வனவிலங்குகளுக்கு சாலை பாதுகாப்பு
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
பிரிட்டனின் சாலைகளில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் நரிகள், அதே எண்ணிக்கை முள்ளெலிகள் (hedgehogs) மற்றும் முயல்கள், 40,000 வளைக்கரடிகள் (badgers), 5,000 களஞ்சிய ஆந்தைகள் (barn owls), பத்து லட்சத்திற்கும் அதிகமான தேரைகள் ஆகியவை சாகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கார்களால் இந்த வனவிலங்குகள் கொல்லப்படுவதற்கு குளிர்கால மூடுபனியும் இருளும் காரணமாயுள்ளன. ஒரு மிருகம் கொல்லப்படுவதை தவிர்க்க, ஓட்டுனர்கள் அநேக சமயங்களில் வேறு பக்கமாக வண்டியை திருப்புகின்றனர்; ஆனால் அவ்வாறு செய்யும்போது தங்கள் வண்டியை சேதப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது எதிரில் வந்துகொண்டிருக்கும் வண்டிகளில் மோதிவிடுகின்றனர். சில சமயங்களில் இது மனித உயிரின் இழப்பில் விளைவடைகிறது. ஒரு மிருகம் விபத்திற்குள்ளான பிறகு, அநேக ஓட்டுனர்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போலீஸார் அறிக்கைகளின்படி, நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் பயணத்தை மேலும் தொடர முடியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரிட்டனின் சில நெடுஞ்சாலைகளில், சாலைகளுக்கு மான்கள் வராதபடி அவற்றை பயமுறுத்துவதற்காக சில விசேஷித்த பிரதிபலிப்பான்களை (reflectors) அதிகாரிகள் அமைத்திருக்கின்றனர். கார்களின் ஹெட்லைட்டிலிருந்து வரும் வெளிச்சம் இந்த பிரதிபலிப்பான்களில் படும்போது, அவை ஓநாய்களின் கண்களைப்போல் காட்சியளிக்கின்றன! மற்ற இடங்களில், மரங்கள் சாலைகளிலிருந்து பொதுவானதைவிட அதிக தூரத்தில் நடப்படுகின்றன; இது, எதிரில் வரும் ஏதாவது வனவிலங்குகளை தெளிவாக பார்ப்பதற்கு ஓட்டுனர்களுக்கு உதவுகிறது. மணிக்கு 55 கிலோமீட்டரைவிட வேகமாக செல்லும்போது உச்ச-அலைவெண் (high-frequency) சப்தத்தை உண்டாக்கும் விசில்களை ஐக்கிய மாகாணங்களில் உள்ள சில ஓட்டுனர்கள் தங்கள் வண்டிகளில் பொருத்தியிருக்கின்றனர். அந்த விசில் வழியாக செல்லும் காற்றானது, மனித காதுகளுக்கு கேட்காத ஆனால் வனவிலங்குகளுக்கு தெளிவாக கேட்கக்கூடிய அலைவெண்ணில், 60-டெசிபெல் சப்தத்தை உற்பத்தி செய்கிறது. முன்னோக்கிய காதுகளையுடைய மிருகங்களில் இந்த உபகரணம் அதிக பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது. இந்த விசிலை வைத்து செய்யப்பட்ட ஒரு சோதனையில், வண்டிகள் மான்களின் மேல் மோதியது 50 சதவீதம் குறைந்ததாக போலீஸார் அறிக்கை செய்தனர்.
ஆபத்தையும், வனவிலங்குகள் அனாவசியமாக சாலைகளில் அழிவதையும் நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்? முக்கியமாக குளிர்காலம் அல்லது இரவு நேரங்களில், நீங்கள் வண்டி ஓட்டிச்செல்லும்போது, வேகத்தை குறைத்து மிருகங்களைப் பற்றி எச்சரிக்கும் சாலையோர அறிவிப்பு பலகைகளுக்கு கவனம் செலுத்துங்கள்.