படிப்பு 2
வார்த்தைகளைத் தெளிவாக சொல்லுதல்
திறம்பட பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு, நீங்கள் தெளிவாக பேச வேண்டும். நீங்கள் சொல்ல விரும்புவது சுவாரஸ்யமாக, ஏன் முக்கியமானதாகக்கூட இருக்கலாம்; ஆனால் உங்கள் வார்த்தைகள் எளிதாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றால் அதிக பிரயோஜனம் இருக்காது.
கேட்பவர்களுக்கு பேச்சு சரியாக புரியாவிட்டால் செயல்படும்படி தூண்டப்பட மாட்டார்கள். ஒருவருக்கு கனத்த குரல் இருக்கலாம், அவர் பேசுவது எல்லாருக்கும் கேட்கலாம்; ஆனால் தெளிவாக பேசாவிட்டால் அவர்களை செயல்பட தூண்டுவிக்க முடியாது. கேட்பவருக்குப் புரியாத ஏதோ அந்நிய பாஷையில் பேசுவதைப் போல் இருக்கும். (எரே. 5:15) பைபிள் இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.”—1 கொ. 14:8, 9.
தெளிவற்ற பேச்சிற்கு காரணமென்ன? வாயை போதியளவு திறந்து பேசாதிருப்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம். தாடை தசைகள் விறைப்பாகவும் உதடுகள் அதிகம் அசையாமலும் இருக்கும்போது வாய்க்குள்ளேயே பேசிக்கொள்வது போல் தோன்றும்.
படபடவென்று வேகமாக பேசினாலும் பேச்சை கிரகிக்க முடியாமல் போகும். பதிவு செய்யப்பட்ட பேச்சை வழக்கத்தைவிட அதிக வேகத்தில் போட்டுக் காட்டுவது போல் அது இருக்கும். பேச்சில் வார்த்தைகள் இருந்தாலும் அவற்றால் அதிக பிரயோஜனம் இருக்காது.
சிலசமயம் பேச்சு உறுப்புகளில் ஏதோ குறை இருப்பதால் தெளிவாக பேச முடியாமல் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சினையை சமாளிக்க வேண்டியவர்களும், இந்தப் படிப்பிலுள்ள ஆலோசனைகளை கடைப்பிடிக்கும்போது வெகுவாக முன்னேறலாம்.
இருந்தாலும், பேச்சு தெளிவற்று இருப்பதற்கு பொதுவான காரணம், புரிந்துகொள்ள முடியாதபடி கடகடவென்று வார்த்தைகளை சொல்லிவிடுவதே. சொல்லின் அசைகளை அல்லது முக்கியமான எழுத்துக்களை அல்லது கடைசி சில எழுத்துக்களை விழுங்கி விடுவது பிரச்சினையாக இருக்கலாம். பேச்சாளர் கடகடவென்று பேசும்போது, கேட்பவர்கள் சில கருத்துக்களையும் சொற்றொடர்களையும் புரிந்துகொள்வார்கள், ஆனால் மற்றவற்றை ஊகிக்க வேண்டியதாகிறது. ஆகவே, தெளிவாக பேசாவிட்டால் போதனையினால் அதிகத்தை சாதிக்க முடியாது என்பதை புரிந்துகொள்கிறோம்.
தெளிவாக பேசுவது எப்படி. வார்த்தைகளைத் தெளிவாக சொல்வதற்கு தேவையான ஒன்று, உங்கள் மொழியில் அவற்றின் அமைப்பை புரிந்துகொள்வதாகும். தமிழில், வார்த்தைகள் எழுத்துக்களால் ஆனவை. ஒவ்வொரு எழுத்தும் ஒலியின் ஒவ்வொரு அலகாகும். நீங்கள் பேசும்போது ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டும். உங்கள் பேச்சு இன்னும் தெளிவாக ஒலிக்க வேண்டுமென்றால் மெதுவாக பேசுங்கள், முடிந்தளவு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க முயற்சி செய்யுங்கள். முதலில் அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து வாசிப்பதுபோல் தோன்றலாம், ஆனால் நீங்கள் பழகப் பழக பிசிரின்றி நயமாக பேச வந்துவிடும். சரளமாக பேச வேண்டும் என்பதற்காக சில வார்த்தைகளை கடகடவென்று சொல்லிவிட வாய்ப்புண்டு; ஆனால் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் போய்விடும் ஆபத்து இருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கை: தெளிவாகப் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள, நீங்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாசித்து அல்லது பேசிப் பழகலாம். ஆனால் அப்படி பேசுவதையே பழக்கமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள். ஏனெனில் அது இயல்பாக இல்லாமல் செயற்கையாக தொனிக்கும்.
பேசும்போது நீங்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுக்கிறீர்கள் என்றால், முகவாய்க்கட்டை நெஞ்சில் படாதவாறு தலையை உயர்த்துங்கள். பைபிளிலிருந்து வாசிக்கும்போது, அதை மேலே நன்கு தூக்கிப் பிடியுங்கள்; சபையாரைப் பார்த்த பிறகு மறுபடியும் பைபிளைப் பார்ப்பதற்கு லேசாக குனிந்தாலே போதுமானதாக இருக்க வேண்டும். வாயிலிருந்து வார்த்தைகள் தட்டுத்தடங்கலின்றி வர இது உதவும்.
