நம்முடைய பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது முதற்கொண்டு, போரிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக உலக அரசாங்கங்கள் பல ஒப்பந்தங்களை செய்து, அவற்றில் கையெழுத்திட்டிருக்கின்றன. இவற்றில் பிள்ளைகளுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றோடுகூட துணிமணிகளும் கொடுப்பதை அனுமதிக்கும் ஒப்பந்தங்களும் உள்ளன. பாலின துர்ப்பிரயோகம், சித்திரவதை, வன்முறை ஆகியவற்றிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதாக சர்வதேச உடன்படிக்கைகள் வாக்குறுதியளிக்கின்றன. 15 வயதுக்கு கீழேயுள்ள எவரும் போர்ப்படைகளில் சேர்வதையும்கூட இவை தடைசெய்கின்றன.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு தயாரித்திருக்கும் அறிக்கையான உலக பிள்ளைகளின் நிலை 1996 (ஆங்கிலம்), இத்தகைய சட்டங்களை, “மெய்யான திருப்புமுனை” என்று பாராட்டி வரவேற்று இவ்வாறு தொடர்கிறது: “அரசியல்வாதிகள் பின்பு தங்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நியமங்களை அறிந்திருப்பதால், அத்தகைய நியமங்களை தங்களுடைய மதிப்பீடுகளிலும் அதிகளவில் கவனத்தில் கொள்கின்றனர்.”
உண்மைதான், சட்டங்களை இயற்றுவதற்கான ஆற்றலையும் நோக்கத்தையும் உலகளாவிய சமுதாயம் பெரும்பாலும் இழக்கிறது என்பதையுங்கூட அரசியல்வாதிகள் புரிந்திருக்கிறார்கள். “இத்தகைய சட்டங்கள் எந்தளவுக்கு அவமதிக்கப்படுகின்றனவோ, அந்தளவுக்கு இப்பொழுது இருக்கும் உலகளாவிய சட்டங்களைப் புறக்கணிப்பது எளிதாக இருக்கிறது” என்று அந்த அறிக்கை ஒத்துக்கொள்கிறது.
அடுத்து பணத்தைப் பற்றிய விஷயத்துக்கு வருவோம். 1993-ல் சண்டைகள் 79 நாடுகளில் தீவிரமடைந்தன. அவற்றில் அறுபத்தைந்து நாடுகள் ஏழை நாடுகள். இத்தகைய ஏழை நாடுகள் சண்டையிடுவதற்கான போர்க்கருவிகளை எங்கிருந்து பெற்றுக் கொண்டன? பெரும்பாலும் பணக்கார நாடுகளிடமிருந்துதான். மேலும், வளரும் நாடுகளுக்கு போர்க்கருவிகளை ஏற்றுமதி செய்வதில் முதன்மையாக இருந்த ஐந்து நாடுகள் யாவை? ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிலுள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளே!
அக்கறை செலுத்துவோர்
போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நிலையைக் குறித்து ஆழ்ந்த அக்கறை செலுத்துவோரும் இருக்கிறார்கள் என்பது உண்மையே. இவர்கள் தனிப்பட்டவர்களாகவும், அமைப்புகளாகவும் போரால் பாதிக்கப்பட்ட இளம் பிள்ளைகளுக்கு அன்புடன் உதவிசெய்கிறார்கள். உதாரணமாக, போரில் பங்கெடுக்காத யெகோவாவின் சாட்சிகள், இவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் போரால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது என்பது உண்மையில் போரையே தவிர்ப்பதை அர்த்தப்படுத்துகிறது; இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பாக தோன்றக்கூடும். மனித சமுதாயம் காலாகாலமாய் சண்டை சச்சரவிலேயே உழன்று வருவதால், மனிதர்கள் உலகளாவிய சமாதானத்தை ஒருபோதும் கொண்டுவர மாட்டார்கள் என்று அநேகர் முடிவுசெய்கின்றனர். இந்த நோக்குநிலையில் அவர்களுடைய முடிவு சரியே.
