உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 9/22 பக். 15-17
  • சீட்டா—பூனைகளில் மிக வேகமானது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சீட்டா—பூனைகளில் மிக வேகமானது
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வேகமான பூனை
  • புள்ளியிட்ட அழகு
  • பூனையின் தாய்ப்பாசம்
  • வேட்டைக்காரன் வேட்டையாடப்படுகிறான்
  • வேகத்தில் தலைசிறந்தது
    விழித்தெழு!—1996
  • சிறுத்தை—மறைந்து வாழும் தன்மையுள்ள பூனை
    விழித்தெழு!—1995
  • விலங்கு உலகில் குட்டிகளை ஊட்டி வளர்த்தல்
    விழித்தெழு!—2005
  • “எனக்கு விருப்பமான ஃபோட்டோ மாடல்”
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 9/22 பக். 15-17

சீட்டா—பூனைகளில் மிக வேகமானது

கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

வெயில் கொளுத்தும் வெப்பமண்டலப் புல்வெளியில் உஷ்ணம் குடிகொண்டிருந்தது. அஸ்தமிக்கும் சூரியனின் கடைசி கிரணங்களில் பிரகாசிக்கும் தங்கநிறக் கோடுகளுள்ள பக்கங்களையுடைய தாம்ஸன் மறிமான்களின் (Thomson’s gazelles) ஒரு மந்தையை நாங்கள் பைனாகுலர் மூலம் பார்த்துக்கொண்டிருந்தோம். அருகிலேயே இன்னொரு பார்வையாளரும் ஒரு கரையான் புற்றில் அமர்ந்துகொண்டு, மறிமான்களின் திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தார். அது தனது குட்டிகளோடிருந்த புள்ளியிட்ட ஒரு பூனையாகும். அவளுடைய அம்பர் நிறக்கண்கள் அந்த சூழலை மிகவும் கவனமாக ஆராய்ந்தன. திடீரென்று அவளுடைய தசைகள் இறுகின, அவள் மெதுவாக எழுந்து, அந்த மந்தையை நோக்கி நடந்தாள். அவள் திரும்பிவரும்வரை காத்திருக்கவேண்டும் என்பது அவள் குட்டிகளுக்கு தெரியும் போலும்.

சிறிய புதர்களுக்கும் நீளமான அடர்ந்த புற்களுக்கும் பின்னால் மறைந்துகொண்டு மிகவும் கவனமாக அவள் முன்னேறினாள். அவளுடைய அசைவுகள் தடுமாற்றமின்றியும் உறுதியாகவும் இருந்தன. தன்னுடைய இரைக்கு 200 மீட்டர் பக்கத்தில் வந்தபிறகு அவள் திடீரென்று அசையாமல் நின்றாள். ஒரு மறிமான் நிமிர்ந்து பார்த்து, அவள் வரும் திசையையே பார்த்தது; பிறகு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தது. மறுபடியும் அவள் நெருங்கினாள். சந்தேகமின்றி மேய்ந்துகொண்டிருந்த அந்த மிருகங்களுக்கு 50 மீட்டர் அருகில் நெருங்கியதும் ஓட்டம் பிடித்தாள். அந்திசாயும் பொழுதில், ஒரு ஸ்பிரிங் விடுவிக்கப்பட்டதைப்போல அவள் முன்னே பாய்ந்தாள். மறிமானின் அந்த மந்தை எல்லாத்திசைகளிலும் சிதறி ஓடின; ஆனால் அவள் தேர்ந்தெடுத்திருந்த இரையிலிருந்து தன் கண்களை திசை திருப்பவில்லை. அவள் சமவெளியின் குறுக்கே ஓடி, வேகமாக ஓடக்கூடிய மறிமானை நெருங்கினாள்.

மிரண்டுபோன அந்த மிருகம் அதை பின்தொடர்பவளை ஏமாற்ற வளைந்து நெளிந்து சென்றது; ஆனால் மின்னல் வேக பூனையின் திறமைக்குமுன் அதன் தப்பிப்பதற்கான முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை. தன்னுடைய இரைக்கு ஒரு மீட்டர் அருகிலிருக்கும்போது அவளுக்கு இரையாகப்போகும் அந்த மிருகத்தை தடுக்கிவிடுவதற்காக தன்னுடைய ஒரு முன்னங்காலை நீட்டினாள். அத்தருணத்தில் அவள் லேசாக இடறினாள். ஒரு நொடியில் அந்த மறிமான் மறைந்துவிட்டது.

மூச்சுவாங்கிய அந்த சீட்டா நிற்பதற்காக வேகத்தை குறைத்து, உட்கார்ந்து, பசியாயிருக்கும் தன் குட்டிகள் இருந்த திசையை நோக்கிப்பார்த்தது. நான் வியப்புடன் என் மனைவியை பார்த்தேன். வியக்கத்தக்க சீட்டாவின் வல்லமைமிக்க வேகத்தைத்தான் நாங்கள் அப்போது பார்த்திருந்தோம்.

