ஆப்பிரிக்க முரசுகள் உண்மையில் பேசுகின்றனவா?
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
காங்கோ ஆற்றங்கரையினூடாக 1876-லிருந்து 1877-வரையாக பயணம் செய்தபோது, ஹென்றி ஸ்டான்லி என்கிற ஆய்வுப்பயணி உள்ளூர் முரசொலியின் சிறப்புகளைச் சிந்தித்துப்பார்க்க கொஞ்சம் வாய்ப்பையே கொண்டிருந்தார். அவருக்கும் அவருடைய உடன் பயணிகளுக்கும் முரசொலியில் வந்த செய்திகள் சாதாரணமாக ஒரே வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லப்பட்டு விடலாம்: யுத்தம். அவர்கள் கேட்ட அந்த மெல்லிய முழக்கம் ஈட்டிகளைத் தரித்திருக்கும் முரட்டுத்தனமான வீரர்களால் அவர்கள் தாக்கப்படுவார்கள் என்பதைக் குறித்தது.
பிற்பாடு, அதிக சமாதானம் நிலவிய காலங்களில்தானே, இந்த முரசுகள் யுத்தத்திற்கான அழைப்பை மட்டுமல்ல, இன்னும் மிக அதிகத்தை உணர்த்தக்கூடும் என்று ஸ்டான்லி கற்றுக்கொண்டார். காங்கோவின் பகுதிகளில் வாழ்ந்த ஒரு இனத்தொகுதியை விவரித்து ஸ்டான்லி எழுதினார்: “[அவர்கள்] மின் சமிக்கைகளை இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை, இருப்பினும், அதைப் போலவே ஆற்றலுடன் செயல்படும் செய்தித்தொடர்பு முறையைக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாசமான இடங்களில் அடிக்கப்படும் அவர்களுடைய பெரிய முரசுகள், வாய்மொழியைப் போலவே முரசுகளின் பாஷைகளைப் புரிந்துகொள்கிறவர்களுக்கும் அப்பாஷையைத் தெளிவாக தெரிவிக்கிறது.” முரசடிப்பவர்கள் அனுப்பிய சமிக்கைகள் யுத்தத்திற்கான அழைப்பை அல்லது அபாயச்சங்கொலியையும்விட மிக அதிகத்தை குறித்தது; முரசுகள் திட்டமான செய்திகளையும் எடுத்துச் சென்றது என்று ஸ்டான்லி உணர்ந்து கொண்டார்.
இத்தகைய செய்திகள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்கும் ஒலிபரப்பப்படலாம். சில முரசொலிகள், விசேஷமாக இரவு நேரங்களில் ஒரு மிதக்கும் கட்டுமரத்தின்மீதோ அல்லது மலையுச்சியிலிருந்தோ முழக்கப்பட்டபோது, எட்டிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தூரம்வரை கேட்கப்பட்டது. தொலைதூரங்களிலிருந்த முரசடிப்பவர்கள் அந்த செய்திகளைக்கேட்டு, புரிந்துகொண்டு, பின்பு அவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரயாணி ஏ. பி. லாய்ட் 1899-ல் எழுதினார்: “160-கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து மற்றொன்றிற்கு, செய்திகள் இரண்டு மணிநேரத்திற்குள்ளாக அனுப்பப்படமுடியும் என்று எனக்கு சொல்லப்பட்டது, அதைவிட குறைவான நேரத்தில் இது சாத்தியமென நான் முழுவதும் நம்புகிறேன்.”
இருபதாம் நூற்றாண்டில் வெகுகாலம்வரையாக, முரசுகள் செய்திகளைக் எடுத்துச்செல்வதில் ஒரு முக்கியமான பங்கை வகித்து வந்தன. 1965-ல் பிரசுரிக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் இசைக்கருவிகள் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிட்டது: “பேசும் முரசுகள் தொலைபேசிகளாகவும் தந்திகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா விதமான செய்திகளும்—பிறப்புகள், மரணங்கள், திருமணங்கள்; விளையாட்டு நிகழ்ச்சிகள், நடனங்கள், விசேஷ சடங்குகள்; அரசாங்கச் செய்திகள் மற்றும் யுத்தத்தை அறிவிப்பதற்காக—அனுப்பப்படுகின்றன. சிலசமயங்களில் இந்த முரசு வெட்டிப்பேச்சு அல்லது ஜோக்குகளை எடுத்துச் சென்றன.”
