உலகைக வனித்தல்
எலக்ட்ரிக் கார்களும் சுற்றுச்சூழலும்
ஜெர்மானிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது; அது, எரிபொருள் எஞ்ஜின் சக்தியால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் பேட்டரியால் இயக்கப்படும் கார்கள் மேம்பட்டவையா என்பதைக் கண்டறியும்படியான ஓர் ஆய்வு. ஸுயெடோய்ச்சட் ஸைடுங் என்ற செய்தித்தாளின்படி, இந்த ஆய்வு, 1992-க்கும் 1996-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 13 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்த 100 ஓட்டுநர்களை உட்படுத்தியது. எலக்ட்ரிக் கார்கள் குறைந்த ரேஞ்சைக் கொடுத்தாலும், அவற்றால் பல நன்மைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது: அவை சப்தமின்றி இயங்கின; அவை ஓடுகையில் புகையை வெளியேற்றவில்லை. என்றபோதிலும், இந்த நன்மைகள் ஒரு பெரிய பிரச்சினையால் விஞ்சப்படலாம். அதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை மறுபடியும் சார்ஜ் செய்வதற்கு தொடக்க ஆற்றல் அதிகம் தேவைப்படுகிறது. அது, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிக அளவாகும். அதாவது, அந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கேற்றாற்போல், 1.5 முதல் 4 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை வேறெங்காவது உற்பத்தி செய்ய வேண்டும். அந்த ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பொருத்து, “வழக்கமான ஆட்டோமொபைல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துவதைக் காட்டிலும் அதிக சேதம் ஏற்படுவதற்கான” சாத்தியம் இருப்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
எச்சரிக்கை: சாலையைக் கடக்கின்றன கோலோபஸ்
கென்யாவின் தென்புற கடற்கரைக்கு அருகேயுள்ள டியானி காடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் கோலோபஸ் குரங்கு இன்னும் செழித்து வளரும் சில இடங்களில் ஒன்றாகும். போக்குவரத்து நிறைந்த கடற்கரைச் சாலையை பாதுகாப்பாய்க் கடப்பதே இந்த விலங்குகள் எதிர்ப்படும் பிரச்சினை. ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு மாதமும் 12 குரங்குகளாவது வாகனம் மோதி அச் சாலையில் கொல்லப்படுகின்றன என்று ஸ்வாரா என்ற கிழக்கு ஆப்பிரிக்க வனவிலங்கு சங்கத்தின் பத்திரிகை அறிக்கை செய்கிறது. டியானி பகுதியில் குடியிருக்கும் அக்கறையுள்ள மக்கள் தொகுதியினர் இவ்விதமான இறப்பைக் குறைக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி தீர்மானித்தனர். டிரைவர்களை வெகு கவனமாய் ஓட்டச் சொல்வதோடுகூட, சமீபத்தில் அவர்கள் அந்தச் சாலைக்கு மேலே உயரமாக ஒரு கயிற்றுப்பாலத்தைக் கட்டினர். அந்தப் பாலத்தைக் குரங்குகள் பயன்படுத்திச் செல்லும் காட்சியால் உற்சாகமடைந்த குடியிருப்பாளர்கள், இன்னும் அதிகளவில் பாலம் கட்ட தீர்மானித்துவருகின்றனர்.
