங்கள் விசுவாசத்திலில்லாத மற்றவர்களைப் பற்றி தப்பெண்ணம் கொண்டவர்கள்” என்று சொன்னேன். வெல்யா மனத்தாழ்மையோடு, “ஆனால் அதை அவர்கள் சொல்லவில்லை, பைபிள் அவ்வாறு சொல்கிறது” என்று பதிலளித்தாள். நான் உடனடியாக என்னுடைய கைமுஷ்டியால் சுவற்றில் ஓங்கி அடித்துக்கொண்டு, “நீ மறுபடியும் ஒரு போகோனா ஆகிவிட்டாய்” என்று சத்தம் போடுவதன் மூலம் எதிர்ப்பேன். உண்மையில், அவள் சொன்னது சரி என்று நான் அறிந்திருந்ததால் ஏமாற்றமடைந்தேன்.
நான் தொடர்ந்து கூட்டங்களுக்குச் சென்று, சாட்சிகளின் பிரசுரங்களை வாசித்துவந்தேன். ஆனால் என்னுடைய நோக்கமானது அவற்றில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. நான் கூட்டங்களில் பதில் சொல்லவும் ஆரம்பித்தேன்—ஆனால் நான் ஒரு “முட்டாள் மெக்ஸிக்கன்” அல்ல என்பதை மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காகவே இதைச் செய்தேன்.
நீதிக்கான என் தேடுதல் திருப்தியடைகிறது
1971-ற்குள் என்னுடைய இராணுவ சேவையின் காரணமாக நாங்கள் அர்கன்ஸாஸில் இருந்தோம். நான் வெல்யாவுடன் தொடர்ந்து கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். அவள், யெகோவாவுக்கானத் தன்னுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக டிசம்பர் 1969-ல் முழுக்காட்டப்பட்டாள். நான் அவளை இனிமேலும் எதிர்க்கவில்லை; என்றாலும் எவரும் என்னுடன் பைபிளை படிக்கவும் அனுமதிக்கவில்லை. பைபிள் பிரசுரங்களை வாசித்துவந்ததன் காரணமாக என்னுடைய அறிவு வெகுவாக அதிகரித்திருந்தது. என்றாலும், அவையெல்லாம் வெறும் ஏட்டறிவே—நான் செய்யும் எதிலும் மிகச்சிறந்து விளங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தின் பலனாகவே அவை இருந்தன. என்றபோதிலும், கொஞ்சம் கொஞ்சமாக, யெகோவாவின் சாட்சிகளோடிருந்த கூட்டுறவானது என் இருதயத்தைத் தொட ஆரம்பித்தது.
உதாரணத்திற்கு, சபைக் கூட்டங்களில் போதிப்பதில் கறுப்பர்களும் ஒரு பங்கைக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். ஆனால் முதலில் எனக்கு நானே இவ்வாறு சொல்லிக்கொண்டேன்: ‘எல்லாம் அவர்கள் இராஜ்ய மன்றத்திற்குள் மாத்திரம்தான்.’ ஒரு பெரிய பேஸ்பால் ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டிற்குச் சென்றிருந்தபோதோ, கறுப்பர்கள் அங்கும்கூட நிகழ்ச்சிநிரலில் பாகங்களைக் கொண்டிருந்ததைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சாட்சிகள் மத்தியில் எந்த வேற்றுமையுணர்ச்சியும் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் உண்மையான நீதியை செயலில் காட்டுகின்றனர்.
யெகோவாவின் சாட்சிகள் ஒருவரிலொருவர் உண்மையான அன்புள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதையும் மதித்துணர ஆரம்பித்தேன். (யோவான் 13:34, 35) அவர்களுடைய இராஜ்ய மன்ற கட்டுமானத்தில் நான் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தபோது, அவர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் களைத்துப் போவதையும் தவறுகள் செய்வதையும் சில சமயங்களில், காரியங்கள் சரியாக நடக்கவில்லையென்றால் சில வாக்குவாதங்கள் ஏற்படுவதையும் கவனித்தேன். இந்த அபூரணங்களைக்கண்டு அவர்களிடமிருந்து விலகிச்செல்வதைக் காட்டிலும், அவர்கள் மத்தியில் அதிகப் பாதுகாப்பாக உணர்ந்தேன். என்னுடைய அநேக குறைபாடுகளின் மத்தியிலும் எனக்குக்கூட நம்பிக்கை இருக்கிறது என்பதை உணர ஆரம்பித்தேன்.