ஆனால் இந்த முரசுகள் எப்படி தகவல்தொடர்பு கொண்டன? ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் தந்திக்கம்பிகளுக்குள்ளே மின் அலைகளின் மூலமாக செய்திகள் அனுப்பப்பட்டன. அகரவரிசையிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் அதற்குரிய சொந்த குறியீடு வழங்கப்படுகிறது, அதனால் வார்த்தைகளும் வாக்கியங்களும் ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கப்பட முடியும். இருப்பினும், மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள மக்களுக்கு எழுத்துவடிவ மொழி இருக்கவில்லை, அதனால் முரசுகள் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. ஆப்பிரிக்க முரசடிப்பவர்கள் வித்தியாசமான முறையைக் கையாண்டார்கள்.
முரசின் மொழி
முரசுகளின் தகவல்தொடர்பை புரிந்துகொள்வதற்கான திறவுகோல் ஆப்பிரிக்க மொழிகளைப் புரிந்துகொள்வதில்தானே உள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அநேக மொழிகள் முக்கியமாக இரட்டை தொனியைக் கொண்டுள்ளன—பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையுடைய ஒவ்வொரு அசையும் அடிப்படை தொனிகளான உயர்ந்த அல்லது தாழ்ந்த இவ்விரண்டில் ஒன்றைக் கொண்டிருக்கும். தொனி மாறினால் வார்த்தையும் மாறிவிடுகிறது. உதாரணமாக, ஜயரின் கலி பாஷையைச் சேர்ந்த லிசாகா என்ற வார்த்தையைக் கவனியுங்கள். இந்த மூன்று அசைகளும் குறைந்த தொனியில் உச்சரிக்கப்பட்டால், இந்த வார்த்தை “குட்டை அல்லது சதுப்பு நிலம்” என்று அர்த்தப்படுத்துகிறது; அசைகளின் தாழ்ந்த-தாழ்ந்த-உயர்ந்த உச்சரிப்பு “வாக்குறுதி” என்று அர்த்தப்படுத்துகிறது. தாழ்ந்த-உயர்ந்த-உயர்ந்த தொனியில் ஒலித்தால் “விஷத்தைக்” குறிக்கிறது.
செய்திகளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் ஆப்பிரிக்காவின் வெட்டுள்ள முரசுகளும்கூட இரண்டு தொனிகளை, உயர்ந்த மற்றும் தாழ்ந்ததைக் கொண்டிருக்கின்றன. அதைப்போலவே, மேற்பகுதி தோலாலான முரசுகளில் செய்தி அனுப்பப்படும்போது அவை ஜோடியாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முரசு உயர்ந்த தொனியைக் கொண்டதாகவும் மற்றொன்று தாழ்ந்த தொனியிலுமே. எனவே, ஒரு கைத்தேர்ந்த முரசடிப்பவர் மொழியின் பேச்சு நடையிலுள்ள வார்த்தைகளின் தொனி முறையை அப்படியே பின்பற்றுவதன் மூலம் செய்தித்தொடர்பு கொள்கிறார். ஆப்பிரிக்காவின் பேசும் முரசுகள் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது: “முரசுகளின் மொழி என்று அழைக்கப்படும் இது, அந்த இனத்தினருடைய மொழியின் பேச்சு நடையை போன்றே உள்ளது.”
உண்மைதான், இரட்டை தொனியுள்ள மொழி ஒரேவிதமான தொனிகளையும் அசைகளையும் உள்ள அநேக வார்த்தைகளை வழக்கமாக கொண்டிருக்கிறது. உதாரணமாக, கலி மொழியில் ஷாங்கோ (தகப்பன்) என்பதைப் போல 130 பெயர்ச்சொற்கள் ஒரேவிதமான (உயர்ந்த-உயர்ந்த) தொனிவகையைக் கொண்டுள்ளன. நியாங்கோ (தாய்) என்ற வார்த்தையின் அதே தொனியை (தாழ்ந்த-உயர்ந்த) 200-க்கும் மேற்பட்டவை கொண்டுள்ளன. குழப்பத்தை தவிர்ப்பதற்காக, முரசடிப்பவர்கள் அத்தகைய வார்த்தைகளின் சூழமைவைக் கொடுக்கிறார்கள்; என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கேட்பவர்கள் புரிந்துகொள்வதற்காக, அந்த வார்த்தையை உட்படுத்திய, போதுமான வேறுபாடுகளடங்கிய ஒரு சிறிய நன்கறிந்த சொற்றொடரை கொடுக்கிறார்கள்.
