எல்லாருக்கும் உணவு—வெறும் கனவா?
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
பட்டினியிலிருந்தும் ஊட்டச்சத்துக் குறைவிலிருந்தும் விடுதலையாகி இருப்பதற்கான உரிமை ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் இருக்கிறது” என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் (FAO) நடத்தப்பட்ட உலக உணவு மாநாடு, 1974-ல் அறிவித்தது. “இன்னும் ஒரு பத்தாண்டிற்குள்” உலகத்திலிருந்து பட்டினியை முற்றிலும் ஒழித்து விடுவதற்கான ஓர் அறைகூவல் விடப்பட்டது.
என்றபோதிலும், சென்ற வருடத்தின் கடைசியில் 173 தேசங்களின் பிரதிநிதிகள் ரோமிலுள்ள FAO உலக தலைமையகத்தில், ஐந்து நாள் உலக உணவு உச்சிமாநாட்டிற்காக கூடிவந்திருந்தபோது, “என்ன தவறு நடந்துவிட்டது?” என்ற கேள்வியை சிந்திப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. எல்லாருக்கும் உணவு வழங்கமுடியாமல் போனது மட்டுமல்ல, ஆனால் இப்போது, இருபது ஆண்டுகளுக்கு மேலான பிறகு, நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.
உணவு, ஜனத்தொகை, ஏழ்மை ஆகிய மிகப்பெரிய பிரச்சினைகள் மிகவும் அவசரமானவை. அந்த உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் “அநேக நாடுகள் மற்றும் பகுதிகளின் சமூக ஸ்திரத்தன்மை, உலக சமாதானத்தை கெடுக்கும் அளவிற்குக்கூட, மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம்.” மற்றொரு பார்வையாளர் இன்னும் குறிப்பாக இவ்வாறு சொன்னார்: “நாகரிகம் மற்றும் தேசிய பண்பாடுகள் அழிந்துபோவதை நாம் காண்போம்.”
FAO-வின் பொது-இயக்குநரான ஷாக் ஜீஃப் சொல்கிறபடி “இன்று 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பது இல்லை; அவர்களில் 20 கோடி பிள்ளைகளே.” இன்றைய உலக ஜனத்தொகையான 580 கோடி, 2025-ற்குள் 830 கோடியாக உயர்ந்துவிடும்; இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி வளரும் நாடுகளில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. “உயிர்வாழ மற்றும் மதிப்புபெறுவதற்கான தங்களுடைய மறுக்கப்படமுடியாத உரிமையை இழந்திருக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாத அளவு அதிகமாய் இருக்கிறது. பாழ்க்கடிக்கப்படும் நிலம், அழிக்கப்படும் காடுகள், அதிகமதிகமாக காலியாகிக்கொண்டே வரும் மீன்பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் குமுறல், பட்டினியாயிருப்பவர்களின் ஓலங்களோடு சேர்ந்திருக்கின்றன” என்று ஜீஃப் வருத்தப்படுகிறார்.
என்ன தீர்வு முன்மொழியப்பட்டிருக்கிறது? “துணிச்சலான நடவடிக்கை” எடுப்பதிலும் உணவு-பற்றாக்குறையுள்ள நாடுகளுக்கு “உணவு பாதுகாப்பு” அளிப்பதிலும், அதோடு அவர்கள் தங்களுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள திறமை, முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை அளிப்பதிலும்தான் விடையிருக்கிறது என்று ஜீஃப் கூறுகிறார்.
“உணவு பாதுகாப்பு”—ஏன் அடையமுடியாததாக இருக்கிறது?
அந்த உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம் இவ்வாறு சொல்கிறது: “ஒரு சுறுசுறுப்புள்ள, சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கு, தங்கள் அன்றாட உணவுத்தேவைகளை பூர்த்திசெய்வதாகவும், விரும்பப்படுவதாகவும் இருக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு, எல்லா மக்களுக்கும், எல்லா சமயத்திலும், சரீரப்பிரகாரமாகவும் பொருளாதாரவிதத்திலும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்போதுதான் உணவு பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லமுடியும்.”
உணவு பாதுகாப்பு எவ்வாறு சீர்குலைக்கப்பட முடியும் என்பதற்கு ஜயர் அகதிகள் நெருக்கடி ஒரு உதாரணமாக இருந்தது. பத்துலட்சம் ருவாண்டா அகதிகள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான உணவை ஐ.நா. ஏஜென்ஸிகள் கொண்டிருந்தன. ஆனால், அவற்றை எடுத்துச் சென்று விநியோகிப்பதற்கு அரசியல் ஒப்புதல்களும், உள்ளூர் அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் தேவையாக இருந்தன. அகதி முகாம்கள் உள்ளூர் ராணுவ அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்களின் ஒப்புதலும்கூட தேவைப்பட்டன. உணவு இருக்கும்போதும்கூட, சர்வதேச சமூகத்தால் பட்டினியாயிருப்பவருக்கு உணவளிப்பது எவ்வளவு கடினம் என்பதை ஜயரிலுள்ள அவசர நிலைமை மறுபடியும் நிரூபிக்கிறது. ஒரு பார்வையாளர் கூறினார்: “உணவைப் பகிர்ந்து கொடுப்பதற்கு முன் அநேக அமைப்புகளையும் மற்றவர்களையும் கலந்தாலோசித்து, வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.”
