உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/8 பக். 4-7
  • தொல்லையற்ற பரதீஸுக்கான தேடல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொல்லையற்ற பரதீஸுக்கான தேடல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தனித்திருப்பதுதான் தீர்வா?
  • குற்றச்செயல் இல்லாதவையா?
  • அழிவு நாள் மத உட்பிரிவுகளைப் பற்றியென்ன?
  • தொல்லை இல்லாத பரதீஸ்
  • பரதீஸ் வெறும் கற்பனையா?
    விழித்தெழு!—1987
  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • பூமியில் ஒரு பூஞ்சோலை-கற்பனையா அல்லது உண்மையா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/8 பக். 4-7

தால்லையற்ற பரதீஸுக்கான தேடல்

“நாங்கள் செய்ய விரும்புவதெல்லாம், மக்கள் ஒருவருக்கு ஒருவர் அக்கறை காண்பிக்கும் பாதுகாப்பான, ஒருவேளை பழம்பாணியான வாழ்க்கைமுறையை உண்டாக்குவதே” என்று பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் விளக்கினார்கள். பரதீஸ்போன்ற ஒரு வெப்ப மண்டலத் தீவை தெரிந்துகொண்டு, சமாதானத்துடன் ஒன்றுசேர்ந்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க அவர்கள் தீர்மானித்தனர். அவர்களுடைய உணர்ச்சிகளை உங்களால் தெளிவாகவே புரிந்துகொள்ளமுடியும். தொல்லையற்ற பரதீஸில் வாழ யாருக்குத்தான் கசக்கும்?

தனித்திருப்பதுதான் தீர்வா?

பரதீஸைத் தேடும் அநேகருக்கு ஒரு தீவில் வாழும் எண்ணம் கவர்ச்சியூட்டுவதாக இருக்கிறது; ஏனென்றால் தனிமை ஓரளவு பாதுகாப்பை தருகிறது. பெலிஸுக்கு அருகில் இருப்பதைப் போன்ற கரிபியன் கடலிலுள்ள தீவுகளை அல்லது பனாமாவின் பசிபிக் கரையோரப் பகுதிக்கு அப்பாலுள்ள தீவுகளை சிலர் தெரிவு செய்கின்றனர். மற்றவர்கள் இந்தியப் பெருங்கடலிலுள்ள ஸேசேல்ஸ் போன்ற ரம்மியமான இடங்களுக்கு கவனத்தை திருப்புகின்றனர்.

தனியொரு சமுதாயத்தை உண்டாக்குவதில் உட்பட்டுள்ள செலவுகளை எண்ணிப்பார்த்தாலே தலைசுற்றுகிறது. போதுமான பணம் இருந்தாலும், நடப்பிலிருக்கும் அரசாங்க சட்டங்கள் உடனடியாக நிலம் வாங்குவதை தடை செய்யலாம். ஒருவேளை மிகச்சிறந்த வெப்பமண்டல தீவு கிடைப்பதாய் இருந்தாலும், நீங்கள் அங்கு சந்தோஷமாக இருப்பீர்களா? உங்கள் பரதீஸ் தொல்லையற்றதாக இருக்குமா?

பிரிட்டன் கரையோரத்தை சுற்றியிருக்கும் தொலைதூரத் தீவுகளில் மக்கள்தொகை இப்போது அதிகரித்துவருகிறது. அவற்றின் புதிய குடிமக்கள் முக்கியமாக தனிமையையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களே. ஸ்காட்லாந்தின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் 250 ஏக்கர் பரப்பளவுள்ள இயார்சா தீவில் தனியாக குடியிருக்கும் ஒரு மனிதன், நூறு ஆடுகளைக்கொண்ட தன்னுடைய மந்தையை கவனிக்க அதிக வேலை செய்யவேண்டியிருப்பதால் தான் ஒருபோதும் தனிமையாக உணரவில்லை என்று கூறுகிறார். ஒரு தீவின் தனிமையை நாடிய மற்றவர்கள் சீக்கிரத்தில் தனிமையை உணருகின்றனர். சிலர், தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்களாக இருந்திருக்கின்றனர் என அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

ஓர் அமைதியான வெப்பமண்டல தீவு, பரதீஸாக இருக்கும் என அநேகர் நம்புகின்றனர். வானிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லாத, மிதமான தட்பவெப்பநிலையுள்ள இடத்தில் வாழ்வது அவர்களுக்கு கவர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. ஆனால் நிகழக்கூடிய உலகளாவிய வெப்பமாதலும் அதன் விளைவாக கடல் மட்டத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் அநேக தீவுவாசிகள் மத்தியில் பீதியை கிளப்பியிருக்கின்றன. மேற்கு பசிபிக்கிலுள்ள டோகிலுவா பகுதியில் அமைந்த, கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமில்லாத வட்டப்பவழத் திட்டுகளில் குடியிருப்பவர்களும், கடலேற்ற சமயத்தில் கடல் மட்டத்திற்குமேல் இரண்டு மீட்டர் உயரம் மட்டுமே உள்ள இந்தியப் பெருங்கடலில் பரவியிருக்கும் மால்தீவ்ஸ்களில் இருப்பவர்களும் அவ்வாறே பயப்படுகின்றனர்.