கடைசியில் என் இருதயம் தொடப்பட்டது
நான் யெகோவாவோடு ஒரு உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை 1973-ல் தான் முதலில் உணர ஆரம்பித்தேன். அந்த வருடத்தின் ஒரு காவற்கோபுரம், புகைபிடித்தல் ‘மாம்சத்தில் உண்டான அசுசி’ என்றும் சபைநீக்கம் செய்யப்படுவதற்கு வழிநடத்தக்கூடிய தவறு என்றும் விளக்கியது. (2 கொரிந்தியர் 7:1) அந்த சமயத்தில் நான் ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பாக்கெட் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். புகைப்பதை நிறுத்துவதற்கு ஏற்கெனவே பலமுறை முயற்சித்திருக்கிறேன், ஆனால் எந்தப் பயனுமில்லை. இப்பொழுதோ, புகைப்பதற்கான தூண்டுதல் வரும் ஒவ்வொரு சமயமும், இந்த அசுத்தமானப் பழக்கத்தை மேற்கொள்வதற்கு யெகோவாவுடைய உதவிக்காக மனதிற்குள் ஒரு ஜெபம் செய்தேன். எல்லாரும் ஆச்சரியப்படும் வண்ணமாக, அதற்குப் பிறகு நான் புகைக்கவேயில்லை.
இராணுவத்திலிருந்து நான் ஓய்வுபெறுவதற்கான தேதி ஜூலை 1, 1975-ஆக இருந்தது. பைபிளின் போதனைப்படி நான் செய்யவேண்டுமென்றால், என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு பைபிள் படிப்பு தனியாக நடத்தப்படாததால், ஜூன் 1975-ல் சபை மூப்பர்களிடம், நான் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவுடன் முழுக்காட்டப்பட விரும்புவதை சொன்னபோது அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். இயேசுவின் கட்டளையாகிய பிரசங்க வேலையில் நான் முதலாவதாக பங்குகொள்ளவேண்டும் என்று அவர்கள் விளக்கினார்கள். (மத்தேயு 28:19, 20) ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று நான் இதைச் செய்தேன். அன்றைய தினமே நான் ஒரு மூப்பரை சந்தித்து, முழுக்காட்டப்பட விரும்புபவர்கள் பதிலளிக்க வேண்டிய பைபிள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். மூன்று வாரங்கள் கழித்து முழுக்காட்டப்பட்டேன்.
நான் முழுக்காட்டுதல் எடுத்ததைப் பார்த்த எங்களுடைய மூன்று பிள்ளைகளாகிய வீடோ, வெனெல்டா மற்றும் வெரோனிகா, வேகமான ஆவிக்குரிய வளர்ச்சியடைய ஆரம்பித்தனர். அடுத்த இரண்டு வருடங்களுக்குள், மூத்த இரண்டு பிள்ளைகளும், நான்கு வருடம் கழித்து கடைசி பிள்ளையும், முழுக்காட்டப்பட்டனர். பைபிள் சத்தியங்களை அறிந்த ஆனால் அதன்படி செய்யாத ஆண்களிடம் நான் பேசும்போது, அவர்கள் செயல்படத் தவறுவதன் விளைவுகளைப் பற்றி அவர்களிடம் பேசுவேன். அவர்களுடைய பிள்ளைகள், ‘சத்தியம் அப்பாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இல்லையென்றால், எனக்கும் அது அவ்வளவு முக்கியமானதல்ல’ என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவ்வாறே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவர்களிடம் சொல்லுவேன்.
முழுநேர ஊழியத்தைப் பின்தொடர்தல்
மார்ஷல், அர்கன்ஸாஸில் எங்களுடைய முழுக்குடும்பமும் பயனியர்களாக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தோம். வெல்யாவும் நானும் 1979-ல் ஆரம்பித்தோம், அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில் எங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்ததும் எங்களோடு சேர்ந்துகொண்டனர்.
1980-களின் ஆரம்பத்தில், தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடாரில் ஜனங்கள் பைபிள் அறிவிற்காகக் கொண்டுள்ள தாகத்தை பற்றிய அறிக்கைகளைக் கேள்விப்பட்டு, அங்கு மாறிச்செல்வதென்று முடிவு செய்தோம். 1989-ற்குள் எங்கள் பிள்ளைகள் வளர்ந்து, தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக்கூடியவர்களாக ஆனார்கள். ஆகவே அந்த வருடத்தில் நாங்கள், “தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு” ஈக்வடாருக்கு ஒரு சிறிய பயணம் சென்றுவந்தோம்.—ஒப்பிடுக: எண்ணாகமம் 13:1, 2.
