அதிகாரம் 24
திருடவே திருடாதே!
யாராவது உன்னிடமிருந்து திருடியிருக்கிறார்களா?— அப்போது உனக்கு எப்படி இருந்தது?— உன்னிடம் திருடியவன் ஒரு திருடன். யாருக்குமே திருடனைப் பிடிக்காது. எப்படி ஒருவன் திருடனாகிறான் என்று நினைக்கிறாய்? அவன் திருடனாகவே பிறக்கிறானா?—
நாம் பாவிகளாக பிறக்கிறோம் என்று இதற்கு முன் படித்தோம். ஆகவே நாம் எல்லாருமே அபூரணர்கள். ஆனால் யாருமே திருடர்களாக பிறப்பதில்லை. ஒரு திருடன் நல்ல குடும்பத்திலிருந்து வரலாம். அவனுடைய அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் எல்லாருமே நேர்மையாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு இருக்கும் பண ஆசையும் பொருள் ஆசையும்தான் அவனை ஒரு திருடனாக்குகிறது.
யார் முதன்முதலில் திருடியது என்று நினைக்கிறாய்?— இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். பரலோகத்தில் இருந்தபோது பெரிய போதகருக்கு அந்தத் திருடனைத் தெரியும். அவன் ஒரு தேவதூதனாக இருந்தான். ஆனால் கடவுள் எல்லா தேவதூதர்களையும் பரிபூரணமாக படைத்தாரே, அப்படியிருக்கும்போது அந்தத் தேவதூதன் மட்டும் எப்படி திருடனானான்?— தனக்கு சொந்தமாக இல்லாத ஒன்றைப் பெற அவன் விரும்பினான். அதை இந்தப் புத்தகத்தின் 8-ஆம் அதிகாரத்தில் படித்தோம். அது என்னவென்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?—
கடவுள் முதல் மனிதனையும் முதல் மனுஷியையும் படைத்தபோது, அவர்கள் தன்னை வணங்க வேண்டும் என்று அந்தத் தேவதூதன் ஆசைப்பட்டான். அவர்களது வணக்கத்தைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லவே இல்லை. அவர்கள் வணக்கம் கடவுளுக்கு மட்டும்தான் சொந்தமாக இருந்தது. ஆனால் அவன் அதைத் திருடினான்! ஆதாமையும் ஏவாளையும் தன்னை வணங்க வைப்பதன் மூலம் அந்தத் தேவதூதன் ஒரு திருடனாகி, பிசாசாகிய சாத்தான் ஆனான்.
எது ஒருவனை திருடனாக்குகிறது?— தன்னுடையதாக இல்லாத ஒன்றைப் பெற வேண்டும் என்ற ஆசையே. இந்த ஆசை மிக அதிகமானால் நல்லவர்களும் கெட்டவர்களாகிவிடலாம். அவ்விதமாக திருடர்களாகும் சிலர் திருந்தி மறுபடியும் நல்லவர்களாக ஆவதே இல்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவன் இயேசுவின் அப்போஸ்தலனாக இருந்தான். அவன் பெயர் யூதாஸ் காரியோத்து.
திருடுவது தவறு என்று யூதாஸுக்கு தெரியும். ஏனென்றால் சிறு வயது முதல் அவன் கடவுளுடைய சட்டங்களை கற்றிருந்தான். ‘நீங்கள் திருடக்கூடாது’ என்று ஒருமுறை கடவுள் வானத்திலிருந்து தன் மக்களிடம் சொன்னதும் அவனுக்குத் தெரியும். (யாத்திராகமம் 20:15) யூதாஸ் பெரியவனான பிறகு பெரிய போதகரை சந்தித்து அவரது சீஷரானான். பிற்பாடு 12 அப்போஸ்தலர்களில் ஒருவனாகக்கூட இயேசுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்தார்கள். ஒன்றாக சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்த காசெல்லாம் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இயேசு அந்தப் பெட்டியை யூதாஸிடம் ஒப்படைத்தார். ஆனால் அதிலிருந்த பணம் அவனுடையது அல்ல. கொஞ்ச காலம் கழித்து யூதாஸ் என்ன செய்தான் தெரியுமா?—
யூதாஸ் ஏன் திருடினான்?
