கொண்டை கொக்குகள்—கொண்டையுள்ள வண்ணமிகு நாட்டியக்கலைஞர்கள்
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கொண்டை கொக்கு உலகிலுள்ள மிக அழகிய பறவைகளில் ஒன்று. இது கண்கவர் வண்ணங்கள் இழையோடும் ஒய்யாரத் தோற்றமுடைய கம்பீரமான பறவை. இது ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள, மிகப்பெரிய விரிந்த சிறகுகளையும், ஒடிசலான நீண்ட கழுத்தையும் உடையது. இவை மற்ற வகை கொக்குகளிடமும் உள்ள தனிச்சிறப்பு அம்சங்களாகும்.
கொண்டை கொக்குகளில் ஆண், பெண் ஆகிய இரண்டுமே ஒன்றுபோல தோற்றமளிக்கின்றன. அப்பறவையின் இரு பக்கங்களிலும் இழைந்தோடும் தூய வெண்சிறகுகள் வாலருகே பொன்னிறமாக மாறுகின்றன; இந்த வெண்சிறகுகள் முதுகுப்புற கருமைநிற இறகுகளால் கவர்ச்சியாக சுற்றிலும் இழைக்கப்பட்டுள்ளன. மற்ற சிறகுகள் அடர்த்தியான செந்தவிட்டுநிறத்தில் உள்ளன.
கொண்டை கொக்கின் முகமே ஒரு தனி அழகுதான். அதன் தந்தநிறக் கன்னங்கள், உச்சந்தலையிலும் தொண்டையிலும் இருக்கும் நீண்ட மிருதுவான கருமை இறகுகளால் சூழப்பட்டுள்ளன. கண்கள் அழகிய வெளிர்நீல நிறத்தில் உள்ளன. தொண்டையின் கருமை இறகுகளிலிருந்து தொங்குகிற நீண்ட, கருஞ்சிவப்பு நிற தாடி, அக்கொக்கு அதன் கழுத்தை கிடைமட்டமாக நீட்டும்போது கருஞ்சிவப்பு தொங்கட்டானைப் போல ஊஞ்சலாடுகிறது. அதன் தலையிலுள்ள பகட்டான மெல்லிய பொன்னிற இறகுகள் அற்புத அழகோடு ஒரே சீரான கிரீடத்தைப் போலிருப்பதால் எல்லாவற்றிலும் மிக எடுப்பாக காட்சியளிக்கிறது. இந்த பளபளப்பான மெல்லிய இறகுகள்மீது கதிரவனின் கதிர்கள் படும்போது பொன்னிறமாக பிரகாசிக்கின்றன. கண்ணைப் பறிக்கும் இத்தகைய மாறுபட்ட வண்ணங்கள் அனைத்தும் அதன் இரண்டு நீளமான, மெல்லிய கருமைநிற கால்களுக்கு மேலே பொருந்தியுள்ளன.
கொண்டை கொக்குகளின் எக்காளமுழக்கம் ஆப்பிரிக்காவின் மறக்கமுடியாத சத்தங்களில் ஒன்று: ஓ-வாங்க்! ஓ-வாங்க்! ஓ-வாங்க்! இந்தப் பெருமுழக்கம் வெகு தொலைவுக்கும்கூட கேட்கும். அடிக்கடி, ஒரு ஜோடு கொக்குகள், தாங்கள் தூங்கும் மரங்களிலிருந்தோ அல்லது மரங்களை நோக்கி பறக்கும்போதோ இவ்விதமாக சேர்ந்து முழக்கமிடுகின்றன. வருடத்தின் குறிப்பிட்ட சில சமயங்களில், கொண்டை கொக்குகள் 30 பறவைகள் வரைக்கும்கூட கூட்டங்கூடுகின்றன; அப்போது அவை எழுப்பும் கர்ணகடூரமான சத்தம் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும்.
பெற்றோரின் பராமரிப்பு
தெளிவாக தெரிந்தபடி, கொண்டை கொக்குகள் ஆயுசுக்கும் ஒரே துணையுடனே வாழ்கின்றன. இவை கிழக்கு ஆப்பிரிக்காவின் அநேக பகுதிகளில் காணப்படுகின்றன; அதிலும் குறிப்பாக சேற்று நிலங்களிலும் சதுப்புநிலங்களிலும் தங்களுடைய கூடுகளைக் கட்டி, குஞ்சுகளை பராமரிப்பதைக் காணலாம். புற்களும் நாணல்களும் அடங்கிய பெரிய கூம்பு வடிவான குவியலே அதன் கூடு; பெண் கொக்கு இரண்டு அல்லது மூன்று பெரிய, பச்சை-நீல நிற முட்டைகளை இடுவதற்கு அது ஒரு மேடையாக திகழ்கிறது. ஆணும் பெண்ணும் மாறிமாறி முட்டைகளின்மீது உட்காருகின்றன; ஒரு மாதத்திற்குள்ளாகவே குஞ்சுகள் பொரித்துவிடுகின்றன. பெற்றோர் இருவருமாக ஒன்றுசேர்ந்து தங்களுடைய மிருதுவான குட்டிகளை பராமரித்து, பேணிக்காப்பார்கள்; மேலும் தங்களுடைய குஞ்சுகளை பயமில்லாமல் பாதுகாப்பார்கள்.