ஏப்ரல் 1990-ல், எங்கள் புதிய வீடாகிய ஈக்வடாருக்கு வந்து சேர்ந்தோம். எங்களிடம் மிகக் குறைவான பணமே இருந்ததனால்—என்னுடைய இராணுவ ஓய்வூதியத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம்—நாங்கள் செலவுகளை மிகக் கவனமாக திட்டமிட வேண்டியிருந்தது. ஆனால் ஆவிக்குரிய செழுமையான இந்தப் பிராந்தியத்தில் முழுநேர ஊழியத்தின் சந்தோஷங்கள், நாங்கள் செய்த எந்தப் பொருளாதார தியாகங்களையும் விஞ்சி நின்றன. முதலில், கடலோரப் பட்டணமாகிய மான்டாவில் நாங்கள் ஊழியம் செய்தபோது, ஒவ்வொருவரும் 10 முதல் 12 வாராந்திர பைபிள் படிப்புகளை நடத்திவந்தோம். பிறகு 1992-ல், என் மனைவியுடன், நான் ஒரு பிரயாணக் கண்காணியாக சேவை செய்துவந்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு வித்தியாசப்பட்ட சபையை நாங்கள் சந்தித்தோம்.
நீதி முழுமையாக ஸ்தாபிக்கப்படும்போது
முந்தையநாட்களை சிந்தித்துப் பார்க்கையில், வெல்யாவும் நானும் வளர்ந்துவந்தபோது அனுபவித்த அநீதிகள் இப்பொழுது எங்களுடைய ஊழியத்தில் எங்களுக்கு உதவியாக இருப்பதை எங்களால் காணமுடிகிறது. ஜனங்கள் எங்களைவிட ஏழைகளாகவோ, குறைந்த கல்வி அறிவுடையவர்களாகவோ, வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், அவர்களைப் பற்றிக் கீழ்த்தரமாக நினைத்துவிடாதபடி மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம். மேலும், நாங்கள் அனுபவித்ததைவிட மிகவும் மோசமான சமூக அநீதிகளை மற்ற சகோதர சகோதரிகள் அனுபவிக்கிறார்கள் என்பதையும் எங்களால் பார்க்கமுடிந்தது. ஆனாலும் அவர்கள் குறைசொல்வதில்லை. கடவுளுடைய வரவிருக்கும் இராஜ்யத்தில் அவர்கள் தங்களுடைய கண்களை ஊன்ற வைக்கின்றனர்; அதையே செய்ய நாங்களும் கற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நீதியைத் தேடுவதை வெகு காலத்திற்கு முன்பே விட்டுவிட்டோம். மாறாக, அநீதிகளுக்கான உண்மையானப் பரிகாரமாகிய கடவுளுடைய இராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதில் எங்களுடைய வாழ்க்கையை செலவழிக்கிறோம்.—மத்தேயு 24:14.
நம்மில் அநீதிகளைக் கண்டு அதிகமாக எரிச்சலடைந்தவர்கள், கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் பரிபூரண நீதியை எதிர்பார்ப்பதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். இது ஏனென்றால் நாம் அனைவருமே அபூரணர்களாகவும் தவறு செய்யும் இயல்புடையவர்களாகவும் இருக்கிறோம். (ரோமர் 7:18-20) என்றபோதிலும், ஒரு அன்புள்ள, தங்களால் முடிந்தவரை சரியானதையே செய்ய முயற்சி செய்யும் ஒரு சர்வதேச சகோதரக் கூட்டுறவையே நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்று எங்களால் உறுதியாய் சொல்லமுடியும். எங்குமுள்ள கடவுளுடைய ஜனங்களோடுகூட நாங்களும், நீதி வாசமாயிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் நுழைவோம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்.—2 பேதுரு 3:13.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
நான் உடனடியாக என்னுடைய கைமுஷ்டியால் சுவற்றில் ஓங்கி அடிப்பதன் மூலம் எதிர்த்தேன்
[பக்கம் 21-ன் படம்]
நான் விமானப்படையில் சேர்ந்தபோது வெல்யாவுடன்
[பக்கம் 23-ன் படம்]
1996-ல் வெல்யாவுடன்