உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/8 பக். 24-25
  • விலங்கு தூக்கத்தின் ரகசியங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விலங்கு தூக்கத்தின் ரகசியங்கள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தூக்க மன்னர்கள்
  • ‘பறக்கையில்’ தூக்கமா?
  • நீருக்கடியில் குட்டித்தூக்கம்
  • ஒரு கண் திறந்த நிலையில்
  • உங்கள் உடம்புக்கு ஏன் தூக்கம் தேவை
    விழித்தெழு!—1995
  • இரவு நேர வேலைகளைச் சமாளித்தல்
    விழித்தெழு!—1990
  • உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரிவுகள்
    விழித்தெழு!—2003
விழித்தெழு!—1997
g97 10/8 பக். 24-25

விலங்கு தூக்கத்தின் ரகசியங்கள்

கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

தூக்கம்—இந்த ஓய்வு நிலையில் நம் வாழ்நாளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை செலவிடுகிறோம். நேரத்தை வீணாக்குவதாய் இராமல், எண்ணற்ற முக்கியமான உடலியல், மனவியல் சார்ந்த தேவைகளை தூக்கம் பூர்த்தி செய்வதாய்த் தெரிகிறது. இவ்வாறாக, கடவுளிடமிருந்து பெற்ற ஒரு மதிப்புமிக்க பரிசாக தூக்கத்தை கருதலாம்.—சங்கீதம் 127:3-ஐ ஒப்பிடுக.

விலங்கு உலகிலும் தூக்கம் ஒரு முக்கிய பாகம் வகிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. உண்மையில், பல உயிரினங்கள் வசீகரிக்கும் விதத்திலும், சில சமயங்களில் வேடிக்கையான விதத்திலும், பெரும்பாலும் அபூர்வமான விதத்திலும் கண்ணயர்ந்து விடுகின்றன. சில உதாரணங்களை நாம் கவனிப்போம்.

தூக்க மன்னர்கள்

ஆப்பிரிக்காவின் நண்பகல் வெயிலில் ஒரு சிங்கம் மல்லாக்கப் படுத்துத் தூங்குவதை எவராவது பார்த்திருப்பாரென்றால், அது ஒரு வீட்டுப்பூனையைப் போன்ற மிகவும் சாதுவான பிராணியென்றே முடிவுசெய்வார். என்றபோதிலும், தோற்றங்கள் வஞ்சனையானவையே. “துயிலும் சிங்கத்தை எழுப்பும் துணிவு எவருக்குண்டு?” என எழுதினார் 17-ம் நூற்றாண்டு எழுத்தாளரான தாமஸ் கேம்ப்பியன். ஆம், வலிமைபொருந்திய சிங்கத்துக்கும்கூட, கொன்றுதின்னும் அதன் வாழ்க்கைப்பாணியை வெற்றிகரமாய் நிறைவேற்ற ஒரு நாளுக்கு சுமார் 20 மணிநேர தூக்கம் தேவை.

நியூ ஜீலாந்தில் காணப்படும் ஓணானைப் போன்ற தோற்றமுடைய சோம்பேறி பிராணியான தூயதாராவையும் எண்ணிப்பாருங்கள். அது, குளிர்கால உறக்க நிலையில் (hibernation) அரைகுறையாக தூங்கியே சுமார் பாதி ஆண்டைக் கழிக்கிறது. ஏன், தூயதாரா அவ்வளவு சோம்பேறியாய் இருப்பதால், அதன் உணவைச் சவைத்துக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுகிறது! ஆனால் இந்தத் தூக்கமெல்லாம் ஏதோவொரு விதத்தில் அதற்கு நன்மை பயக்குவது தெளிவாயுள்ளது; ஏனெனில், விஞ்ஞானிகளுடைய கணிப்பின்படி, சில தூயதாராக்கள் சுமார் 100 ஆண்டுகள்கூட உயிர்வாழுமாம்!

கற்பனை கதாபாத்திரமான ரிப் வான் விங்க்கிளைப் போல, மற்ற பிராணிகளும் நீண்ட காலம் தூங்குகின்றன. பல விலங்குகள் கடும் குளிர்காலத்தை இப்படித்தான் சமாளிக்கின்றன. இதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள, இந்த விலங்கானது நீண்ட கால உறக்கத்தின்போது ஊட்டத்தைப் பெற உதவும் கொழுப்பை தன் உடலில் அடுக்கடுக்காய்ச் சேமித்து வைத்துக்கொள்கிறது; ஆனாலும், தூக்கநிலையில் இருக்கும் விலங்கு உறைந்து செத்துப்போகாமல் இருக்க எது உதவுகிறது? இன்ஸைட் தி அனிமல் உவர்ல்ட் என்ற புத்தகம் விளக்குவதன்படி, இந்த விலங்கின் மூளையானது, இதன் உடலிலுள்ள இரத்தத்தில் ரசாயன மாற்றங்களைத் தூண்டிவிடுகிறது; இவ்வாறு உறையாமல் இருக்க உதவும் இயற்கையான ரசாயனப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பிராணியினுடைய உடலின் வெப்பநிலை உறைநிலைக்குச் சற்று அதிகமான வெப்பநிலைக்குக் குறைகையில், இதன் இதயத்துடிப்பு, இயல்பான வேகத்திலிருந்து சற்றே குறைகிறது; அது சுவாசிக்கும் வேகமும் குறைகிறது. பிறகு ஓர் ஆழ்ந்த உறக்கம் தொடங்குகிறது; அது பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.