எச்சரிக்கை: டெலிபோன்கள் ஆபத்தாகலாம்
வாகனம் ஓட்டுகையில் டெலிபோன்களைப் பயன்படுத்தினால் ஆபத்தாகலாம். வாகனங்களில் போன்களை பயன்படுத்தும் டிரைவர்கள், ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தும் டிரைவர்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் இருக்கின்றனர் என நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின்-ல் வெளியிடப்பட்டிருந்த ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இது, போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதனால் ஏற்படும் ஆபத்து, இரத்தத்தில் 0.1 சதவீதம் மதுபானம் கலந்திருக்கும் நிலையிலுள்ள டிரைவர் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அதே ஆபத்தைப்போலவே ஆக்கலாம். மேலும் ஸ்பீக்கர் போன்களைப் பயன்படுத்திய டிரைவர்கள், போனைப் பிடித்திருப்பதற்காக தங்கள் கைகளைப் பயன்படுத்திய டிரைவர்களைப் போலவே ஆபத்தை எதிர்ப்பட்டனர். போன்கள்தாமே விபத்துக்களுக்குக் காரணமாய் இல்லை, அவை வெறுமனே அவற்றோடு சம்பந்தப்பட்டவையாய் இருந்தன என்றும் ஆய்வாளர்கள் உடனடியாக குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்; போன் பேசுகையில் விவாதம் ஏற்பட்டு அந்த நபரின் கவனம் திசைத்திருப்பப்படுவது இதற்கு ஓர் உதாரணமாகும். அத்துடன், விபத்துக்களுக்கு ஆளான டிரைவர்களில் 39 சதவீதத்தினர், பின்பு உதவி கேட்பதற்காக தங்கள் வாகன போன்களைப் பயன்படுத்தினர். வாகன போன்கள் வைத்திருப்பவர்கள், ஓட்டிக்கொண்டிருக்கும்போது அனாவசியமான போன் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்கள் உரையாடல்களைச் சுருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது. பிரேஸில், இஸ்ரேல், ஸ்விட்ஸர்லாந்து போன்ற சில நாடுகளில், செல்லுலார் போன்களைப் பயன்படுத்துவதிலிருந்து டிரைவர்களைத் தடைசெய்யும் சட்டங்கள் ஏற்கெனவே அமலில் இருக்கின்றன.
புகையிலை தந்திரம்
“[ஐக்கிய மாகாணங்களில்] எல்லா சிகரெட்டு விளம்பரங்களிலும் பாக்கெட்டுகளிலும் அச்சிடத் தேவைப்படும் எச்சரிக்கைகளின் கண்டிப்பைத் தளர்த்தும்படியோ அல்லது அவற்றை நீக்கும்படியோ ஐக்கிய மாகாண கூட்டத்தின் மூலம் புகையிலை நிறுவனம் அதன் கணிசமான அரசியல் செல்வாக்கை ஏன் பயன்படுத்தவில்லை என்று எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?” என்று த கிறிஸ்டியன் சென்ச்சுரி பத்திரிகை கேட்கிறது. “அதற்கான விடை எளியது: அதாவது, புகைக்கும் அபாயங்களைப் பற்றிய எச்சரிக்கை, புகையிலை நிறுவனத்தை சட்டநடவடிக்கையிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் 12 வயதில் புகைக்க ஆரம்பித்து, 45 வயதில் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படும்படி நேர்ந்து, உங்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமைப்படுத்திய அந்த நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர தீர்மானித்தால், அந்த நிறுவனத்துக்கு ஓர் எளிய பதில் இருக்கிறது: ‘புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்’ என்று உங்களை நாங்கள் எச்சரித்தோம்.” வெகு சமீபத்திய மார்க்கெட்டிங் தந்திரங்களில் ஒன்று என்னவென்றால், சுருட்டு விளம்பரத்திற்கு திரைப்பட கவர்ச்சி நடிகைகள் அல்லது மாடல் அழகிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுருட்டு புகைப்பதை உற்சாகப்படுத்துவதாகும். என்றாலும், சுருட்டுகள் சிகரெட்டுகளைக் காட்டிலும் அதிகமாய் மாசுபடுத்தும் தன்மையுடையவை; அத்துடன் தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. “சுருட்டை ஒரு பெண் புகைப்பது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வியாதியின் அபாயத்தை அதிகரித்து, வாழ்வில் வெற்றியடைய தேவைப்படும் சக்தியையும் பலத்தையும் இழக்கச் செய்வதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை” என்று நியூ யார்க் நகரின் மவுன்ட் சைனாய் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் நீல் ஷாக்டர் கூறுகிறார்.