பூச்சிகள், தவளைகள், குட்டிப்பாம்புகள், விதைகள் ஆகியவையே கொண்டை கொக்குகளின் முக்கிய உணவு. அவை தங்களுடைய நீண்ட ஒடிசலான கால்களையும், பெரிய பாதங்களையும் உபயோகித்து, நிலத்தை பலமாக தட்டுகின்றன; அப்போது புல்லின் மறைவிலிருந்து வெளியே வரும் எந்தச் சிறிய பிராணியையும் லபக்கென்று பிடித்து உண்கின்றன.
பறவை பாலேநடனம்
கொண்டை கொக்குகள் ஆர்வமிகுந்த, மகிழ்வூட்டும் நாட்டியக்கலைஞர்கள். தங்களுடைய வண்ணமிகு பெரிய சிறகுகளை படபடவென்று அடித்துக்கொண்டு, ஆகாயத்திலே நேராக எழும்பி, வான்குடையில் தங்களை இணைத்துக்கொண்டதுபோல கீழ்நோக்கி மென்மையாக மிதந்து வருகின்றன. அங்குமிங்கும் ஒய்யாரமாக துள்ளிக்குதித்தவாறு, ஆகாயத்தில் குதித்தெழும்பியும், தங்களுடைய துணையைச் சுற்றிச்சுற்றி வந்தும், அவற்றினுடைய தலையை செல்லமாக இடித்தும், கோமாளித்தனமான சேஷ்டைகளுடன் சுட்டித்தனம் புரிகின்றன. தங்களுடைய நீண்ட இறகுகளை விரித்துவைத்தபடி, நிமிர்ந்து நின்றுகொண்டு, தங்களுடைய சிறகுகளிலுள்ள அழகான வண்ணங்களை பகட்டாக காட்டுகின்றன.
சிலசமயங்களில், ஒரு ஜோடி தங்களுடைய கழுத்தை எடுப்பான வடிவத்தில் திருகிக்கொண்டு, கண்களை நேருக்குநேர் சந்திக்கின்றன. இரண்டும் தங்கள் அலகை நேருக்குநேர் வைத்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று பாடுவதைப்போல, மெதுவாக சேர்ந்திசை செய்கின்றன. பின்பு நேராக நின்றுகொண்டு, தங்களுடைய நேர்த்தியான பாலேநடனத்தை மீண்டும் தொடர்கின்றன.
உயிர்வாழ்வதற்கான போராட்டம்
கொண்டை கொக்குகள் மனிதர்களிடமாக அதிக சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கின்றன; அதனால் சிரமமின்றி வளர்க்கப்படுகின்றன. அவற்றின் ரம்மியமான வர்ணம், வடிவம், அவற்றின் மகிழ்வூட்டும் நடனக்காட்சி ஆகியவற்றின் காரணமாக விலங்ககங்களில் அவை பிரபலமாக உள்ளன. மேலும் தனிநபர்களின் எஸ்டேட்களையும் பூங்காக்களையும் அழகுபடுத்துவதற்காகவும் அவை விரும்பப்படுகின்றன. இவ்வளவு கிராக்கி இருப்பதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆச்சரியத்துக்குரியதல்ல. ஈரப்பசையுள்ள நிலங்களை பண்படுத்துவதும், நதிகளையும் ஏரிகளையும் மாசுபடுத்தக்கூடிய விஷத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதும், கொண்டை கொக்குக்கு கூடுதலான சிரமத்துக்கு காரணமாயுள்ளது.
கண்ணை ஈர்க்கும் இக்கொண்டை கொக்கை ஒருபோதும் பார்க்கமுடியாத, அதன் சத்தத்தை கேட்கமுடியாத ஒரு காலம் வந்தால் அது வருத்தத்திற்குரிய ஒன்றே. இருந்தபோதிலும், சீக்கிரத்தில் இந்த முழு பூமியும் புதிதாக ஆக்கப்படும் என்று பைபிள் வாக்களிக்கிறது. (2 பேதுரு 3:13-ஐ ஒப்பிடுக.) அப்போது, பூமியின் அனைத்து குடிமக்களும், தெய்வீக படைப்பாளராகிய யெகோவா தேவனுடைய உன்னதமான படைப்பாற்றலிலும், அவருடைய கொண்டையுள்ள வண்ணமிகு நாட்டியக்கலைஞர்களிலும் என்றென்றும் மகிழ்ச்சியடைவார்கள்.