தால்லையற்ற பரதீஸ்—வறும் பகற்கனவா?
“மிகவும் அமைதியான இடம்!” அ.ஐ.மா.-விலுள்ள இடாஹோ மாகாணத்தின் ரெட்ஃபிஷ் ஏரிக்கு மேல் ஓங்கி நிற்கும் ஊசியிலைக் காட்டிலிருந்து பார்க்கும்போது, அது உண்மையில் ஒரு ரம்மியமான காட்சிதான். “பரதீஸ் இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று அந்தப் பயணி சொன்னார்.
மத்தியதரைக் கடலிலிருக்கும் தீவாகிய சைப்ரஸின் தெற்குக் கடற்கரை ஓரத்தில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தான். அலைகள் கடற்கரைமீது இதமாக மோதிக்கொண்டிருந்தன. மலையுச்சியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் அமர்ந்துகொண்டு, இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பார்வையாளர் இவ்வாறு உணர்ச்சிபொங்க கூறினார்: “இதுதான் பரதீஸ்!”
இப்படிப்பட்ட காட்சிகளைப் பற்றிய நினைவுகளை நம்மில் அநேகர் மனதில் போற்றிப்பாதுகாக்கிறோம். ஆனால் அநேக சமயங்களில் பரதீஸிய சூழ்நிலைகள் அன்றாட வாழ்க்கையின் பின்வரும் வெறுப்பூட்டும் உண்மைகளைப் பற்றிய பொய்யான தோற்றத்தையே கொடுக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் உணர்கின்றனர்: ராக்கி மலைகளின் அடிவாரங்களில் அமைந்துள்ள காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ; மீன்களையும் கடைசியில் மனிதர்களையும் பாதிக்கும் கடல் தூய்மைக்கேடு; இவையல்லாமல் தேசங்களுக்கு மத்தியிலும் வெவ்வேறு இனங்களுக்கு மத்தியிலும் ஏற்படும் குலைநடுங்க வைக்கும் சண்டைகள் ஆகியவை.
பரதீஸ்—அது என்ன?
நீங்கள் பரதீஸை எப்படி கற்பனை செய்கிறீர்கள்? த நியூ ஷாட்டர் ஆக்ஸ்ஃபோர்ட் இங்லிஷ் டிக்ஷ்னரி, முதல் சொற்பொருள் விளக்கமாக இவ்வாறு கூறுகிறது: “ஆதி[யாகமம்] 2, 3-ல் விவரிக்கப்பட்டிருக்கும் ஏதேன் தோட்டம்.” முதல் மனிதனாகிய ஆதாமை கடவுள் குடியேற்றிய இடத்தைப் பற்றிய பைபிளின் முதல் புத்தகத்தில் காணப்படும் விவரிப்பை இது குறிக்கிறது. அந்த முதல் பரதீஸில், “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான” மரங்கள் அதிகமாக வளர்ந்தன.—ஆதியாகமம் 2:9.
அந்த அகராதி, “பரதீஸ்” என்பதை “கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய இறையியலில் பரலோகம்” என்று இரண்டாவது சொற்பொருள் விளக்கம் கூறி, மேலுமாக இவ்வாறு சொல்லுகிறது: “இப்போது முக்கியமாக கவிதை[நடையிலானது].” மேலே சொல்லப்பட்ட பயணிக்கும் பார்வையாளருக்குமோ பரதீஸானது அகராதியின் மூன்றாவது விளக்கமான, “அளவுகடந்த அழகு அல்லது மகிழ்ச்சியின் ஓர் இடம்” என்பதாகவே இருந்தது.
பதினாறாவது நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டனின் அரசியல் மேதையான சர் தாமஸ் மோர், இலட்சிய உலகம் (ஆங்கிலம்) என்று பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் சட்டங்களும், அரசாங்கமும், சமூக நிலைமைகளும் பரிபூரணமாக இருக்கும் ஒரு கற்பனையான நாட்டைப் பற்றி விவரித்தார். அவ்வளவு நம்பமுடியாததாக அது இருந்ததால், இன்று வெப்ஸ்டர்ஸ் நியூ கலிஜியேட் டிக்ஷ்னரி “இலட்சிய உலகம்” (Utopia) என்பதற்கான ஒரு சொற்பொருள் விளக்கத்தை, “சமூக முன்னேற்றத்திற்கான நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு திட்டம்” என்று கூறுகிறது.
பீப்பில்ஸ் டெம்பிள் என்ற மத உட்பிரிவின் தலைவரான ஜிம் ஜோன்ஸை பின்பற்றியவர்களுக்கு, கயானா காடுகளில் மரங்களை அழித்து சுத்திகரிக்கப்பட்ட ஒரு இடமே இலட்சிய உலகமாய் இருந்தது. வருத்தகரமாக, 1978-ல் பரதீஸாக இருக்குமென்று நம்பப்பட்ட இது, அவர்களில் 900-த்திற்கும் அதிகமானவர்களின் மரணத்தை ஏற்படுத்திய இடமாக ஆனது—உண்மையில் ஒரு கொடுங்கனவு! இதன் காரணமாகவே, பரதீஸ் என்று சொன்னதும் அதிர்ச்சியும் தொல்லையும் தரும் பழக்கவழக்கங்களையுடைய, வினோதமான மத உட்பிரிவின் கருத்துதான் அது என்பதாக ஜனங்கள் சில சமயங்களில் நினைக்கின்றனர்.
வன்முறையும் குற்றச்செயலும் பயமுறுத்திக்கொண்டும், நோய்கள் வயதுவந்தோரையும் சிறுபிள்ளைகளையும் வாட்டிக்கொண்டும், வெறுப்பும் மதபேதங்களும் ஜனங்களை பிரித்துக்கொண்டுமிருக்கும் ஓர் உலகில், அழகிய சூழ்நிலைகள் உண்மை நிலையை மறைக்கும் வெறும் வெளித்தோற்றங்களே. பரதீஸ் ஒரு பகற்கனவேயன்றி வேறல்ல என்று மக்கள் நினைப்பதில் ஆச்சரியமல்லவே! ஆனால் இது, பரதீஸை கண்டுபிடிப்பதற்கான அல்லது தாங்களாகவே பரதீஸை உண்டாக்குவதற்கான முயற்சியிலிருந்து சிலரை தடுத்து நிறுத்தவில்லை. அவை எந்தளவுக்கு வெற்றியடைந்திருக்கின்றன?