கடூரமான வார்த்தைகள், நசுக்கப்படும் உணர்ச்சிகள்
“ஏய் எருமைமாட்டு முண்டம்!” a ஜப்பானில் உள்ள ஒரு பெண்மணிக்கு இந்த வார்த்தைகள் நன்றாக ஞாபகத்தில் உள்ளன—அவள் சிறு பிள்ளையாக இருந்தபோது இப்படித்தான் அவளுக்கு அடிக்கடி திட்டுவிழுந்தது. யாரிடமிருந்து? பள்ளிப் பிள்ளைகளிடமிருந்தா? உடன்பிறந்தவர்களிடமிருந்தா? இல்லை. அவளுடைய பெற்றோரிடமிருந்து. அவள் நினைவுகூருகிறாள்: “இவ்வாறு இழிவாக திட்டியது என்னை ஆழமாக புண்படுத்தியதால் நான் அப்படியே நொந்துபோய் விடுவேன்.”
ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒருவர், தான் சிறுவனாக இருக்கையில் தன்னுடைய அப்பா வீட்டிற்கு வரும்போதெல்லாம் எவ்வாறு பயமாகவும் கவலையாகவும் உணர்ந்தார் என்பதை நினைவுகூருகிறார். “அப்பாவோட கார் வீட்டை நெருங்கும் சத்தம் இன்றும்கூட என் காதில் விழுகிறது. அதை கேட்டமாத்திரத்தில் வெடவெடவென்று நான் நடுங்கிய நடுக்கம் இன்றைக்கும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. என் சின்ன தங்கச்சி ஓடி மறைஞ்சுக்குவா. என்னோட அப்பா ஒரு பரிபூரணவாதி. நாங்க செய்ய வேண்டிய வேலைகளை சரியா செய்யலைனு ஓயாம எங்களை அதட்டிக் கொண்டே இருப்பார்” என்று அவர் நினைவுபடுத்திப் பார்க்கிறார்.
இந்த நபரின் அக்காள் தொடர்ந்து சொல்கிறாள்: “என் பெற்றோரில் ஒருவர்கூட எப்போதாவது எங்களை கட்டியணைத்ததையோ, முத்தமிட்டதையோ, அல்லது ‘நான் உன்னை நேசிக்கிறேன்,’ ‘உன்னைக் குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது’ என்றெல்லாம் சொன்னதாகவோ எனக்கு ஒருபோதும் ஞாபகம் இல்லை. ஒரு பிள்ளையைப் பொருத்தமட்டில்—அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்—‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்பதை கேட்காமலிருப்பது ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்பதைக் கேட்பதற்கு சமமாக உள்ளது.”
பிள்ளைகளாக இவர்கள் அனுபவித்த துன்பங்கள் சாதாரணமானதுதான் என்று சிலர் சொல்லக்கூடும். பிள்ளைகள் கடுமையான, தயவற்ற வார்த்தைகளை கேட்பதும், தாழ்வாக நடத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது என்பது உண்மைதான். இப்படிப்பட்ட விஷயம் செய்தித்தாளின் அதிர்ச்சியூட்டும் தலைப்புச் செய்திகளிலோ, உணர்ச்சிமிகுந்த சின்னத்திரைக் காட்சிகளிலோ காட்டப்படுவதில்லை. இந்த பாதிப்பு வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் இந்த விதமாக தங்களுடைய பிள்ளைகளை கடுமையாக நடத்தினால், அதன் விளைவுகள் எப்படியிருந்தாலும் நாசப்படுத்துவதாகவும்—வாழ்நாள் முழுவதும் நீடிப்பதாகவும் இருக்கக்கூடும்.
பெற்றோர் பயன்படுத்தும் வளர்ப்பு முறைகளை ஆராய, ஐந்து வயது பிள்ளைகள் தொகுதியிடம் 1990-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வைக் கவனியுங்கள். இது 1951-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் தொடர்ச்சியாக இருந்தது. இப்போது நடுத்தர வயதிலிருக்கும் இந்தப் பிள்ளைகளில் அநேகரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் வளர்க்கப்பட்ட முறை ஏற்படுத்தியிருக்கும் நீண்ட கால விளைவுகளின் உட்பார்வையை பெற இந்த ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். தங்களுடைய வாழ்க்கையின் பிற்காலங்களில் மிகவும் கஷ்டப்படுகிறவர்களாகவும், உணர்ச்சிசம்பந்தமான நலத்தை இழந்தவர்களாகவும், திருமண வாழ்க்கையில், நட்புறவுகளில், இன்னும் வேலைசெய்யுமிடங்களிலும்கூட கஷ்டத்தை எதிர்ப்படுகிறவர்களாகவும் ஆன பிள்ளைகள், ஏழைப் பெற்றோர்களுடைய பிள்ளைகளாக அல்லது பணக்காரப் பெற்றோர்களுடைய பிள்ளைகளாக அல்லது வெளிப்படையாகவே பிரச்சினைகளிலிருந்த பெற்றோர்களுடைய பிள்ளைகளாக இருந்தவர்கள்தான் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் பிள்ளைகளோடு நெருக்கமான உறவுக்குள் இல்லாத, ஒட்டாத, சிறிதளவான அல்லது கொஞ்சம்கூட பாசத்தைக் காட்டாத பெற்றோர்களின் பிள்ளைகளாக அவர்கள் இருந்தனர் என்று அந்தப் புதிய ஆய்வு முடிவு செய்தது.