அவற்றின் வருத்தகரமான நிலைமைக்கு ஆதரவு திரட்ட ஏறக்குறைய 40 வித்தியாசமான அரசாங்கங்கள் ஒன்றுசேர்ந்து சிறு தீவு முன்னேறும் நாடுகள் (Small Island Developing States) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. சிறு தீவுகளில் குடியிருப்பவர்களின் வாழ்க்கை எதிர்பார்ப்பு பொதுவாக அதிகமாகவும் அவர்களுடைய குழந்தை மரணவிகிதம் குறைவாகவும் இருந்தபோதிலும், சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்து எதிர்ப்படுகின்றனர். எண்ணெய் கசிவுகளும் அசுத்தமாக்கப்பட்ட கடல்களும் சில தீவுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகின்றன. மற்ற தீவுகள், பெரிய தேசங்கள் அகற்றிவிட விரும்பும் நச்சுக் கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கான கழிவிடமாக மாறிவிடுகின்றன.

பரதீஸைத் தேடுபவர்களுக்கு, தீவுகள் கொள்ளைகொள்ளும் இடமாக இருப்பதும்கூட ஓர் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. எப்படி? தீவுகளின் சூரிய ஒளிமிக்க கடற்கரையில் கூடும் சுற்றுலாப் பயணிகள், அதிக நெருக்கடியை ஏற்படுத்தி, ஏற்கெனவே சொற்பமாக இருக்கும் வளங்கள் இன்னும் குறைந்துபோகும்படி செய்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகள் தூய்மைக்கேடு பிரச்சினையையும் அதிகமாக்குகின்றனர். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் கரிபியன் பகுதியில் இரண்டு கோடி பார்வையாளர்களால் உண்டாக்கப்படும் கழிவுநீரில் பத்தில் ஒரு பாகம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.

மற்ற வசீகரமான இடங்களிலும் இதைப் போன்றே நடக்கிறது. இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கோவாவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். லண்டனின் இண்டிபெண்டன்ட் ஆன் ஸண்டே என்ற செய்தித்தாள், “அதிகப்படியான உல்லாசப் பயணிகள் வருவது ‘ஒரு பரதீஸை பாழாக்குகிறது’ ” என அறிவித்தது. உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 1972-ல் 10,000-த்திலிருந்து 90-களின் ஆரம்பத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்ததாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் காட்டுகின்றன. அதிகமான உல்லாசப் பயணிகள் வருவதை சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்பும் பேராசையுள்ள ஹோட்டல் முதலாளிகளால், கோவாவின் மென்மையான சூழலியலும் அதன் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரமும் ஆபத்துக்குள்ளாக்கப்படுகின்றன என ஒரு தொகுதி எச்சரிக்கிறது. கடற்கரையில் சட்டத்திற்கு விரோதமாக சில ஹோட்டல்கள் கட்டப்பட்டிருக்கின்றன என இந்திய அரசின் ஒரு அறிக்கை உறுதிசெய்கிறது. மணல் தோண்டப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, மணல் மேடுகள் சமமாக்கப்பட்டிருக்கின்றன. கழிவுநீர் கடற்கரையில் விடப்படுவதோ அருகிலுள்ள நெல் வயல்களுக்குள் கசிவதோ அசுத்தத்திற்கு காரணமாகிறது.

குற்றச்செயல் இல்லாதவையா?

மிகவும் சமாதானமான இடங்களின் நற்பெயரையும் குற்றச்செயல் நுழைந்து கெடுத்துவிடுகிறது. சிறிய கரிபிய தீவாகிய பார்புடாவிலிருந்து, “பரதீஸில் படுகொலை” என்ற தலைப்புச்செய்தி வருகிறது. அந்தத் தீவின் கடற்கரைக்கப்பால் நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு சொகுசுக் கப்பலிலிருந்த நான்கு பேரின் கொடூரமான கொலையைப் பற்றி அந்த அறிக்கை விளக்கியது. இப்படிப்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதி முழுவதும் குற்றச்செயல் பரவுவதைப் பற்றிய கவலையை அதிகரிக்கின்றன.