வேகமான பூனை

சீட்டா உண்மையில் காற்று வேகத்தில் ஓடக்கூடியது. வியக்கத்தக்க விதமாக, முற்றிலும் அசைவற்ற ஒரு நிலையிலிருந்து இரண்டே வினாடிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் அதனால் ஓடமுடியும்! அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரைகூட வேகத்தை எட்டமுடியும்! நிலவாழ் மிருகங்களிலேயே அதுதான் மிகவும் வேகமாக ஓடும் மிருகம். ஒப்பிடும்போது, பந்தயக்குதிரை மணிக்கு 72 கிலோமீட்டரைவிட சற்று அதிகமாகவும், வேட்டை நாய் முழு வேகத்தில் மணிக்கு சுமார் 65 கிலோமீட்டரும் செல்லும். என்றபோதிலும், சீட்டா அதன் வியக்கத்தக்க வேகத்தை சிறிய தொலைவுகளுக்கு மட்டுமே கொண்டிருக்க முடியும்.

நீண்ட, மெல்லிய கால்களும் எளிதில் வளைந்துகொடுக்கும் வளைந்த முதுகும் கொண்ட சீட்டா மெலிந்த உருவமுடையது. மிக அதிக வேகத்தில் வளைந்து, திரும்பும் சீட்டாவுக்கு அதன் நீண்ட, புள்ளியிட்ட வால் சமநிலையை கொடுக்கிறது. அதன் உச்சக்கட்ட வேகத்தில் அது ஆறு மீட்டருக்கும் நீளமான பாய்ச்சலுடன் பாய்ந்து செல்லமுடியும். அப்படிப்பட்ட வேகத்திற்கு உதவியாக இருக்கும் ஒன்று அதன் விசேஷித்த கால்கள்; அவை ஒரு பூனையுடையதைவிட ஒரு நாயின் கால்களை அதிகம் ஒத்திருக்கின்றன. அதிக உறுதிக்காக தரையை பற்றிக்கொள்ள அதன் வளைந்த நகங்களை சீட்டா உபயோகிக்கிறது.

புள்ளியிட்ட அழகு

சீட்டாவுக்கு மிகவும் வித்தியாசமான, அழகான முகம் உண்டு. அதன் கண்களிலிருந்து வாயின் முனைகள் வரை இருக்கும் இரண்டு மெல்லிய, கருப்புக் கோடுகள் அந்த பூனைக்கு ஒரு சோகமான, கைவிடப்பட்ட தோற்றத்தை கொடுக்கிறது. சிறிய, அடர்த்தியான புள்ளிகளைக்கொண்ட அதன் மென்மயிர், குட்டையாகவும், அதன் உடலில் அநேகமாக வெளிர் சிவப்பு கலந்த பிரௌன் நிறத்திலும் வயிற்றுப்பகுதியில் வெண்ணிறத்திலும் இருக்கும். குட்டிகள் பிறக்கும்போது அதிக கருமையாகவும், கழுத்திலிருந்து வால் வரையுள்ள, நீண்ட, நீல-சாம்பல் நிற, அடர்ந்த பிடரி மயிர் கொண்டவையாகவும் இருக்கும்.

சீட்டா பூச்சியை போன்ற விர்ரென்ற சப்தம் அல்லது ஒரு பறவையைப்போல கிறீச்சொலி எழுப்பக்கூடியதாக இருக்கும். இந்த சப்தம் இரண்டு கிலோமீட்டர் வரை கேட்கக்கூடியதாக, தன் குட்டிகளோடும் மற்ற சீட்டாக்களோடும் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

பூனை இனத்தைச் சேர்ந்த அதன் மற்ற கூட்டாளிகளாகிய சிங்கத்தோடும் சிறுத்தையோடும் ஒப்பிடும்போது, சீட்டாவின் பண்பு சாந்தமும் சமாதானமும் உள்ளதாக இருக்கிறது. அது திருப்தியடைந்திருக்கையில் ஒரு பெரிய வீட்டுப்பூனையைபோல உறுமுகிறது. மனிதனோடு இருப்பதற்கு அவை எளிதில் பழகிக்கொள்கின்றன; அவை பழக்குவிக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனாலும் சீட்டா ஒரு வீட்டுப்பூனை அல்ல. முழுமையாக வளர்ந்த நிலையில் அது 45 கிலோகிராம் அல்லது அதற்கும் அதிகம் எடையுள்ளதாகவும், கூர்மையான பற்கள், அதன் வளைந்த நகங்கள் ஆகியவை அதை ஒரு ஆபத்தான மிருகமாக—கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாக—ஆக்குகின்றன.