அந்தப் பெட்டியிலிருந்த காசை திருட ஆரம்பித்தான். அது தவறு. யாரும் பார்க்காத நேரங்களில் அவன் காசை எடுத்தான். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய பணத்தை பெறவும் முயற்சி செய்தான். எப்போதும் பணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். இந்தத் தவறான ஆசையால் ஒரு பெரிய குற்றத்தை செய்தான். பெரிய போதகர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அது நடந்தது. என்ன நடந்ததென்று பார்க்கலாம்.
இயேசுவின் நண்பர் லாசரு. அவரது சகோதரி மரியாள். அவள் மிகவும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். ஆனால் யூதாஸ் அதைப் பார்த்து முறுமுறுத்தான். ஏன் என்று உனக்குத் தெரியுமா?— அந்த தைலத்தை விற்று அதில் கிடைக்கும் காசை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம் என்று அவன் சொன்னான். ஆனால் உண்மையில் அந்தக் காசெல்லாம் பெட்டிக்குள் போடப்பட்ட பிறகு அதை திருடிவிடலாம் என்றுதான் நினைத்தான்.—யோவான் 12:1-6.
மரியாள் மிகவும் அன்போடு அதை செய்ததால் அவளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமென்று யூதாஸிடம் இயேசு சொன்னார். அவர் அப்படி சொன்னது யூதாஸுக்கு பிடிக்கவில்லை. ஆகவே பிரதான ஆசாரியர்களிடம் போனான். அவர்கள் இயேசுவின் எதிரிகள். இயேசுவை கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் மக்கள் பார்க்காதபடி இரவில் கைதுசெய்ய திட்டம்போட்டார்கள்.
யூதாஸ் அந்த ஆசாரியர்களிடம் என்ன சொன்னான் தெரியுமா? ‘நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் இயேசுவைக் காட்டிக்கொடுப்பேன். எவ்வளவு தருவீர்கள்?’ என்று கேட்டான்.
‘நாங்கள் முப்பது வெள்ளிக் காசுகளை தருகிறோம்’ என்று அந்த ஆசாரியர்கள் சொன்னார்கள்.—மத்தேயு 26:14-16.
யூதாஸ் காசை வாங்கிக்கொண்டான். அது, பெரிய போதகரை அந்த ஆட்களிடம் விற்பதைப் போல இருந்தது! எப்படிப்பட்ட கெட்ட காரியத்தை செய்தான் பார்த்தாயா?— ஒருவன் திருடனாகி காசை திருடும்போது இப்படித்தான் நடக்கிறது. மற்றவர்களைவிட அல்லது கடவுளைவிட அவன் காசு பணத்தையே பெரிதாக நினைக்க ஆரம்பித்து விடுகிறான்.
‘யெகோவா தேவனைவிட வேறு எதையுமே நான் பெரிதாக நினைக்க மாட்டேன்’ என்று நீ சொல்லலாம். நீ அப்படி நினைப்பது பாராட்ட வேண்டிய விஷயம். யூதாஸை ஒரு அப்போஸ்தலனாக இயேசு தேர்ந்தெடுத்த சமயத்தில் அவனும் அப்படித்தான் நினைத்தான். திருடர்களாக மாறிய மற்றவர்களும் அப்படியே உணர்ந்திருக்கலாம். அவர்களில் சிலரை பார்க்கலாம்.
ஆகானும் தாவீதும் என்ன கெட்ட காரியங்களை யோசிக்கின்றனர்?
அவர்களில் ஒருவன் ஆகான். அவன் கடவுளுடைய ஊழியன். பெரிய போதகர் பிறப்பதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே வாழ்ந்தவன். அவன் ஒரு அழகிய ஆடையையும் தங்கக் கட்டியையும் வெள்ளிக் காசுகளையும் பார்த்தான். அதெல்லாம் அவனுடையது அல்ல. அவை யெகோவாவுக்கு சொந்தமானவை என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால் கடவுளுடைய மக்களின் எதிரிகளிடமிருந்து அவை எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் ஆகான் பெறத் துடித்தான், ஆகவே அவற்றை திருடினான்.—யோசுவா 6:19; 7:11, 20-22.