ஆயிரமாண்டு பித்து
“முதல் உலக யுத்தத்துடன் ஆரம்பித்து அணு யுகமாய் வளர்ந்த இந்த 20-வது நூற்றாண்டு, பொழுதுபோக்கு யுகமாய் முடிவுறப்போவதாய்த் தோன்றுகிறது” என நியூஸ்வீக் பத்திரிகை கூறுகிறது. 1999, புத்தாண்டு பிறப்பதற்கான முந்திய இரவு கொண்டாட்டங்களுக்காக “உலகமுழுவதிலுமுள்ள ஓட்டல்கள் ஏற்கெனவே எல்லாம் புக் செய்யப்பட்டுவிட்டன.” என்றபோதிலும், இந்த ஆயிரமாண்டு எங்குத்தான் ஆரம்பிக்கிறது என்பதைக் குறித்த கருத்து வேறுபாடு சூடுபிடிக்கிறது. “இந்தத் தொல்லை கிரிபடி தேசத்தில் ஆரம்பித்தது; சர்வதேச திட்ட தேதிக் கோடு, அந்தத் தீவுக்கூட்டங்களின் வழியாக நேரே வரையப்பட்டன: கிழக்கத்திய கிரிபடியில் ஞாயிறாய் இருந்தபோது, மேற்கத்திய கிரிபடியில் திங்களாய் இருந்தது” என்று யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஜனவரி 1, 1995 முதல், அந்தத் திட்ட தேதிக் கோடு, கிழக்குக்கோடியிலுள்ள தீவான காரலைனைச் சுற்றிச் செல்லும் என்று சொல்வதன் மூலம் அந்தத் தேசம் அந்தப் பிரச்சினையைத் தீர்த்தது. அப்படியானால், ஒரு புதிய நாளின் ஆரம்பத்தைக் காணும் முதல் நிலப்பகுதி கிரிபடியாக இருக்கும் என்பதை அது அர்த்தப்படுத்தும். என்றபோதிலும், டோங்கா, நியூ ஜீலாந்து போன்ற மற்ற தேசங்கள், தங்களுக்கு “முதல்” ஸ்டேட்டஸ் வேண்டும் என விரும்பின. ராயல் கிரீன்விச் ஆப்ஸர்வேட்டரியின்படி, அந்தக் கேள்வி நடைமுறையில் அர்த்தமற்ற ஒன்று. “செப்டம்பரில் நிலநடுக்கோட்டைத் தாண்டுவதிலிருந்து மார்ச்சில் நிலநடுக்கோட்டைத் தாண்டுவது வரையில், தென் துருவத்தில் சூரியன் ஒளிவீசுவதால், ஆயிரமாண்டு பூமியின் தென்கோடிப் பகுதியில் முதலாவதாய் ஆரம்பிக்கிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. என்றாலும், அது 2000-வது ஆண்டில் அல்லாமல், ஜனவரி 1, 2001 வரை அவ்வாறு ஏற்படாது என்றும் அந்த ஆப்ஸர்வேட்டரி கூறுகிறது.
நிலநடுக்கங்கள் முன்கணிக்க முடியாதவை
சமீபத்தில், நிலநடுக்கங்களை விஞ்ஞான ரீதியில் முன்கணிப்பது பற்றி கலந்தாலோசிப்பதற்காக நிலநடுக்க வல்லுநர்களின் ஒரு சர்வதேச தொகுதி லண்டனில் கூடியது. அவர்களின் மதிப்பீடு என்ன? “100 ஆண்டுகளுக்கும் மேலாக, புவி அறிவியலாளர்கள் பலர், [பெரிய நிலநடுக்கங்கள்] வருவதற்கு முன்பு காணத்தக்கதும் கண்டுபிடிக்கத்தக்கதுமான முன் அறிகுறிகள் சந்தேகமில்லாமல் தோன்ற வேண்டும் என்றும் அவற்றை எச்சரிக்கை விடுப்பதற்கான அடிப்படையாய் பயன்படுத்தலாம் என்றும் நினைத்திருந்தனர்” என ஏயாஸ் (Eos) என்ற பிரசுரத்தில் டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் கெல்லர் எழுதுகிறார். அதற்கு மாறாக, சிந்தனையில் ஓர் அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது; ஏனெனில், “தனித்தனியே ஏற்படும் நிலநடுக்கங்களை முன்கணிப்பது இயல்பாகவே முடியாததுபோல் தோன்றுகிறது.” துல்லியமாய் முன்கணிக்க முடியாதபோதிலும், அதிகப்படியான அதிர்ச்சிப் பதிவுகளைக் கொண்டுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் நிகழவிருப்பதற்கான சாத்தியத்தையும், அதன் அளவையும் விஞ்ஞானிகள் மதிப்பிடலாம். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும், அடுத்த 50 ஆண்டுகளின்போது எங்கே பலமான அதிர்ச்சி ஏற்படலாம் என்று யூ.எஸ். ஜியாலஜிகல் சர்வே துறையால் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய வரைபடம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில், கலிபோர்னியாவின் ஜனத்தொகையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர் என்பதாக அரசு ஏஜென்ஸிகள் கருத்து தெரிவிக்கின்றன.