ஐ.மா. வேளாண்மைத் துறை வெளியிட்ட ஒரு ஆவணத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டபடி, உணவு பாதுகாப்பானது அநேக அடிப்படை காரணங்களால் மோசமான விதமாக பாதிக்கப்பட முடியும். இயற்கை சேதங்கள் இல்லாமல், இவை யுத்தம், உள்நாட்டுக் கலவரம், பிரயோஜனமற்ற தேசியக் கொள்கைகள், குறைவான ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும், சுற்றுச்சூழல் கெடுக்கப்படுதல், வறுமை, ஜனத்தொகை பெருக்கம், ஆண், பெண் பாகுபாடு, ஆரோக்கியம் ஆகியவற்றையும் உட்படுத்தும்.
சில முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளில் 1970-களிலிருந்து, உட்கொள்ளப்படும் உணவின் அளவை சுட்டிக்காட்டுவதாக இருக்கும் உணவினால் வழங்கப்படும் சக்தியின் சராசரியானது ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 2,140 கலோரிகளிலிருந்து 2,520-தாக உயர்ந்திருக்கிறது. ஆனால் FAO-வின்படி, 2030-ற்குள் ஜனத்தொகை பலநூறு கோடிகளாக அதிகரிக்கக் கூடுமாகையால், “இப்போது கிடைக்கும் உணவு அளவை வெறுமனே காத்துக்கொள்வதற்குக்கூட, வேகமான மற்றும் தொடர்ச்சியான உணவு உற்பத்தியை, நாமனைவரும் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களை சேதப்படுத்தாமலேயே 75 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும்.” ஆகவே, பட்டினியாயிருக்கும் ஜனங்களுக்கு உணவளிப்பதற்கான வேலையானது அதிக நம்பிக்கையற்றதாக இருக்கிறது.
‘நமக்குத் தேவை செயல்களே, அதிகமான உச்சிமாநாடுகள் அல்ல’
உலக உணவு உச்சிமாநாட்டின் நடவடிக்கைகள் பற்றியும் அது ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் பற்றியும் அநேக விமர்சனங்கள் செய்யப்பட்டன. ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜனங்களின் இப்போதைய எண்ணிக்கையை பாதியாக குறைப்பதற்கான “குறுகிய நோக்கமுள்ள” தீர்மானத்தை “அவமானமானது” என்று ஒரு லத்தீன்-அமெரிக்க பிரதிநிதி குற்றம் சாட்டினார். உச்சிமாநாட்டால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு வித்தியாசப்பட்ட அர்த்தங்கூறுதல்களை பதினைந்து தேசங்கள் வெளிப்படுத்தின. ஒரு சாதாரண அறிக்கையையும் நடவடிக்கைத் திட்டத்தையும் தயாரிப்பதற்கே “இரண்டுவருட போராட்டமும் பேச்சுவார்த்தைகளும் தேவையாய் இருந்தன. ஏற்கெனவே ரணமாய் இருந்த காயங்கள் . . . மீண்டும் புண்ணாகாதபடிக்கு ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு காற்புள்ளியும் கவனமாக பரிசீலிக்கப்பட்டன” என்று இத்தாலிய செய்தித்தாளான லா ரேப்பூப்ளிக்கா கூறியது.
உச்சிமாநாட்டின் ஆவணங்களை தயாரிக்க உதவிய அநேகர் விளைவுகளைக் கண்டு வருத்தமடைந்தனர். “அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்பதைப் பற்றி நாங்கள் அதிகமாக சந்தேகிக்கிறோம்” என்று ஒருவர் சொன்னார். உணவைப் பெறுவது “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமை” என்று வரையறுக்கப்பட வேண்டுமா என்பதே சர்ச்சைக்குரிய பொருளாக இருந்தது; ஏனென்றால், “உரிமை”யானது நீதிமன்றத்தின் மூலம் பாதுகாக்கப்படலாம். “உதவி செய்யும்படி தாங்கள் வற்புறுத்தப்படலாம் என பணக்கார நாடுகள் பயப்பட்டன. இதன் காரணமாகவே அறிக்கையின் உரையை வலிமையிழக்கும்படி செய்ய அவர்கள் முயற்சித்தனர்” என கனடா நாட்டவர் ஒருவர் கூறினார்.
