பைபிளின் கருத்து
வறுமை திருட்டை நியாயப்படுத்துகிறதா?
“வறுமை மனித மகிழ்ச்சியின் மிகப்பெரிய எதிரி; அது உண்மையாகவே உரிமையை அழிக்கிறது; அது சில நல்லொழுக்கங்களை நடைமுறையற்றதாக்கி, மற்றவற்றை மட்டுக்குமீறி கடுமையானதாக ஆக்குகிறது.”—சாமுவேல் ஜான்சன், 18-ம் நூற்றாண்டு எழுத்தாளர்.
ரோம அரசியல் அறிஞரான மாக்னுஸ் ஔரேலியஸ் கேஸியோடோரஸ் என்பவர் “வறுமையே குற்றச்செயலுக்கு மூலகாரணம்” என்று சொன்னார். இத்தகைய கருத்துக்கள், சில குறிப்பிட்ட குற்றச்செயல்கள் வறுமையின் இயல்பான விளைவுதான் என்பதை பரிந்துரைப்பதுபோல தோன்றுகின்றன. குறிப்பாக, அக்குற்றச்செயல் திருட்டாக இருக்கும்பட்சத்தில், இன்றுள்ள அநேகர் அதை அவ்வாறே ஒத்துக்கொள்வதாக தோன்றுகிறது.
அடக்குமுறையும் வறுமையும் திருட்டை நியாயப்படுத்துகின்றன என்ற எண்ணம் மிகவும் பிரபலமானதே. ராபின் ஹுட்டைப் பற்றிய 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆங்கில பாடலை கவனியுங்கள்; அது செல்வந்தர்களிடமிருந்து திருடி, லாபத்தை ஏழைகளுக்கு விநியோகித்த சட்டத்தை மீறிய ஒருவரை விவரிக்கும் பழங்கதை. நூற்றாண்டுகளாக அவர் ஒரு கதாநாயகனாக கருதப்பட்டிருக்கிறார்.
இன்று அநேகர் கடுமையான பொருளாதார இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. 131 கோடி மக்கள் ஒரு நாளை ஒரு டாலர்கூட இல்லாமல் ஓட்டுகிறார்கள் என சமீபத்தில் உலக வங்கி அறிவித்தது. ஒரு சுற்றாய்வில், 70 சதவீத பிலிப்பீன்ஸ் தேசத்தினர் தங்களை ஏழைகளாகவே கருதுவதாக சொன்னார்கள். பிரேஸிலின் ஜனத்தொகையில் 20 சதவீதமாக இருக்கும் பெரும் செல்வந்தர்கள், அதில் 20 சதவீதமாக இருக்கும் பரம ஏழைகள் சம்பாதிப்பதைக் காட்டிலும் 32 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலைமைகளால் சில ஆட்கள் அந்தளவுக்கு வெறுப்படைவதால், உயிர்பிழைப்பதற்கு வேண்டிய அன்றாட தேவைகளை வெறுமனே திருப்தி செய்வதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யவும், முடிவில் திருடவும்கூட துணிந்துவிடுகின்றனர்.
திருட்டை பைபிள் தெளிவாகவே கண்டனம் செய்கிறது. பத்து கட்டளைகளில் எட்டாவது கட்டளை இவ்வாறு சொல்கிறது: “களவு செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:15) இருப்பினும், மிக மோசமான பொருளாதார சூழ்நிலைமைகளின் உந்துதலின் காரணமாக ஒருவன் திருடும்போது, அது தவறல்ல என்ற மனநிலை பைபிள் நம்பிக்கையுள்ள அநேகருக்கும்கூட இருக்கிறது.
இது முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது: வறுமை திருட்டை உண்மையிலேயே நியாயப்படுத்துகிறதா? மிதமிஞ்சிய பொருளாதார கஷ்டத்தில் ஒருவர் வாழும்போது அவர் என்ன செய்யவேண்டும்? அவருக்கு வியாதிப்பட்டிருக்கும் அல்லது பசியால் வாடும் பிள்ளைகள் இருந்தால் அப்போது என்ன செய்வது? இத்தகைய நிலைமைகளில், அதிலும் குறிப்பாக அப்பொருட்கள் எவரிடமிருந்து எடுக்கப்பட்டதோ அவருக்கு அதனால் எந்த இழப்புமில்லை என்றபட்சத்தில் திருடுவதை யெகோவா தேவன் அனுமதிப்பாரா?
கடவுள் என்ன சொல்கிறார்?
இயேசு தம்முடைய தகப்பனின் குணநலன்களை பிரதிபலித்ததால், அவருடைய முன்மாதிரி கடவுளுடைய நோக்குநிலையை புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யலாம். (யோவான் 12:49) பூமியிலிருக்கும்போது, ஏழ்மையில் வாடிய மக்களிடமாக இயேசு மிகுந்த இரக்கத்துடன் நடந்துகொண்டார். ‘அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது . . . அவர்கள்மேல் மனதுருகினார்’ என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 9:36) இருந்தாலும், அவர் ஒருபோதும், எந்தச் சூழ்நிலைமையிலும், திருடுவதை ஆதரிக்கவில்லை. அதேவிதமாகவே, ஏழைகள்மீது கடவுள் அக்கறையுள்ளவராக இருந்தாலும்கூட, வறுமை திருட்டை நியாயப்படுத்துகிறதென்று அவர் நினைப்பதில்லை. எசாயா 61:8-ல் (பொது மொழிபெயர்ப்பு) கடவுள் ‘கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. மேலும் அப்போஸ்தலனாகிய பவுல், திருடர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று தெளிவாக குறிப்பிட்டார். எனவே கடவுளுடைய நோக்குநிலையைக் குறித்து நாம் குழப்பத்தில் விடப்பட்டில்லை.—1 கொரிந்தியர் 6:10.