இப்போது இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். ரொம்ப காலத்திற்கு முன்பு, தாவீதை இஸ்ரவேலரின் ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தார். ஒருநாள் தாவீது மிக அழகான பெண்ணாகிய பத்சேபாளைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவளையே பார்த்து ரசித்தார். அவளோடு சேர்ந்து வாழவும் ஆசைப்பட்டார். ஆனால் அவளோ உரியா என்பவரின் மனைவி. தாவீது என்ன செய்திருக்க வேண்டும்?—
பத்சேபாளைப் பற்றி யோசிப்பதை தாவீது நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யாமல் அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். பிறகு உரியாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தார். தாவீது ஏன் இந்தக் கெட்ட காரியங்களைச் செய்தார்?— ஏனென்றால் வேறொருவருக்குச் சொந்தமான பெண்ணை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள துடித்தார்.—2 சாமுவேல் 11:2-27.
அப்சலோம் எந்த விதத்தில் திருடனாக இருந்தான்?
பிற்பாடு தாவீது திருந்தினார். அதனால் யெகோவா அவரை வாழவிட்டார். ஆனால் அவருக்கு நிறைய பிரச்சினைகள் வந்தன. அவருடைய மகன் அப்சலோம், அவருக்கு பதிலாக ராஜாவாக விரும்பினான். ஆகவே தாவீதைப் பார்க்க வந்தவர்களை கவருவதற்காக அவர்களை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். ‘அப்சலோம் இஸ்ரவேலர்களின் இருதயங்களைத் திருடினான்’ என பைபிள் சொல்கிறது. தாவீதிற்கு பதிலாக தன்னை ராஜாவாக்க வேண்டும் என்ற விருப்பத்தை மக்களின் மனங்களில் ஏற்படுத்தினான்.—2 சாமுவேல் 15:1-12.
ஆகான், தாவீது, அப்சலோம் ஆகியவர்களைப் போல் நீ எதையாவது பெறத் துடித்திருக்கிறாயா?— அது வேறொருவருக்குச் சொந்தமாக இருந்தால், அவரது அனுமதி இல்லாமல் எடுப்பது திருட்டு ஆகும். முதல் திருடனான சாத்தான் எதைப் பெற விரும்பினான் என்று ஞாபகம் இருக்கிறதா?— கடவுளுக்குப் பதிலாக தன்னை எல்லாரும் வணங்க வேண்டும் என்று விரும்பினான். ஆகவே ஆதாமையும் ஏவாளையும் கடவுளுடைய பேச்சை மீற வைத்தபோது சாத்தான் திருடினான் என்றே சொல்லலாம்.
ஒருவருக்கு ஏதேனும் சொந்தமாக இருக்கையில், யார் அதைப் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவருக்கு உரிமை உண்டு. உதாரணத்திற்கு, வேறு பிள்ளைகளுடைய வீட்டிற்கு சென்று நீ விளையாடலாம். அங்கிருக்கும் எதையாவது உன் வீட்டிற்கு எடுத்து வருவது சரியா?— அந்தப் பிள்ளைகளுடைய அப்பா அம்மா அனுமதி கொடுத்தால் மட்டும்தான் அது சரி. அவர்களைக் கேட்காமல் நீ எதையாவது எடுத்துவந்தால் அது திருட்டு ஆகும்.
திருட வேண்டும் என்ற ஆசை உனக்கு எப்போது வரும்?— உனக்கு சொந்தமில்லாத ஒன்றைப் பெற நீ ஆசைப்படும்போது வரும். நீ திருடுவதை மற்றவர்கள் பார்க்காவிட்டாலும் யார் பார்ப்பார் தெரியுமா?— யெகோவா தேவன் பார்ப்பார். திருடுவது அவருக்கு பிடிக்காது என்பதை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். ஆகவே கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் உனக்கு அன்பு இருந்தால் ஒருபோதும் திருட மாட்டாய்.
திருடுவது தவறு என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அதை இப்போது வாசிக்கலாம். மாற்கு 10:17-19; ரோமர் 13:9; எபேசியர் 4:28.