ஒரு மத்திய அமெரிக்க நாட்டைப் பற்றி, “ ‘பரதீஸில்’ கும்பல்களுக்கு மத்தியில் நடக்கும் போர்களை போதைப்பொருட்கள் தூண்டுகின்றன” என்ற தலைப்புசெய்தியுடைய ஒரு அறிக்கை லண்டனின் த ஸண்டே டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்தது. சமாதானம் போய்விட்டது என்ற உண்மையைப் பற்றி புலம்புகிறவராய் ஒரு உள்ளூர் பதிப்பாசிரியர் இவ்வாறு கூறினார்: “காலையில் எழுந்தவுடன் தெருவில் 16 வயது இளைஞன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்ப்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.”

ஒரு பரதீஸிய சமுதாயத்தில் வாழவேண்டும் என்று விரும்புகிறவர்கள், சமாதானமாக வாழ ஒத்துக்கொள்ளும் ஆட்களை கவர முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்ன? ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியினருடைய விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் சீக்கிரத்தில் வெளிப்பட ஆரம்பித்தன. அவர்களுடைய திட்டத்தில் சேரவிருந்த சில விண்ணப்பதாரர்களுக்கு, இந்த ஏற்பாட்டிலிருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. “எங்களுக்கு முதலாளிகள் தேவையில்லை” என்று அந்தக் கணவர் கூறினார். “எங்கள் திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்காக எல்லா வளங்களையும் ஒன்றுதிரட்டுவதே எங்கள் நோக்கம். இதை ஒரு இலட்சிய சமுதாயம் என்று நான் அழைப்பேன்.” இப்படிப்பட்ட திட்டங்களில் இதுவே முதலாவதானதல்ல.—“பரதீஸுக்காக சமுதாயம் செய்த பரிசோதனைகள்” என்ற பெட்டியை பார்க்கவும்.

ஒரு பரிசுக்குலுக்கலில் வெற்றிபெறுவதன் மூலம் தங்கள் இலக்கை அடைய முடியும் என்று பரதீஸைத் தேடும் மற்றவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த வழியில் பெறப்படும் பொருளாதார வசதி சந்தோஷத்தில் விளைவடைவதில்லை. பிரிட்டனின் அப்போதைய மிகப்பெரிய குலுக்கலில் வெற்றிபெற்றவருடைய குடும்பம் கசப்பான உட்பூசலால் பாதிக்கப்பட்டது என்று பிப்ரவரி 1995-ல் த ஸண்டே டைம்ஸ் அறிக்கை செய்தது. வெற்றிபெற்றது, “சினத்தையும், குடும்பப் பகையையும், பிரமைதெளிந்த நிலையையும்” தவிர வேறு எதையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் இது ஒன்றும் புதிதல்ல.

இலட்சிய உலகத்திற்கான மனிதவர்க்கத்தின் வேட்கையை பற்றிய ஒரு ஆராய்ச்சியில் பத்திரிகையாளர் பர்னார்ட் லெவின் “திடீர் செல்வத்தின் பகற்கனவு” பற்றி கூறிவிட்டு இவ்வாறு உறுதியாக கூறுகிறார்: “அநேக கனவுகளைப் போலவே, இதுவும் ஒரு கொடுங்கனவாக முடியும். திடீர் செல்வங்களின் விளைவாக மக்கள் (தற்கொலைகள் உட்பட) மோசமான பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான போதுமான நிரூபிக்கப்பட்ட அறிக்கைகள் இருப்பதால், அதை வெறும் தற்செயல் நிகழ்வு என்று விலக்கிவிடமுடியாது.”

அழிவு நாள் மத உட்பிரிவுகளைப் பற்றியென்ன?

மற்ற பரதீஸ் திட்டங்கள் அதிகளவான தீமையில் விளைவடைந்திருக்கின்றன. 1993-ல் டெக்ஸஸிலுள்ள வாக்கோவில் ப்ராஞ்ச் டவிடியன்ஸ் கட்டட வளாகத்தில் அரசாங்க சட்ட அதிகாரங்களால் செய்யப்பட்ட முற்றுகையை பற்றி அறிக்கைசெய்த ஒரு செய்தித்தாள், “துப்பாக்கிகள், மனதைக் கட்டுப்படுத்தும் தந்திரங்கள், ஒரு அழிவு நாள் தீர்க்கதரிசி ஆகியவற்றின் ஆபத்தான கலவை”தான் இந்தப் பேரழிவிற்கு வழிநடத்தியது என்று கூறியது. வருத்தகரமாக இது தனியொரு சம்பவம் மட்டுமல்ல.