என்றபோதிலும், “திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்” என்று நீதிமொழிகள் 6:30 சொல்கிறது. இந்தக் கூற்று திருடுவது தவறில்லையென காண்பிக்கிறதா? இல்லவேயில்லை. திருடியவனை அவனுடைய தவறுக்காக தண்டிக்கப்படவேண்டியவன் என்றே கடவுள் இன்னும் கருதுகிறார் என சூழமைவு காட்டுகிறது. அடுத்த வசனம் இவ்வாறு சொல்கிறது: “அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன்வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.”—நீதிமொழிகள் 6:31.
பசியினால் திருடுகிற ஒருவன் பேராசையினால் திருடுகிறவனைப் போன்றும், தன்னிடம் மாட்டிக் கொள்கிறவருக்கு தீங்கு விளைவிக்கவேண்டுமென்ற நோக்கில் திருடுகிறவனைப் போன்றும், அந்தளவுக்கு கண்டிக்கப்படத்தக்கவனாக இல்லாதபோதிலும்கூட, கடவுளுடைய அங்கீகாரத்தை விரும்பும் எவரும் எந்தவகையான திருட்டைக் குறித்தும் குற்றமுள்ளவராக இருக்கக்கூடாது. மிதமிஞ்சிய வறுமையிலும்கூட திருட்டானது கடவுளை அவமதிப்பதாக உள்ளது. நீதிமொழிகள் 30:9 அதை இவ்விதமாய் சொல்கிறது: “தரித்திரப்படுகிறதினால் திருடி என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னை போஷித்தருளும்.” ஆம், திருடுகிறவன் கடவுளுடைய நாமத்துக்கு அவமதிப்பைக் கொண்டுவருகிறான். திருட்டு அன்பற்ற செயலாக இருப்பதால், செல்வந்தரென்றோ, ஏழையென்றோ இல்லாமல் யாரிடமிருந்து திருடினாலும் அது பாவம்தான். கடவுளையும் அயலாரையும் நேசிப்பவர்களுக்கு, திருட்டு ஒருபோதும் நியாயமானதாக இருக்காது.—மத்தேயு 22:39; ரோமர் 13:9, 10.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஒரு நபருக்கு திருட உரிமையிருக்கிறது என்ற வாதம் நியாயப்படி சரியல்ல. இவ்விதம் சொல்வது, பலவீனமான ஒரு விளையாட்டு வீரன், வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தடைவிதிக்கப்பட்ட போதைப்பொருட்களை உட்கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது என்று சொல்வதற்கு ஒத்திருக்கிறது. அவன் வெற்றிபெற்றாலும்கூட, அநியாயமான வழியில்தான் அவன் அதை அடைந்திருக்கிறான். அநியாயமான வழியில் அவர்களுடைய வெற்றியை அவன் தட்டிப்பறித்துக்கொண்டான் என்று மற்றவர்கள் சரியாகவே உணருவார்கள். திருடனைப் பொருத்ததிலும் அவ்வாறே உள்ளது. மற்றவர்களுக்கு சொந்தமானதை அவன் அநியாயமான வழியில் பறித்துக்கொள்கிறான். அவனுடைய வசதியற்ற நிலைமை இச்செயலை நியாயப்படுத்துகிறதில்லை.
கடவுளுடைய அங்கீகாரத்தைப்பெற விரும்பும் எந்தவொரு திருடனும் தன்னுடைய நடத்தைப்போக்கிலிருந்து மனம்திரும்பவேண்டும். பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) மெய்யாகவே மனந்திரும்பியிருக்கும் முன்னாள் திருடர்கள் யெகோவா தங்களை மன்னிப்பார் என்பதை குறித்து நிச்சயமாயிருக்கலாம்.—எசேக்கியேல் 33:14-16.
ஏழைகள் என்ன செய்யலாம்?
பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: “நீதிமான் பசியினால் வருந்த யெகோவா விடார், தெய்வபயமிலார் ஆசையைத் தள்ளிடுவார்.” (நீதிமொழிகள் 10:3, திருத்திய மொழிபெயர்ப்பு) தங்களுடைய ஆசைகளை திருப்தி செய்துகொள்வதற்காக, தம்முடைய சட்டத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்களுக்கு கடவுள் உதவி செய்யமாட்டார். ஆனால், தமக்கு உண்மைதவறாமல் கீழ்ப்படிய முயற்சி செய்கிறவர்கள்மேல் அவர் இரக்கம் கொள்கிறார்; மேலும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 37:25.
கடவுளுடைய நியமங்களைப் பின்பற்றும்போது, தங்களுடைய வாழ்க்கை சூழ்நிலை முன்னேற்றமடைகிறது என்று லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே கண்டறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, சுறுசுறுப்பாக இருக்கும்படியும், சூதாட்டம், குடிவெறி, புகைபிடித்தல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம் போன்ற கெட்ட செயல்களை தவிர்க்கும்படியும் சொல்லுகிற பைபிளின் புத்திமதியைப் பொருத்துவது, தங்கள் தேவைக்கும் அதிகமானதை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது. (கலாத்தியர் 5:19-21) இது அவர்கள் விசுவாசத்துடன் செயல்படுவதை தேவைப்படுத்துகிறது; இவ்வாறு செய்திருப்பவர்கள் “யெகோவா நல்லவர்” என்பதையும் அவர்மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு அவர் உண்மையில் உதவி செய்கிறார் என்பதையும் கற்றிருக்கிறார்கள்.—சங்கீதம் 34:8, தி.மொ.
[படத்திற்கான நன்றி]
ராபின் ஹுட்: General Research Division/The New York Public Library/Astor, Lenox and Tilden Foundations