வெட்டுள்ள முரசுகளைக் கொண்டு பேசுதல்
பேசும் முரசுகளில் ஒரு வகை மரத்தாலான வெட்டுள்ள முரசுகளே. (பக்கம 23-ல் உள்ள படத்தைப் பாருங்கள்.) இத்தகைய முரசுகள் மரத்தின் ஒரு பகுதியை குழிவாக செதுக்குவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. அதன் இரு முனைகளிலுமே தோலாலான தலைபாகம் இல்லை. படத்தில் உள்ள இந்த முரசு, இரண்டு நீள்வாட்டு வெட்டுகளைக் கொண்டிருந்தாலும், அநேகமுரசுகள் ஒரே ஒரு பெரிய நீள்வாட்டு வெட்டை மட்டுமே கொண்டுள்ளன. அந்த வெட்டின் ஒரு முனையில் அடித்தால் உயர்ந்த தொனி எழும்பும்; அதன் மற்றொரு முனையில் அடித்தால் தாழ்ந்த தொனி எழும்பும். வெட்டுள்ள முரசுகள் பொதுவாக சுமார் ஒரு மீட்டர் நீளமாக இருக்கும், இருப்பினும் அவை அரை மீட்டர் அளவுக்கு சிறியதாகவும் இரண்டு மீட்டர் அளவுக்கு பெரியதாகவும் இருக்கலாம். அதன் குறுக்களவு 20 சென்டிமீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரையாக வேறுபடும்.
வெட்டுள்ள முரசுகள் வெறுமனே ஒரு கிராமத்திலிருந்து மற்றொன்றிற்கு செய்தி அனுப்புவதைக் காட்டிலும் அதிகத்துக்கு பயன்படுத்தப்பட்டது. காமரூனிய எழுத்தாசிரியர் பிரான்ஸஸ் பெபே, குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்த முரசுகளின் பங்கைக் குறித்து விளக்கியுள்ளார். இரண்டு எதிரணிகள் ஒரு கிராமத்தின் சதுக்கத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கையில், அந்த வீரர்கள் நீள்வட்டத்தில் வெட்டப்பட்ட முரசின் சந்தத்திற்கிசைய நடனமாடும்போது, அந்த முரசுகள் அவர்களுடைய புகழைப் பாடின. ஒரு பக்கத்திலுள்ள முரசு இவ்விதமாக அறிவிக்கக்கூடும்: “வீரனே, உனக்கு இணையானவனை நீ எப்போதாவது சந்தித்திருக்கிறாயா? யார் உன்னை எதிர்க்க முடியும், யாரென்று சொல்லு? இந்த பாவமான ஜந்துக்கள் . . . தாங்கள் வீரனென்று அழைக்கும் ஒரு பாவமான [ஆத்துமா]வைக் கொண்டு உன்னை வீழ்த்தமுடியுமென்று நினைக்கிறார்கள் . . . , ஆனால் ஒருவராலும் உன்னை எப்பொழுதுமே வீழ்த்த முடியாது.” எதிரணியிலுள்ள இசைக்கலைஞர்கள் இத்தகைய விளையாட்டுத்தனமான கேலியை புரிந்துகொண்டு விரைவாக பழமொழியான ஒரு பதிலை முரசடிப்பார்கள்: “குட்டிக் குரங்கு . . . குட்டிக் குரங்கு . . . மரத்துமேல ஏற விரும்புறான் ஆனா அவன் விழுந்துடுவான்னு எல்லாரும் நெனைக்கிறாங்க. ஆனா இந்த குட்டிக்குரங்கு ரொம்ப பிடிவாதமா இருக்கு, அவன் மரத்திலிருந்து விழமாட்டான், அவன் அதோட உச்சிக்கு ஏறிடுவான், இந்த குட்டிக் குரங்கு.” இம்முரசுகள் இந்த குத்துச்சண்டைப் போட்டி முழுவதுமாக தொடர்ந்து மகிழ்வளித்துக்கொண்டு இருந்தன.