தாவரங்கள் வெடிப்பொருட்களை விழுங்கிவிடுகின்றன
பீட்ரூட் தாவரங்களும் ஒருவகை நீர்த் தாவரமும் (pondweed) முன்பு வெடிமருந்து சேமித்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்த மண்ணிலும் நீரிலும் இருந்து வெடிப்பொருட்களை ஈர்த்து, அவற்றை ஆபத்தற்ற எளிய பொருட்களாய் சிதைத்துவிடும் திறன் பெற்றிருக்கின்றன என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. டெக்ஸஸின் ஆஸ்டின் நகரிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பெரிவிங்கிள் எனப்படும் தாவரத்திற்கும், பொதுவான நீர்த்தாவரமாகிய கிளி இறகு (parrot feather) என்றழைக்கப்படும் தாவரத்திற்கும் டிஎன்டி வெடிப்பொருளை போட்டனர். ஒரு வாரத்திற்குள் அவற்றின் திசுக்களில் அந்த வெடிப்பொருளின் தடயமே இருக்கவில்லை; அந்தத் தாவரங்களை எரித்தபோதும் அவை வெடிக்கவில்லை. அதே சமயத்தில், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள், சாதாரண சர்க்கரைச்சத்துள்ள பீட்ரூட் தாவரத்தின் செல்களும் அவற்றிலிருந்து பெறப்பட்ட பொருட்களும் நைட்ரோகிளிசரினை ஈர்த்து அதைச் சிதைக்கவல்லது என்று கண்டறிந்தனர். நுண்ணுயிரிகளின் உதவியைப் பெறவில்லை என்பதை நிரூபிக்க, இரண்டு தொகுதியைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் அந்தத் தாவரங்களை முன்னதாகவே நுண்ணுயிரிகள் நீங்கும்படி சுத்தப்படுத்தினர். “தற்சமயம், கட்டடங்களைக் கட்டும் நோக்கத்துடன் பழைய இராணுவ தலங்களை சீர்ப்படுத்துவது மிகவும் ஆபத்தாகவும் செலவுபிடிப்பதாகவும் இருக்கிறது; ஆனால், அந்த வெடிப்பொருட்களை மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் ஈர்த்து அவற்றைப் பாதுகாப்பாக சிதைக்கவல்ல அதிக செலவின்றி வளர்க்கப்படும் தாவரங்களைப் பயன்படுத்தினால் அந்நிலைமை மாறும்” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. “இதற்கு அவசர தேவை இருக்கிறது, ஏனென்றால் கடலில் இராணுவ கழிவுகளைக் கொட்டும் தற்போதைய பழக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.”
ஆபத்தான நடனம்
பால்ரூம் (ballroom) நடனங்களில் சிலவகை நடனம், பவ்வியமான ஒரு கலையாய் இருந்ததிலிருந்து, “பணம் சம்பாதிக்கும் ஒரு கடும் போட்டி விளையாட்டாய் மாறியிருக்கிறது” என்று லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அதிவேக மோதல்களும் பலமான உதைகளும், போட்டியிடும் நடனக் கலைஞர்களை எதிர்பாராத வகையில் காயமுறச் செய்வது, நடனக் களத்தில் ஓர் ஆபத்தாகி வருகிறது. அதைவிட மோசமாக, ஆபத்தான சிலவகை நடனம், “கல்நெஞ்சத்துடன் வேண்டுமென்றே” ஆடப்படுகிறது என்பதாக ஒரு புகழ்வாய்ந்த நடன நீதிபதியான ஹாரி ஸ்மித்-ஹாம்ப்ஷயர் குறிப்பிடுகிறார். நடனப் போட்டியாளர்கள், “கால்பந்து விளையாட்டரங்கு மற்றும் குத்துச்சண்டை அரங்குகளின் பாணியை” அறிமுகப்படுத்தி வருகிறார்கள் என த டைம்ஸ் கூறுகிறது. ஒலிம்பிக் விளையாட்டில் பால்ரூம் நடனம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன், இந்தப் போட்டி விளையாட்டை ஒழுங்குபடுத்த ஓர் அதிகாரப்பூர்வ, ‘நடத்தைக்கான விதிமுறையை’ தொழில்முறை பயிற்சி ஆசிரியர்களும் நீதிபதிகளும் வகுத்துள்ளனர்.