எமது வாசகரிடமிருந்து
க்ரிப்டெத்“உலகை கவனித்தல்” பகுதியில் “புகைத்தல் க்ரிப் டெத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது” (ஜனவரி 22, 1997) என்ற தகவலுக்காக நன்றி. ஒவ்வொரு தாயும் இந்தத் தகவலை கவனமாக சிந்திப்பார் என்று நான் நம்புகிறேன். கர்ப்பகாலத்தில் நான் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்ததால் என் பையனை சிட்ஸ் (திடீரென்று குழந்தை இறந்துவிடும் நோய் [Sudden Infant Death Syndrome]) காரணமாக இழந்திருப்பேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வருடம்வரை அவன் தூங்கும் போதெல்லாம் இதய மானிடர் ஒன்றை கட்டாயம் அணிய வேண்டும்; அப்போதுதான், அவன் இதயம் நின்றுவிட்டால் அந்த மானிடர் சத்தம் செய்யும். அப்போதே நான் யெகோவாவை அறிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். புகைப்பதை நான் நிறுத்தியிருப்பேன்; என் மகனும் நானும் அந்தக் கொடுங்கனவை தவிர்த்திருக்கலாம்.
ஏ. சி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
சரவாங்கி நோயாளி ‘நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவளாய் இருக்கிறேன்’ (ஜனவரி 22, 1997) என்ற லூரடா மாஸின் அனுபவத்திற்காக நன்றிசொல்ல விரும்புகிறேன். எனக்கு 27 வயதாகிறது; நானும் சரவாங்கி நோயால் துன்பப்படுகிறேன். சிகிச்சை என் வலியைக் குறைத்தாலும், ஒரு முழுநேர பிரசங்கியாக இருப்பதை நிறுத்திவிடும்படி என் வியாதி செய்துவிட்டதால், சில சமயங்களில் ஏமாற்றம் அடைந்தவளாகவும் உற்சாகம் இழந்தவளாகவும் உணருகிறேன். தன்னுடைய வியாதியின் மத்தியிலும் யெகோவாவை சேவிப்பதற்கான லூரடா மாஸின் திடத்தீர்மானம் ஊக்கமளிப்பதாய் இருந்தது. உற்சாகமின்மை என்னை மேற்கொள்ள நான் அனுமதிக்கமாட்டேன்; பிரசங்க வேலையில் இன்னும் அதிகத்தை செய்ய விரும்புகிறேன்.
ஏ. பி., இத்தாலி
என் அம்மா 30 வருடங்களுக்கும் மேலாக சரவாங்கி நோயால் துன்பப்படுகிறார். வருத்தகரமாக, வலியை குறைக்க முடிவதேயில்லை. ஏறக்குறைய எல்லா சபை கூட்டங்களுக்கும் அவர் கஷ்டப்பட்டாவது ஆஜராவதால் என் அம்மாவைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். தன்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்குகொள்கிறார்; பிரசங்க வேலையிலும்கூட ஈடுபடுகிறார். தன்னுடைய நோயின் மத்தியிலும், ஒருபோதும் அவர் குறைகூறுவதேயில்லை.
எஸ். எம்., ஜெர்மனி
நோவாவின் நாளைய ஜலப்பிரளயம் “பைபிளின் கருத்து: ஜலப்பிரளயம்—நிஜமா? கட்டுக்கதையா?” (பிப்ரவரி 8, 1997) என்ற கட்டுரை, அந்த சரித்திரப்பூர்வமான நிகழ்ச்சிக்கு நான் சரியான முக்கியத்துவம் கொடுக்க உண்மையிலேயே உதவியது. மற்ற அநேகரைப் போலவே எனக்கும் ஜலப்பிரளயத்தைப் பற்றி மிகச்சிறிய வயதிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டது. என்றபோதிலும், ஜலப்பிரளயத்தைப் பற்றிய பதிவு அநேகரால் கட்டுக்கதையாக கருதப்படுகிறது என்று நான் நினைக்கவேயில்லை. கடைசி நாட்களை நோவாவின் நாட்களோடு இயேசு ஒப்பிடுவதுதானே அந்த ஜலப்பிரளயம் உண்மையில் நிகழ்ந்த ஒன்று என்பதை நிரூபிக்கிறது.
எஸ். எம்., ஐக்கிய மாகாணங்கள்
பெருந்துயரை சமாளித்தல் சமீப காலங்களில், ஒன்றன்பின் ஒன்றாக நான் அதிகமான துன்பங்களை எதிர்ப்பட்டிருக்கிறேன். இந்தத் துன்பங்களில் சிலவற்றைப் பற்றி விவரித்து, “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்று சொல்லும் சங்கீதம் 126:5-ஐ மேற்கோள் காட்டி என் நண்பருக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். அந்தக் கடிதத்தை எழுதி முடித்தவுடன், அதே வசனத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட “கண்ணீரோடு விதைத்து, மகிழ்ச்சியோடு அறுவடை செய்தல்” என்ற கட்டுரையை கொண்ட பிப்ரவரி 8, 1997 பிரதியை பெற்றபோது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். ரேமன்டு கர்கப்பின் அனுபவம் விசுவாசத்தை மிகவும் கட்டியெழுப்புவதாக இருந்தது.
பி. பி., ஜமைகா
பராமரித்தல் “பராமரித்தல்—இந்தச் சவாலை எதிர்ப்படுதல்” (பிப்ரவரி 8, 1997) என்ற தொடர் கட்டுரைகள், மிகவும் கஷ்டமான காலத்தில் எனக்கு அதிக ஆறுதலளிப்பவையாய் இருந்திருக்கின்றன. பல வருடங்களாக யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்த என் அன்புள்ள அம்மா, பலவீனப்படுத்திய ஒரு மனவியாதிக்கு ஆளானார். அவருக்கு நரம்புமண்டல வியாதியும் (Parkinson’s disease) கடுமையான சரவாங்கி நோயும் இருக்கின்றன. அவர் மிகவேகமாக மோசமடைந்தது எனக்கு அதிக வருத்தத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அவருடைய ஒரே மகனாக இருப்பதால் அவரை கவனித்துக்கொள்வதை பாரமிக்கதாய் நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த அருமையான கட்டுரை அதிக புரிந்துகொள்ளுதலோடு எழுதப்பட்டிருந்தது! யெகோவாவிடமிருந்து வந்த ஒரு உண்மையான பரிசாகவே அது இருந்தது. இந்த அன்புள்ள ஆதரவுக்காக உங்களுக்கு மிகவும் நன்றி.
ஆர். ஹெச்., இங்கிலாந்து