பிள்ளைகளுக்கு உதவ தீர்மானித்திருக்கின்றனர்
வளர்ந்துவரும் நாடுகளில் நேற்று ஐந்து வயதுக்குக் கீழிருக்கிற 40,000 பிள்ளைகள் இறந்தனர். இன்று இன்னொரு 40,000 பேர் இறந்துவிடுவர். நாளை மற்றொரு 40,000. இந்த இறப்புகளில் பெரும்பாலானவைத் தவிர்க்கப்படக்கூடும்.
வருடக்கணக்காக இப்பேர்ப்பட்ட நிலைமை “மெளனமான நெருக்கடிநிலை” அல்லது “நிசப்த அழிவு” என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்படியென்றால் உலகிலுள்ள ஆட்கள் இதை அதிகமாக கவனத்திற்குள் எடுத்துக்கொள்வது கிடையாது என்று இது பொருள்கொள்கிறது. “ஒவ்வொரு நாளும் 40,000 புள்ளியிட்ட ஆந்தைகள் சாகிறதென்றால், அது மக்களின் பெரும் கோபாவேசத்தை எழுப்பும். ஆனால் 40,000 பிள்ளைகள் இறக்கிறார்களென்றால், அதைக் கவனியாது விட்டுவிடுகின்றனர்,” என்று நியூ யார்க்கில், 1990-ல், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற பிள்ளைகளுக்கான ஐ.நா. உலகப் பெருந்தலைவர்களின் கூட்டு ஆலோசனை கூட்டத்தில், ஐ.மா. சார்பாகப் பேசுபவர், பீட்டர் டெலி புலம்பினார்.
அந்த ஆலோசனை கூட்டம் முடிவில் அதை எல்லாம் மாற்றிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். மாநிலத்தின் 71 தலைவர்கள் உட்பட உயர்பதவியிலிருக்கும் அதிகாரிகள், 159 நாடுகளிலிருந்து ஆஜரானார்கள். மொத்தமாக அவர்கள் உலக மக்கள்தொகையின் 99 சதவீதத்தினரை பிரதிநிதித்துவம் செய்தார்கள். மனநிலையை மைக்கேல் கார்பச்சேவ் தொகுத்துரைத்து, “ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பிள்ளைகள் இறக்கிறார்கள் என்ற காரியத்தை மனிதகுலம் இனி சகித்துக்கொள்ள முடியாது,” என்று கூறினார்.
அந்த ஆலோசனை கூட்டம் நடப்பதற்கு முன்பு இருந்த நாட்களில், உலகம் அதன் ஆதரவை கொடுத்தது. தேசீய சமுதாய கூட்டங்களும் கருத்தரங்குகளும் பிரச்னைத் தீர்க்கும் குழுக்களும் பட்டிமன்றங்களும் உண்மையிலேயே பிள்ளைகளுடைய இக்கட்டான நிலையின்பேரில் கவனத்தை ஊன்றவைத்தன. எண்பது நாடுகளில் உள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரச்னைகளும் ஆபத்துகளும் முன்னிருந்தபோதிலுங்கூட, உலகம் ஒரு மிகச்சிறந்த இடமாக மாற்றப்படலாம் என்ற தங்களுடைய நம்பிக்கையை மெழுகுவர்த்திகளை கொளுத்திவைத்து அடையாளப்படுத்தினர்.
ஐக்கிய நாட்டுச் சங்கத்துடைய பிள்ளைகளின் நிதி, (UNICEF) “உலகத்தைச் சுற்றிலுமுள்ள பிள்ளைகளுக்கு எப்போதும் இருந்திராத பெருஞ்சிறப்புவாய்ந்த நாளாக இருக்கக்கூடும்” என்று அந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதி நாளிற்கு வரவேற்பு அளித்தது. ஏன் அப்பேர்ப்பட்ட கிளர்ச்சி? ஏனெனில் பூமியெங்குமுள்ள இளம் பிள்ளைகளின் துன்பங்களையும் இறப்பையும் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் ஒரு திட்டவட்டமான “செயல்படவேண்டிய திட்ட”த்தை ஏற்றிருக்கின்றனர்.
மாநாடு நடத்தி அரசியல் செய்யும் தந்திரம் நிறைவேற்ற முடியாத வாக்குகளையே பதிவில் அதிகம் கொண்டிருக்கிறது என்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டியதே. இருப்பினும், பனிப் போர் முற்றுபெற்றதன் காரணமாக அநேகர் உண்மைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் அளிக்கக்கூடிய ஒரு புதிய ஆவியை உணர்ந்தனர். ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் பிள்ளைகளுடைய நிதியின் செயல் இயக்குநர், ஜேம்ஸ் கிரான்ட், ஆர்வத்தோடு சொன்னார்: “இப்படியாக, மாநில மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் அனைத்து மக்களுடைய—‘வயதுவந்த பிள்ளைகளுடைய,’ சிறு பிள்ளைகளுடைய—நலனை நிலைநாட்டுவதற்கு முதற்படியை எடுத்திருக்கின்றனர்—புதிய உலக ஒழுங்குமுறையில் முன்னேற்றுவிக்கவேண்டிய முக்கிய குறிக்கோளாக ஏற்றிருக்கின்றனர்.”
உண்மையில், அந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்துவந்த ஒரு வருடத்திற்குள் அந்த ஆலோசனை கூட்டத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய தேசீய திட்டங்களைப் பெரும்பான்மையான தேசங்கள் ஏற்கெனவே தீட்டியிருந்தன. இது இயக்குநர், கிரான்ட்-ஐ இப்படிச் சொல்ல தூண்டியது: “எல்லா பிள்ளைகளுக்கும் ஆரோக்கியம் 2000 வருடத்துக்குள்ளாக அடையப்படும் என்ற ஓர் அதிமெய்ம்மையான எதிர்பார்ப்பை இப்போது நம்மால் பார்க்கமுடிகிறது.”
ஆனால் சர்வதேச மூலங்கள் மூலம் அம்பலமாக்கியிருக்கிற உலகின் வெட்கக்கேடான குடும்ப இரகசியமாக இருக்கக்கூடிய பிள்ளைகளின் இக்கட்டான நிலையென்றால் என்ன? சர்வதேச ஒத்துழைப்பு நிலவிவரும் பனிப்போரின் பிற்பாடுள்ள சூழ்நிலையில் இப்போது ஐக்கிய நாட்டுச் சங்கம் ஒரு மகத்தான புதிய உலக ஒழுங்குமுறையை கொண்டுவர முற்படுமென்பதற்கு நல்ல காரணம் இருக்கிறதா? நம்முடைய பிள்ளைகளுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம் வரும் என்று நாம் உண்மையிலேயே நம்பமுடியுமா? இந்தக் கேள்விகளைப் பின்வரும் இரண்டு கட்டுரைகள் சிந்திக்கும். (g92 12/8)