‘பறக்கையில்’ தூக்கமா?

சில விலங்குகள் வெகு அபூர்வமான விதங்களில் தூங்குகின்றன. சூட்டி டெர்ன் என்றழைக்கப்படும் கடல்பறவையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஓர் இளம் சூட்டி டெர்ன் அதன் கூட்டைவிட்டு வெளியேறும்போது, அது நேரே கடலுக்குப் பறந்துசெல்வதோடு, அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து பறந்துகொண்டே இருக்கிறது! அதற்கு நீர் ஒட்டாத இறகுகள் இராததாலும், மற்ற டெர்ன் பறவைகளைப்போல நீரில் நடக்க உதவும் சவ்வு படர்ந்த கால்கள் இராததாலும் சூட்டி டெர்ன் பறவை கடலுக்குள் மூழ்கிவிடுவதைத் தவிர்த்துவிடுகிறது. அது நீர்ப்பரப்பிலிருந்து சிறு மீனைக் கொத்தி உணவாகக் கொள்கிறது.

ஆனால் அது எப்போது தூங்குகிறது? வட அமெரிக்காவின் நீர், இரை, வேட்டைப் பறவைகள் என்ற ஆங்கில புத்தகம் கூறுவதாவது: “அவற்றின் இறகுகள் நீர்புகும் தன்மைகொண்டவையென்பதால், அவை சமுத்திரத்தின் மேற்பரப்பில் தூங்குவது சாத்தியமல்ல என தோன்றுகிறது. இப் பறவைகள் பறக்கையிலேயே தூங்கலாம் என்று சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.”

நீருக்கடியில் குட்டித்தூக்கம்

மீன்கள் தூங்குகின்றனவா? த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுவதன்படி, முதுகெலும்புள்ள பிராணிகளில், “ஊர்வனவும், பறப்பனவும், பாலூட்டிகளும்தான் மூளையின் அலை அமைப்பு மாற்றங்களுடன் உண்மையான தூக்கத்தைப் பெறுகின்றன.” அப்படியிருந்தாலும், மீன்கள்—பெரும்பாலானவையின் கண்கள் மூட முடியாதவையாய் இருக்கிறபோதிலும்—தூக்கத்தைப் போன்ற ஓய்வுநேரத்தைப் பெறுகின்றன.

சில மீன்கள் பக்கவாட்டில் தூங்குகின்றன; மற்றவை தலைகீழாக அல்லது செங்குத்தான நிலையில் தூங்குகின்றன. பிளாண்டர் போன்ற தட்டைமீன்கள் சில, விழித்திருக்கையில் கடற்படுகையின் அடித்தளத்தில் வாழ்கின்றன. தூங்குகையிலோ, அடியிலிருந்து சில சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்கும் நிலையில் இருக்கின்றன.

வண்ணநிறமுள்ள கிளி மீனுக்கு, தூங்கச்செல்வதற்கு முன் ஓர் அபூர்வ பழக்கம் உண்டு; அதாவது, அது ஒரு “நைட்டியை” உடுத்திக்கொள்கிறது. அதன் தூக்க நேரம் நெருங்கி வரவர, அதன் உடல் முழுவதையும் மூடிவிடுகிற பிசின்போன்ற, அல்லது பிசுபிசுப்பான திரவமொன்றை அது சுரக்கிறது. இதன் நோக்கமென்ன? “எதிரிகள் [தன்னைக்] கண்டுபிடித்துவிடாமல் பாதுகாத்துக்கொள்வதற்கே” என்று இயற்கை எழுத்தாளர் டக் ஸ்ட்டூவர்ட் கூறுகிறார். அது விழிக்கும்போதோ அந்தப் பிசுபிசுப்பான உடையைக் கிழித்துக்கொண்டு வெளிவருகிறது.