இறுக்கத்தை தளர்த்த கற்றுக்கொள்வதும் உங்கள் பேச்சை மேம்படுத்தும். முகத்தின் தசைகளில் அல்லது சுவாசத்தை கட்டுப்படுத்தும் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டால் பேச்சு இயக்கம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது நன்கு அறியப்பட்ட விஷயம். உங்கள் மனதும் குரல் உறுப்புகளும் சுவாசக் கட்டுப்பாடும் இயல்பாக இசைந்து செயல்பட வேண்டும்; ஆனால் தசைகளில் ஏற்படும் இறுக்கமானது, இயல்பாகவும் தடையின்றி சுலபமாகவும் நிகழ வேண்டிய அந்த செயல்பாட்டிற்கு இடையூறாக இருக்கிறது.
தாடையின் தசைகளை தளர்த்த வேண்டும்; அப்போதுதான் மூளை தரும் சிக்னலுக்கு அவை உடனடியாக பிரதிபலிக்கும். உதடுகளும் விறைப்பாக இருக்கக்கூடாது. வேகமாக விரிந்து சுருங்க அவை தயாராக இருக்க வேண்டும்; அப்போதுதான் வாயிலிருந்தும் தொண்டையிலிருந்தும் வெவ்வேறு சத்தங்களை திறம்பட எழுப்ப முடியும். தாடையும் உதடுகளும் இறுக்கமாக இருந்தால் வாய் போதியளவு திறக்காது, பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவது போல் இருக்கும். இதனால் பேச்சு தெளிவில்லாமல், முணுமுணுவென்று, கடுகடுப்பாக தொனிக்கும். ஆனாலும் தாடையையும் உதடுகளையும் தளர்த்த வேண்டும் என்பதற்காக உச்சரிப்பை அசட்டை செய்யலாம் என்பதில்லை. அவற்றை தளர்த்தும் அதேசமயத்தில் ஒலிகளை தெளிவாக உச்சரிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
உங்கள் நிலையை சோதித்தறிவதற்கு, சத்தமாக வாசித்துப் பார்ப்பது உதவியாக இருக்கும். அற்புதமான பேச்சு உறுப்புகளை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள். பேச்சொலிகள் தடங்கலின்றி வெளிவருவதற்கு உதவியாக வாயை போதியளவு திறக்கிறீர்களா? நாவு படுசுறுசுறுப்பான பேச்சு உறுப்பு என்றாலும் அது மட்டுமே பேச்சு உறுப்பு இல்லை என்பதை நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும். கழுத்து, கீழ் தாடை, உதடுகள், முக தசைகள், தொண்டை தசைகள் ஆகிய அனைத்தும் பேச்சு உறுப்புகளாக பங்காற்றுகின்றன. நீங்கள் பேசும்போது, முக அசைவின்றி பேசுவதாக தெரிகிறதா? அப்படியென்றால் உங்கள் பேச்சு தெளிவற்று இருப்பதற்கு மிக அதிக வாய்ப்பு உண்டு.
உங்களிடம் டேப் ரிக்கார்டர் இருந்தால், வெளி ஊழியத்தில் இயல்பாக பேசுவதுபோல் பேசி அதைப் பதிவு செய்யுங்கள். பல நிமிடங்களுக்கு அப்படி உரையாடி பதிவு செய்யுங்கள். அந்தப் பதிவை போட்டுக் கேட்பது, சில வார்த்தைகளைத் தெளிவாக சொல்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதை அறிந்துகொள்ள உதவும். கடகடவென்று, வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவாறு, அல்லது விழுங்கி விழுங்கிப் பேசுகிறீர்களா என கவனியுங்கள்; அதன் காரணத்தை அறிய முயலுங்கள். பொதுவாக இப்படிப்பட்ட பலவீனத்தை, மேலே கலந்தாலோசிக்கப்பட்ட குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்.
உங்களுக்கு பேச்சுக் குறைபாடு இருக்கிறதா? வாயை வழக்கத்தைவிட அதிகமாக திறந்து பேச பழகுங்கள், தெளிவாக பேசுவதற்கு இன்னுமதிக கவனம் செலுத்த முயலுங்கள். சுவாசிக்கும்போது நுரையீரல்களை நிரப்புங்கள், மெதுவாக பேசுங்கள். பேச்சுக் குறைபாட்டுடன் இருந்த அநேகர் இவ்வாறு முயன்றதால் முன்னேற்றம் கண்டனர். உங்கள் குறைபாடு முழுமையாக குணமாகாவிட்டாலும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். மோசேக்கு பேச்சுக் குறைபாடு இருந்திருக்கலாம்; ஆனால், இஸ்ரவேலருக்கும் எகிப்திய பார்வோனுக்கும் முக்கியமான செய்திகளைத் தெரிவிக்க யெகோவா அவரையே தேர்ந்தெடுத்தார் என்பதை ஞாபகம் வையுங்கள். (யாத். 4:10-12) உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்களையும் பயன்படுத்துவார்; உங்கள் ஊழியம் பயனளிக்கும்படியும் ஆசீர்வதிப்பார்.