எமது வாசகரிடமிருந்து
பராமரித்தல்—இந்தச் சவாலை எதிர்ப்படுதல் மிகச்சிறந்த இத்தொடர் கட்டுரை (பிப்ரவரி 8,1997) எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. எனக்கு வயது 17; வாத நோயால் அவதிப்படும் என்னுடைய தாத்தாவையும், மனநோயுடைய என்னுடைய அம்மாவையும் நான் பராமரித்து வருகிறேன். சில சமயங்களில் நோயாளிகளால் எரிச்சலடைந்து ‘இது ஏன் எனக்கு ஏற்பட்டது?’ என்று கேட்டுக் கொள்வது இயல்பானதுதான் என்பதை வாசித்தது எனக்கு ஆறுதலளித்தது. பராமரிப்பவருக்கு கொடுக்கக்கூடிய நடைமுறை உதவிகளைத் தெரிவித்த கட்டுரையையும் நான் போற்றுகிறேன்.
பி. டி., இத்தாலி
நோய்வாய்ப்பட்ட அன்பானவர்களைப் பராமரிக்கும் ஆட்களின் உணர்ச்சிகளைப் பற்றிய உங்கள் விவரிப்பு தத்ரூபமாயும் முழுவதும் புரிந்துகொள்ளும் தன்மை உடையதாயும் இருந்தது. இத்தகைய அழகான கட்டுரைகளை எழுதும்படி உங்களை தூண்டின யெகோவாவுக்கு நான் நன்றி சொல்கிறேன். நமக்கு விருப்பமில்லாத இச்சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளவும், தொடர்ந்து யெகோவாவை வைராக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் சேவிக்கவும் இவை நம் அனைவருக்கும் உதவி செய்யும் என நான் உறுதியாய் நம்புகிறேன்.
பி. வி., செக் குடியரசு
நான் சமீபத்தில் விவாகரத்து செய்யப்பட்ட, வளரிளமைப் பருவத்தில் இரண்டு மகன்களையுடைய தாய்; என்னுடைய மகன் கவனப் பற்றாக்குறை கோளாறால் [ADHD (Attention Deficit Hyperactivity Disorder)] மிக கடுமையாகத் துன்பப்படுகிறான். இந்தப் பொறுப்போடு வரும் அழுத்தமும் அதிகமாக உள்ளது. பராமரிப்பைப் பற்றி வெளிவந்த சமீபத்திய கட்டுரைகளின் மூலமாக, குழப்பமடைதல், கோபமடைதல், மனச்சோர்வடைதல், உதவியற்றநிலை போன்ற என்னுடைய உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சபையிலுள்ள வயது முதிர்ந்த சகோதரர்கள் என்னுடைய மகனிடம் தனிப்பட்ட கவனம் செலுத்துவது எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன். செயலில் அன்பைக் காண்பதில் என்னே மகிழ்ச்சி!
கே. கே., ஐக்கிய மாகாணங்கள்
என்னுடைய கணவர் தீவிர மனநோயால் அவதிப்படுவதால் என்னுடைய பராமரிப்பையே முற்றிலும் சார்ந்திருக்கிறார். என்னால் சமாளிக்கமுடியாமல் போய்விடுமோ என்று நான் பயந்தேன். அந்தக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருந்த ஜென்னி இவ்வாறு ஆலோசனைக் கொடுத்தது என்னை உற்சாகப்படுத்தியது: “என்ன நடக்கக்கூடுமோவென பயப்படுவது பெரும்பாலும் உண்மையில் சம்பவிப்பதைவிட படுமோசமானது.”
எ. பி., ஸ்லோவாகியா
நான் ஒரு சமயத்தில் பராமரிப்பாளராக இருந்து, இந்தக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருந்தவாறு அநேக தடவை உணர்ந்திருக்கிறேன். அநேக தடவை என்னுடைய ஏமாற்றத்தையும் வெட்க உணர்வையும் மற்றவர்களிடம் என்னால் சொல்லமுடியவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை கலந்தாலோசிக்க இந்தக் கட்டுரைகள் எனக்கு உதவின.
எப். எப்., நைஜீரியா
இத்தகைய பிரத்தியேகமான கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 1989-லிருந்து என்னுடைய அம்மா படுத்தபடுக்கையாகிவிட்டார். உடன் பிறந்தவர்களோ, தகப்பனோ இல்லாமல் அவர்களுடைய ஒரே மகனாக, அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளவேண்டியிருந்தது. எல்லாரையும்விட, யெகோவாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அதிக இரக்கமுள்ள பராமரிப்பாளர்கள் என்று அந்தத் தொடர் கட்டுரையின் கடைசி பாரா சொன்னதை நான் ஒத்துக்கொள்கிறேன். அநேக சமயங்களில், நிலைமை மோசமானதாகி, என்னால் சமாளிக்க முடியாது என்று நான் நினைக்கும்போதெல்லாம், யெகோவா தேவனிடம் ஜெபித்து, எனக்கு உதவி செய்யும்படி கெஞ்சியிருக்கிறேன். அவர் எனக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிந்ததுதானே, மீண்டும் எனக்கு பலம் கிடைத்ததுபோல உணரச் செய்தது.
எம். எ. எம்., பெரு
என் கணவருக்கு உடல்நலம் சரியில்லை; நான் அந்தப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தவற்றில் ஏறக்குறைய எல்லா பாடுகளையும் பட்டுவிட்டேன். என் கணவரைப் பற்றி சகோதர சகோதரிகள் விசாரித்த அநேக சந்தர்ப்பங்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. சில சமயங்களில் நான் எரிச்சலடைந்து, ‘ஏன் எப்ப பார்த்தாலும் அவரைப் பத்தியே கேக்குறாங்க? என்னைப் பத்தி ஒருத்தரும் கேட்கமாட்டேங்கிறாங்களே?’ என்று நினைத்திருக்கிறேன். அத்தகைய உணர்வுகள் இயல்பானவைதான் என்று இப்போது நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
எம். எ. ஐ. ஐ., ஸ்பெய்ன்
கற்பதில் குறைபாடுகள் கடுமையான கவனப் பற்றாக்குறை கோளாறையுடைய பத்து வயது மகனின் தாயாக நான் இருக்கிறேன். “கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு உதவி” (பிப்ரவரி 22, 1997) என்ற தொடர் கட்டுரை வெளியிடப்பட்டதிலிருந்து, இந்தக் கோளாறைப் புரிந்துகொண்டு, எனக்கு உதவி செய்யவேண்டுமென்று முயற்சித்தபோதிலும்கூட, நானும் என்னுடைய மகனும் உணர்ந்த விதத்தை முழுமையாக ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியவில்லை என்று அநேக நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள் என்பதை சொல்வதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்போது எங்களுக்கு உதவ இன்னுமதிக மனமுள்ளவர்களாக இருப்பதாய் அநேகர் சொன்னார்கள். சபையிலுள்ள ஒரு சகோதரி அந்தக் கட்டுரையை என்னுடைய மகனுடன் சேர்ந்து படிப்பதற்காக நேரத்தை ஒதுக்கி, அவனை உற்சாகப்படுத்தினார்கள். என்னுடைய மகன் பின்பு என்னிடம் வந்து, அந்தக் கட்டுரையை மீண்டும் படித்துக்காட்டுமாறு கேட்டான்.
எல். எ. டி., ஐக்கிய மாகாணங்கள்