இந்தக் கண்டுபிடிப்பு, கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஓர் உண்மையின் வெறும் ஒரு மங்கலான பிரதிபலிப்பே: “பிதாக்களே உங்கள் பிள்ளைகள் மனமுடைந்துபோகாதபடி அவர்களைத் துயரப்படுத்தாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21, NW) பெற்றோர்கள் வார்த்தைகளாலும் உணர்ச்சிரீதியிலும் புண்படுத்தும்போது அது பிள்ளைகளை நிச்சயமாகவே எரிச்சலூட்டி, அதன் விளைவாக அவர்கள் உண்மையில் மனந்தளர்ந்து போகும்படி செய்விக்கும்.
சோகமாக வளர்ந்து வருதல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறபடி, குழந்தைப் பருவ மனச்சோர்வு என்றெல்லாம் இல்லை என்று மருத்துவர்கள் சிறிது காலத்துக்கு முன்பு வரையாக நினைத்திருந்தனர். ஆனால் காலமும் அனுபவ அறிவும் வேறுவிதமாக நிரூபித்திருக்கிறது. இன்று, குழந்தைப் பருவ மனச்சோர்வு ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றும் கொஞ்சம்கூட அபூர்வமானதாக இல்லை என்றும் அப்புத்தக ஆசிரியர்கள் உறுதியாக கூறுகின்றனர். அதற்கான காரணங்களில் புறக்கணிக்கப்படுதலும் பெற்றோர்களால் தவறாக நடத்தப்படுவதும் உள்ளன. அந்த எழுத்தாளர்கள் விளக்குகின்றனர்: “சிலருடைய விஷயத்தில் பெற்றோர், பிள்ளையை சரமாரியாக குறை சொல்லிக் கொண்டும் இழிவுபடுத்திக் கொண்டுமிருக்கின்றனர். மற்றவர்களுடைய விஷயங்களில் வெறுமனே பெற்றோர்-பிள்ளை உறவில் ஒரு பிணைப்பே இல்லாமல் இருக்கிறது: பிள்ளையின் மீதான பெற்றோரின் அன்பு ஒருபோதும் வெளிப்படுத்தப்படுகிறதில்லை. . . . இத்தகைய பெற்றோருடைய பிள்ளைகளின்மீது குறிப்பாக வரும் பாதிப்பு பயங்கரமாயிருக்கிறது. ஏனெனில் ஒரு செடிக்கு சூரிய ஒளியும் தண்ணீரும் எப்படி அவசியம் தேவையோ அதைப்போல ஒரு பிள்ளைக்கு—அல்லது வளர்ந்த ஒருவருக்கும்—அன்பு தேவை.”
பெற்றோரின் அன்பு, தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டால் அதன்மூலமாக பிள்ளைகள் ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொள்கின்றனர்: தாங்கள் நேசிக்கப்படுகிறார்கள்; தங்களுக்கும் மதிப்புள்ளது. அநேகர் இந்தக் கருத்தை ஒருவிதமான கர்வமென, மற்றவர்களைவிட தன்னை நேசிக்கும் தன்மையென தவறாக நினைக்கின்றனர். ஆனால் இந்த சூழமைவில் அவ்விதமாக அர்த்தப்படுத்தப்படவில்லை. இந்தப் பொருளின் பேரில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தில் இவ்விதமாக சொல்கிறார்: “உங்கள் பிள்ளை, தன்னைக் குறித்து எப்படிக் கருதுகிறானோ, அது அவன் எந்த வகையான நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறான், மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்கிறான், எப்படிப்பட்ட நபரைத் திருமணம் செய்கிறான், எந்தளவுக்கு பிரயோஜனமாக இருப்பான் என்பவற்றில் செல்வாக்கு செலுத்துகிறது.” ஒரு நபர் தன்னைப் பற்றி சமநிலையான, தான் என்ற எண்ணமற்ற நோக்குநிலையைக் கொண்டிருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை இரண்டாம் மிகப்பெரிய கற்பனையை பட்டியலிடுகையில் பைபிள் அங்கீகரிக்கிறது: ‘உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.’—மத்தேயு 22:38, 39.
ஒரு பிள்ளையின் சுய மதிப்பைப் போன்று அதிக முக்கியமானதும், எளிதில் உடைகிறதுமான ஒன்றை ஒரு சாதாரணமான பெற்றோர் தகர்க்க விரும்புவார்கள் என்பது சிந்திப்பதற்கே கடினமான ஒன்றாக உள்ளது. அப்படியென்றால் அது ஏன் அடிக்கடி ஏற்படுகிறது? அது எவ்விதமாக தடுக்கப்படலாம்?
[அடிக்குறிப்பு]
a ஜப்பானிய மொழியில் நொரோமா பாகா!