ஒரு இந்திய மதத்தலைவராக இருந்த மறைந்த பகவான் ஸ்ரீ ரஜினீஷை பின்பற்றியவர்கள் ஆரிகானில் ஒரு சமுதாயத்தை நிறுவினர்; ஆனால் தங்கள் அயலகத்தாரின் ஒழுக்க உணர்வுகளை புண்படுத்தினர். தங்கள் தலைவரின் செல்வச்செருக்கும் அவர்கள் செய்துவந்த பாலுறவு சோதனைகளும், “ஓர் அழகான பாலைவனச் சோலை”யை ஸ்தாபித்துவிட்டதாக கூறிய அவர்களுடைய உரிமைபாராட்டலை பொய்யாக்கின.

பரதீஸிய நம்பிக்கை உள்ளவர்களால் வழிநடத்தப்படும் மத உட்பிரிவுகளில் அநேகம், தங்களை பின்பற்றுபவர்கள் வழக்கத்துக்கு மாறான சில சடங்குகளை செய்யும்படி வற்புறுத்துகின்றன; அவை சிலசமயங்களில் மூர்க்கமான நேருக்குநேர் மோதல்களில் விளைவடைகின்றன. செய்தித்தாள் எழுத்தாளரான இயன் புரூடி விளக்குகிறார்: “வெறுமையில் தாங்கள் வாழ்வதாக உணருகிறவர்களுக்கும் அல்லது நிஜ உலகின் அழுத்தங்களை சமாளிக்க முடியாதவர்களுக்கும், மத உட்பிரிவுகள் ஒரு புகலிடமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமுதாயமாகவும் இருக்கின்றன.” என்றபோதிலும், அநேக மக்கள் பரதீஸில் வாழ அதிகமாக விரும்புவார்கள் என்ற உண்மையை அவருடைய வார்த்தைகள் உறுதிசெய்கின்றன.

தொல்லை இல்லாத பரதீஸ்

பிரச்சினைகளின் பட்டியல் முடிவற்றதாக தோன்றுகிறது: தூய்மைக்கேடு, குற்றச்செயல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், ஜனநெருக்கடி, இனக் கலவரம், அரசியல் பெருமாற்றங்கள்—இவையல்லாமல் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான துயரங்களாகிய வியாதியும் மரணமும். எந்தத் தொல்லையுமில்லாத பரதீஸ் இந்த உலகத்தில் எங்கும் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வரலாம். பர்னார்ட் லெவின் ஒப்புக்கொள்கிறவிதமாக: “மனிதவர்க்கத்தின் பதிவேட்டில் ஒரு கரும்புள்ளி காணப்படுகிறது; அது அநேகமாக மனிதவர்க்கத்தின் ஆரம்பத்திலிருந்தே அங்கிருப்பதாக தோன்றுகிறது. சில மனிதர்களுடன் மட்டுமேயன்றி அதிகமானவரோடு நெருங்கிய தொடர்பில் சந்தோஷமாக வாழ இயலாத மனிதனின் குணமே அது.”

என்றபோதிலும், உண்மையிலேயே தொல்லையற்ற ஒரு உலகளாவிய பரதீஸ் நிச்சயமாக வரும். அதன் னால வரையறை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. உண்மையில் இப்பொழுதே 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த இலக்கை நோக்கி உழைக்கின்றனர்; மேலும் அவர்கள் இப்பொழுதே தங்கள் மத்தியில் மதிப்பு வாய்ந்த ஒற்றுமையையும் ஓரளவு தொல்லையற்ற ஒரு சூழலையும் அனுபவித்து மகிழ்கின்றனர். நீங்கள் அவர்களை எங்கே காணமுடியும்? அவர்கள் இப்பொழுது அனுபவிக்கும் அதே நம்பிக்கையிலும் நன்மையிலும் நீங்கள் எவ்வாறு பங்குகொள்ளலாம்? வரவிருக்கும் அந்த பரதீஸ் எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும்?