ஐ.நா.-வால் நடத்தப்பட்ட உச்சிமாநாடுகளில் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளே நடந்துகொண்டிருந்ததால், ஒரு ஐரோப்பிய அரசாங்க மந்திரி, “[1994-ல் ஜனத்தொகை மற்றும் முன்னேற்றம் பற்றிய] கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவ்வளவு அதிகம் தீர்மானித்துவிட்ட பிறகும், ஒவ்வொரு மாநாட்டிலும் நாம் மறுபடியும் மறுபடியும் அதே காரியங்களையே கலந்தாலோசித்துக் கொண்டிருப்பவர்களாக காணப்படுகிறோம்” என்று கூறினார். “நம் உடன் மானிடர்களின் நன்மைக்காக நடவடிக்கைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதே நம்முடைய முக்கிய நோக்கமாக இருக்கவேண்டுமேயல்லாமல், அதிகமான உச்சிமாநாடுகளை ஏற்பாடு செய்வது அல்ல” என்று அவர் பரிந்துரைத்தார்.
தங்களால் செலவு செய்யமுடியாத சில நாடுகளுக்கு இந்த உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதே அதிக செலவுபிடிக்கும் ஒன்றாகும் என்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர். ரோமில் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த 14 பிரதிநிதிகளையும் 2 மந்திரிகளையும் ஒரு சிறிய ஆப்பிரிக்க தேசம் அனுப்பியிருந்தது. ஒருநபருக்கு சராசரி வருட வருமானம் 3,300 டாலருக்கும் குறைவாக இருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியுடைய மனைவி, ரோமின் நவநாகரிக, முக்கிய வியாபார பிராந்தியத்தில் 23,000 டாலர் அனாவசிய செலவழிப்பதில் ஈடுபட்டிருந்தார் என்று கோரீரெ டெல்லா செரா என்ற இத்தாலிய செய்தித்தாள் அறிக்கை செய்தது.
உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைத் திட்டம் வெற்றியடையும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணமிருக்கிறதா? ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு பதிலளிக்கிறார்: “இப்போது நம்மால் செய்யமுடிந்ததெல்லாம் அரசாங்கங்கள் அதை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு, அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது மட்டுமே. அவர்கள் செய்வார்களா? . . . சரித்திரமானது நம்பிக்கைகொள்வதற்கு காரணம் கொடுப்பதில்லை.” 1992-ல் ரியோ டி ஜனீரோவில் நடந்த புவி உச்சிமாநாட்டில் ஒவ்வொரு நாடும் தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்ற உதவிக்கான நிதியை 0.7 சதவீதத்துக்கு உயர்த்த ஒப்புக்கொண்டது. ஆனால், “அந்த கட்டாயமில்லாத இலக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே அடைந்திருக்கின்றன” என்ற ஏமாற்றமளிக்கும் உண்மையையும் அதே கருத்துரையாளர் சுட்டிக்காட்டினார்.
பட்டினியாயிருப்போருக்கு யார் உணவளிப்பார்?
மனிதனுடைய எல்லா நல்ல நோக்கங்களுக்கு மத்தியிலும், “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” சரித்திரம் போதிய அளவு நிரூபித்திருக்கிறது. (எரேமியா 10:23) ஆகவே மனிதர்கள் தாங்களாகவே எல்லாருக்கும் உணவளிப்பார்கள் என்பது சாத்தியமற்றது. பேராசை, தவறான நிர்வாகம், தான் என்ற அகம்பாவம் ஆகியவை மனிதவர்க்கத்தை மலை முகட்டிற்கு வழிநடத்தியிருக்கின்றன. FAO-வின் பொது-இயக்குநரான ஜீஃப் கூறினார்: “முடிவான ஆராய்ச்சியின்படி தேவை என்னவென்றால் இருதயங்கள், மனங்கள் மற்றும் விருப்பங்களில் மாற்றமே.”
அதை கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே செய்யமுடியும். உண்மையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யெகோவா தம்முடைய ஜனங்களைப்பற்றி இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.”—எரேமியா 31:33.
மனிதனுடைய முதல் தோட்டவீட்டை யெகோவா தயார்படுத்தியபோது, அவர் மனிதனுக்கு உணவாக “பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்” கொடுத்தார். (ஆதியாகமம் 1:29) அந்த ஏற்பாடு ஏராளமானதாகவும், ஊட்டச்சத்துள்ளதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருந்தது. தங்கள் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய மனிதவர்க்கத்திற்கு அதுவே தேவையாக இருந்தது.
கடவுளுடைய நோக்கம் மாறிவிடவில்லை. (ஏசாயா 55:10, 11) கிறிஸ்துவின் மூலமான தம்முடைய ராஜ்யத்தின் மூலம் மனிதவர்க்கத்தின் எல்லா தேவைகளையும் தாம் மாத்திரமே பூர்த்திசெய்வார் என்று உறுதியளித்திருக்கிறார். எல்லாருக்கும் உணவளித்து, ஏழ்மையை நீக்கிவிட்டு, இயற்கை சேதங்களை கட்டுப்படுத்தி, சண்டைகளை ஒழித்துவிடுவார். (சங்கீதம் 46:8, 9; ஏசாயா 11:9; ஒப்பிடுக: மாற்கு 4:37-41; 6:37-44.) அந்த சமயத்தில் “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” “பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்.”—சங்கீதம் 67:6; 72:16.
[படத்திற்கான நன்றி]
Dorothea Lange, FSA Collection, Library of Congress