எல்லாவற்றையும்விட சிறப்பாக பேசும் முரசுகள்
காற்றழுத்தம் கொண்ட முரசுகள் ஒருபடி மேலே செல்கின்றன. வலது பக்கத்திலுள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் முரசு டூன்டூன் என்று அழைக்கப்படுகிறது; இது நைஜீரியாவிலிருக்கும் பிரபலமான யொருபாக்களின் பேசும் முரசு. மணல்கடிகாரத்தைப் போல உருவம்கொண்டதாக, இம்முரசு இருமுனைகளிலும் மெல்லிய, பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலாலான தலைபாகத்தைக் கொண்டுள்ளது. இந்த தலைபாகங்கள் தோல் வார்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தோல் வார்கள் அழுத்தப்படும்போது, முரசின் தலைபாகத்திலுள்ள அழுத்தம் அதிகரித்து, அதனால் எட்டாவது ஸ்வரம் அல்லது அதற்கும் அதிகமான வேறுபட்ட ஸ்வரங்களைப் பிறப்பிக்க முடியும். வளைந்த குச்சியைப் பயன்படுத்தி ஒலியின் தொனியையும் சந்தத்தையும் மாற்றியமைப்பதன்மூலம், ஒரு கைதேர்ந்த முரசடிப்பவர் மனித குரலின் ஏற்ற இறக்கத்தை அப்படியே பிரதிபலிக்க முடியும். முரசடிப்பவர்கள் இவ்விதமாக முரசின் மொழியைப் புரிந்துகொண்டு அவற்றை வாசிக்கக்கூடிய மற்ற முரசடிப்பவர்களோடு “பேச்சுத்தொடர்பு” கொள்ள முடியும்.
மே 1976-ல் முரசடிப்பவர்கள் முரசுகளைக் கொண்டு பேச்சுத்தொடர்பு கொள்ளும் குறிப்பிடத்தக்க திறமை, ஒரு யொருபா தலைவனின் அவைக்கலைஞர்களால் நடத்திக்காட்டப்பட்டது. பார்வையாளரிலிருந்து முன்வந்த சிலர் வரிசையாக செய்துகாட்டப்படவேண்டியவற்றை தலைமை முரசடிப்பவனிடம் மெதுவாக சொல்ல அவன் அவற்றை, அந்த அவையிலிருந்து வெகு தொலைவிலிருந்த மற்றொரு கலைஞனுக்கு முரசடித்து தெரிவித்தான். முரசடிப்பதிலிருந்து வந்த செய்திக்கு இசைவாக, அந்த கலைஞன் ஒரு இடத்திலிருந்து மற்றொன்றிற்கு நகர்ந்து சென்று, என்னென்ன செயல்கள் செய்யும்படி கேட்கப்பட்டதோ அவற்றை செய்து காண்பித்தான்.
முரசடிப்பதன் மூலம் செய்தி அனுப்பக் கற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. எழுத்தாளர் ஐ. லாவ்யி கவனித்தார்: “யொருபா வகை முரசடித்தல் சிக்கலானதாகவும் அநேக ஆண்டுகள் படிப்பதைத் தேவைப்படுத்தும் கடினமான கலையாகவும் உள்ளது. முரசடிப்பவர் அதிகளவு கைத்திறமையும் ஒத்திசைவுநய உணர்வையும் மட்டுமல்லாமல், அதோடுகூட கவிதையையும், முரசடிக்கப்படும் அவ்வூரின் சரித்திரத்தையும் பற்றி நல்ல ஞாபகசக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.”
சமீப காலங்களில் இந்த ஆப்பிரிக்க முரசுகள் முன்பு பேசியதைப் போல அவ்வளவு அதிகம் பேசுவதில்லை, இருப்பினும் இசையில் அவை முக்கியமான பங்கை இன்னும் தக்கவைத்து வருகின்றன. ஆப்பிரிக்காவின் இசைக்கருவிகள் என்ற புத்தகம் சொல்கிறது: “செய்திகளை முரசுகளின் வாயிலாக வாசிக்க கற்றுக்கொள்வது மிகக் கடினம்; அதனால், இந்தக் கலை ஆப்பிரிக்காவில் விரைவாக மறைந்து வருகிறது.” தகவல் தொடர்பு சாதன நிபுணர் ராபர்ட் நிகல்ஸ் கூடுதலாக சொல்கிறார்: “கடந்த காலங்களின் மிகப்பெரிய முரசுகள், எவற்றின் தொனி மைல்கணக்கில் பிரயாணம் செய்ததோ, எவற்றின் ஒரே செயல் செய்திகளை அனுப்புவதோ, அவை அழிவிற்காக தீர்வுசெய்யப்பட்டுவிட்டன.” இன்றைய நாட்களில் அநேகர் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையே வசதியாகக் காண்கின்றனர்.
[பக்கம் 23-ன் படம்]
வெட்டுள்ள முரசு
[பக்கம் 23-ன் படம்]
யொருபாக்களின் பேசும் முரசு