அதைப்போலவே சீல்களுக்கும் தூக்க நேரத்துக்கு முன்பு வழக்கமான வேலையொன்று இருக்கிறது. அவை அவற்றின் தொண்டைகளை ஒரு பலூனைப்போல ஊதி, இயற்கையான உயிர்காக்கும் மிதவையை உருவாக்கிக்கொள்கின்றன. இந்த வகையில், சுவாசிப்பதற்காக தம் மூக்கை நீர்ப்பரப்பிற்கு மேலே தெரியும்படி வைத்துக்கொண்டு நீரில் செங்குத்தாக மிதந்துகொண்டே அவற்றால் தூங்க முடியும்.

ஒரு கண் திறந்த நிலையில்

உண்மைதான், காட்டில் விலங்குகள் தூங்கும்போது, அவற்றின் எதிரிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகம். ஆகவே, பல விலங்குகள் ஒரு கண்ணைத் திறந்துவைத்துக்கொண்டே தூங்குகின்றன என்றுதான் சொல்லவேண்டும். தூக்கத்தின்போது, ஆபத்தை உணர்த்தும் ஓசைகளுக்கு பிரதிபலிக்கும்படி ஜாக்கிரதையாய் இருக்குமளவுக்கு அவற்றின் மூளைகள் ஓரளவு உணர்வுள்ளவையாய் இருக்கின்றன. இன்னும் பிற விலங்குகள் ஏதேனும் ஆபத்திருக்கிறதா என்று அவ்வப்போது பார்த்துக்கொள்வதன் மூலம் உயிர்பிழைக்கின்றன. உதாரணமாக, கூட்டமாய் தூங்கும் பறவைகள் ஆபத்து ஏதும் நேரிடப்போகிறதா என்பதைப் பார்ப்பதற்காக, அவ்வப்போது ஒரு கண்ணைத் திறந்து, நைசாக ஒரு பார்வை பார்த்துக்கொள்கின்றன.

அதைப்போலவே, ஆப்பிரிக்காவிலுள்ள மான் அல்லது வரிக்குதிரை கூட்டங்கள் ஓய்வு நேரங்களின்போது ஒன்றையொன்று பாதுகாக்கின்றன. சில சமயங்களில் கூட்டத்திலுள்ள எல்லா விலங்குகளுமே தரையில் சோம்பலாய்ப் படுத்துக்கொண்டு, அவற்றின் தலையை மட்டும் மேலே உயர்த்தி, விழிப்புள்ள ஒரு நிலையில் வைத்துக்கொள்கின்றன. அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு விலங்கு, பக்கவாட்டில் சாய்ந்து ஆழ்ந்த தூக்கத்தில் அசைவற்று தரையில் கிடக்கும். சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தக் கூட்டத்தின் விலங்குகள் ஒவ்வொன்றாக இவ்விதமாய் தூங்கச்செல்கின்றன.

அதைப்போலவே யானைகளும் ஒரு கூட்டமாக தூங்குகின்றன. என்றபோதிலும், முதிர்ந்தவை, பொதுவாக நின்றுகொண்டே சற்றே கண் அயர்கின்றன; அவற்றின் கண்களை அவ்வப்போது திறந்து பார்த்துக்கொள்ளும்; ஆபத்து ஏதாவது நேரிடுவதற்கான ஓசை கேட்கிறதா என்பதை அறிவதற்காக அவற்றின் பெரிய காது மடல்களை உயர்த்தி விரித்துவைத்துக்கொள்ளும். இந்தப் பெரிய காவற்காரர்களின் பாதுகாப்பில், யானைக்குட்டிகள் பக்கவாட்டில் நீட்டிநிமிர்ந்து படுத்துக்கொண்டு ஆழ்ந்து தூங்கும். யானை நினைவுகள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில், எழுத்தாளரான சிந்தியா மாஸ், ஒரு முழு யானைக்கூட்டமும் தூங்கச் செல்வதைப் பார்த்ததாக நினைவுபடுத்திச் சொல்வதாவது: “முதலில் இளம் குட்டி யானைகள், பிறகு வயதான யானைகள், முடிவில் முதிர்ந்த பெண்யானைகள் என எல்லாம் கீழே படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டன. நிலா வெளிச்சத்தில் அவை, பெரிய சாம்பல் நிற பாறைகள் போன்று தெரிந்தன; ஆனால் அவற்றின் ஆழ்ந்த, நிம்மதியான குறட்டை சப்தமோ அந்த தோற்றத்தைப் பொய்யாக்கிவிட்டது.”

விலங்குகளின் தூக்கப் பழக்கங்களைப் பற்றி நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏராளம் இருக்கிறது. ஆனாலும், நமக்குத் தெரிந்திருக்கும் இந்த கொஞ்ச விஷயமே, ‘சகலத்தையும் சிருஷ்டித்தவரின்’ மகத்தான ஞானத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை உந்துவிக்கவில்லையா?—வெளிப்படுத்துதல் 4:11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்