கடவுள் இந்தத் தேசங்களுடைய விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டார் என்றோ, இந்தக் கிரகத்துக்கு நிலையான சமாதானத்தைக் கொண்டுவரமாட்டார் என்றோ மக்கள் முடிவுசெய்கின்றனர். இந்த நோக்குநிலையிலோ, அவர்களுடைய முடிவு சரியல்ல.
நம்முடைய சிருஷ்டிகர், யெகோவா தேவன் பூமியில் நடந்துகொண்டிருக்கும் காரியங்களின்பேரில் ஆழ்ந்த அக்கறை செலுத்துகிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிளில், யெகோவா கேட்கிறார்: “துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்.” கடவுள் உறுதியுடன் பதிலளிக்கிறார்: “சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை.”—எசேக்கியேல் 18:23, 32.
இதைச் சிந்தித்து பாருங்கள்: நம்முடைய இரக்கமுள்ள சிருஷ்டிகர், துன்மார்க்கரான பெரியவர்களும்கூட மனந்திரும்பி, வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புகிறாரென்றால், பிள்ளைகள் வாழவேண்டும் என்றும், வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்றும்கூட அவர் நிச்சயமாகவே விரும்புவார்! இருந்தாலும், கடவுள் துன்மார்க்கத்தை என்றென்றுமாக சகித்துக்கொண்டிருக்க மாட்டார். “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்” என்று கடவுளுடைய வார்த்தை வாக்குறுதியளிக்கிறது. “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்.”—சங்கீதம் 37:9, 10.
தம்முடைய பரலோகத் தகப்பனுடைய ஆளுமையை பரிபூரணமாக பிரதிபலித்தவராகிய இயேசு கிறிஸ்து, பிள்ளைகளை நேசித்தார்; “பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றும் சொன்னார். (மத்தேயு 19:14) போர்க்கடவுட்களுக்கு பிள்ளைகளை பலிகொடுப்பது யெகோவா தேவனுக்கும், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கும் அருவருப்பானது.—உபாகமம் 18:10, 12-ஐ ஒப்பிடுக.
ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கான கடவுளின் வாக்குறுதி
தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவால் உரைக்கப்பட்ட சத்தியம் வரவிருக்கும் எல்லா நித்திய காலத்துக்குமாக நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காகவே நூற்றாண்டுகளாக கடவுள் யுத்தங்களையும் துன்பத்தையும் அனுமதித்து வந்திருக்கிறார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) சீக்கிரத்தில், யெகோவா ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவதன்’ மூலமாக தம்முடைய சர்வலோக உன்னத அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்வார் என்று பைபிள் வாக்கு கொடுக்கிறது. (சங்கீதம் 46:9) “[மக்கள்] தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்ற ஒரு காலத்தைப் பற்றியும்கூட பைபிள் முன்னறிவிக்கிறது.—ஏசாயா 2:4.
போரால் கொல்லப்பட்டிருப்பவர்களுக்கு என்ன நேரிடும்? அவர்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? போரில்லாத உலகத்தில் மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறித்து இயேசு வாக்குறுதியளித்தார்; அவர் சொன்னார்: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும் . . . எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) இதைப்போலவே, அப்போஸ்தலனாகிய பவுலுங்கூட நம்பிக்கையுடன் இவ்வாறு தெரிவித்தார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’—அப்போஸ்தலர் 24:15.
கடவுளின் வாக்குறுதிகள் நிச்சயமாகவே நிறைவேற்றமடையும். தாம் நோக்கம் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்கான வல்லமையும் திடத்தீர்மானமும் அவருக்குண்டு. (ஏசாயா 55:11) போரை முடிவுக்கு கொண்டுவருவாரென்று அவர் சொல்லும்போது, நிஜமாக தாம் செய்யப் போவதையே அவர் சொல்கிறார். மரித்தவர்களை உயிர்த்தெழுப்புவதாக அவர் வாக்கு கொடுத்திருப்பதால், அவர் அதைச் செய்வார். காபிரியேல் தூதன் சொன்னவிதமாகவே: “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:37.
[பக்கம் 17-ன் படம்]
போரே இல்லாதபோது, பிள்ளைகள் அனைவரும் முழுநிறைவான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள்