உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 4/15 பக். 19-21
  • உண்மையில் அது திருடுதானா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையில் அது திருடுதானா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யாருடைய பணம் அது?
  • கடன்வாங்குதலா அல்லது திருடா?
  • கடவுளில் நம்பிக்கைவைத்தல்
  • திருடனாய்விட்ட அப்போஸ்தலன்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • திருடவே திருடாதே!
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • பணம்தான் வாழ்க்கையா?
    விழித்தெழு!—2015
  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 4/15 பக். 19-21

உண்மையில் அது திருடுதானா?

நைஜீரியாவிலுள்ள ஒரு பெரிய உணவகத்தில் சீனியர் வெயிட்டராக அபியோடுன் இருந்தார். ஒரு மாலையில், விருந்து அறையைப் பூட்டிக்கொண்டிருந்தபோது, 1,827 அமெரிக்க டாலருக்குச் சமமான பணமுள்ள ஒரு பையைக் கண்டார். பணத்தை அவர் உடனே ஒப்படைத்துவிட்டார். பின்னர் உணவகத்திற்கு வந்திருந்த அதன் சொந்தக்காரியாக இருந்த விருந்தாளி அதை கேட்டுவாங்கிக்கொண்டார். உணவக நிர்வாகம், அபியோடுனுக்கு இரட்டை பதவியுயர்வை அளித்தது. மேலும் அவருக்கு “ஆண்டின் மிகச் சிறந்த ஊழியர்” என்ற விருதையும் கொடுத்தது. பணத்தின் சொந்தக்காரரும் அவருக்கு வெகுமதியளித்தார்.

குவாலிட்டி, என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்று, அபியோடுனை ஒரு “நல்ல சமாரியன்” என்று அழைத்து, இந்த நிகழ்ச்சியை வெளியிட்டிருந்தது. பணத்தை அவர் தனக்கு வைத்துக்கொள்வதற்குத் தூண்டப்பட்டாரா என்று குவாலிட்டியால் கேட்கப்பட்டபோது, அபியோடுன் சொன்னார்: ‘நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். ஆதலால், எனக்குரியதல்லாத ஏதேனும் ஒன்றை நான் கண்டுபிடித்தால், அதற்குச் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.’

அபியோடுனின் நேர்மைத்தன்மையைக் குறித்து அந்தப் பகுதியிலுள்ள பலர் வியப்படைந்தனர். அபியோடுனின் உடன் சாட்சிகள் சம்பவித்ததைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டனர். ஆனால் அவர்கள் வியப்படையவில்லை. பூமி முழுவதும், யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய உயர்ந்த நியமங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவற்றில் நேர்மைத்தன்மை விதிவிலக்கல்ல; அதுவே நியதி, உண்மைக் கிறிஸ்தவத்துக்கு ஓர் அடிப்படையான தேவை.

எனினும் சில சமயங்களில், சூழ்நிலைகள் எது நேர்மையானது எது நேர்மையற்றது என்ற வேறுபாடு காண்பது கடினமானதுபோல் தோன்றக்கூடும். இந்தச் சூழ்நிலையைக் கவனியுங்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நன்கொடைகளையும் கணக்குப்பதிவுகளையும் கவனித்துவந்த ஃபெஸ்டஸ் என்பவர், அதிகப் பணக் கஷ்டத்தில் இருந்தார்.a அவருடைய மனைவிக்கு பெரிய அறுவைசிகிச்சை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. அவளுடைய மருத்துவர்கள் அதைத் தள்ளிப்போடக் கூடாது என்று சொல்லியிருந்தனர். மருத்துவமனை, பாதிப் பணத்தை முன்பணமாகக் கட்டும்படி வற்புறுத்தியது.

ஃபெஸ்டஸிடம் பணம் குறைவாக இருந்தது. அவர் அநேகரிடம் கடனுக்காக அணுகினபோது, யாரும் தரவில்லை. பின்னர், அவருடைய கவனிப்பில் இருந்த பணத்தைப் பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்து, இவ்வாறு எண்ணிக்கொண்டார், ‘என் மனைவி சாவதைத் தவிர்க்க என்னால் எதையாவது செய்ய முடிகிறபோது, அவளைச் சாகும்படி அனுமதிப்பது நியாயமா? ஏன் சபை பணத்திலிருந்து ‘கடனாக’ எடுத்துக்கொள்ளக்கூடாது? எனக்குப் பணம்தரவேண்டியவர்கள் கொடுக்கும்போது, நான் அதைத் திருப்பிப் போட்டுவிடலாமே.’

ஃபெஸ்டஸ், தனக்குரியதல்லாத பணத்தை மருத்துவமனைக்குக் கொடுப்பதற்குப் பயன்படுத்தினார். அவருடைய எண்ணம் சரியானதாக இருந்ததா? அவர் எதிர்ப்பட்ட அவசர நிலைமையின் நோக்குநிலையில் அவருடைய செயல் நியாயப்படுத்தப்படமுடியுமா?

யாருடைய பணம் அது?

இந்தக் கேள்விகளை ஆராய்வதில், ஃபெஸ்டஸ் எடுத்த பணத்தின் ஊற்றுமூலம் மற்றும் நோக்கம் பற்றிய சில குறிப்புகளைச் சுருக்கமாக மறுபார்வையிடலாம். நிதிகள், யெகோவாவின் தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்க விரும்பும் சபை அங்கத்தினர்களினால் மனமுவந்தளிக்கப்பட்ட நன்கொடைகள்மூலம் வருகின்றன. (2 கொரிந்தியர் 9:7) சம்பளங்களைக் கொடுப்பதற்கு அது பயன்படுத்தப்படுவதில்லை, ஏனென்றால் சபையில் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்காக யாருமே பணம்கொடுக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக, நன்கொடைப் பணம் கூட்டம் நடக்கும் ஓர் இடத்தை பொதுவாக ராஜ்ய மன்றத்தைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மக்கள்—இளம் மற்றும் முதிர் வயதினர், பணக்காரர் மற்றும் ஏழைகள்—பைபிள் அறிவுரைக்காகக் கூடும் ஒரு வசதியான, நல்ல இடத்தை அளிக்கிறது.

யாருடைய பணம் அது? இது ஒட்டுமொத்தமாக சபைக்குச் சொந்தமானது. பணம் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்று எந்தத் தனிப்பட்ட நபரும் தீர்மானிக்கிறதில்லை. மூப்பர் குழு வழக்கமான சபை செலவுகளுக்குப் பணம் கொடுக்கப்பட ஏற்பாடுசெய்தாலும், வழக்கத்திற்கு மாறான செலவு வரும்போது, மூப்பர்கள் விஷயத்தை முழு சபைக்கும் முன்பாக அங்கீகரிக்கப்படுவதற்காகச் சொல்வர்.

கடன்வாங்குதலா அல்லது திருடா?

ஃபெஸ்டஸ், பணத்தை கூடிய சீக்கிரத்தில் திருப்பிப் போட்டுவிடலாம் என்ற அவருடைய திட்டத்தின் காரணமாக, அவர் தான் செய்த காரியத்தை கடன்வாங்கியதற்கு சமமானது என்று கருதினார். எனினும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்” என்பதற்கு வேறு சொற்களை பயன்படுத்துகிறது. அந்தச் சொற்கள் “திருட்டு” மற்றும் “திருடு.” அனுமதியின்றி அல்லது உரிமை தரப்படாமல் இருக்கையில், ஃபெஸ்டஸ் சபைக்குரிய பணத்தை எடுத்தார். ஆதலால், ஆம், அவர் திருட்டு குற்றத்தைச் செய்தவர். அவர் ஒரு திருடுபவனாக இருந்தார்.

நிச்சயமாகவே, திருடுவதற்கான மனநோக்கு நிலையைப்பொருத்து குற்றத்தின் அளவுகள் வேறுபடுகின்றன. யூதாஸ் காரியோத்தின் உதாரணத்தில் இதை நாம் காணமுடியும். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் வைத்திருந்த பணத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைப் பெற்றவனாக அவன் இருந்தான். பைபிள் சொல்கிறது: ‘யூதாஸ் திருடனாகவும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாகவும்’ இருந்தான். (யோவான் 12:6) பொல்லாத இருதயத்தாலும் வெளிப்படையான பேராசையினாலும் தூண்டப்பட்டவனாக, யூதாஸ் மிக மோசமானான். இறுதியில் கடவுளுடைய குமாரனை—30 வெள்ளிக்காசுகளுக்கு—காட்டிக்கொடுக்கும் அளவிற்கு தாழ்ந்தநிலைக்குப் போனான்.—மத்தேயு 26:14-16.

ஆயினும், ஃபெஸ்டஸ் தன்னுடைய சுகமில்லாத மனைவியின் மேலுள்ள அக்கறையால் தூண்டப்பட்டார். இது அவர்மேல் குற்றமில்லை என்பதை அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை. மற்றொரு அவசரமான நிலைமை என்பதுபோல் தோன்றுகிற சூழ்நிலையில் திருடைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்: “திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். அவன் கண்டுபிடிக்கப்பட்டால், ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.” (நீதிமொழிகள் 6:30, 31) அதாவது, பிடிக்கப்பட்டபோது திருடன் சட்டத்தின் முழு தண்டனையையும் எதிர்ப்பட்டாக வேண்டும். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்பிரகாரம், ஒரு திருடன் தன் குற்றத்திற்கு இழப்பீடு செய்யவேண்டும். எனவே, திருடுவதை உற்சாகப்படுத்துவதற்கோ நியாயப்படுத்துவதற்கோ பதிலாக, திருடுதல் அவசர நிலைமைகளிலும்கூட பொருளாதார இழப்புக்கும், அவமதிப்பிற்கும், மிக முக்கியமாக, கடவுளுடைய அங்கீகாரத்தின் இழப்புக்கும் வழிநடத்தலாம் என்று பைபிள் எச்சரிக்கிறது.

யெகோவாவின் சாட்சிகளாக, எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களும், முக்கியமாகச் சபைக்குள் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள், எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும், “குற்றஞ்சாட்டப்படாதவர்”களாக இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 3:10) ஃபெஸ்டஸ் வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த பணம் வரவில்லை. எனவே அவர் எடுத்த பணத்தை அவரால் மாற்றீடு செய்ய முடியவில்லை. அவர் செய்த காரியம் தெரியவந்தது. அவருக்கு என்ன நேர்ந்தது? அவர் மனந்திரும்பாத திருடனாக இருந்திருந்தால், சுத்தமான கிறிஸ்தவச் சபையிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். (1 பேதுரு 4:15) அவர் இருதயத்தில் வருந்தினாலும், மனந்திரும்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபையில் இருக்க முடிந்தது, ஆனால் அவர் தன் ஊழிய சிலாக்கியங்களை இழந்தார்.

கடவுளில் நம்பிக்கைவைத்தல்

யெகோவாவைச் சேவிப்பதாகச் சொல்லும் ஒரு கிறிஸ்தவன் திருடுவது, கடவுளின் பெயருக்கும் அவருடைய பெயரைத் தாங்கிய மக்களுக்கும் இழுக்கைக் கொண்டுவரக்கூடும் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். பவுல் எழுதினார்: “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? தேவனுடைய நாமம் . . . உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.”—ரோமர் 2:21, 24.

பூர்வ காலங்களில் வாழ்ந்த ஒரு ஞானியாகிய ஆகூர், அதே குறிப்பைச் சொன்னார். அவர் “தரித்திரப்படுகிறதினால் திருடி, [தன்] தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடி,” இருக்க அவருடைய ஜெபத்தில் கேட்டுக்கொண்டார். (நீதிமொழிகள் 30:9) நீதிமானையும் திருடும்படி செய்யத் தூண்டும் சூழ்நிலைகளைத் தரித்திரம் கொண்டுவரக்கூடும் என்று அந்த ஞானி ஒத்துக்கொண்டதைக் கவனியுங்கள். ஆம், கடினமான காலங்கள், யெகோவா தம்முடைய மக்களின் தேவைகளைக் கவனிக்கும் அவருடைய திறமையில் உள்ள ஒரு கிறிஸ்தவனின் விசுவாசத்தைச் சோதிக்கக்கூடும்.

எனினும், யெகோவாவின் உண்மைமாறாத சாட்சிகள், ஏழையாய் இருப்பவர்களும் உட்பட, கடவுள் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று” விசுவாசிக்கின்றனர். (எபிரெயர் 11:6) யெகோவா தமக்கு உண்மையுள்ள ஆட்களுக்கு, அவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் உதவிசெய்கிறார் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொல்வதன்மூலம் அதைத் தெளிவுபடுத்தினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:31-33.

கிறிஸ்தவச் சபையில் தேவையில் உள்ளவர்களுக்குக் கடவுள் எப்படி உதவிசெய்கிறார்? பல வழிகளில். ஒரு வழியானது, உடன் விசுவாசிகள்மூலம். கடவுளுடைய மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக் காண்பிக்கின்றனர். அவர்கள் பைபிளின் எச்சரிப்பை மிக முக்கியமானதாக ஏற்றுக்கொள்கிறார்கள்: “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.”—1 யோவான் 3:17, 18.

உலகமெங்கும் 73,000-க்கும் மேற்பட்ட சபைகளில், நாற்பத்தைந்து லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் அவருடைய நீதியான நியமங்களின்படி கடவுளைச் சேவிக்க, கடும்முயற்சிசெய்து வருகிறார்கள். கடவுள் தம்முடைய உண்மைமாறாதவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. யெகோவாவைப் பல ஆண்டுகளாகச் சேவித்துவந்திருக்கிறவர்கள் பின்வருமாறு எழுதிய தாவீது ராஜாவுக்கு இசைவாக தங்களுடைய குரல்களை எழுப்புகின்றனர்: “நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.”—சங்கீதம் 37:25.

ஒருவர் தன்னைத் திருடும்படி தூண்டப்பட அனுமதித்து, ஒருவேளை கடவுளுடைய தயவை என்றென்றுமாக இழப்பதற்குப் பதிலாக, அந்த வார்த்தைகளை ஏவப்பட்டெழுதும்படி செய்த கடவுளின்மீது விசுவாசம்வைப்பது எவ்வளவு மேம்பட்ட காரியம்!—1 கொரிந்தியர் 6:9, 10.

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்