[பக்கம் 6-ன் பெட்டி]

பரதீஸுக்காக சமுதாயம் செய்த பரிசோதனைகள்

பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டு சமதருமவாதியான ஏட்யன் காபேயும் (1788-1856) அவருடைய 280 கூட்டாளிகளும், அவருடைய கருத்துக்கள்படி வாழ ஒரு சமூக குடியிருப்பை இல்லினாய்ஸிலுள்ள நாவுவில் நிறுவினார்கள். ஆனால் எட்டு வருடங்களுக்குள் அந்தச் சமுதாயத்தில் அவ்வளவு அதிகமான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால் அது சீக்கிரத்திலேயே முடிவடைந்தது. அயோவா மற்றும் கலிபோர்னியாவில் இருந்த அதேபோன்ற குழுக்களும் அவ்வாறே முடிவுக்கு வந்தன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவரான ஷார்ல் ஃபுரியேவுக்கு (1772-1837) அதன் எல்லா அங்கத்தினர் மத்தியிலும் மாறிக்கொண்டே இருக்கும் கடமைகளையுடைய ஒரு கூட்டுறவு வேளாண் சமுதாயத்திற்கான கருத்துக்கள் இருந்தன. அந்த முழு தொகுதியின் வெற்றிக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு தனி நபருக்கும் ஊதியம் கொடுக்கப்படும். ஆனால் பிரான்ஸிலும் ஐக்கிய மாகாணங்களிலும் இதன் அடிப்படையிலான சமுதாயங்கள் சீக்கிரத்தில் இல்லாமற்போயின.

ஏறக்குறைய அதே சமயத்தில், வேல்ஸ் நாட்டின் சமூக சீர்திருத்தவாதியான ராபர்ட் ஓவன் (1771-1858), சமூக சமையலறையும் சாப்பாட்டறையும் கொண்ட கூட்டுறவு கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றாக சேர்ந்து வாழும்படி திட்டம் தீட்டினார். தனிப்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் மூன்று வயதை அடையும்வரை அவர்களை பராமரிப்பார்கள். அதற்குப் பிறகு அந்தப் பிள்ளைகளின் கவனிப்பை முழு சமுதாயமும் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஓவனின் சோதனைகள் தோல்வியடைந்ததால், அவர் தன்னுடைய தனிப்பட்ட சொத்தில் அதிகமானதை இழந்தார்.

ஜான் நோய்ஸ் (1811-1886), “ஐக்கிய மாகாணங்களில் இலட்சிய உலகத்தின் சோஷியலிஸ்ட் சமுதாயங்களில் மிகவும் வெற்றியடைந்த ஒன்று” என்று த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விவரிப்பதை நிறுவினார். அவரைப் பின்பற்றியவர்கள் ஒருதார திருமணங்களை விட்டுவிட்டு, வெறும் பரஸ்பர இசைவின் அடிப்படையில் எல்லாரிடையேயும் பாலுறவை அனுமதித்தபோது, நோய்ஸ் வேசித்தன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

மத்திய அமெரிக்காவிலுள்ள ஒருவித “முதலாளித்துவ இலட்சிய உலக”மான லாசே ஃபார் மாநகரம் அப்படிப்பட்ட ஒரு இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான சமீபத்திய முயற்சி என்று லண்டனின் த ஸண்டே டைம்ஸ் அறிவிக்கிறது. அத்திட்டம், முதலீடு செய்பவர்களைத் தேடியது. “21-ம் நூற்றாண்டின் அற்புத மாநகர”த்தில் வாழும் எதிர்பார்ப்பினால் வசீகரிக்கப்பட்டவர்களாய், 5,000 டாலர் செலுத்தி, தங்களைப் போன்ற விருப்பமுள்ள மற்றவர்கள் பணத்தை முதலீடு செய்யும்படி அவர்களை அழைக்கும் ஒருவித தொடர் விற்பனை (pyramid selling) செய்வதில் சேர்ந்துகொள்ளும்படி பரதீஸைத் தேடுபவர்கள் அழைக்கப்பட்டனர். அறிக்கை செய்யப்பட்டபடி, “அங்கு ஒரு ஹோட்டல் கட்ட இடம் கொடுக்கும்படி ஒரு நாடு எப்படியாவது உந்துவிக்கப்பட்டு, அங்கு ஒரு சிறிய ஹோட்டல் கட்டப்பட்டால், இந்தப் பணத்தைக்கொண்டு செய்யமுடிந்ததெல்லாம் அந்த இடத்தை பார்ப்பதற்கு செல்ல விமான டிக்கெட் வாங்க உதவுவது மட்டுமே,” என்று அந்தச் செய்தித்தாள் கூறியது. அங்கு ஒரு “பரதீஸ்” ஸ்தாபிக்கப்படுவதற்கான எந்த உண்மையான நம்பிக்கையும் இல்லை.

[பக்கம் 7-ன் படம்]

பரதீஸைத் தேடும் அநேகருக்கு ஒரு தீவு கவர்ந்திழுப்பதாக இருக்கிறது. ஆனால் மிகவும் சமாதானமான இடங்களையும்கூட இன்று குற்றச்செயல் சீர்குலைத்துவிடுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்