“துல்லியமான நேரத்தில் சுருதிசேர்க்கும் இசைக்குழு”
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
மனிதப் பேச்சு ஓர் அற்புதம். எண்ணற்ற பல்வேறு ஒலிகளை உண்டாக்குவதற்கு, மார்பு, தொண்டை, தாடை, நாக்கு, உதடுகள் ஆகியவற்றிலுள்ள சுமார் 100 தசைகள் ஒன்றுசேர்ந்து வேலை செய்கின்றன. ஒவ்வொரு தசையும் நூற்றுக்கணக்கானவை முதல் ஆயிரக்கணக்கான தசைநார்களால் ஆன ஒரு கற்றையாய் இருக்கிறது. ஒரு ஸ்போர்ட்ஸ் வீரரின் கால்களிலுள்ள தசைகளை இயக்கத் தேவைப்படும் நரம்பணுக்களைக் (neurons) காட்டிலும் இவற்றின் தசைநார்களைக் கட்டுப்படுத்த அதிகளவான நரம்பணுக்கள் தேவைப்படுகின்றன. கெண்டைக்கால் தசையின் 2,000 நார்கள் அனைத்தையும் இயக்க ஒரேவொரு இயங்கு நரம்பணு போதுமானது. அதற்கு மாறாக, ஒலிப்பெட்டியை (voice box) அல்லது குரல்வளையைக் (larynx) கட்டுப்படுத்தும் இயங்கு நரம்பணுக்கள், இரண்டு அல்லது மூன்று என்ற குறைந்தளவான தசைநார்களையே இயக்குபவையாய் இருக்கலாம்.
நீங்கள் பேசும் வார்த்தை அல்லது சுருக்கமான சொற்றொடர் ஒவ்வொன்றும் அதற்கே உரிய தசை அசைவு பாங்கினைக் கொண்டுள்ளது. “நீங்க எப்படி இருக்கிறீங்க?” போன்ற ஒரு சொற்றொடரை மறுபடியும் உபயோகிக்கத் தேவையான எல்லா தகவலும் உங்கள் மூளையிலிருக்கும் பேச்சுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, ஒவ்வொரு வார்த்தை அல்லது சொற்றொடரையும் திரும்பத்திரும்ப பேசுவதற்கென்று, உங்கள் மூளை ஒரு வினோதமான வளைந்துகொடுக்காத படிப்படியான தசை இயக்கத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. பேச்சு ஆற்றல் அதைக் காட்டிலும் பிரமிக்கத்தக்கது. உதாரணமாக, உங்கள் வாயில் ஒரு புண் இருப்பதாக வைத்துக்கொள்வோம்; அது, உங்களுக்குரிய தனி பாங்கில் வார்த்தைகளை உச்சரிப்பதை சிரமமாக்குகிறது. இதனைச் சிந்தியாமலே, மூளையானது பேச்சுத் தசைகளின் இயக்கத்தை மாற்றியமைத்து, முடிந்தளவுக்கு நீங்கள் பொதுவாக பேசும் விதத்துக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளை உச்சரிக்க உதவுகிறது. இது மற்றொரு அற்புதமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
வாயளவில் கூறும் ஓர் எளிய “ஹலோ” என்ற வாழ்த்து, ஏராளமான அர்த்தத்தைத் தெரிவிக்கலாம். பேசுபவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, பரவசமடைந்திருக்கிறாரா, சலிப்படைந்திருக்கிறாரா, அவசரமாய் இருக்கிறாரா, எரிச்சலடைந்திருக்கிறாரா, வருத்தத்துடன் இருக்கிறாரா, அல்லது பயந்திருக்கிறாரா என்பதை குரலின் தொனி காட்டிக்கொடுத்து விடலாம்; மேலும், அப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான நிலைகளின் வெவ்வேறு அளவுகளையும் வெளிக்காட்டிவிடலாம். ஆம், பல்வகை தசைகளுடைய இயக்கத்தின் அளவையும், இமைப்பொழுதிலான நேரத்தையும் பொருத்து, ஒரு தனிக் கூற்றின் அர்த்தம் மாறலாம்.
“நொடிக்கு சுமார் 14 ஒலிகளை நாம் தாராளமாய் எழுப்புகிறோம். அது, நம் நாக்கு, உதடுகள், தாடை அல்லது நம் பேச்சு உறுப்புக்களின் வேறெந்தப் பகுதியையும் தனித்தனியாக அசைக்கும்போது கட்டுப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரத்தைப்போல் இரண்டு மடங்கு வேகமானது. ஆனால் அவை அனைத்தையும் சேர்த்து பேச்சில் பயன்படுத்தினால், அனுபவமிக்க டைப்பிஸ்ட்டுகளின் அல்லது கச்சேரி பியானோ இசைக்கலைஞர்களின் விரல்கள் அசைவதைப் போலவே வேலை செய்கின்றன. அவற்றின் அசைவுகள் துல்லியமான நேரத்தில் சுருதிசேர்க்கும் இசைக்குழுவை ஒத்திருக்கின்றன” என திக்குவாய் தடுப்பு (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் டாக்டர் வில்லியம் ஹெச். புர்க்கின்ஸ் விளக்குகிறார்.
ஓரளவுக்கு, சில பறவைகள் மனிதப் பேச்சு ஒலிகளைப்போல ஒலி எழுப்பலாம். ஆனால் எந்தவொரு விலங்குக்கும், மனிதன் பேசுவதைப் போலவே பேசும்படியான இயக்கத் திட்டத்தை உடைய மூளை இல்லை. வாலில்லாக் குரங்குகள் தெளிவான பேச்சு ஒலிகளை எழுப்பும்படி அவற்றைப் பழக்குவிக்க விஞ்ஞானிகள் எடுத்திருக்கும் முயற்சிகள் தோல்வியடைந்திருப்பது ஆச்சரியமாய் இல்லை. நரம்பியல் வல்லுநரான ரோனால்ட் நெட்ஸெல் கூறுவதன்படி, பேசுவதற்குத் தேவையான திறமையை, “ ‘வெறும் கேள்வி ஞானத்தால்’ பியானோ இசைக்கும் ஓர் அபூர்வ நபரின்” திறமையுடன் ஒப்பிடலாம். அல்லது அகராதி தொகுப்பாளரான லுட்விக் கோயலர் சொல்வதைப்போல்: “மனிதப் பேச்சு ஓர் இரகசியம்; அது ஒரு தெய்வீக பரிசு, ஓர் அற்புதம்.”