வேட்டையாடும் திறமையோடு சீட்டா பிறப்பதில்லை, ஆகவே அதன் தாயால் மிகவும் அதிகமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒரு குட்டி சிறைப்பட்ட நிலையில் வளர்க்கப்பட்டால், அது பதுங்கி வேட்டையாடி, தன் இரையை பின்தொடர்ந்துபிடிக்கும் திறமையில்லாமல் இருக்கும். ஒரு தாயும் அதன் குட்டிகளும் ஒன்றாக சாப்பிடும்போது, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சிங்கங்களுக்கு மத்தியில் பொதுவாக காணப்படும் மோதல்களும் சண்டைகளும் இல்லாமல், அவை சமாதானமாக சாப்பிடும். வறண்ட இடங்களில் சாறு நிறைந்த முலாம் பழங்களைக்கூட சீட்டா சாப்பிடுவது அறியப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க வனவிலங்கு சரணாலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த சமாதானமுள்ள பூனைகள் எவ்வளவு பயமின்றி இருக்கமுடியும் என்பதை கண்டு வியப்படைந்திருக்கின்றனர். வளர்ந்த ஒரு சீட்டா சுற்றுலா பயணிகளின் வேன் நிழலுக்கு கீழ் வந்து படுத்துக்கொள்வதும், அல்லது காரின் பானெட்டில் தாவி, ஆச்சரியப்படும் அநேக சமயங்களில் பயந்துபோயிருக்கும், பயணிகளை கண்ணாடி வழியாக பார்ப்பதும் சர்வ சாதாரணமாகும்.

பூனையின் தாய்ப்பாசம்

பெண் சீட்டா ஓரீற்றில் ஆறு சிறு குட்டிகள் வரை ஈனும். அவள் அவற்றை தைரியமாக பாதுகாத்து, நல்லவிதமாக மறைத்துவைக்கிறாள்; அவை பிறந்த முதல் சில மாதங்களில் அவற்றை அடிக்கடி இடம் மாற்றுகிறாள். எனினும், தங்கள் குட்டிகளைப் பாதுகாக்க சீட்டா தாய்கள் இவ்வளவு முயற்சி எடுத்தபோதிலும், குட்டிகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பாகம் மட்டுமே முழுவளர்ச்சிப்பருவம்வரை தப்புகின்றன என்பதாக தெரிகிறது.

குடும்பமாக உள்ள சீட்டா குட்டிகளை பராமரிப்பது தாய் சீட்டாவிற்கு அவ்வளவு சுலபமானதல்ல. அவை மிகவும் துடிப்பானவையாய், மிக அதிக விளையாட்டுத்தனமுள்ளவையாய் இருக்கின்றன. ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் தாய், ஒரு பூனைக்கே உரிய பாணியில் ஆட்டிக்கொண்டிருக்கும் அதன் வாலை குட்டிகள் அடிக்கடி பதுங்கியிருந்து, மேலே தாவி விழுந்து விளையாடும். சண்டையிட்டுக்கொண்டு, கடித்துக்கொண்டு, ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருக்கும் அவை, மற்ற கொன்றுதின்னும் விலங்குகளால் எப்போதும் ஏற்படக்கூடிய ஆபத்தை அநேகமாக அறியாமல் இருக்கின்றன.

வேட்டைக்காரன் வேட்டையாடப்படுகிறான்

காட்டில் சீட்டாவுக்கு சிங்கங்கள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள் உள்ளிட்ட அநேக எதிரிகள் இருக்கின்றன. என்றபோதிலும், சீட்டாவின் மிகமோசமான எதிரி மனிதனே. அதன் அழகிய, புள்ளியிட்ட மென்மயிர், ஆடைகள், கம்பளங்கள், கோப்பைகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கு அதிகமாக விரும்பப்படுகிறது. மிகவேகமாக ஓடக்கூடிய இந்த மிருகமானது, பிடிக்கப்பட்டு, பொழுதுபோக்கு வேட்டைக்காக பழக்குவிக்கப்பட்டிருக்கிறது. சீட்டா சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கம் செய்யாது என்பதனால், இந்தத் தேவையை பூர்த்திசெய்ய அதன் இருப்பிடத்தின் கடைசி எல்லைகள் வரைக்கும் அது வேட்டையாடப்பட்டிருக்கிறது. வாழிடத்தின் அழிவும் சீட்டா உயிர்வாழ்வதை கடினமாக்கியிருக்கிறதனால், இப்போது அது கிழக்கு ஆப்பிரிக்காவில் விலங்கு சரணாலயங்களில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது.

1900-ல் 44 தேசங்களில் 1,00,000 சீட்டாக்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. இன்று பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலுள்ள 26 தேசங்களில் ஒருவேளை 12,000 மட்டுமே உயிர்வாழலாம். இந்த அழகிய, புள்ளியிட்ட பூனையை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன, என்றபோதிலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கிறது.

சீட்டா முற்றிலும் அழிந்துபோவதிலிருந்து காப்பாற்றப்பட முடியாமல் போகலாம் என்று சிலர் நினைக்கின்றனர். என்றபோதிலும், கடவுளால் கொடுக்கப்பட்ட பொறுப்பை மனிதன் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் காலம் வருகிறது என்று அறிவது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இந்தப் பொறுப்பு மிருகங்களை பாதுகாத்து, கவனித்துப்பேணி, ‘பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்வதாகும்.’ (ஆதியாகமம் 1:28) அப்போதுதான் சீட்டா போன்ற அழகிய பூனைகள், பூமியின் குடிமக்களை நித்தியகாலமாக மகிழ்விக்கும் என்பதற்கு நிச்சயமான உத்திரவாதம் இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்